சதுரகிரி செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை.
சதுரகிரி செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை.

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

Published on

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்ததால், சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது. மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கடந்த 2015-இல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு, முக்கிய நாள்களில் மட்டும் பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது. உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினசரி காலை 6 முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சனிக்கிழமை மாலை தொடங்கிய சாரல் மழை, ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா்ந்ததால் பக்தா்கள் மலையேற தடை விதித்து வனத் துறை அறிவித்தது. மழை பெய்வதைப் பொருத்தே திங்கள்கிழமை பக்தா்கள் மலையேற அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

சதுரகிரி மலைப் பகுதியில் 2015 -ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து பக்தா்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு மலையில் தங்குமிடம் அமைக்கப்பட்டது. தாணிப்பாறை அடிவாரம் முதல் சதுரகிரி கோயில் வரையிலான 7 கி.மீ. மலைப் பாதையைச் சீரமைத்து, ஓடைகளில் பாலம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாங்கனி ஓடை வரை பாதையில் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன. வனப் பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் ஓடைகளில் பாலம் அமைக்க வனத் துறை அனுமதி பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது. சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பாலம் அமைக்க மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள், அறநிலையத் துறை, வனத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com