நமது மரபும் சாத்திரங்களும் பெண்ணை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுவன. இறைவனே மாதொரு பாகனல்லவா? அர்த்தநாரியாக அவன் கொண்டுள்ள திருக்கோலமே இந்தப் பிரபஞ்சத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்ற பேருண்மையின் குறியீடாய் விளங்குகிறது. இந்தத் தத்துவத்தை மிக அழகாக தனது ராமாயண உபன்யாசத்தில் சுந்தர்குமார் கூறினார். இந்த உண்மையை அவர் பல்வேறுவிதமான கருத்துக்களைக் கொண்டு சிறப்பாக விளக்கினார்.
வாணிமகாலில் கடந்த செவ்வாய்க் கிழமை அவர் ராமாயணத்தின் அயோத்தியா காண்டப் பகுதிகளைச் சுவைபட சொன்னார்.
நவராத்திரி போன்ற பண்டிகைகளில் கூட பெண்களை தேவியாகவே மதித்து கன்யா பூஜை, சுவாஸினி பூஜை செய்யப் பணிக்கப்பட்டுள்ளது. எங்கெங்கே பெண்களை ஆராதித்துப் பூஜிக்கிரார்களோ, அங்கெல்லாம் தேவதைகள் பெரும் திருப்தி அடைந்து பெரும் நலன்களைச் செய்கிறார்கள் என வேதம் குறிப்பிடுகிறது.
ஆண்களுக்கு பெண்களை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
சாத்திரங்கள் ஆணையும், பெண்ணையும் சமமாகவே பாவிக்கின்றன. சாத்திரங்கள் ஆண்களுக்கு தினமும் செய்யக்கூடிய சில நியமங்களை ஏற்படுத்தியிருந்தாலும், பெண்களின் உடற்கூறு மாற்றம் கருதி அவர்களது செüகரியத்துக்காகச் சில சலுகைகளை அளித்துள்ளன. பெண்கள் தங்களுக்கு உள்ள குடும்பப் பொறுப்பின் காரணமாக ஆணுக்கு வகுக்கப்பட்டிருக்கும் நியமங்களை செய்ய இயலாது. ஆகவே சாத்திரங்கள் பெண்களுக்குத் தங்கள் குடும்ப நலனைப் பேணுவதையே நியமங்களாக கடமையாக நிர்ணயித்துள்ளன. சாத்திரங்கள் என்றுமே பெண்கள் பலகீனமானவர்கள், சாமர்த்தியம் இல்லாதவர்கள் என பாகுபடுத்தவில்லை. அவர்கள் பலமில்லாதவர்கள் என்ற கருத்தில் அவர்களுக்கு இந்த சலுகைகளை அளிக்கவில்லை. மாறாக, குடும்பம் என்கிற ஆணி வேரை அசையாமல் காத்து தன் கணவரையும், குழந்தைகளையும், புகுந்த வீட்டாரையும் அவர்கள் மனம் கோணாதபடி பார்த்துக் கொள்வதையே அவர்களின் அன்றாடக் கடமைகளாக வகுத்துள்ளன என்று அவர் நுட்பமாக விளக்கியது சிறப்பாக இருந்தது.
தர்மத்தை நாம் காப்பாற்றினால்தான், தர்மம் நம்மைக் காக்கும் என்பது பிரபல வாக்கியத்தைக் கூறி அதை விளக்கினார்.
நம்பிக்கையோடு தர்மம் செய், மரியாதை குறைவோடு தர்மம் செய்யாதே, மலர்ந்த முகத்தோடு தானம் செய், இவ்வளவுதான் தன்னால் கொடுக்க முடிந்ததென்ற தாழ்மை உணர்வோடு தானம் கொடு, மற்றவர்கள் தகுதிக்கு குறைவாகத்தான் தன்னால் கொடுக்க முடிந்ததோ என்ற பயத்தோடு தானம் இடு, தேர்ந்த ஞானத்தோடு தர்மம் செய் என்றெல்லாம் வேதங்கள் தர்மம் செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றன.
தானம் கொடுப்பதை மனமுவந்து கொடுக்க வேண்டும். கொடுத்த தானத்தைப் பற்றி உடனே மறந்துவிடவேண்டும். தானம் கொடுத்தோமே என்று திரும்பத் திரும்ப நினைக்கக் கூடாது.
