பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ராமபிரானும் ஒரு படகோட்டி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கிருஷ்ண கான சபா, காமகோடி அரங்கில் 'பஜகோவிந்தம்' என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு ஆர்.பி.வி.எஸ்.மணியனால் நிகழ்த்தப்பட்டது. ஆதிசங்கரரின் பிரபலமான ஸ்லோகங்களுக்கு விளக்கமாக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:08 am IST

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கிருஷ்ண கான சபா, காமகோடி அரங்கில் "பஜகோவிந்தம்' என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு ஆர்.பி.வி.எஸ்.மணியனால் நிகழ்த்தப்பட்டது. ஆதிசங்கரரின் பிரபலமான ஸ்லோகங்களுக்கு விளக்கமாக அமைந்த சொற்பொழிவில் அவர் சிந்திய முத்தான கருத்துகளில் சில:

பஜகோவிந்தம் 34 பாடல்களின் தொகுப்பு. ஆதிசங்கரர் மற்றும் அவருடைய பதினான்கு சீடர்களும் அருளிய ஸ்லோகங்களே பஜகோவிந்தம் என்ற பெயர் பெற்றது. மோகத்தால் கட்டுண்ட தெளிவின்மை அற்ற அறிவின் மயக்கத்தைப் போக்குவதே பஜகோவிந்தத்தின் நோக்கம்.

ஆதிசங்கரர் மற்றும் சீடர்கள் தங்களுக்குத் தனித்தனியாகத் தோன்றிய சிந்தனைகளையே பாடல்களாக வடித்துள்ளனர். ஒருவர் மற்றொருவரின் கருத்தைப் பற்றிச் சிந்திக்காமல், சுயமாகத் தோன்றிய கருத்தைப் பாடல் வடிவில் காட்டியிருப்பதே தொகுப்பின் சிறப்பாகும்.

சுதேவன்ஆதிசங்கரரின் பிரதான சீடர் பத்மபாதர், தான் எழுதிய பாடலில், சாதாரண வாழ்க்கையின் ஆசாபாசங்களிலிருந்து காப்பாற்றி, பிறவிக் கடலைக் கடக்க வைக்கும் சாதனம், ஞானிகளின் சேர்க்கை ஒன்றே எனக் கூறியுள்ளார். இந்தப் பாடலை விளக்கிய மணியன் இராமாயணத்தில் இடம் பெறும் ஒரு காட்சியையும் நினைவு கூர்ந்தார்.

கல்லாயிருந்த அகலிகை உயிர் பெற்றபின், ராமபிரான் கங்கையின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லும் பொருட்டு படகுத்துறைக்கு வந்தார். முதலில் விசுவாமித்திரரும், இலக்குவனும் படகில் ஏறியதும், ராமர் ஏறும்போது படகோட்டி இடைமறித்து, ராமரை கங்கையில் காலைக் கழுவிய பின் படகில் ஏறுமாறு சொன்னான். காரணம் கேட்டபோது, ராமரின் காலின் தூசி பட்டு கல்லான அகலிகை உயிர் பெற்றாள். அத்தனை சிறப்புப் பெற்ற ராமரின் பாதம் பட்டு தன் படகும் உயிர் பெற்றால், பிழைப்புக் கெட்டுப் போகும் என்றான். அவன் கருத்தை ரசித்த ராமரும் கங்கையில் கால் கழுவி படகில் அமர்ந்தார். படகும் அக்கரை சென்றது.

ராமபிரான் படகோட்டியிடம் படகுக்கான கூலியைத் தந்தார். கூலியை வாங்க மறுத்த படகோட்டி,""ஒரு தொழிலாளி, இன்னொரு தொழிலாளியிடம் கூலி வாங்கக் கூடாது '' என்றான். ஆச்சரியமடைந்த ராமர், ""நீ படகோட்டி, தொழிலாளி. நான் அரசகுமாரன் அல்லவா, எவ்வாறு தொழிலாளி ஆவேன்?'' என்றார். அதற்குப் படகோட்டி, ""நான் கங்கையில் படகோட்டுபவன். எல்லாரையும் இக்கரையிலிருந்து அக்கரைக்குக் கொண்டு செல்பவன். நீங்களோ எல்லாரையும் பிறவி என்கிற கடலில், குடும்ப பாரம் என்கிற இக்கரையிலிருந்து மோட்சம் என்கிற அக்கரைக்கு உங்கள் அருள் என்ற படகில் இட்டுச் செல்லும் படகோட்டி'' என்றான்.

மற்றொரு பிரதான சீடரான தோடகாச்சாரியார் தன் பாடலில், "தூய்மை அற்ற வெளி வேஷம் போடும் துறவிகள் மூடர்கள், அதேபோல வெளிவேஷம் போட்டு உலவும் துறவிகளை இனம் கண்டு கொள்ள முடியாத மனிதர்களும் மூடர்கள்' என்கிறார்.

