ஆப்பிள் தேசம் - 2: சோலைகளிடையே சாலைப் பயணம்!
நம் ஒவ்வொருவரின் செயலும் இன்னொருவரை நம்மையறியாமலே கடுமையாகப் பாதிக்கக் கூடும் என்ற யதார்த்தத்தை, என் அமெரிக்காவுக்கான முதல் விமானப் பயணம் நிரூபித்தது. சென்னையில் கடைசி நிமிடத்தில் இறங்கிச் சென்ற பயணிய


நம் ஒவ்வொருவரின் செயலும் இன்னொருவரை நம்மையறியாமலே கடுமையாகப் பாதிக்கக் கூடும் என்ற யதார்த்தத்தை, என் அமெரிக்காவுக்கான முதல் விமானப் பயணம் நிரூபித்தது. சென்னையில் கடைசி நிமிடத்தில் இறங்கிச் சென்ற பயணியால் தாமதமான விமானப் பயணத்தினால், துபையில் நான் மட்டும் அடுத்த தொடர்பு விமானத்தை தவறவிடவில்லை. இன்னும் அங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல, அடுத்த விமானத்தைப் பிடிக்க வேண்டிய சென்னைப் பயணிகள் பலர் சிக்கலைச் சந்தித்தார்கள். நியூயார்க் வந்து சேர்ந்தபோது, அங்கிருந்து கொலம்பஸ் செல்ல வேண்டிய விமானத்தையும் தவறவிட்டதோடு என் பிரச்னைகள் முடியவில்லை.
நியூயார்க் விமான நிலையத்தில், அந்த அமெரிக்க விமான கம்பெனி மறுநாள் காலை அவர்களுடைய விமானத்திலேயே நான் கொலம்பஸ் செல்லத் தவறினால் எனக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருக்கும் ரிட்டர்ன் விமான டிக்கட்டும் ரத்தாகிவிடும் என்று மிரட்டினார்கள். இதிலும் ஒவ்வொரு நேரத்தில் டியூட்டியில் இருந்த வெவ்வேறு அலுவலர்கள் வெவ்வேறுவிதமாகப் பதிலளித்தார்கள். ஒருவர் ரத்தாகும் என்றார். இன்னொருவர் ரத்தாகாது, ஆனால் கட்டணம் வேறுபடும். வித்தியாசத்தைக் கட்டவேண்டும் என்றார். இவர்கள் அலுவல் நேரம் முடிந்து சென்றதும் அடுத்து வந்தவர், இந்த கென்னடி விமான நிலையத்திலிருந்து உங்களுக்கு அடுத்த விமானமே கொலம்பஸýக்குக் கிடையாது. நியூயார்க்கிலேயே இன்னொரு முனையில் இருக்கும் லக்வார்டியா நிலையத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்றார். அடுத்தவர் உங்கள் பெட்டிகளுக்குத் தனியே கட்டணம் செலுத்தவேண்டும் அமெரிக்காவில் உள்நாட்டு சர்வீஸ்களில் இலவசமாக லக்கேஜை அனுமதிப்பதில்லை என்றார்.
பத்தாண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் முகுந்தராஜ் உடனிருந்ததால் இதில் பல சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள முடிந்தது. திட்டமிடாமலே நியூயார்க் நகரம் உறங்கும் நேரத்தில் அந்த நகரிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து பிஸ்காட்டவே போய் ஓரிரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலை மறுபடியும் நியூயார்க் வந்து லக்வார்டியா விமான நிலையத்திலிருந்து, கொலம்பஸýக்குப் புறப்பட்டேன். விமான கம்பெனி அலுவலரிடம் லக்கேஜுக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா? என்று கேட்டேன். எந்த நாட்டுக்காரன்? என்று கேட்டார். இந்தியா என்றேன். டெண்டுல்கர் நாட்டிலிருந்தா? எனக்கு ரொம்பப் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரர் டெண்டுல்கர் என்று சொன்ன அந்த கரீபீயர், லக்கேஜுக்குக் கட்டணம் விதிக்கவில்லை. டெண்டுல்கர் தயவா, அல்லது விதியே அப்படித்தானா? என்று எனக்குத் தெரியவில்லை. தவிர, என் லக்கேஜ் எடை குறைவுதான். இந்தியாவிலிருந்து புறப்படும்போது சுமார் 45 கிலோ வரை எடுத்துச் செல்ல அனுமதியிருந்தபோதும், நான் 30 கிலோவுக்கும் குறைவாகவே எடுத்துப் போயிருந்தேன். அதிலும் அமெரிக்க நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற விஷய கனம் பொருந்திய என் புத்தகங்கள் எடை பத்து கிலோ.