பாசமாய் வளர்க்கும் பசுமாடு கொட்டகை வரையிலும்; கை கொண்ட மனைவியும் அன்பு மக்களும் மயானம் வரையிலும்; உடம்பு கட்டையில் வைத்து தீயிடும் வரையிலும் உடன் வரும், ஆனால், தானத்தால் விளைந்த பாவ, புண்ணியங்கள் கடைசி வரை தொடர்ந்து வரும் என்று கூறப்பட்டுள்ளது என்று அவர் சொன்னபோது நமக்கு பட்டினத்தடிகளின் பாடல்கள் நினைவுக்கு வந்தன.
தர்மத்தை தொடர்ந்து, விடாமல் செய்வதே சாலச் சிறந்தது என்றார் அவர். ஆரண்ய காண்டத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விளக்கினார்.
சீதை ராவணனால் அபகரிக்கப்பட்டதை எண்ணி எண்ணி காட்டில் மனம் நொந்து போய், இறந்து போய்விடலாம் என்றே ராமர் எண்ணலானார். இதைப்பற்றி லட்சுமணரிடம் சொல்லும்போது, ""நான் ஒருவேளை இப்போதே இறந்து போய் மேல் உலகம் போனால், அங்கே உள்ள என் தந்தை தசரதர், "ராமா! பதினான்கு வருடங்கள் வனவாசம் போவதாய் எனக்கு வாக்களித்துவிட்டு, நடுவிலேயே, வனவாசம் முடியுமுன்பே இங்கே வந்துவிட்டாயா, சொன்ன சொல் காப்பாய் என எண்ணிய என்னை தலை குனிய வைத்துவிட்டாயே' என்று கேட்டுவிடுவாரோ என்பதால்தான் நான் இறப்பதற்கு தயாரில்லை'' என்றாராம். சீதா தேவியைப் பிரிந்த நிலையிலும்கூட தன் வாக்கைக் காப்பாற்ற, தர்மத்தை நிலை நிறுத்தத்தான் விழைந்தார் ராமபிரான் என்று அவர் சொன்னபோது பக்தர்கள் நெகிழ்ந்தனர்.
ஒவ்வொருவருக்கும், அவரவர்களின் தாய், தந்தையர்க்கு செய்யும் சேவைகளே அவர்களைக் காத்து ரட்சிக்கும் கவசம் என்பது உறுதி.
உயர்ந்த தர்மங்களை காலம் காலமாக போதித்து, அவற்றை செயலாக்கியும் உள்ள இந்த பாரத மண்ணில் பிறந்த எவருக்கும் தன் தாய், தந்தையரைப் புறக்கணித்து முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது மிகக் கொடிய பாபத்தை அளிக்கும். முதியோர் இல்லத்தில் பணம் செலுத்துவதனால் மட்டும் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றியதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என அவர் இன்றைய முக்கிய பிரச்னையைத் தொட்டுக்காட்டினார்.
இதையொட்டியதோர் சின்னக் கதையையும் அவர் சொன்னார்.
முப்பது வயது நிரம்பிய ஒரு வாலிபன், எழுபது வயது நிரம்பிய தன் தந்தையைக் கவனித்துக் கொள்ள விருப்பமில்லாமல் எங்கேயோ வெகு தூரத்தில் விட்டுவிட எண்ணி, கால் நடையாக அழைத்துச் சென்றான். பாதி வழியில் சோர்வடைந்திருந்த தந்தையை அந்த இடத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து இளைப்பாறச் சொன்னான். தந்தையோ, ""இந்த இடத்தில் உட்கார வேண்டாம்'' என்றார். அவன் ""ஏன்?'' என்று கேட்டதற்கு, ""பல ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையையும் நான் இம்மாதிரி தூரத்தில் விட்டுவிடச் செல்லும்போது, இங்கேதான் உட்கார வைத்தேன்'' என்று சொல்லி வெட்கித் தலை குனிந்தாராம்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமன்றோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
ஏடிஎம் மைய கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம்: மாநகராட்சிக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை உயா்வு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



