ஆப்பிள் தேசம் - 15: விடுதலை மணி
சுற்றுலா பஸ்சில் பெரும்பாலான பயணிகள் சீனர்களாகவே இருந்ததற்குக் காரணம், சுற்றுலா சேவையை நடத்தும் கம்பெனி சீனக் கம்பெனி என்பது மட்டுமல்ல. இந்தியர்களைவிட அதிகமாக சீனர்கள்தான் அமெரிக்காவுக்குச் சுற்றுலா வ


சுற்றுலா பஸ்சில் பெரும்பாலான பயணிகள் சீனர்களாகவே இருந்ததற்குக் காரணம், சுற்றுலா சேவையை நடத்தும் கம்பெனி சீனக் கம்பெனி என்பது மட்டுமல்ல. இந்தியர்களைவிட அதிகமாக சீனர்கள்தான் அமெரிக்காவுக்குச் சுற்றுலா வருகிறார்கள். நான் இருந்த பஸ்சில் ஒரே ஒரு வட இந்தியக் குடும்பம் மட்டுமே இருந்தது. ஹிந்தி தெரியாதவன் என்றதும் அவர்களும் என்னுடன் அதிகம் பேசவில்லை. கொஞ்சம் சிரிப்பு. எங்காவது குடும்பமாக ஒரு போட்டோ எடுக்க வேண்டியிருந்தால் உதவி கேட்பது என்பது தவிர வேறு உறவாடல் இல்லை.
சாப்பாட்டுக்கு நிறுத்தும் இடங்களில் எல்லாம் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று ஏதாவது சைவக் கடையை அவர்கள் அடையாளம் கண்டுபிடித்தால் நானும் செல்லலாமே என்று முயற்சிப்பேன். சாப்பாட்டு நேரங்களில் எங்கேயோ காணாமல் போய்விடுவார்கள். ப்ரியா கட்டிக் கொடுத்திருந்த உணவை வைத்துக் கொண்டு ஒரு முழு நாளை சமாளித்தேன். மற்றபடி கடையில் சாப்பிட்டது ஆப்பிள் பை, ஹேஷ் பிரவுன்தான். அவற்றைக் கண்டுபிடிக்கவே கடை கடையாக அலையவேண்டியிருந்தது.
சுற்றுலா வழிகாட்டியாக வந்திருந்த சீனப்பெண் சூ ஒரு கல்லூரி மாணவி. இது பகுதி நேர வேலை. மிகவும் அன்பாகவும் உதவிகரமாகவும் இருந்தாள். என்னிடம் போன் இல்லை என்பதால், என்னை பஸ் ஏற்றிவிடும்போதே, முன் ஜாக்கிரதையாக முகுந்தராஜ், அவளுடைய போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார். அடுத்த இரு நாட்களும் தினம் மூன்று வேளை அந்த போனில் என்னை அழைத்து பத்திரமாக இருக்கிறேனா என்று விசாரித்துக் கொண்டே இருந்தார்.
பஸ் டிரைவர் மெக்சிகோகாரர். அவருக்கு மூன்று மனைவிகள். எல்லாரும் ஒன்றாக ஒரே வீட்டில் அன்பாக இருக்கிறார்கள் என்று பாலகுமாரன் ஸ்டைலில் எனக்கு பேட்டி கொடுத்தார். பாலகுமாரனிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடமும் கேட்டேன். உங்கள் மனைவி மூன்று கணவர்களோடு இருந்தால் நீங்கள் மூன்று கணவன்களும் அன்பாய் ஒரே வீட்டில் இருப்பீர்களா என்று. மெக்சிகன் டிரைவர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் - அதற்கு வாய்ப்பே இல்லை.
""எங்கள் ஊரில் ஆண்கள் கடும் பற்றாக்குறை. அதனால்தான் பெண்கள் எங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்''.
