இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம் - 16: எதிராளிக்குக் காட்டிக்கொடுக்கும் கண்கள்!

நான் புகைப்படம் எடுத்துக் கொண்டது ரத்தமும் சதையுமான அசல் ஒபாமாவுடன் அல்ல. மெழுகு பொம்மை ஒபாமாவுடன். உலகப் புகழ் பெற்ற மெழுகு பொம்மைக் கலைஞர் மேடம் மேரி டசாடின் காட்சிக் கூடம் வாஷிங்டனிலும் இருக்கிறது.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:22 am

ஞாநி

நான் புகைப்படம் எடுத்துக் கொண்டது ரத்தமும் சதையுமான அசல் ஒபாமாவுடன் அல்ல. மெழுகு பொம்மை ஒபாமாவுடன். உலகப் புகழ் பெற்ற மெழுகு பொம்மைக் கலைஞர் மேடம் மேரி டசாடின் காட்சிக் கூடம் வாஷிங்டனிலும் இருக்கிறது. அங்கேதான் ஒபாமாவின் ஆளுயுர மெழுகுச் சிலையுடனும், அமெரிக்க குடியரசுத் தலைவரின் அலுவலக மேசை நாற்காலி மாடலுடனும் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மேடம் டசாட் என்கிற மேரி 18-ம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்து 19-ம் நூற்றாண்டின் மத்தி வரை பிரான்சில் வாழ்ந்து  ஸ்விஸ் குடியுரிமை பெற்ற பிரெஞ்ச் பெண்மணி. பிரமிப்பூட்டும் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். பிரபலங்களை அசல் போலவே மெழுகு பொம்மைகளாக வார்ப்பதில் புகழ் பெற்ற மேரி, பிரெஞ்ச் புரட்சியின்போது தானே சாவின் விளிம்பை எட்டிப் பார்த்து திரும்பியவர். மேரியின் அம்மா, டாக்டர் கர்ட்டியஸ் என்பவர் வீட்டு வேலைக்காரியாக இருந்தார். டாக்டர் கர்ட்டியஸ் உடற்கூறை விளக்கும் மெழுகு சிற்பங்கள் தயாரிப்பவர். அவர்தான் மெழுகு பொம்மைக் காட்சியகங்களை முதலில் உருவாக்கியவர். அவரிடம் அந்தக் கலையைக் கற்றுக் கொண்ட மேரி, பிரான்சின் அரசன் பதினாறாம் லூயியின் சகோதரிக்கு அதைக் கற்றுக் கொடுக்கும் வேலை பார்த்தார்.

நெப்போலியன், ரோபிஸ்பியர் போன்ற பிரபலங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்த மேரி பிரெஞ்ச் புரட்சியின்போது கைது செய்யப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டார். கைதியின் தலையை வெட்டுவதற்கு முன்பு மொட்டையடிப்பது வழக்கம். டாக்டர் கர்ட்டியசுக்கு இருந்த செல்வாக்கினால் கடைசி நிமிடத்தில் வெட்டுக் கத்தியிலிருந்து மேரி தப்பினார். புரட்சியில் கொல்லப்பட்ட அரச குடும்பத்தினர் லூயி, மேரி ஆண்டனி, ரோபிஸ்பியர் ஆகியோரின் பிணங்களிலிருந்து அவர்கள் தலையைப் பிரதி எடுத்து மெழுகு முகமூடிகளாகத் தயாரிக்கும் வேலை மேரிக்குத் தரப்பட்டது. அந்த முகமூடிகள் புரட்சியாளர்களால் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.  

டாக்டர் கர்ட்டியஸ் இறந்தபின் மேரி திருமணம் செய்து கொண்டார். கணவர் பெயர்தான் டசாட். பிரான்சில் வாழ முடியாமல் லண்டனுக்குச் சென்ற மேரி அங்கேதான் தன் முதல் காட்சியகத்தைத் தொடங்கினார். எண்பத்தெட்டு வயது வரை வாழ்ந்த மேரி டசாடின் மெழுகு பொம்மைகள் உலகப் புகழ் பெற்றன. இப்போது தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் மேரி டசாட் காட்சியகங்கள் உலகின் எட்டு நகரங்களில் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் நான்கு.

