இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம் - 18: நாடகம் பார்க்கணுமா?; நாற்காலி எடுத்து வா..?

உள்ளூர் சமுதாயத்துடன் எந்த அளவு நம்மை நாம் இணைத்துக் கொள்கிறோம் என்பது வெளியூர், வெளி நாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்கள் அவசியம் கவனிக்கவேண்டிய அம்சமாகும். பத்மா அரவிந்த் போன்ற ஒரு சிலர் மட்டுமே அப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:52 am

ஞாநி

உள்ளூர் சமுதாயத்துடன் எந்த அளவு நம்மை நாம் இணைத்துக் கொள்கிறோம் என்பது வெளியூர், வெளி நாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்கள் அவசியம் கவனிக்கவேண்டிய அம்சமாகும். பத்மா அரவிந்த் போன்ற ஒரு சிலர் மட்டுமே அப்படிப்பட்ட அணுகுமுறையோடு இருப்பதை நான் கவனித்தேன். பெரும்பாலானவர்கள் அமெரிக்காவுக்குள் தங்கள் குட்டி கொல்கத்தாவையோ, குட்டி மைலாப்பூரையோ, குட்டி யாழ்ப்பாணத்தையோ, குட்டி பெய்ஜிங்கையோ சிருஷ்டித்துக் கொண்டு அதற்குள் வாழ்ந்துவிட முயற்சிக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

 எடிசன் நகரம் கணிசமான இந்தியர்கள் வாழும் நகரம். நகரத்தின் மக்கள் தொகையான சுமார் ஒரு லட்சம் பேரில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்தியர்கள். இவர்கள் வந்து குடியேறி தங்களுடன் உடுப்பி, பஞ்சாபி சாப்பாட்டு கலாசாரம் முதல் எல்லா இந்தியக் கலாசாரக் கூறுகளையும் பரப்பி எடிசனின் அசல் தன்மையையே கெடுத்துவிட்டதாக, நான் எடிசனில் இருந்தபோது, "டைம்' பத்திரிகையில் ஜோயல் ஸ்டெய்ன் என்பவர் ஒரு கட்டுரை எழுதினார். இந்தியர்களிடமிருந்தும் அமெரிக்க செனட்டர் பாப் மெனெண்டசிடமிருந்தும் வந்த கண்டனங்களையடுத்து ஸ்டெய்ன் மன்னிப்புக் கேட்டார். "டைம்' இதழும் மன்னிப்பு கேட்டது.

 அமெரிக்காவிலேயே வாழ்வதற்கு உகந்த வசதியான, பாதுகாப்பான நகரங்களில் எடிசன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புகழ் பெற்ற ரட்கர் பல்கலைக்கழகம் இங்கே உள்ளது. சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுவதற்கான வழிமுறைகள் பற்றி இந்தப் பல்கலைக்கழகம் நடத்தி வரும் ஆய்வில் நண்பர் முகுந்தராஜ் பங்கேற்றுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும்போதும், அது தொடர்பான தகவல்களை அவர் பதிவு செய்து ஆய்வுக்குத் தரவேண்டும். ஆய்வில் பங்கேற்பதன் மூலம் புகைப்பதை விட்டுவிடவேண்டும் என்பது முகுந்தின் (அல்லது ப்ரியாவின்) விருப்பம்.

 முகுந்த் வசிக்கும் பிஸ்காட்டவேக்கு பக்கத்து ஊரான எடிசனுக்கு அந்தப் பெயர் வரக் காரணம் தாமஸ் ஆல்வா எடிசனேதான். முதலில் ரேரிட்டன் டவுன்ஷிப்பாக இருந்தது. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும் கண்டுபிடிப்பாளருமான எடிசன் இந்த ஊரில்தான் வாழ்ந்து ஆராய்ந்து கண்டுபிடித்து பணம் சம்பாதித்து குடும்பம் நடத்தியவர்.

