/

கண்காட்சி: மக்கள் புத்தகத் திருவிழா!

சென்னை புத்தகக் கண்காட்சியைப் போலவே ஈரோட்டில் வெற்றிகரமாக கடந்த ஐந்தாண்டுகளாக புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது மக்கள் சிந்தனைப் பேரவை என்கிற அமைப்பு. புத்தகத் திருவிழாவை வெறும் புத்தகம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:54 am

ந.ஜீ.

சென்னை புத்தகக் கண்காட்சியைப் போலவே ஈரோட்டில் வெற்றிகரமாக கடந்த ஐந்தாண்டுகளாக புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது மக்கள் சிந்தனைப் பேரவை என்கிற அமைப்பு. புத்தகத் திருவிழாவை வெறும் புத்தகம் விற்கும், வாங்கும் நிகழ்வாக இல்லாமல், ஒரு மக்கள் இயக்கமாகவே நடத்தி வருகிறது அது. மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர், நிறுவனர் ஸ்டாலின் குணசேகரனைச் சந்தித்து ஈரோடு புத்தகத் திருவிழாவைப் பற்றிக் கேட்டோம்.

ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

""2005 ஆம் ஆண்டிலிருந்து ஈரோட்டிலுள்ள மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பின் சார்பாக புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறோம். இந்த அமைப்பில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுநல விரும்பிகள், சமூக நல ஆர்வலர்கள் என பலதரப்பினரும் இருக்கிறார்கள்.

மக்களிடையே படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதும், புத்தகங்களுடன் அவர்களுக்கு உறவை ஏற்படுத்துவதுமே நாங்கள் புத்தகத் திருவிழாவை நடத்த நினைத்ததற்குக் காரணம்.

இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எனத் தனித்தனியாகத் திருவிழாக்கள் உள்ளன. ஆனால் எல்லா மக்களுக்குமான திருவிழா என்று எதுவுமில்லை. எனவே அனைத்து மக்களுக்குமான திருவிழாவாக இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்த முடிவு செய்தோம்.

முதல் புத்தகத் திருவிழாவை நடத்தும் போது பதிப்பாளர் மற்றும் மக்களுடைய ஆதரவு எப்படி இருந்தது?

2005 இல் இந்தப் புத்தகத் திருவிழாவை ஒரு திருமண மண்டபத்தில் 75 அரங்கங்களுடன் நடத்த முடிவு செய்தோம். ஆனால் இதற்கு புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து போதுமான வரவேற்பு இல்லை. அதற்குக் காரணம் ஈரோடு ஒரு வணிக நகரம், சிறியது, மக்கள் தொகை குறைவு, அதிகமாகப் புத்தகங்கள் வாங்கமாட்டார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைத்ததுதான்.

இந்த எண்ணத்தை மாற்ற நாங்கள் பலமுறை புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டங்களை நடத்தினோம். அதன் விளைவாக அவர்கள் தயங்கித் தயங்கி அந்தப் புத்தகத் திருவிழாவில் பங்கெடுத்தனர்.

ஆனால் புத்தகத் திருவிழா மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவு புத்தகங்கள் விற்பனையாகின.

அடுத்தடுத்த புத்தகத் திருவிழாக்களில் என்னென்ன மாற்றங்களைச் செய்தீர்கள்?

அடுத்த ஆண்டு இரண்டாவது புத்தகக் கண்காட்சியை ஈரோட்டில் உள்ள வ.உ.சி. பூங்காவில் திறந்த வெளி மைதானத்தில் நடத்தினோம். இந்த ஆண்டு 156 அரங்குகள் என முடிவு செய்தோம்.

முதலாண்டு புத்தகத் திருவிழா வெற்றி என்றாலும் அரங்குகளை அதிகமாக்கியதால் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தகத் திருவிழாவில் பங்கெடுக்கத் தயங்கினார்கள். முதலாண்டைப் போலவே இரண்டாம் ஆண்டும் புத்தகத் திருவிழா மாபெரும் வெற்றி அடைந்தது.

அதற்குப் பின் இரண்டாண்டுகள் நடத்திவிட்டோம். ஆனால் அரங்குகள் எண்ணிக்கையை 160 ஆக அதிகரித்தோம். அதற்குமேல் அதிகரிக்கவில்லை. காரணம், இடவசதி அவ்வளவுதான்.

