பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சீடன் கற்ற பாடம்!

கடந்த திங்கட்கிழமை, பெசன்ட் நகர், ஆறுபடை வீடு முருகன் திருக்கோயிலில் உள்ள கந்த சஷ்டி மண்டபத்தில் முருகனின் பெருமைகளை அருணகிரிநாதரின் வழி நின்று "வழிக்குத் துணை, பழிக்குத் துணை' போன்ற பல தலைப்புகளில் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:59 pm IST

கடந்த திங்கட்கிழமை, பெசன்ட் நகர், ஆறுபடை வீடு முருகன் திருக்கோயிலில் உள்ள கந்த சஷ்டி மண்டபத்தில் முருகனின் பெருமைகளை அருணகிரிநாதரின் வழி நின்று "வழிக்குத் துணை, பழிக்குத் துணை' போன்ற பல தலைப்புகளில் தொடர் சொற்பொழிவாற்றினார் மா.முத்துகிருஷ்ணன். கந்தபெருமானின் பெருமைகளைப் பற்றிய சொற்பொழிவில் சேகரித்த நல் கருத்துக்கள்:

"ஆறு திருப்பதியில் வளர்பெருமானே' என்று முருகனின் புகழ்பாடி, சொற்பொழிவைத் துவக்கிய முத்துகிருஷ்ணன், அருணகிரிநாதர் அருளிய, கந்தர் அலங்கார பாடல் வரிகளான "முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்' என்பதற்கு, விளக்கமாக அர்த்தங்களை எடுத்துரைத்தார்.

நாம் பண்டிகைகளைக் கொண்டாடுவது வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, அதன் அடிப்படையாக அமைந்துள்ள இறைவனின் மகிமையையும் உணரவேண்டும். "சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு, "கந்த சஷ்டி விரதம் இருந்தால், அகமான பதியில் முருகன் வருவான்' என்று அர்த்தம் கொள்ளவேண்டும் என்று கூறியதை எல்லோரும் ரசித்தனர்.

நாம் பக்தி செலுத்தி இறைவனைத் தொழுவதின் இறுதி நோக்கம், ஞான நிலையை அடைந்து மீண்டும் பிறவா நெறியைப் பெறுவதே என்று தெளியவேண்டும். இக்கருத்தையேதான் பாரதியார், "அறிவிலே தெளிவு' என்றும், "ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்' எனவும் பாடினார்.

ஒüவையாரின் மூதுரைப் பாடலான, "நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்ற வரிகளுக்கு, வித்தியாசமாக, சுத்தமான ஆத்மா செய்யும் நல்ல செயல்கள் பக்தியின் மூலம் பல்லறிவாளர்களுக்கும் நல்லறிவை கொடுக்குமாறு போய்ச் சேரும் என்று விளக்கியதை கூட்டத்தார் பாராட்டி மகிழ்ந்தனர்.

வெய்யிலில் செல்லும்போது வெப்பத்திலிருந்து குடையும், காலணியும் நம்மைக் காக்கின்றன. அதேபோல, "இறைவன் திருநாமம்' என்கிற குடையும், இறை "சிந்தனை' என்கிற காலணியும் நாம் அணிந்திருந்தால், நாம் அனுபவிக்கும் "வினை' என்ற வெய்யிலின் தாக்கம் தெரியாது என்று சிறப்பாக ஒப்பிட்டுக் கூறினார் முத்துகிருஷ்ணன்.

ஞானம் பெற்ற மகான்களை நாம் அலட்சியம் செய்யாமல், அவர்களின் உபதேசங்களைக் கேட்டு, முக்திக்கு வழிதேடிக் கொள்ளவேண்டும். ஆலய தரிசனம் செய்யும்போது, அந்தந்த ஆலயங்களின் "மூர்த்தி, தலம், தீர்த்தம்' பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவேண்டும். கந்த சஷ்டி போன்ற விழாக்காலங்களில் விரதம் இருந்து, அந்தந்த விழாக்கான சிறப்பினை உணர்வது அவசியம். விரதம் என்பதின் அர்த்தமே, யாருக்கும் துன்பம் தராமல் இருத்தலேயாகும்.

இறைவன் மேல் வைக்கப்படும் அன்புதான் நிரந்தரமானது என சீடன் ஒருவன் உணர்ந்ததை குட்டிக் கதையின் மூலம் வர்ணித்தார் முத்துகிருஷ்ணன்.

