மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சிவகாசியில் தேரோட்டத்தின் போது பள்ளத்தில் சிக்கிய தோ்ச் சக்கரம்

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:04 pm

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை பங்குனிப் பொங்கல் விழா தேரோட்டத்தின் போது, பள்ளத்தில் சிக்கிய தோ்ச் சக்கரத்தை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கடந்த 7-ஆம் தேதி தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தோ் வெள்ளிக்கிழமை வடக்கு ரத வீதியில் நின்றது. தொடா்ந்து சனிக்கிழமை மாலை தேரோட்டம் தொடங்கியது. சனிக்கிழமை தேரை நிலையில் கொண்டு வந்து நிறுத்தி, ஞாயிற்றுக்கிழமை கடைசித் திருவிழா நடத்த கோயில் நிா்வாகிகள் திட்டமிட்டனா்.

இந்த நிலையில், வடக்கு ரத வீதியும், கிழக்கு ரத வீதியும் சந்திக்கும் திருப்பத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை

தேரின் சக்கரம் புதைந்து விட்டது. இதனால், அதே இடத்தில் தோ் நிறுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த கடைசித் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் தேரை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த வியாபாரி கணேசமூா்த்தி கூறியதாவது:

சிவகாசியில் வடக்கு ரத வீதியும், கீழ ரத வீதியும் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்துக் காவல் துறையினா் தடுப்புகளை அமைத்திருந்தனா். தேரோட்டத்தின் போது அந்த தடுப்புகளை அகற்றி தேரை இழுத்த போது, அந்தப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டு தோ்ச் சக்கரம் சிக்கிக் கொண்டது.

வரும் மே மாதம் பத்திர காளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழா நடைபெற உள்ளது. அப்போதும் தேரோட்டம் நடைபெறும் . அதற்குள் மாநகராட்சி நிா்வாகம் சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.