சுகமான பஸ் பயணத்தில் முதலில் ஃபிலடெல்ஃபியாவுக்குச் சென்றேன். அங்கே விடுதலை மணி எனப்படும் இண்டிபெண்டென்ஸ் பெல் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இந்த மணி அமெரிக்காவின் ஒரு வரலாற்றுச் சின்னம். உண்மையில் இதற்கும் அமெரிக்க விடுதலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. வில்லியம் பென் 1701-ல் மனிதர்களின் உரிமைகள், கடமைகள் பற்றிய சட்டத்தை வகுத்தவர். அதன் பொன் விழா ஆண்டில் இந்த மணி அமைக்கப்பட்டது. பின்னால் 1776-ல் அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை வாஷிங்டனில் வாசிக்கத் தொடங்கும்போது, இந்த மணி பிலடெல்பியாவில் ஒலிக்கப்பட்டதாகவும் அதனால் விடுதலை மணி என்று கொண்டாடப்படுவதாகவும் ஸ்தலபுராணம் சொல்கிறது.
உண்மையில் இந்த மணி எல்லா கிராமத்து தேவலாய மணிகளைப் போல ஒவ்வொரு முறை ஊர்ப் பொது கவனத்துக்குரிய நிகழ்ச்சி எது நடந்தாலும் உடனே ஒலிக்கும் வழக்கப்படி 1701லிருந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. பெஞ்சமின் பிராங்க்ளின் அமெரிக்கக் காலனி நாடுகளின் பிரச்னைகளை பிரிட்டிஷ் அரசுடன் விவாதிப்பதற்காக இங்கிலாந்து புறப்பட்ட தினத்தன்றும் மணி அடித்திருக்கிறார்கள். இப்படி அடிக்கடி எதற்கெடுத்தாலும் மணி அடிக்கவே, இந்த மணி சத்தம் தொல்லை தாங்கவில்லை என்று 1772ல் அருகில் குடியிருக்கும் மக்கள் ஒரு புகார் மனு கூடத் தந்திருக்கிறார்கள்.
விடுதலைப் பிரகடனத்தைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொராண்டும் அமெரிக்க சுதந்திர தினத்தன்று இந்த மணி 13 முறை ஒலிக்கப்படுகிரது. அன்று அமெரிக்கா முழுவதும் 13 முறை மணி ஒலிக்கும் வழக்கம் உண்டு. காரணம் முதன்முதலில் விடுதலைப் பிரகடனம் செய்தபோது இருந்த அடிமைக் காலனி நாடுகளின் எண்ணிக்கை 13. பிலடெல்பியா விடுதலை மணியை முதன்முறை மாடத்தில் மாட்டி அடித்தபோதே அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு பல முறை இந்த விரிசலை சரி செய்ய மணியை உருக்கி வார்த்திருக்கிறார்கள். மணியில் விரிசல் ஏற்பட்டது, உருக்கியது வார்த்தது எல்லாவற்றையும் மிகப்பெரிய சரித்திர நிகழ்வுகளாக, விடுதலை மணி காட்சியகத்தில் விவரமாக விவரித்திருக்கிறார்கள்.
உண்மையில் இந்த மணிக்கு சிறப்பு வந்தது என்பது அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்கான போராட்டம் நடந்தபோதுதான். அடிமைமுறை எதிர்ப்பாளர்கள் இதைத் தங்கள் சின்னமாகக் கொண்டார்கள். வெவ்வேறு விடுதலைப் போராட்ட அமைப்புகள் இந்த மணியை தங்கள் சின்னமாக வைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. இந்த மணியை அமெரிக்கா முழுவதும் ஊர் ஊராக ஊர்வலமாக எடுத்துச் செல்வதும் உண்டு. 1880களில் உளநாட்டு யுத்தத்தின் பின் மக்களிடையே பழையபடி ஒற்றுமையை வலியுறுத்த மணி ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் 1915ல் பெண்களுக்கு வாக்குரிமை கோரும் போராட்டத்தின்போது, இதேபோல இன்னொரு மணியைச் செய்து ஊர்வலம்விட்டார்கள்.
விடுதலை மணியை வைத்து ஏப்ரல் முட்டாள் தின கிண்டல்கள் கூட செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 1, 1996 அன்று, இந்த மணியைத் தான் விலைக்கு வாங்கிவிட்டதாக ஒருவர் நியூயார்க் டைம்ஸ் உட்பட எல்லா பெரிய பத்திரிகைகளிலும் முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறார்.