வாஷிங்டன் காட்சியகத்தில் நான் பார்த்த மெழுகுச் சிலைகள் ஒவ்வொன்றும் நேரில் அசல் மனிதர்களைப் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்தின. நிறைய பணம் கொடுத்தால் நம் தலையின் மோல்டையே செய்து கொடுக்கவும் அங்கே ஏற்பாடு இருக்கிறது. என் தலைக்கு அவ்வளவு பணம் வேறு யாராவதுதான் கொடுக்க வேண்டும் என்பதால் நான் மோல்ட் எடுக்கவில்லை. காட்சியகத்தில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் தவிர மீடியாவில், பத்திரிகைகளில் புகழ் பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள் சிலைகளையும் வைத்திருக்கிறார்கள்.

காட்சியகத்தில் என்னைக் கவர்ந்த அம்சம், பல்வேறு பிரபலங்களின் கண்களை ( மாடல்தான்)  மட்டுமாகத் தனியே காட்சிப்படுத்தியிருந்ததுதான். ஒரு மனிதனின் கண் என்பது எவ்வளவு தனி அடையாளம் உள்ளது என்பதை அங்கே உணர்த்தியிருந்தார்கள். அந்த அடையாளம் தங்கள் மனதை எதிராளிக்குக் காட்டிக் கொடுத்துவிடும் என்ற பயத்தில்தான் பல அரசியல், சினிமா பிரபலங்கள் கறுப்புக் கண்னாடி அணிந்தே வலம் வருகிறார்கள்.  

ஒபாமாவை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் அவர் அலுவலகத்தையோ வீட்டையோ பார்க்கமுடியும் என்று இந்த டூரில் நினைத்திருந்தேன். ஆனால் நான் சென்ற சமயம் அமெரிக்காவின் மிக மூத்த செனட்டர் ராபர்ட் பைர்ட் இறந்துவிட்டார். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் உறுப்பினராக திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர் ஒருவர்தான். தொடர்ந்து 51 வருடங்களாக செனட்டராக இருந்து வந்திருக்கிறார்.  

அவர் உடலை செனட் கட்டடத்தில் வைத்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த சமயத்தில் நான் வாஷிங்டன் சென்றிருந்ததால், ஜனாதிபதி மாளிகை, செனட் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வழக்கமாக மக்களை அனுமதிக்கும் இடங்களில் கூட அனுமதி தரப்படவில்லை. எதிரில் இருந்த பூங்காவில் தொலைவிலிருந்தேதான் வெள்ளை மாளிகையைப் பார்க்க முடிந்தது.

அடுத்து வாஷிங்டனில் நான் சென்றிருந்த இடங்கள் பொட்டோமாக் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆப்ரஹாம் லிங்கன், தாமஸ் ஜெஃபர்சன் நினைவிடங்களாகும். இந்த  இரு நினைவிடங்களும் என்னை மிகவும் பரவசப்படுத்தின. பின்னர் நியூயார்க்கில் நான் கண்ட சுதந்திரதேவி சிலை கூட எனக்குப் பெரிய உணர்வுகளைத் தூண்டவில்லை.  ஆனால் ஜெஃபர்சன், லிங்கன் நினைவிடங்களில் நின்ற போது ஆழ்ந்த பெருமித உணர்வும் பிரமிப்பும் தோன்றின. மானுட விடுதலைக்காக குரலெழுப்பிய வரலாற்று முன்னோடிகளின் சொற்கள் நம்முள் புகுந்து நம்மை ஊக்குவிப்பது போன்ற ஓர் உணர்ச்சியை இந்த இரு நினைவிடங்களும் எழுப்பின.  

ஜெஃபர்சனை விட லிங்கன் அதிகமாக நமக்குப் பள்ளி நாளிலிருந்தே சொல்லப்பட்டிருப்பவர் என்பதால் நெருக்கமான உணர்வு அதிகமிருந்தது. எனக்குத் தனிப்பட்ட விதத்திலும் லிங்கன் முக்கியமானவர். நான் வாழ்க்கையில் நடித்த ஒரே ஆங்கில நாடகம் ஆப்ரஹாம் லிங்கன்  பற்றியதாகும். பத்தாம் வகுப்பில் பள்ளி ஆண்டு விழாவில் அதில் லிங்கனாக நடித்து சிறந்த நடிகர் பரிசும் பெற்றேன்.

