சென்னை, சாலிகிராமம் தசரதபுரத்திலுள்ள ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் பம்மல் என்.சங்கர சர்மா, கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, "ஸ்ரீகிருஷ்ண சரித்திரம்' என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவில் கேட்ட ஸ்ரீகிருஷ்ண அவதார மகிமையின் விளக்கங்களின் தொகுப்பு:
ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ணபகவானின் உயர்ந்த குணாதிசயங்களையும், எண்ணிலடங்கா சம்பவங்களையும் "ஸ்ரீகிருஷ்ண சரித்திரமாக' உலகுக்கு எடுத்துரைக்கிறது. ஸ்ரீகிருஷ்ண அவதாரம் சிறப்பான நற்குணங்களைக் கொண்ட ஒரு முழுமையான அவதாரமாகக் கருதப்படுகிறது.
ராமாவதாரத்துக்கும், கிருஷ்ணாவதாரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைச் சங்கர சர்மா விளக்கிக் கூறினார். ராமர் அவதரித்தது பகலில் என்றால், கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது இரவில். ராமர் உத்தரயாணத்தில் உதித்தார். கிருஷ்ணரோ தட்சியாணத்தில் அவதரித்தார். ராமரின் பிறப்போ ஆடம்பரமான அரண்மனையில், கிருஷ்ணரின் பிறப்போ சிறைச்சாலையில். சூரியபுத்திரர் சுக்ரீவன் ராமரின் நண்பன். சூரியபுத்திரர் கர்ணனோ, கண்ணனின் எதிர் அணியில் இருந்தார். ராமருடைய அவதாரம் தர்ம தத்துவம் என்றால், கிருஷ்ணரின் அவதாரம் பிரம்மதத்துவத்தின் அடிப்படையிலானது. ராமாவதாரம் ஒழுக்கங்களோடு கூடிய தர்மத்தை அடிப்படை குணங்களாகக் கொண்டது. கிருஷ்ணாவதாரம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு மற்றவர்களையும் அன்போடு அணைத்துச் செல்கிற குணாதிசியங்களைப் பெற்றது. மனிதவர்க்கத்துக்கே ஒரு முன் உதாரணமாய் முழுமை பெற்ற அவதாரமாய் அமைந்தது கிருஷ்ணாவதாரம்.
சொற்பொழிவின் நடுவே, ஏட்டுக்கல்வி மட்டுமே மனிதனுக்கு முக்கியமானதில்லை. வாழ்க்கைக் கல்வியும் தேவையென்பதை சங்கர சர்மா சுட்டிக் காட்டினார். பள்ளிக் கல்லூரித் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற ஒருவர் நல்ல வேலையில் இருந்தும் திருமணமான பின்பு மனைவிக்கும், பெற்றோருக்கும் இடையே சமரச உறவைப் பகிர்ந்து கொள்ளத் தெரியாமல் வாழ்வை இழந்து, நொந்து போய், உயிரையும் விட்டுவிட்டார். என்னதான் கல்வியில் உயர்ந்து இருந்தாலும், வாழ்வியல் நடைமுறை அறியாதவருக்கு தோல்விதான் மிஞ்சும்.
மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின்கம்பியில் மின் விளக்கை இணைக்கும்போது பிரகாசமான வெளிச்சம் கிடைக்கிறது. அதே மின்கம்பியை மனித உடலில் இணைத்தால் உடல் கருகிப் போய்விடுகிறது. மின்சாரம் ஒன்றேயானாலும் அது சேரும் இடத்தைப் பொருத்தே அதன் பயன் வெளியாகிறது. அதேமாதிரி எவ்வளவு உயர்ந்த கல்வியைப் பெற்றாலும், பணிவு என்கிற சிறப்பான குணம் பெறாதவரை, அந்தக் கல்வியின் ஒளி மங்கியே இருக்கும்.