 அதற்காக அவர் பெயரை ஊருக்கு வைத்துவிட்டார்கள். பெயர் வைப்பது அரசு மட்டுமல்ல. மக்களிடையே கருத்து ஓட்டெடுப்பு நடத்தித்தான் இப்படி பெயரை மாற்ற முடியும். நான் பிறந்த வருடத்தில்தான் அப்படி ஒரு தேர்தல் ரேரிட்டனில் நடந்து எடிசன் பெயர் ஜெயித்திருக்கிறது. நம் ஊரிலும் இதே போல பொது இடங்களுக்குப் பெயர் சூட்டும்போது மக்கள் கருத்தைக் கேட்டாகவேண்டும் என்ற விதி கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே. எத்தனை பெயர்கள் எகிறிப் போகும்!

 எடிசன் 1847-ல் பிறந்து 83 வருடங்கள் வாழ்ந்ததில், மொத்தமாக 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சட்டப்படி உரிமை பெற்றிருக்கிறார். எடிசன் முறையாக பள்ளி சென்று படித்தவர் அல்ல. ஆரம்பப் பள்ளியிலேயே அவரை ஆசிரியர்கள் உதவாக்கரை என்று சொல்லிவிட்டதில் எடிசனின் அம்மா நான்சிக்குக் கோபம் வந்து, எடிசனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டுத் தானே பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பின்னர் எடிசன் கற்றதெல்லாம் தாமே நிறைய புத்தகங்களைப் படித்துப் படித்துத்தான்.

 சிறு வயதிலேயே எடிசனுக்குக் காது கேட்காமல் போய்விட்டது. ஆனால் அவர்தான் ஒலிப்பதிவு இயந்திரங்களைக் கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலையைச் செய்த எடிசன், பின்னர் தந்தி அலுவலகத்தில் தந்தி அடிக்கும் ஊழியரானார். அதன் பின்னர் கண்டுபிடிப்பாளரானார். எடிசனுக்கு இரு மனைவிகள். முதல் மனைவி மேரியுடன் 14 வருடம் வாழ்ந்து அவர் மூளைக் கட்டியில் இறந்தபின் இரண்டாவதாக மினாவைத் திருமணம் செய்தார். கடைசி வரை மினா அவருக்குப் பெரும் பலமாக இருந்தார்.

 எடிசனின் கண்டுபிடிப்புகளில் நாம் அதிகம் அறிந்திருப்பவை, மின்சார பல்பு, கிராமபோன் இயந்திரம், கேமரா, ஓட்டுப் போட மெஷின் ஆகியவை. மின்சாரத்தை உற்பத்தி செய்து பல இடங்களுக்கு விநியோகித்து வணிகம் செய்யும் முறையைக் கண்டுபிடித்ததும் அவர்தான். அவருடைய பல கண்டுபிடிப்புகளுக்கு அவர் பெயர் இருந்தாலும் வேறு யாரோதான் கண்டுபிடித்தார்கள் என்ற பழி அவர் மீது சொல்லப்படுவது உண்டு. இன்று எல்லா கண்டுபிடிப்புகளும் பலரும் குழுவாக வேலை செய்வதன் விளைவாக உருவாகிறவைதான். தனியே ஒரே ஒருத்தர் வருடக் கணக்கில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பது என்ற வழக்கம் இப்போது இல்லை. ஒருவரின் ஆய்வு முடிவுகளை இன்னொருவர் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது, குழுவாக வேலை செய்வது என்ற நடைமுறைகள் இன்று சகஜமானவை.

 இந்தக் குழு முறையை உருவாக்கியவர் எடிசன்தான். அவருடைய சோதனைக் கூடம் என்பதே வெவ்வேறு துறைகளுக்கான தனித்தனி சோதனைக் கூடங்களுடன் நூலகம், செயல்முறை சோதனை வசதி ஆகியவற்றுடன் ஒரு குட்டிக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் போல இருந்தது. நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் எடிசன் கீழே வேலை பார்த்தார்கள். ஒவ்வொரு ஆய்விலும் அவரும் பங்கேற்றுக் கொண்டு வழிநடத்தினார். இப்படித்தான் அவரது கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.

 எடிசன் முயற்சி செய்து தோற்ற விஷயங்களும் உண்டு. சிமெண்ட் உற்பத்தி, தாதுவிலிருந்து எளிதாக இரும்பைப் பிரிப்பதற்கான இயந்திரம், செயற்கை ரப்பர் இவற்றையெல்லாம் செய்ய அவர் கடும் முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை. அவர் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தவற்றை எல்லாம் உடனுக்குடன் நடைமுறைக்கு கொண்டு வந்து வணிக ரீதியில் வருவாய் வருவதற்கு வழி செய்து கொண்டார். அப்போதுதான் நான் தொடர்ந்து இன்னும் ஏதாவது கண்டுபிடிக்க முடியும் என்றார் எடிசன்.