சிறு வயதிலிருந்தே, இந்திய ரயில்களில் நான் கண்ட டிராவல் லைட் என்ற வாசகம், என்னைக் கவர்ந்த வாசகம். பள்ளிக்கூடத்துக்குக் கூட பத்து நோட்புக் எடுத்துச் செல்லாமல் ஒற்றை நோட்புக் மட்டுமே எடுத்துச் செல்வேன். சுமை கால் பணம் சுமை கூலி முக்கால்பணம் என்று நம் மரபில், இது பற்றி நமக்கு அறிவுறுத்தியும், பலர் நிறைய சுமைகளுடன்தான் பயணிக்கிறார்கள். மூன்று வாரங்கள் அமெரிக்காவில் சுற்றும் திட்டத்துடன் சென்ற நான் உள்ளாடை, கைக்குட்டை, ஜிப்பா, பைஜாமா எல்லாவற்றிலும் ஏழேழுதான் எடுத்துச் சென்றேன். ஒவ்வொரு வார இறுதியிலும் தங்கியிருக்கும் நண்பர் வீட்டில், சலவை இயந்திரங்களில் துவைத்துவிடலாம் என்பது திட்டம். அப்படியே செய்யவும் முடிந்தது.
லக்வார்டியா விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில், எனக்கு முன்னும் பின்னும் வந்தவர்களைத் தொட்டுத் தடவி சோதனை செய்யாமல் விட்டுவிட்டு, என்னை மட்டும் தனியே ஒரு கண்ணாடிக் கூண்டில் நிறுத்தினார்கள். ஷாருக்கான், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருக்குச் செய்தது போல, என்னை மேலாடைகளைக் கழற்றச் சொல்லவில்லை. தொட்டுத் தடவிப் பார்த்துவிட்டு என்னை அனுமதித்துவிட்டார்கள். பிறகு கொலம்பஸில் இறங்கி அருள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், என் பெட்டியைத் திறக்க நம்பர் லாக் எண்களை நினைவுபடுத்திக் கொண்டு திறக்க முற்பட்டபோது, பெட்டி திறந்தே இருந்தது. பூட்டு பெரிய சுத்தியலால் அடித்து உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே ஒரு அச்சிட்ட காகிதம். சோதனைக்காக உங்கள் பெட்டியை உடைக்க வேண்டி இருந்தது. வருந்துகிறோம். எனினும் பூட்டுக்கு நஷ்ட ஈடு தர இயலாது என்பதை இனிமையாக ஒரு பக்கம் எழுதியிருந்தார்கள். அடுத்த முறை பயணம் செய்யும்போது
எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ள ஜ்ஜ்ஜ்.ற்ள்ஹ.ஞ்ர்ஸ்க்குச் செல்லவும் என்றும் சொல்லியிருந்தார்கள்.முதல்முறை வெளி நாட்டுப் பயணம் செல்பவர்கள் இப்படிப் பல சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி முன்கூட்டித் தெரிந்துகொள்வது அவசியம். பெட்டியைப் பூட்டி வைத்திருக்கக்கூடாது என்ற விதி நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில இடங்களில் கேட்கும்போது பூட்டைத் திறந்து காட்டினால் போதும். வேறு நாடுகளில் பூட்டவே கூடாது. பெட்டியைப் பூட்டி வைத்திருந்ததால்தான் என்னை மட்டும் சோதனைக்குட்படுத்தியிருப்பார்களோ என்று நண்பர் அருளைச் சந்தித்தபோது கேட்டேன். அவர் அநேகமாக உங்கள் ஜிப்பாதான் காரணமாக இருக்கும். நீளமாக தொள தொளவென்று நீங்கள் போட்டிருக்கும் பூப் போட்ட ஜிப்பா இஸ்லாமியர்கள் உடை போலத் தோன்றியிருக்கக்கூடும் என்றார். ஏதோ ஒரு விதத்தில் ஷாருக் பட்டியலில் நானும் சேர்ந்துவிட்டேன் என்று தோன்றியது. பெயர், அல்லது உடை அல்லது தோற்ற அடிப்படையில் ஒருவருக்கு பயப்படும் சூழலும், ஒருவரை முத்திரை குத்தும் சூழலும் இன்று உலகமயமாகிவருகின்றன.
