ஆசனம் 2 - பத்ம பத்மாசனம்
பள்ளிக்கால நண்பன் கோபால், சென்னையில் தனியாக இருக்கிறான். தி. நகரில் உள்ள அவனது வீட்டுக்குச் சென்று ஆயத்தமாக முடிவு.

சூர்யப் பரிசு
செம்பட்டி சாமிநாதனுக்கு சென்னையில் இன்டர்வியூ.
பள்ளிக்கால நண்பன் கோபால், சென்னையில் தனியாக இருக்கிறான். தி. நகரில் உள்ள அவனது வீட்டுக்குச் சென்று ஆயத்தமாக முடிவு.
கோபாலுக்குப் பிடித்தமான மா, வாழை, பலா, பப்பாளி, அதிசரம், முறுக்கு, சீடை எல்லாற்றையும் அள்ளிக்கொண்டு ரயிலேறினான்.
சென்னைக்கு எப்போதும் அரை மணி நேரம் தாமதமாக வரும் என்று எதிர்பார்க்கப்படும் ரயில், சாமிநாதனுக்காக அன்று முன்கூட்டியே வந்துவிட்டது.
அதிகாலை நாலரை மணிக்கே சென்ட்ரலில் இறங்கி நின்றான்.
சென்னையில் ஆட்டோக்காரர்கள் சுத்த மோசம். வெயிட் பண்ணு. நானே வந்துடறேன். நான்கு மணிக்கே சென்ட்ரலுக்கு வந்து காத்திருப்பேன் என்று சொல்லியிருந்தான் கோபால். சுற்றுமுற்றும் பார்த்தபோது, அவனும் ரயிலும்தான் மிச்சம்!
கோபாலை அலைபேசியில் அழைத்தான். அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் ரீ-டயல் செய்தான். எடுத்தபாடில்லை. சாமிநாதன் பீதியடைந்தான். தானே ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு, தி.நகர் கோபால் வீட்டைக் கண்டுபிடித்துப் போய் இறங்கினான். காலிங் பெல்லை நிம்மதிப் பெருமூச்சோடு அழுத்தினான். ஆனால் கதவு திறக்கவில்லை!
விலாசத்தைப் பார்த்தான். மாற்றமில்லை. மீண்டும் மீண்டும் அழுத்தியபோது, தெரியாத ஊருக்கு வந்து ஆபத்தை விலை கொடுத்து வாங்காதே என்று உள்மனம் எச்சரித்தது. அதனால், படிகளை விட்டு இறங்கி சாலையைத் தஞ்சம் அடைந்தான்.
ஆட்டோக்காரர்கள் சுத்த மோசம் என்று சொல்லியிருந்தான் கோபால். இப்போது ஆட்டோக்காரர்களைவிட மோசமாகத் தெரிந்தான் கோபால்.
சாட்சிக்காரனைவிட சண்டைக்காரனே மேல்.
தான் வந்த ஆட்டோக்காரரிடமே உண்மையைச் சொல்லிப் புலம்பினான் சாமிநாதன்.
ஆட்டோக்காரர், சாமிநாதனுக்கு ஆறுதல் சொல்லி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கே அழைத்துச் சென்றார். விதியே என்றுகூடப் பயணித்தான் சாமிநாதன். நெருக்கமான சேரித் தெருவுக்குள் புகுந்து புகுந்து போய், ஒரு குடிசையின் முன்னால் ஆட்டோ நின்றது.
அதிகாலை இருட்டோடு, வாசலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் ஓடிவந்து, ‘அப்பா டூட்டி முடிஞ்சிடிச்சாப்பா’ என்று கட்டியணைத்துக் கொண்டனர்.
‘இந்த அங்கிள் என்னோட படிச்சவரு. ஊர்ல இருந்து வந்திருக்காரு. இன்டர்வியூக்குப் போகணுமாம். திடீர்னு வந்துட்டாரு’ என்று கூறி, மனைவியிடமும் அறிமுகப்படுத்தினார் ஆட்டோக்காரர்.
கோபாலுக்கு வாங்கி வந்த கிராமத்துத் தின்பண்டங்களை ஆட்டோக்காரரின் பிள்ளைகளுக்குக் கொடுத்தான் சாமிநாதன். வாங்க மறுத்தார்கள். இனி நீங்கள்தான் என் சொந்தம். சூரியன் உதிக்கும் முன்னதாகவே எழுந்து படிக்கிறீர்களே. உங்களது எதிர்காலம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும். இதை அன்பளிப்பாக வாங்கிக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டு இன்டர்வியூவுக்குச் செல்ல ஆயத்தமானான்.
ஆட்டோவில் ஏறியபோது, நண்பன் கோபாலின் அழைபேசி ஒலித்தது.
எடுத்தான்.
‘சாரிடா சாமிநாதா. ராத்திரி கொஞ்சம் ஓவரா ஊத்திக்கிட்டதால, ஒரேயடியா ப்ளாட் ஆயிட்டேன். அதனால, நீ கூப்பிட்டதுகூடக் காதுல விழல. என்னை மன்னிச்சுடுடா. இப்ப எங்க இருக்கேன்னு சொல்லு, உடனே வர்றேன்’.
‘நான் உன்னை மன்னிச்சிட்டேன். ஆனா, சூரியன் மன்னிக்கறது கஷ்டம்டா. இங்க சின்னப்பசங்ககூட சூரியன் உதிக்கறதுக்கு முன்னாலயே எழுந்து, உற்சாகமா படிச்சிக்கிட்டு இருக்காங்க. நீயோ, இப்பதான் எழுந்திருச்சிருக்கே. உனக்குப் பிடிச்சதெல்லாம் கொண்டுவந்தேன். உனக்குத்தான் குடுத்து வைக்கலை.
சூரியன்கூட நமக்குத் தினமும் நல்ல விஷயங்களைத்தான் கொண்டுகிட்டு வருது. நாம தூங்கிட்டு இருந்தா, முழிச்சிட்டிருக்கறவங்க கையில அதைக் குடுத்துட்டுப் போயிட்டே இருக்கும். சாரிடா, இன்டர்வியூக்கு நேரமாச்சு. பை!’
கட் பண்ணிவிட்டு ஆட்டோவில் ஏறினான்.