 கடும் உழைப்பாளியான எடிசன், 1915-ல் அவருடைய ஆலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டபோதும் அயரவில்லை. 13 கட்டிடங்கள் நெருப்பில் நாசமாகின. ஆனால் ஒரே மாதத்தில் எடிசன் மீண்டும் உற்பத்தியை பழையபடி தொடங்கினார்.

 எடிசன் இறந்தபோது அவர் இறுதிச்சடங்கு நேரத்தில் அமெரிக்கா முழுவதும் விளக்குகள் ஒரு நிமிடம் மங்கலாக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருடைய சோதனைக் கூட வளாகம் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டு அருமையாகப் பாதுகாக்கப்பட்டு நல்ல அருங்காட்சியகமாக இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தை வளர்த்த முன்னோடிகளில் ஒருவரான எடிசனின் மியூசியத்தைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றவர் மிகவும் பொருத்தமானவர். "இலவசக் கொத்தனார்' என்ற பெயரில் இணையத்தில் வெண்பா இலக்கணம் பற்றி நமீதா, த்ரிஷா போன்ற உதாரணங்களுடன் விளக்கி எழுதும் ராஜேஷ், நவீன தொழில் நுட்பத்தை கடுமையாக உபயோகிக்கிறவர்.

 அவருடன் வெளியே செல்லும்போது ஓட்டலில் நான் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு பியர் அருந்துகிறேன் என்றால், உடனே அதை போட்டோ எடுத்து குறிப்புடன் செல்போன் வழியே டிவிட்டரில் அடுத்த சில நிமிடங்களில் உலகத்துக்குச் சொல்லிவிடுவார். கார் ஓட்டிக் கொண்டு, என்னுடன் பேசிக் கொண்டு, நடந்து சுற்றி வருகையில் எப்போது இவர் செல்போனில் "டிவிட்' செய்கிறார் என்பதே கண்டுபிடிக்க முடியாமல் அவ்வளவு கமுக்கமாகவும் உடனுக்குடனும் இணையத்தில் உலவிக் கொண்டிருப்பார்.

 ராஜேஷுடன் எடிசன் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. எடிசன் காலத்தில் இருந்த கண்ணாடிக் குடுவைகள், பெüதிக தராசுகள், வாயுக் குழாய்கள் மேசைகள் எல்லாம் அப்படியே வைக்கப்பட்டிருக்கின்றன. எடிசன் செய்த 48 ஆயிரம் ஒலிப்பதிவுகள், 60 ஆயிரம் புகைப்படங்கள், 10 ஆயிரம் அபூர்வமான நூல்கள் எல்லாம் அங்கே இருக்கின்றன.

 இயற்பியல், வேதியியல், சோதனைச் சாலைகள், ஒலிக்கூடம், பட்டறைகள், நூலகம், எடிசனின் ஓய்வறை ஒவ்வொன்றையும் சுற்றிப் பார்க்கும்போது இங்கேதான் நூற்றுக்கணக்கானவர்கள் ஓயாமல் வேலை செய்து எவ்வளவோ கண்டுபிடித்திருக்கிறார்கள் என்ற உணர்வு எழுந்தது. உலகத்தின் முதல் சினிமா ஸ்டூடியோவான "பிளாக் மரியா' இங்கேதான் இருக்கிறது. ஸ்டூடியோ என்றால் வெறும் மரக் கொட்டகைதான். முழுக்கக் கறுப்பு பெயிண்ட் அடித்திருக்கிறது. கூரை மட்டும் தேவைப்படும்போது தள்ளிவைத்துக் கொள்ளலாம். அப்போது இயற்கை சூரிய ஒளி கொட்டகைக்குள்ளே விழும். அதில் படம் பிடிக்கலாம் என்ற ஏற்பாட்டை எடிசன் செய்திருக்கிறார்.