கொலம்பஸ் விமான நிலையத்திலிருந்து அருளுடன், அவர் வாழும் லூயி சென்ட்டர் புறநகர்ப் பகுதிக்குக் காரில் செல்லும்போதுதான் அமெரிக்காவைப் பகல் வெளிச்சத்தில் முதலில் பார்த்தேன். முகுந்துடன் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து பிஸ்காட்டவேக்கு சென்றபோது முழுக்க இரவு. அமெரிக்க நெடுஞ்சாலை ஊடே பகல் நேரம் பயணித்தபோது, முதலில் என்னை அழுத்தமாக ஈர்த்த அம்சம் சுற்றிலும் தெரிந்த பசுமைதான். இரு புறமும் நெடிதுயர்ந்து அடர்ந்து வளர்ந்திருக்கும் மரச் சோலைகளிடையே சாலைப் பயணம் இருந்தது. அடுத்த இருபது நாட்களும் நான் சென்ற,பெரு நகரத்தின் வர்த்தக அலுவலகப் பகுதிகள் தவிர, எல்லா இடங்களிலெல்லாம் பசுமையை ஆழ்ந்து அனுபவிக்க முடிந்தது.
தமிழகத்தில் பெரும் செலவில் கட்டப்பட்டு வரும் நெடுஞ்சாலைகள், ஏற்கனவே இருந்த சோலைகளை அழித்துவிட்டு, பாலைவனத்தின் ஊடே போக்குவரத்து நடப்பது போன்ற சூழலைத்தான் உண்டாக்கி வருகின்றன. முதலமைச்சரும் கார்ப்பரேட் சாமியாரும் பிரும்மாண்டமான விளம்பரத்துடன் சேர்ந்து ஒரு லட்சம் மரங்கள் நட்டுவித்ததாக அறிவித்தார்கள். அவை எங்கே, என்ன ஆயின என்று தெரியவில்லை. சில சீடர்களைக் கேட்டால், நடத்தான் முடியும், என்ன ஆயிற்று என்று பார்க்க முடியாது என்கிறார்கள். ஒரு செல்போன் கம்பெனி கோடிகணக்கான வாடிக்கையாளர்களின் முகவரிப் பட்டியலுடன் அத்தனை பேருக்கும் பில் அனுப்பி வசூலை கணினி வழியே நிர்வகிக்கும்போது , ஒரு லட்சம் மரங்களை நட்டு தன்ணீர் ஊற்றியவர் ஊற்றாதவர்களை கண்காணிக்கமுடியாதா?என்ன?
நெடுஞ்சாலைகளில் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரிலும் சின்னச் சின்ன தெருக்களிலும் இருமருங்கிலும் மரங்கள் நிரம்பியிருக்கின்றன. சிறு நகரத்தில் கூட பூங்காக்கள் பெரிதாக இருக்கின்றன. இது ஒரு பார்க் என்று என்னை அழைத்துச் செல்லும் நண்பர் சொல்லும்போது எனக்கு வியப்பாக இருக்கும். நம் ஊர் அர்த்தத்தில் சொல்வதென்றால் அவை காடுகள். சென்னையில் என் வீட்டுக்குப் பின்னால் ஒரு பார்க் இருக்கிறது. எட்டு வீட்டு மனை சேர்ந்த இடம் அது. அதில் மரங்களே இல்லை. புதர்களும் மண் தரையும் சிறுவருக்கான ஊஞ்சல்களும், பெரியவர்களுக்கான நடைப்பயிற்சி பாதையும் உண்டு. பல சமயம் நடக்கும்போது ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் நடப்பதே ஒரு பயிற்சி. அவ்வளவு சிறிய பார்க். சென்னையில் நான் பார்த்த பிரும்மாண்டமான பார்க் என்று எதுவும் இல்லை. பெங்களூர் லால் பாக், கப்பன் பார்க் அளவை விடப் பெரியதாகத்தான் அமெரிக்காவில் நான் பார்த்த சிறு பூங்காக்கள் கூட இருக்கின்றன.
அருள் வீட்டுக்குச் சென்றதும் என்னை முதலில் கவர்ந்தது அந்த வீடுகளின் வரிசை ஒழுங்கும், கார் பார்க்கிங்கின் நேர்த்தியும், கொல்லைப் புறப் புல்வெளியும்தான். அமெரிக்காவில் ஒவ்வொரு வீடும் அதைச் சார்ந்த புல்வெளியும் தோட்டமும், மரங்களும் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று எந்த வீட்டுக்காரரும் இருக்க முடியாது. வீட்டுப் புறத்தோற்றம் முதல், வேலி அமைப்பு, புல்வெளி பராமரிப்பு, தண்ணீர் ஊற்றும் நாள், குப்பை அள்ளும் நேரம் வரை எல்லாவற்றையும் துல்லியமாக நிர்ணயித்து நடைமுறைப்படுத்துவதை, உள்ளூர் நிர்வாக அமைப்புகள் கறாராகச் செய்து வருகின்றன.