பெயர்க் காரணம்
பத்மாசனத்தில் கூடுதல் விரிவாக்க ஆசனம். இவ்வாசனத்தில் மார்பு எலும்புகள் இடவலமாக விரிவடைகின்றன. அதனால், நுரையீரல்களின் அகலம் அதிகரித்து, நிறைய காற்றை உள் இழுக்க முடிகிறது. தாமரைப் பூவின் இதழ்கள் விரிவதைப்போல, நம் மார்பு எலும்புகள் விரிவடைவதால் இதற்கு பத்ம பத்மாசனம் என்று பெயர்.
செய்முறை
கால்கள் இரண்டையும் விரித்து நீட்டியபடி அமரவும். பிறகு கால்களை மடக்கி ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பத்மாசனத்தில் அமரவும்.
பின்னர், இரண்டு கைகளயும் படத்தில் காட்டியுள்ளவாறு பின்பக்கமாகக் கொண்டு சென்று முதுகோடு படிந்திருக்குமாறு நெருக்கமாக வைத்துக்கொள்ளவும். வலது கைவிரல்களால் இடது கால் கட்டை விரலையும் , இடது கை விரல்களால் வலது கால் கட்டை விரலையும் பற்றிக்கொண்டு செய்ய வேண்டிய ஆசனம்.
இது, இளம் பிராயத்தினருக்கு எளிதில் கைகூடும். ஆனால் வளர்ந்தவர்களுக்குச் சற்று கடும் முயற்சிகள் தேவைப்படும். அப்படி, கைகளால் கால் விரல்களைப் பிடிக்க முடியாதவர்கள், புறங்கைகள் இரண்டையும் முதுகுப் பக்கத்தில் படிய வைத்து, வயிற்றுப் பக்கம் வருமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.
தோள்கள் இரண்டும் இட திசை வல திசையில் விரிவடைவதால், விலா எலும்புகள் இட வலமாக நன்றாக விரிவடைகின்றன. அதனால், நுரையீரல்களின் கொள்ளளவு இன்னும் கூடுதலாகி, அதிகப்படியான காற்றை உள்ளிழுக்க முடியும்.
இதிலும், பத்மாசனத்தில் செய்ததுபோலவே, வயிற்றுத் தசைகளை உள்ளும் புறமும் அசைத்தவாறு வயிற்றுச் சுவாசம் புரியவும். இப்படியே, சுமார் பத்து தடவை சுவாசிக்கவும்.
பின்னர் ஆசனத்திலிருந்து மிக மிகமெதுவாகக் கைகளைத் தளர்த்தியவாறு கீழே இறக்கி இயல்பு நிலைக்கு வரவும். சற்றே இளைப்பாறவும். பிறகு, கால்களை மாற்றி அமைத்து மீண்டும் இவ்வாசனத்தைச் செய்யவும்.

பலன்கள்

இயல்பான சுவாசத்தைவிட ஏழு மடங்கு காற்றை உள்ளிழுப்பதால், ரத்தத்தில் பிராண சக்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

மாடல்: பிரியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...