ஹஸ்தாலகர் என்ற சீடர், "மானுடர்கள் முதுமையடைந்து, உடல் தளர்ச்சியால், முடி நரைத்து, சதை சுருங்கி, வழுக்கையாகி, பற்கள் விழுந்து, கைத்தடியோடு நடமாடும் நிலை பெற்றபோதும்,புலன்களின் ஆசையை அடக்க முடியாமல் துன்பப்படுகின்றனர்' என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சீடர் சுபோதகர், சில முற்றும் துறந்த துறவிகளால் உலக ஆசைகளை விட்டுவிட முடிவதில்லை. அதனால் படும் அவதிகளால் அவர்களின் சோக நிலை தன் பாடலில் வர்ணித்துள்ளார். இந்தப் பாடலை விவரித்த மணியன் பட்டினத்தாரைப் பற்றிய ஒரு செய்தியையும் குறிப்பிட்டார்.

மன்னராக இருந்து முடி துறந்து, துறவியான பத்ரகிரியாரும், பட்டினத்தாரும் சமகாலத்தில் வாழ்ந்தபோது, தன்னிடம் வந்த பக்தரிடம் பட்டினத்தார், "அந்த சம்சாரியைப் போய்ப் பார்' எனச் சொல்லி பத்ரகிரியாரிடம் அனுப்பினார். பக்தரும் பத்ரகிரியாரைத் தரிசித்து, பட்டினத்தார் அவரைச் சம்சாரி என்று குறிப்பிட்டதைச் சொன்னார். குழம்பிப்போன பத்ரகிரியார் யோசித்த பின்புதான் உணர்ந்து கொண்டார். பத்ரகிரியார் துறவியாயினும் எப்போதும் தன்னிடத்தே உணவுக்காக ஒரு திருவோட்டையும், தொல்லை தரும் நாய்களை விரட்ட ஒரு கோலும் உடன் பத்திரமாக வைத்திருப்பார். இவர் ஆசையோடு வைத்துள்ள இந்தப் பொருள்களைக் குறிப்பிட்டே, பட்டினத்தார் இவரைச் சம்சாரி என்று சொன்னது புரிந்தது. அக்கணமே திருவோட்டையும், கோலையும் தூக்கி எறிந்து முழுமையான பற்றில்லாத் துறவியானார் பத்ரகிரியார். துறவிகள் மலைப்பாம்பு போல வாழ வேண்டும் என்றார் பட்டினத்தார். மலைப் பாம்பு இரையைத் தேடிப் போகாது. அதற்கு எட்டும் இடத்தில் கிடைக்கும் இரையையே அது உண்ணும்.

சொற்பொழிவின் முடிவில், முத்தாய்ப்பாக ஒரு புராணக்கதையைக் குறிப்பிட்டார் மணியன். ஒருமுறை, கங்கைக் கரைக்கு வந்த சிவனும், பார்வதியும் மானுடர்களுக்குத் தங்கள் பாவம் பற்றிய கருத்துகள் என்னவென்பதைப் பற்றி அறியும் ஆவல் கொண்டனர். சிவபெருமான் ஒரு முதியவராக வடிவமெடுத்து கங்கையில் மூழ்கினார். அடித்துச் செல்லப்பட்டார். பார்வதி அன்னை கரையிலிருந்து அவரைக் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டார். பலரும் கங்கையில் மூழ்க முன்வந்தபோது, பாவமே செய்யாதவர்தான் முதியவரைக் காப்பாற்றச் செல்ல வேண்டுமென நிபந்தனையிட்டார் பார்வதி. எல்லாரும் தயங்கியபோது, ஓர் இளைஞன் மட்டும் கங்கையில் மூழ்கி முதியவரைக் காப்பாற்றிக் கொண்டு வந்தான். பார்வதி தேவி அவனிடம், ""நீ பாவமே செய்யாதவனா?'' என்று கேட்டபோது, அந்த இளைஞன், ""நானும் பாவம் செய்தவன்தான். ஆனால் எனக்கு முழு நம்பிக்கையுண்டு, இந்தப் புனித கங்கையில் மூழ்கியவுடன், என் பாவங்களெல்லாம் கரைந்து நானும் புனிதனாகிவிட்டேன்'' என்றான்.

வடமொழி ஸ்லோகங்களை விளக்கியபோது, திருக்குறள், திருமூலரின் பாடல்கள், விவேகானந்தரின் அருள் வாக்குகள் போன்றவற்றின் சிறந்த கருத்துகளையும் கோர்த்து, மணியன் கணீரென்ற குரலில், தெளிவான தமிழில் உரையாற்றி, அரங்கத்தில் இருந்தவர்களை மெய் மறக்கச் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.