புத்தகத் திருவிழாவை நடத்துவதால் மக்கள் சிந்தனைப் பேரவைக்கு பொருளாதாரரீதியாக லாபம் தானே?

புத்தகத் திருவிழாவை நாங்கள் வணிக நோக்கத்துடன் நடத்துவதில்லை.

புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும் மக்களிடம் இதுவரை நுழைவுக் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை. புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் அரங்குகளுக்காக வாங்கும் கட்டணம் புத்தகத் திருவிழாவின் செலவினங்களில் பாதியை ஈடு செய்யவே போதாது. மக்கள் சிந்தனைப் பேரவையின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தரும் தொகையை வைத்துத்தான் கடந்த மூன்று ஆண்டு புத்தகத் திருவிழாவைச் சமாளித்தோம். நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா மட்டும்தான் வரவும் செலவும் ஒன்றையொன்று ஈடுகட்டின திருவிழாவாகும். லாபநோக்கம் சிறிதும் இன்றி புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.

புத்தகத் திருவிழாவிற்கு வரும் மக்களை ஈர்க்க என்ன செய்கிறீர்கள்?

புத்தகத் திருவிழா நடக்கும் ஒவ்வொருநாள் மாலையும் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவோம். இந்தக் கூட்டங்களில் 5,000 - 10,000 மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

250 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு "புத்தக ஆர்வலர்' என்ற சான்றிதழை புத்தகத் திருவிழாவின்போதே வழங்குகிறோம். இந்தச் சான்றிதழைப் பெற மக்கள் வரிசையில் நிற்பதை நீங்கள் புத்தகத் திருவிழாவிற்கு வந்தால் பார்க்க முடியும்.

குழந்தைகளும், மாணவர்களும் புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக ரூ.10 மதிப்புள்ள உண்டியலை ரூ.5 க்கு விற்பனை செய்தோம். அதில் அவர்கள் ஆண்டு முழுவதும் சேமிக்கும் பணத்தை வைத்துப் புத்தகங்கள் வாங்கலாம்.

புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்தே வருவார்கள். அவர்களுக்கு என்ன வசதி செய்து தருகிறீர்கள்?

புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தங்குவதற்கென்று பெரிய திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்து தருகிறோம்.

பதிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு அரங்குகளை ஒதுக்குவதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறீர்கள்?

புத்தகத் திருவிழாவில் பதிப்பாளர்களுக்கு, விற்பனையாளர்களுக்கு அரங்குகள் ஒதுக்குவதில் நாங்கள் எந்தச் சார்புத்தன்மையும் பார்ப்பதில்லை. நல்ல, பயனுள்ள புத்தகங்களை வெளியிடுபவருக்கே, விற்பனை செய்பவருக்கே அரங்குகளை ஒதுக்கித் தருகிறோம். ஒருவருக்கு இரண்டு அரங்குகளுக்கு மேல் ஒதுக்குவதில்லை.

ஒன்றிரண்டு புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளருக்கு அரங்குகளை எப்படி ஒதுக்குவீர்கள்?

சென்ற ஆண்டு அருமையான 3 புத்தகங்களைப் பதிப்பித்த ஒரு பதிப்பாளர் எங்களை அரங்கு வேண்டி அணுகினார். ஆனால் அவருக்கு ஒதுக்கினால் அதைப்போல நிறையப் பேர் கேட்பார்கள். அவரைப் போல நல்ல நூல்களைப் பதிப்பித்த பதிப்பாளர்களின் நூல்களையும் சேர்த்து விற்பனை செய்வதானால் அவருக்கு அரங்கு தருவதாக உறுதியளித்தோம். அவரும் 200 தலைப்புகளைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார். அவருக்கு அரங்கு ஒதுக்கினோம். அவருக்கு மகிழ்ச்சி. எங்களுக்கும் மனநிறைவு.

தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றுக்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கும் என்ன வித்தியாசம்?

ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கும் பிற ஊர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ஒரு புத்தகத் திருவிழா முடியும்போதே அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் தேதியை முடிவு செய்து அறிவித்துவிடுகிறோம். அன்றிலிருந்து அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கான பணிகள் ஆரம்பமாகிவிடுகின்றன.

மக்கள் சிந்தனைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், தாளாளர்கள் துணையுடன் அவர்கள் பணிபுரியும் கல்விநிலையங்களில் உள்ள மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும்வகையில் கூட்டங்களில் பேசுவோம்.

அதுபோல முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலையில் பிரேயர் நடக்கும்போது சென்று மாணவர்களுக்குப் புத்தகம் படிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

ஈரோட்டில் உள்ள ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளில் கூட்டங்கள் நடத்தி புத்தகத் திருவிழாவைப் பற்றிப் பேசுவோம்.

நான் பல்வேறு தொழிற்சங்கங்களில் தலைவராக இருப்பதால் தொழிலாளர் கூட்டங்களில் புத்தகத் திருவிழாவைப் பற்றி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.

பல ஆண்டுகளாக நான் பல்வேறு கல்விநிலையங்களில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம். மேலும் நான் மாணவனாக இருந்த போதே பல்வேறு மாணவர் சங்கங்களில் பொறுப்பேற்றுச் செயலாற்றியிருக்கிறேன்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் முக்கியப் பொறுப்பில் செயல்பட்டிருக்கிறேன். எனவே எனக்கும் கல்விநிலையங்களுக்குமான தொடர்பு வலுவானது. இப்போதும் அந்தத் தொடர்பு உள்ளது. எனவே புத்தகத் திருவிழாவைப் பற்றி மாணவர்களிடம் பேசுவது எளிதான ஒன்றாக ஆகிவிடுகிறது.

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவராகவும், சட்ட ஆலோசகராகவும் நான் இருப்பதால் ஈரோடு புத்தகத் திருவிழாவைப் பற்றிய விளம்பர போர்டுகளை அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் ஆட்டோவின் பின்புறம் கட்டுவதுடன், மிகவும் கவனமாகவும் பார்த்துக் கொள்கிறார்கள்.

"இல்லம்தோறும் நூலகம்', " நூலகம் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டும்', "நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்' போன்ற முழக்கங்கள் உள்ள சுவரொட்டிகளை மக்கள் சிந்தனைப் பேரவை சார்பாக லட்சக்கணக்கில் அடித்து விளம்பரம் செய்கிறோம்.

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவின்போதும் 5 லட்சம் துண்டறிக்கைகளை அடித்து மக்கள் சிந்தனைப் பேரவை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மூலமாக வீடுவீடாக விநியோகம் செய்கிறோம்.

இதுதவிர லோக்கல் டிவியில் புத்தகத் திருவிழாவைப் பற்றிய விளம்பரங்கள் தருகிறோம்.

இவ்வளவு விளம்பரங்கள், முயற்சிகள் செய்து நடத்திய புத்தகத் திருவிழாக்களால் என்ன மாற்றங்களைக் காண்கிறீர்கள்?

புத்தகங்களை மக்கள் படிக்க வேண்டும், அவற்றின்பால் அவர்களுக்குத் தீராத ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் எடுக்கிற பல்வேறு முயற்சிகளின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் புத்தகம் படிப்பது ஒரு பேஷன் போலாகிவிட்டது. ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமல்லாமல் சேலம், நாமக்கல், கோவை போன்ற நகரங்களில் இருந்தெல்லாம் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்காக மக்கள் வேன் வைத்துக் கொண்டு வருகிறார்கள்.

ஈரோடு பகுதியில் மட்டுமல்லாமல் பிறபகுதிகளிலும் புத்தகங்களைப் படிப்பது என்ற அறிவார்ந்த செயல்பாட்டை ஊக்குவிக்க "கொங்கு மண்டல அறிவுக் களஞ்சியம்' என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

புத்தகத் திருவிழாவை நடத்திய எங்கள் அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டது இதுதான். நல்ல நூல்களை மக்கள் படிக்க வேண்டும் என்ற சேவை நோக்கத்துடன் செயல்பட்டால், மக்கள் அதைப் புரிந்து கொண்டு பெரிய அளவில் ஆதரவு தருவார்கள் என்பதுதான் அது.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.