விடுதலை மணி காட்சியகத்துக்கு வெளியே ஒரு அழகான பிரம்மாண்டமான புல்வெளி இருக்கிறது. இப்போது புல்வெளி இருக்கும் இடத்தில் ஜார்ஜ் வாஷிங்டனும் ஆடம்சும் ஜனாதிபதிகளாக இருந்தபோது வசித்த அதிபர் மாளிகை இருந்திருக்கிறது. அப்போது பிலடெல்பியாதான் அமெரிக்காவின் தலைநகரம். வாஷிங்டன் ஏழு அடிமைகளை வைத்திருந்த அந்த மாளிகையைத் தரைமட்டமாக்கி புல்வெளி அமைத்துவிட்டார்கள். புல்வெளி நிறைய மக்கள் கூட்டம். ஒவ்வொரு வருடமும் என்னைப் போல 15 லட்சம் பேர் இந்த மணியை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
அதில் சில தமிழர்களையும் சந்தித்தேன். தேன் நிலவுக்கு வந்த ஒரு இளம் தமிழ் ஜோடி என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டது. மணியுடன் எடுத்துக் கொண்டீர்களா என்று கேட்டேன். இன்னும் இல்லை என்றார்கள்.
சுற்றுலா பஸ்கள் எல்லாம் அரை கிலோமீட்டர் தள்ளி நிற்கவைக்கப்பட்டிருக்கின்றன. சில பஸ்களில் தமது பயணிகளுக்கு அடையாளக் கைப்பட்டை அணிவித்துவிடுகிறார்கள். சில பஸ்களின் நம்பர்களை வைத்துக் கொண்டு நாம் தான் தேடிப் பிடிக்க வேண்டும். டூர் கைட் காட்சியகம் உள்ளே பெரும்பாலும் வருவதில்லை வாசல்வரை வந்து அனுப்பி வைக்கிறார்கள். பெரும் புல்வெளியில் டூர் கைடைத் தொடர்ந்து பின்பற்றிச் செல்ல வசதியாக டூர் கைட் அடையாளக் குடை பிடித்துக்கொள்கிறார். சினிமா படப்பிடிப்பில் ஹீரோவுக்குப் பிடிக்கிற கலர் குடை மாதிரியான குடைகள்.
அடுத்து சென்ற இடம் வாஷிங்டனில் ஏர்ஸ்பேஸ் மியூசியம் எனப்படும் விண்வெளிக் காட்சியகம். இங்கே விமானப் போக்குவரத்து மட்டுமல்லாமல், விண்வெளி ஆய்வுத் தொடர்பான முழு வரலாறும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட அசல் விமானங்கள் முதல், விண்வெளியில் ஏவப்பட்ட விண்கலங்கள், அவற்றின் பாகங்கள், அவற்றில் பயன்படுத்திய கேமராக்கள், சந்திரனில் எடுத்த கற்கள் என்று விதவிதமான காட்சிப் பொருட்கள் உள்ளன. இந்த காட்சியகங்களையெல்லாம் ஓரிரு மணி நேரத்தில் நிச்சயம் பார்த்து முடிக்க முடியாது. ஏதாவது ஒரு பிரிவை மட்டும் எடுத்துக் கொண்டு அதை ஆழ்ந்து பார்க்கலாம்.