அருள் அண்மையில் வாங்கியிருக்கும் வீட்டுக்குப் பின்புறம் இன்னொருவருக்குச் சொந்தமான ஒரு பெரிய புல்வெளி, நடுவில் குளம் குட்டையுடன் இருந்தது. சில மாடுகளும் குதிரையும் காணப்பட்டன. பசு, குதிரை முதலியவற்றை ஒருவர் தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க விரும்பினால், இத்தனை எண்ணிக்கை மாடுகளுக்கு, குதிரைகளுக்கு இத்தனை விஸ்தீரணத்தில் மேய்ச்சல் பரப்பு இருந்தாகவேண்டும் என்று உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாக விதிகள் இருக்கின்றன. எல்லா வீடுகளும் மரத்தால் கட்டப்படுபவைதான். அடுக்கு மாடி வீடுகளும் பெரு நகரங்களின் வணிக வளாகங்களும் மட்டுமே கல், சிமெண்ட், கான்கிரீட் கொண்டு கட்டப்படுகின்றன.
அருள் தன் வீட்டின் தண்ணீர் சம்ப் எங்கே இருக்கிறது என்று என்னைக் கண்டுபிடிக்கச் சொன்னார். நானும் ஆராய்ந்து பார்த்தேன். புல்வெளிக்குக் கீழே ஒளிந்திருக்குமோ என்றெல்லாம் தேடினேன். இல்லை. சம்ப்பே இல்லை. தண்ணீர் 24 மணி நேரமும் ஒழுங்காகக் குழாய் வழியே வந்துகொண்டிருக்கிறது. வாடகை ஒப்பந்தங்கள் பதிவு செய்யாமல் வாடகைக்கு வீடு எடுக்கவே முடியாது. பத்திரப் பதிவுகள் எல்லாம் கணினி வழியே முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வேலையை தனியார் அமைப்புகள் செய்கின்றன. வாடகை அட்வான்ஸ் முறை பெரும்பாலும் இல்லை. மாதாமாதம் வாடகை செலுத்துவதெல்லாம் வங்கி வழியேதான்.
அருளின் மகன் மாணவர். மனைவி சுதா ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் உயர் நிலை அலுவலர். வீட்டு சமையலறையை அருள் தம்பதியர் இருவருமாக நிர்வகிப்பதும் அவர்களின் லகுவான பணிப் பகிர்வும் என் கவனத்துக்குரியவையாக இருந்தன. அமெரிக்காவில் வாழும் பல இந்தியர்களின் குடும்பங்களுடன் நான் நடத்திய தற்காலிக உறவாடலில் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு எந்த அளவுக்கு இந்தியர்கள்,தமிழர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
குடும்ப ஜனநாயகம் என்றொரு சொற்றொடரை ஆண்-பெண் சமத்துவம் வேண்டுவோர் அண்மைக் காலங்களில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியச் சூழலில் குடும்ப ஜனநாயகம் என்பது ஏறத்தாழ இல்லை. ஆனால் அமெரிக்கா போன்ற சமூகங்களில் அது கணிசமாக இல்லாமல், குடும்பம் இயங்கவே முடியாது. முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலிலிருந்து முளைத்த நம்மவர்கள், இன்னொரு பாத்தியில் நாற்று நடப்படும்போது எப்படி வாழ்கிறார்கள், வளர்கிறார்கள்? என்பது நம் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியதாக இருக்கிறது.
அமெரிக்காவில் நான் சந்தித்த அத்தனை இந்தியர்கள், தமிழர்கள் எல்லாரிடமும் நான் வெவ்வேறு வடிவங்களில் கேட்ட கேள்விகள் இவைதான். இங்கேயே இருந்துவிட விரும்புகிறீர்களா? ஏன்? திரும்பி வர விரும்புகிறீர்களா? ஏன்? இங்கிருந்து இந்தியாவுக்கு நீங்கள் திரும்பினாலும் திரும்பாவிட்டாலும், அங்கே எடுத்துச் சென்று பின்பற்றப்படவேண்டிய விஷயங்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்? இந்தக் கேள்விகளுக்கு பலவிதமான பதில்கள் எனக்குக் கிடைத்தன. வெவ்வேறு வயதினர் வெவ்வேறு பதில்களைச் சொன்னார்கள். ஆண்களின் பதில்கள் ஒருவிதமாகவும் பெண்களின் பதில்கள் இன்னொரு விதமாகவும் கூட இருந்தன. குடியுரிமை பெற்றவர்கள், பெறாதவர்கள், பெற விரும்பாதவர்கள் என்று பல பிரிவினர் விதவிதமாகப் பதிலளித்தார்கள். எல்லாருக்குமே இந்தியாவுக்கு இங்கிருந்து என்ன தேவை என்று சொல்ல நிச்சயம் விஷயம் இருந்தது. இவை எல்லாவற்றையும் பின்னால் பார்ப்போம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...