இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாதனை: செஸ்ஸில் உலக சாம்பியனாக ஆசை!

13 வயதில் தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் சென்னை வீராங்கனை ப. பாலகண்ணம்மா. தேசிய போட்டிகளில் 2 முறை தங்கமும், ஒருமுறை வெள்ளியும் வென்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:27 pm

வா.சங்கர்

13 வயதில் தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் சென்னை வீராங்கனை ப. பாலகண்ணம்மா.

தேசிய போட்டிகளில் 2 முறை தங்கமும், ஒருமுறை வெள்ளியும் வென்றவர் இவர். அதுமட்டுமல்லாமல் மாநில போட்டிகளில் 30 முறை முதலிடமும், 15 முறை 2-ம் இடமும், 10 முறை 3-ம் இடமும் பெற்றுள்ளார். மகாராஷ்டிரத்தில் நடந்த பள்ளிகள் அளவிலான செஸ் போட்டிகளில் முன்னணி வீராங்கனைகள் பலரையும் பின்னுக்குத் தள்ளி தங்கத்தைத் தட்டி வந்துள்ளார் பாலகண்ணம்மா. இளம் வயது முதலே இடைவிடாத செஸ் பயிற்சி, பயிற்சியாளர் கொடுக்கும் டிப்ஸ்களைக் கடைப்பிடித்தல் என முன்னணி செஸ் வீராங்கனைக்குரிய திறமைகளோடு உலா வருகிறார் இவர். இனி அவருடன் ஒரு மினி பேட்டி:

எந்த வயது முதல் செஸ் விளையாட ஆரம்பித்தீர்கள்?

நான் செஸ் விளையாட எனது தந்தை பழனிவேல்தான் காரணம். என்னுடைய செஸ் விளையாட்டு ஆர்வத்துக்கு எனது தாய் திருவாசகமும் ஊக்கம் அளித்தார். அதன் பலனாக 9 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்தேன். விடாமுயற்சியின் காரணமாக பள்ளி, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்ல ஆரம்பித்தேன்.

செஸ்ஸில் உங்களது உடனடியான இலக்கு?

செஸ் விளையாட்டில் இந்தியாவில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் இருக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்த் போன்ற ஜாம்பவான்கள் நமது தமிழகத்தில் இருந்துதான் உதித்தனர். விரைவில் மகளிர் கிராண்ட்மாஸ்டர் ஆகவேண்டும். மகளிர் கிராண்ட்மாஸ்டர் (டபிள்யூ.ஜி.எம்) அந்தஸ்தைப் பெறுவதற்கு 2,400 ரேட்டிங் புள்ளிகள் தேவை. நான் தற்போது 1,800 புள்ளிகளைப் பெற்றுள்ளேன். 2,400 புள்ளிகளைப் பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் மகளிர் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

தினமும் எத்தனை மணி நேரம் செஸ் விளையாடி பயிற்சி பெறுவீர்கள்?

காலையில் சிறிது நேரம், மாலை முதல் இரவு வரை பல மணி நேரம் செஸ் விளையாடி பயிற்சி பெறுகிறேன். பல்வேறு செஸ் புத்தகங்கள் மூலம் புதிய நுணுக்கங்களைக் கண்டறிந்து என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்தி வருகிறேன்.

உங்களுக்குப் பிடித்த அல்லது முன்மாதிரி

செஸ் வீரர் யார்?

அமெரிக்க வீரர் பாபி பிஷர்தான் செஸ்ஸில் எனக்கு முன்மாதிரி வீரர். அவருடைய ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த் மிகவும் பிடிக்கும்.

செஸ் போட்டிகளில் உங்களது அடுத்த இலக்கு என்ன?

முதலில் மகளிர் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெறுவதுதான் இலக்கு. அதன் பின்னர் செஸ்ஸில் உலக சாம்பியனாக வேண்டும். அதற்காகத்தான் இந்த தேசியப் போட்டிகளில் வெற்றி பெறுவதைக் குறிக்கோளாக கொண்டுள்ளேன்.

அடுத்து பங்கேற்கவுள்ள செஸ் போட்டிகள்?

சீனாவில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். அதைத் தொடர்ந்து செப்டம்பரில் கிரீஸ் நாட்டில் நடைபெறும் உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்பேன்.

உங்கள் செஸ் ஆர்வத்துக்கு ஊக்கம் தருபவர்கள் யார்?

எனது தந்தை பழனிவேல், தாயார் திருவாசகம் இருவரும் எனக்கு அதிக உற்சாகம் தருகின்றனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு இவர்கள்தான் காரணம்.

அதைத் தொடர்ந்து எனது பயிற்சியாளர் முகிலன், அதிக அளவில் டிப்ஸ்களை கொடுத்து எனது முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவார். பள்ளியில் செஸ் பயிற்சியாளர் ஏ. சரவணன் எனக்கு புதிய டெக்னிக்குகளை சொல்லித் தருவார்.

பள்ளியில் உங்களுக்கு எந்த அளவுக்கு ஊக்கம் தருகிறார்கள்?

நான் தற்போது சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். நான் ஒவ்வொரு முறையும் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெறும்போதெல்லாம் சக மாணவ, மாணவிகள் பாராட்டுவர். குறிப்பாக ஆசிரியைகள், தலைமை ஆசிரியர், பள்ளி முதன்மை செயல் அதிகாரி எம்விஎம் வேல்முருகன் ஆகியோர் என்னைப் பாராட்டி பரிசளிப்பர்.

மேலும் பள்ளியில் நான் இலவசக் கல்விதான் பயில்கிறேன். பஸ்ஸில் சென்றுவருவதற்கும் இலவச அனுமதியை அளித்துள்ளனர். நான் செஸ்ஸில் சாதனை படைத்து வருவதால் எங்கள் பள்ளி நிர்வாகத்தார் எனக்கு அதிக அளவில் ஊக்கமும், உற்சாகமும் அளித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் சென்று செஸ் போட்டிகளில் பங்கேற்க ஸ்பான்ஸர்?

தேசிய அளவிலான போட்டிகளில் எளிதில் பங்கேற்றுவிடலாம். ஆனால் வெளிநாடு சென்று செஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு அதிக செலவாகும். நண்பர்களும், ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தாரும் எனக்கு உதவுவதாக சொல்லியிருக்கின்றனர். நான் நிச்சயம் ஆசிய, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்தியாவின் பெருமையை உணர்த்துவேன் என்கிறார் பாலகண்ணம்மா நம்பிக்கையோடு. அவரது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.