இந்தியா திரும்பியபின்னர் அண்மையில் தஞ்சாவூர் சென்றிருந்தபோது எனக்கு அமெரிக்கக் காட்சியகங்கள் நினைவுக்கு வந்தன. தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டையொட்டி அரசு ஏற்பாடு செய்திருந்த கண்காட்சிக்கு நண்பர்களுடன் சென்றேன். கண்காட்சியில் அருமையான சோழர் காலச் சிற்பங்கள், சிலைகள், செப்ப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் என்று எல்லாம் இருந்தன. ஆனால் ஒன்றைக்கூட நின்று நிதானமாகப் பார்க்க முடியவில்லை. காட்சிப்பொருளுக்கு முன்னே கட்டிய கயிறை ஒட்டி வரிசையாகப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
நின்றால், போ, போ என்று துரத்துவதற்கென்றே தொண்டர்படை வைத்திருந்தார்கள். திருப்பதியில் கருவறை அருகே வரும்போது ஜருகண்டி ஜருகண்டி என்று துரத்துவார்களே அதே போல துரத்தினார்கள். ஒரு குழந்தை அம்மாவிடம் செப்பேடு என்றால் என்னம்மா என்று கேட்டது. பக்கத்திலேயே விவரமாக எழுதி வைத்திருக்கிறது. அந்தத் தாய் அதைப் படித்து குழந்தைக்கு எடுத்துச் சொல்ல வழியில்லை. போ நிக்காதே என்று துரத்திக் கொண்டிருந்தார்கள்.
ஏர்ஸ்பேஸ் மியூசியத்தை நடத்துவது ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடிட்யூஷன். இது அறிவியல், அறிவு பரவலுக்கான ஒரு தொண்டு அமைப்பு. ஜேம்ஸ் ஸ்மித்சன் என்பவர் பெயரில் அவருடைய நன்கொடையைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித்சன் ஒரு விசித்திரமான மனிதர். அவர் தந்தையின் கள்ளக் காதலிக்குப் பிறந்த குழந்தை. பிரிட்டிஷ்காரரான அவர் அமெரிக்காவைப் பார்த்ததே இல்லை.
இங்கிலாந்திலேயே வாழ்ந்து மறைந்தவர். விஞ்ஞானி. தாதுப் பொருட்கள் பற்றி ஆய்வுகள் செய்தவர். சாவதற்கு முன்னர் தன் தம்பி மகனுக்கு எல்லா சொத்தையும் எழுதி வைத்துவிட்டு ஒரு நிபந்தனை போட்டார். தம்பி மகனுக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டால், அந்த சொத்து அவருக்குப் பின் அமெரிக்க அரசுக்கு நன்கொடையாகத்தரப்பட்டு அறிவு பரப்பலுக்கான அமைப்பு தொடங்கப்படவேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதன்படியே ஆயிற்று. தம்பி மகனுக்கு வாரிசுகள் இல்லை.
உலகிலேயே மிகப்பெரிய காட்சியகங்கள் வைத்திருப்பது ஸ்மித்சோனியன்தான். மொத்தம் 19 மியூசியங்களும் ஒன்பது ஆய்வுக் கூடங்களும் நடத்துகிறது. இதன் நிர்வாகப் பொறுப்பை அமெரிக்க துனை அதிபரும் தலைமை நீதிபதியும் கொண்ட குழு கவனிக்கிறது. ஸ்மித்சோனியன் சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறது. ஜப்பானில் அணுகுண்டு வீசிய விமானத்தை 1994ல் தன் காட்சியகத்தில் வைத்தபோது குண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களின் கொடூரமான காட்சிகளை வைத்தது அமெரிக்க விமானிகளை அவமானப்படுத்துகிறது என்று சிலர் எதிர்த்தனர்.
இதையடுத்து அவை சுருக்கி அமைக்கப்பட்டன. இந்திய புகைப்படக்காரர் சுபங்கர் பானர்ஜி 2003ல் ஆர்க்டிக் பற்றிய புகைப்படக் காட்சியை வைத்தபோது உலகம் சூடாவது பற்றி அவர் படங்கள் மூலம் தெரிவித்த கருத்துகள் அரசியல்ரீதியில் ஏற்கமுடியாதவை என்று கூறி சில படங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
ஸ்மித்சோனியன் பேட்ஜுகளை நினைவுப்பொருளாக வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நான், அடுத்து செய்தது ஒபாமாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டதுதான். வாஷிங்டன் பயணத்தின்போது என் கேமராவை முகுந்தராஜ் காரிலேயே மறந்து விட்டுவிட்டுவந்துவிட்ட எனக்கு, ஒபாமாவுடன் போட்டோ எடுக்க ஸ்பாட்டிலேயே கேமரா இருந்தது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...