இயற்பியல், வேதியியல், சோதனைச் சாலைகள், ஒலிக்கூடம், பட்டறைகள், நூலகம், எடிசனின் ஓய்வறை ஒவ்வொன்றையும் சுற்றிப் பார்க்கும்போது இங்கேதான் நூற்றுக்கணக்கானவர்கள் ஓயாமல் வேலை செய்து எவ்வளவோ கண்டுபிடித்திருக்கிறார்கள் என்ற உணர்வு எழுந்தது. உலகத்தின் முதல் சினிமா ஸ்டூடியோவான "பிளாக் மரியா' இங்கேதான் இருக்கிறது. ஸ்டூடியோ என்றால் வெறும் மரக் கொட்டகைதான். முழுக்கக் கறுப்பு பெயிண்ட் அடித்திருக்கிறது. கூரை மட்டும் தேவைப்படும்போது தள்ளிவைத்துக் கொள்ளலாம். அப்போது இயற்கை சூரிய ஒளி கொட்டகைக்குள்ளே விழும். அதில் படம் பிடிக்கலாம் என்ற ஏற்பாட்டை எடிசன் செய்திருக்கிறார்.