லிங்கன் நலிவுற்ற குடும்பத்தில் பிறந்தவர். ஜெஃபர்ச்ன் பெரும் பணக்காரர். ஆனால் இருவரும் அடிப்படை மனித உரிமை, சமத்துவம், சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளுக்காக அயராமல் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தவர்கள். இருவரும் தம்மிடம் நூற்றுக்கணக்கான் அடிமைகளை வைத்திருந்தவர்கள். ஆனால் அடிமை முறையை ஒழிக்க வேலை செய்தவர்கள். இருவருமே வக்கீல்கள். லிங்கன் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். கெட்டிஸ்பர்க் உரையில்தான் "மக்களால் மக்களுக்காக மக்களின் அரசு' என்ற லிங்கனின் புகழ் பெற்ற சொற்றொடர் இடம் பெற்றது. ஜெஃபர்சன் பேச்சாளரல்ல. பேசுவதை விட எழுதுவதிலேயே நிறைய ஆர்வம் செலுத்தியவர்.  

ஜெஃபர்சன் இரு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். அவர் பதவிக்காலத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய எந்தச் சட்டத்தையும் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு முறைகூட ரத்து செய்யாத ஒரே அமெரிக்க ஜனாதிபதி அவர்தான். அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை எழுதிய ஜெஃபர்சன், மதத்தை அரசியலில் கலப்பதை கடுமையாக எதிர்த்தவர். தேசத்துக்கென்று அதிகாரப்பூர்வமான ஒரு மதம் இருக்க வேண்டும் என்பதை  அவர் நிராகரித்தார். பிரான்சுடன் பெரும் நட்பு வைத்திருந்தார். இன்றைய அமெரிக்காவில் சுமார் 23 சதவிகித நிலப்பரப்பான லூசியானா பகுதியை அவர் பிரான்சிடம் விலைக்கு வாங்கி அமெரிக்காவுடன் இணைத்தார். பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதை ஜெஃபர்சன் ஆதரிக்கவில்லை.   

லிங்கன் நேரடியாக மதம், மதச் சடங்குகளை அரசியலில் கலக்காதபோதும், இறை நம்பிக்கையை அரசியலில் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். நமக்கு மேலே ஒரு பிரம்மாண்டமான சக்தி எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற தொனி அவர் பேச்சில் இருந்துகொண்டே இருக்கும். பாசமுள்ள தந்தையாக லிங்கன் இருந்தபோதும் அவரது குழந்தைகள் எல்லாம் டீன் ஏஜிலேயே இறந்தது அவரைச் சோகப்படுத்தியது. ஒரே ஒரு மகன் லிங்கன் காலத்துக்குப் பிறகும் உயிரோடு இருந்தான். ஆனால் அவனும் தன் 19வது வயதில் இறந்தான்.  

கறுப்பின மக்களுக்கும் ஓட்டுரிமை தரவேண்டுமென்று லிங்கன் பேசிய சில நாட்களில் அவர் கொலை செய்யப்பட்டார். கொலையுண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி அவர்தான். லிங்கன் சந்தித்த மிகப் பெரிய அரசியல் சவால், அமெரிக்காவிலிருந்து பல மாநிலங்கள் பிரிந்து செல்ல நடத்திய உள்நாட்டுப் போர்தான். வெற்றிகரமாக அதை முறியடித்து அமெரிக்காவை ஒன்றுபடுத்தியதுதான் லிங்கனின் சாதனை. யுத்த சமயத்தில் விசாரணையில்லாமல் கைது செய்யவும், சோதனையிடவும் ராணுவத்துக்கு அதிகாரம் அளித்தது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்த லிங்கன் இன்னொரு பக்கம்  மனித உரிமைகள், அடிமை முறை ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் போற்றப்படுகிறார்.