மகாபாரதம், பிரம்ம சூத்ரம் போன்ற சிறந்த நூல்களை வடமொழியில் அருளிய வியாசர், தன்னுடைய மனம் ஏனோ முழுமை அடையாமல், வெறுமையோடே இருப்பதை உணர்ந்தார். அதற்கான காரணத்தை அறியாமல் கவலையோடு இருந்தார். முற்றும் உணர்ந்த நாரதர், வியாசரின் கவலையைக் கண்டு ""உங்கள் வெறுமையைப் போக்க தீர்வு ஒன்று உண்டு'' என்று கூறி, ஸ்ரீகிருஷ்ணபகவானின் மகிமையைப் பற்றி தியானம் செய்து, கிருஷ்ண லீலைகளை எல்லோரும் கேட்டுப் படித்து பயன்பெற எழுதியளித்தால் வெறுமை முழுமையாக அகன்றுவிடும்'' என்றும் ஆசி அருளினார். அவ்வண்ணமே, பக்தி இலக்கியத்தை உலகுக்கு அருள நாரதர் பணிக்க, வியாசர் ஸ்ரீமத்பாகவதம் மூலமாக கிருஷ்ண சரித்திரத்தை எழுதி, தன் மகன் சுகப்பிரம்மத்திடம் விளக்கிச் சொல்லி, மனச்சஞ்சலம் நீங்கி பேரின்பம் அடைந்தார். எந்த நல்ல விஷயங்களின் பெருமையும், குரு போதிக்கும்போது, நல்ல சீடர்களிடம் அந்த விஷயம் சென்றடையும் போதுதான் முழுமை அடைகிறது. சுகப்பிரம்மத்திடம் ஸ்ரீமத் பாகவதம் சென்றடைந்ததால்தான் வழிவழியாகப் பரவி இன்றளவும் கிருஷ்ண மகிமையைப் போற்றும் சிறந்த நூலாக விளங்குகிறது.
ஆசையைப் பேராசையாக்குபவர்கள், விரும்பிய பொருளை அடையமுடியாமல் வெறுமையை மட்டுமே பெறுகிறார்கள் என்பதை ஒரு குட்டிக் கதையின் மூலமாக சங்கர சர்மா விளக்கினார். ஒரு சந்நியாசி காட்டில் போய்க்கொண்டிருந்தார். நான்கு பேர், அவரை வழியில் மடக்கி, பொருள்களைக் கொள்ளை அடிக்க முயற்சித்தனர். அந்த சந்நியாசி தன்னிடம் ஒன்றும் இல்லையென்றும், ஞானதிருஷ்டியால் உணர்ந்து ஒரு இடத்தைக் காட்டி, அங்கு தோண்டினால் பொன்னும் பொருளும் புதையலாக கிடைக்குமென்றார். இருவரும் தோண்டத் தொடங்கினார்கள். மற்ற இருவர், பசியாற உணவைத் தேடிக் கொண்டு வர சென்றனர். சந்நியாசி கூறியபடியே புதையலும் கிட்டியது. புதையலைத் தோண்டிய இருவர் தாங்களே புதையலை அடைய மற்ற இருவரையும் கொல்ல முடிவு செய்தனர். ஆனால் உணவு கொண்டு வர சென்றவர்களோ தாங்களே புதையலை கொண்டு செல்ல வேண்டுமென்று உணவில் விஷத்தைக் கலந்து இருவருக்கும் கொடுத்தனர். தோண்டியவர்கள் உண்ணும் முன்பு, மற்ற இருவரையும் கத்தியால் குத்திக் கொன்றனர். புதையல் தங்களுக்கு மட்டுமே கிடைக்குமென்று சந்தோஷத்தோடு உணவை உண்டனர். ஆனால் மாண்டனர். தான் மட்டுமே அடைய ஆசைப்பட்டு, அனுபவிக்க முடியாது எல்லோருமே அழிந்தனர். ஆனால் ஞானக்கண்ணில் தெரிந்த புதையலை அனுபவிக்க எந்த ஆசையுமில்லாத சந்நியாசியின் முன்பு, புதையல் கொட்டிக்கிடந்தது. எனவே பேராசைக்காரர்களால் வெறுமையை மட்டுமே பெறமுடியும்.
ஸ்ரீகிருஷ்ணரின் மகிமையை, எளிமையான நடைமுறை உதாரணங்களுடன், எல்லோருக்கும் புரியும் வகையில் சங்கர சர்மா விளக்கியது சொற்பொழிவுக்கு மேலும் மெருகூட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பையில் நெகிழிப் பயன்பாடு: கடைகளுக்கு அபராதம்

பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ரூ. 3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புதுக்கடை அருகே விபத்தில் இருவா் காயம்

விதிமீறல்: குமரி மாவட்டத்தில் 2 கல்குவாரிகள் செயல்படத் தடை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