 பெல் உருவாக்கிய டெலிபோனை அடிப்படையாகக் கொண்டுதான் எடிசன் ஒலிப்பதிவு மெஷின்களை உருவாக்கினார். முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது எடிசன் குரலில் "மேரி ஹேட் எ லிட்டில் லேம்ப்' என்பதாகும். வெவ்வேறு விதமான ஒலிகளைச் சோதித்துப் பார்ப்பதற்காக விதவிதமான இசைக்கருவிகளைத் திரட்டியிருக்கிறார். கொட்டாங்கச்சிகள் (சிரட்டை) கூட தாள இசைக் கருவியாக இடம் பெற்றிருக்கின்றன. வெவ்வேறு வடிவங்களில் உருவான பல்புகள் உள்ளன.

 எடிசன் கடவுள் நம்பிக்கையில்லாதவர். இயற்கை என்ற பிரும்மாண்டமான சக்தி இருக்கிறது. அது நம் எல்லார் உள்ளும் இருக்கிறது. தனியே கடவுளாக இல்லை என்று கூறியிருக்கிறார். ஒரு விஞ்ஞானியாகத் தனக்குள்ள பெருமையெல்லாம் தான் ஒரு போதும் எந்த அழிவுக்கான ஆயுதத்தையோ, கருவியையோ கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் என்றும் சொல்லியிருக்கிறார்.

 காட்சியகத்திலிருந்து ராஜேஷும் நானும் அடுத்தபடியாக எடிசன் வீட்டுக்குச் சென்றோம். கிளென்மாண்ட் என்ற சோலைப் பகுதியில் பெரும் பணக்காரர்கள் வாழும் இடத்தில் எடிசனின் மாளிகை இருக்கிறது. இதை முதலில் 1880ல் கட்டியவர் ஒரு குமாஸ்தா. அலுவலகத்திலிருந்து கையாடிய பணத்தை வைத்து பிரும்மாண்டமாக இதைக் கட்டியிருக்கிறார். மொத்தம் 29 அறைகள். அரண்மனை பாணியில் கட்டப்பட்ட வீட்டில் ஓவியக் கண்ணாடிகள், கூரையெல்லாம் ஓவியங்கள் என்று இருக்கிறது. எடிசனின் புகழ்பெற்ற பல நண்பர்கள் தொழிலதிபர் ஹென்ரி போர்டு, விமானி ஆர்வெல் ரைட், கல்வியாளர் ஹெலன் கெல்லர் எனப் பலருக்கு இங்கே விருந்துகள் நடந்திருக்கின்றன. வீட்டைச் சுற்றிலும் மாபெரும் புல்வெளி நீச்சல் குளங்கள். ஒரு மூலையில் எடிசன், அவர் மனைவி மினா இருவரின் கல்லறைகள் மிக எளிமையாக இருக்கின்றன.

 எடிசனின் காட்சியகம், வீடு ஆகியவற்றைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நம் நாட்டில் விஞ்ஞானிகளை இப்படிப் போற்றத் தவறிவிட்டோமே என்றே வருத்தமாக இருந்தது. சி.வி.ராமன், விஸ்வேஸ்வரய்யா, ஜகதீஷ் சந்திர போஸ், ராமானுஜம், ஜி.டி.நாயுடு போன்றவர்களுக்கெல்லாம் எப்படிப்பட்ட காட்சியகங்களை நாம் அமைத்திருக்கவேண்டும்

 வீடு திரும்பும் வழியில் ராஜேஷ் என்னை ஒரு அமைதியான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அதுதான் மென்லோ பார்க். அந்த இடத்துக்கு என்ன சிறப்பு என்று கேட்டேன். அங்கேதான் எடிசனின் முதல் சோதனைக் கூடம் இருந்தது. இப்போது உச்சியில் பல்புகளுடன் நினைவுத்தூண் இருக்கிறது. முதன்முதலில் இந்தத் தெருவில்தான் எடிசனின் மின் விளக்குகள் எரியவைத்துக் காட்டப்பட்டன.

 அன்று மாலை எடிசன் நகரில் இருக்கும் ரூஸ்வெல்ட் பூங்காவில் ஒரு வரலாற்று நாடகம் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். நாடகம் பார்க்க வேண்டுமானால், வீட்டிலிருந்து நீங்களே நாற்காலி எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்!

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.