ஒருநாள் சீடன், தன் குருவிடம், ""குருவே, என் குடும்பத்தார் என் மேல் அளவில்லா அன்பு வைத்துள்ளார்கள்..'' என்று பெருமையாகக் கூறிக் கொண்டான். குரு சிரித்துக் கொண்டே, ""அவர்களின் அன்பு உன் மீதா? உன் சொத்துக்களின் மீதா?'' எனக் கேட்டார்.

சீடன் சினம் கொண்டான். ""வேண்டுமானால் நீங்களே சோதித்துப் பாருங்கள்...'' என்றான்.

குரு, சீடனிடம் ஒரு மருந்தைக் கொடுத்து, ""இந்த மருந்தை நீ உட்கொண்டால், உன் உடல் பிணம் போல் கட்டையாகிவிடும். ஆனால் புலன்களும், உயிரும் இருக்கும். வீட்டிற்குச் சென்று இதை உண்டு, அங்கு நடக்கும் சம்பவங்களை உணர்ந்து, பின் என்னிடம் வா...'' என அனுப்பினார்.

சீடன் வீட்டிற்குப் போய் மருந்துண்டு பிணமானான். உறவினர்கள் எல்லோரும் கதறி அழுதனர். வயதான அவன் தாயும், மனைவியும், சகோதர சகோதரிகளும் அழுது புரண்டனர். விஷயம் கேள்விப்பட்டு குரு அங்கே வந்தார். எல்லோரும் குருவிடம் வந்து, தவ வலிமையால் சீடனை உயிர்ப்பிக்கக் கோரினர்.

குரு ஒருமருந்தைக் காட்டி, ""உங்களில் யாரேனும், இந்த மருந்தை உண்டு மாண்டால், இவன் உயிர் பெறுவான்'' என்று சொல்லி வயதான தாயாரிடம் கொடுத்துச் சென்றார்.

தாய், தன் நான்கு மகன்களில் ஒருவனான சீடன் மறைந்தாலும், மற்ற மூன்று பேரோடு வாழ விருப்பமிருப்பதால், தற்போது சாகத் தயாராக இல்லையென்று தன் மருமகளிடம் தந்தார். சீடனின் மனைவி, தான் செத்து கணவன் பிழைத்துக் கொண்டால், மறுமணம் செய்து கொண்டபிறகு, தான் பெற்ற பிள்ளைகள் மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்பதால், தான் உயிரோடிருந்து குழந்தைகளை வளர்க்கப் போவதாய்க் கூறி மறுத்து விடுகிறார். இப்படி மற்றவர்களும் ஏதோ சாக்கு போக்கு சொல்லி சீடனை மரணத்திலிருந்து காக்க மறுத்துவிடுகின்றனர்.

குடும்பத்தினர் சீடனுக்கு அந்திமக் கிரியை செய்யத் தயாராகி பிணத்தை வீட்டு வாசலுக்கு வெளியே கொண்டு செல்ல முயலும்போது, குறுகிய வாசல்படி தடுக்கிறது, வாசலை இடித்துவிட்டு, கொண்டு செல்லலாம் எனச் சிலர் சொல்லியபோது, குடும்பத்தார்கள், இதற்காக ஏன் வாசல் படியை இடிக்கவேண்டும், பிணத்தின் கை,கால்களை வெட்டி விட்டால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்கும் என்கிறார்கள். இதைச் செவியில் கேட்ட சீடனுக்கு பயம் வந்து விடுகிறது.

சீடன் ஓடிப் போய் குருவின் கால்களில் சரணடைந்து, ""குருவே... இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. மற்றவர்கள் நம் மீது காட்டும் அன்பு நிரந்தரமானதல்ல.. நாம் இறைவன் மேல் காட்டும் அன்பும், இறைபக்தியும், இறைவன் நம்பால் காட்டும் அருளுமே உண்மையானது. சத்தியமானது. நீங்கள் எல்லாப் பற்றுகளையும் விட்டதன் அர்த்தம் இப்போது புரிகிறது'' என்றான்.

வடமொழி ஸ்லோகங்கள், திருப்புகழ், பாரதியார் பாடல்களை மேற்கோள்களாகத் தனது சொற்பொழிவில் தகுந்த இடங்களில் சேர்த்து அளித்த விதம், காது கொடுத்துக் கேட்ட எல்லோர் மனங்களையும் நிறைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.