லிங்கன், ஜெஃபர்சன் நினைவிடங்கள் இரண்டுமே பிரம்மாண்டமானவை, கிரேக்க பாணியில் பெரும் தூண்கள், மண்டபங்களுடன் அமைக்கப்பட்டவை. அவற்றில் இருவரின் அற்புதமான மேற்கோள்கள் நிறைய கல்வெட்டுகளில் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.  மானுட விடுதலை, சமத்துவம், உரிமை பற்றிய அவற்றையெல்லாம் அந்த பிரம்மாண்டமான  சூழலில் படித்தால் ஒரு சிலிர்ப்பு நிச்சயம் ஏற்படுகிறது.  

ஜெஃபர்சனின் பிரும்மாண்டமான உலோக சிலை இந்த நினைவகம் திறக்கப்பட்டபோது தயாராகவில்லை என்பதால், கருணாநிதி ஸ்டைலில் திறப்பு விழாவில் தற்காலிக களிமண் வார்ப்பு சிலைக்கு உலோக பெயிண்ட் அடித்து வைத்திருந்தார்களாம்.  

லிங்கன் நினைவிடத்தின் பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் நின்றபோது ஒரு வரலாறு படைத்த படிக்கட்டுகளில் நிற்கிறேன் என்ற பெருமிதம் ஏற்பட்டது. அதே இடத்தில் நின்றுகொண்டுதான் 1963 ஆகஸ்ட் 28-ந்தேதி அன்று, கறுப்பின உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் எனக்கொரு கனவு இருக்கிறது என்ற புகழ் வாய்ந்த உரையைச் சுமார் இரண்டரை லட்சம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் நிகழ்த்தியிருக்கிறார். 1939-ல் கறுப்பரும் வெள்ளையரும் ஒரே அரங்கில் அமர்ந்து கறுப்பினப் பாடகர் மரியன் ஆண்டர்சனின் இசையைக் கேட்க அனுமதி மறுக்கப்பட்டபோது, அந்த இசை நிகழ்ச்சியை லிங்கன் மெமோரியல் படிக்கட்டில்தான் ரூஸ்வெல்ட்டின் மனைவி இலினார் ஏற்பாடு செய்திருக்கிறார்.  

இந்த நினைவிடங்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பது இன்னொரு சிறப்பு. ஆண்டுதோறும் சுமார் 36 லட்சம் பேர் இவற்றைக் காண வருகிறார்கள். தினமும் சுமார் 10 ஆயிரம் பேர்  

லிங்கன் நினைவிடத்துக்கு அருகிலேயே தான் வாஷிங்டன் தூணும் இருக்கிறது. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் எந்த யுத்தத்திலும் ஈடுபடுத்தாமல் அமெரிக்காவைப் பொருளாதாரத்தில் மேம்படுத்தியவர் என்ற புகழுடையவர். நினைவுத்தூண் பூமிக்குக் கீழ் 111 அடி புதைக்கப்பட்டு தரைக்கு மேல் 555 அடி உயரம் உடையது. பிரான்சில் உள்ள ஈஃபெல் கோபுரம் கட்டும் வரையில் இதுவே உலகின் மிக உயரமான அமைப்பாக இருந்தது. இப்போதும் உலகின் மிக உயரமான கற்தூண் இதுதான். உச்சி வரை படிக்கட்டுகள் இருந்தாலும் மேலே செல்ல அனுமதிப்பதில்லை. லிங்கன், ஜெஃபர்சன் நினைவிடங்களைப் போல இது என்னை சுவாரசியப்படுத்தவில்லை.

ஏறத்தாழ முதல் நாள் டூரிலேயே இத்தனை இடங்களையும் வாஷிங்டனில் காட்டி முடித்ததும் இரவு ஓட்டலில் தங்கவைத்தார்கள். காலையில் ஓட்டலிலேயே சிற்றுண்டியும் இலவசம். பெரிய ஓட்டல்களில் எல்லாம் இந்த வழக்கம் உலகெங்கும் இருக்கிறது. எது சைவம் என்று தேடித் தேடி வழக்கம் போல ஆப்பிள் பை, ஹாஷ் பிரவுன் போல இருந்த ஐட்டங்களையெல்லாம் சாப்பிட்டு ஆரஞ்ச் ஜூஸ் குடித்து நாள் முழுக்க தாக்கு பிடிப்பது போல சாப்பிட்டுவிட்டு இரண்டாம் நாள் டூரில் வர்ஜீனியா நிலவறை குகைகளுக்குச் சென்றேன். பயமாக இருந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.