இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம்-11: மக்களுக்கான அரண்மனை!

சைக்கிள் ரிக்ஷாக்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் குதிரை வண்டிகள் கூடப் பெரு நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓடுகின்றன. பாஸ்டன் குவின்சி மார்க்கெட் சதுக்கத்தருகே நிறைய குதிரை வண்டிகள் நிற்கின்றன. 'அன்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:05 pm

ஞாநி

சைக்கிள் ரிக்ஷாக்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் குதிரை வண்டிகள் கூடப் பெரு நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓடுகின்றன. பாஸ்டன் குவின்சி மார்க்கெட் சதுக்கத்தருகே நிறைய குதிரை வண்டிகள் நிற்கின்றன. 'அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி பயணித்த பாணியிலான அலங்கார வண்டிகள். நம் ஊரில் குதிரை, குதிரை வண்டியோட்டி இருவருமே வத்தலும் தொத்தலுமாகத்தான் இருக்கிறார்கள். அங்கே இருவருமே பார்க்க வளமாகவே இருக்கிறார்கள்.

பாஸ்டனில் சந்தைப் பகுதியில் நிறைய தெருக் கலைஞர்களைப் பார்த்தேன். சில நகராட்சிகள் ஆண்டுக்கு இத்தனை டாலர் லைசன்ஸ் கட்டணம் என்று விதித்து அவர்களுக்குப் பெர்மிட்டுகள் தருகின்றன. தனி நபராகப் பாடியபடி இசைக்கருவியை வாசிப்பவர்கள் உண்டு. குழுவாக நடனங்கள் செய்வோர் உண்டு. மேஜிக், கரணங்கள் என்று விதவிதமான வித்தைக்காரர்கள் உள்ளனர். அமெரிக்காவின் பல நகரங்களில் இப்படித் தெருக் கூத்தாடிகளைப் பார்க்கலாம். நமக்கும் இப்படிப்பட்ட மரபுகள் இருந்து இப்போது ஏறத்தாழ அழிந்துவிட்டன.

தெருவில் வந்து நின்று தன் கலை வெளிப்பாட்டை மட்டுமல்ல, கருத்தை வெளிப்படுத்தவும் அமெரிக்காவில் உரிமை உண்டு. ஓவியங்கள், அறிவிப்புத் தாள்கள் என்று எதையும் காட்சிப்படுத்தலாம். நடைபாதைகளில், பூங்காக்களில், சதுக்கங்களில், அவ்வளவு ஏன் ஓட்டல், ரெஸ்டாரண்ட் போல தனியாருக்குச் சொந்தமான இடமாக இருந்தாலும் கூட, அந்தத் தனியாரின் வேலையைப் பாதிக்காமல் அந்த இடத்தில் தெருக் கலைஞர் இயங்கலாம் என்று சட்டப்படியான உரிமைகள் இருக்கின்றன. தங்கள் உரிமைகளுக்காக ஒவ்வொரு நகரத்திலும் தெருக் கலைஞர்கள் அவ்வப்போது நீதிமன்றம் சென்று கருத்துச் சுதந்திர உரிமையை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

மாபெரும் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் நம் நாட்டிலோ, பூங்காக்களில் புல் தரையில் நடக்கக் கூட அனுமதி கிடையாது. மெரினாவில் புல்தரையில் காலை வைப்பவர்களைத் துரத்துவதற்கென்றே ஒரு காவலாளி புல்லிலேயே நிற்கவைக்கப்பட்டிருக்கிறார். புல்வெளியில் நடந்து போய் உட்கார்ந்து அனுபவிக்காமல், எட்டி நின்று பார்த்துவிட்டுச் செல் என்று சொல்வது இங்கேதான் இருக்கிறது. காலை 11 மணிக்குப் பூங்காவைப் பூட்டி விடுகிறார்கள். மாலை 3 மணிக்குத்தான் திறப்பார்கள். மறுபடி எட்டு மணிக்குப் பூட்டுவார்கள். அமெரிக்காவில் பூங்காக்கள் காலை 5 முதல் இரவு 11 வரை திறந்தே இருக்கின்றன.

இங்கே எந்த தெருமுனையிலோ, நடைபாதை ஓரத்திலோ ஒருவர் நான் பஸ் கட்டண உயர்வைக் கண்டிக்கிறேன் என்று ஓர் அட்டையில் எழுதி தன் தோளில் தொங்க விட்டுக் கொண்டு பத்து நிமிடம் கூட நிற்கமுடியாது. உடனே போலீஸ் வந்து அவரைத் துரத்திவிடும். செயற்கை குளிர்பானங்களைக் குடிக்காதீர்கள். மோர் குடியுங்கள் என்று சாதுவான ஒரு வேண்டுகோள் அட்டையைக் கூட அணிந்து நிற்க விடமாட்டார்கள்.

பாஸ்டனில்தான் புகழ் பெற்ற எம்.ஐ.டி எனப்படும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற உயர் அறிவியல் கல்வி நிறுவனம் இருக்கிறது. அங்கேதான் சிறப்புப் பேராசிரியராக நோம் சாம்ஸ்கி இருக்கிறார். மொழியியல் துறையில் பேரறிஞராகக் கல்வித் துறையில் கருதப்படும் சாம்ஸ்கி, அமெரிக்க அரசின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் விமர்சகராக உலகம் முழுவதும் அறியப்பட்டிருப்பவர். இது போல ஒருவரைக் கூட நம் பல்கலைக்கழகங்களில் பார்க்க முடியாது. அரசியல்வாதி உளறினால் அதை இலக்கியம் என்றும் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்பப்போகிறோம் என்றும் சொல்லக் கூடியவர்களையே துணை வேந்தர்களாக சில கோடி ரூபாய் விலையில் நியமிக்கும் அவலத்தில் நம் நாடு இருக்கிறது.

பாஸ்டனின் கல்விச் சூழல் புகழ் பெற்றது. அமெரிக்காவின் கல்லூரி நகரம் என்ற பெயர் எடுத்திருக்கும் பாஸ்டன்தான் அமெரிக்காவிலேயே மிக அதிகமான பட்டதாரிகளைத் தயார் செய்யும் நகரம். இங்கேதான் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கிறது. வயது 364....

கிறித்துவ இறையியல் படிப்பு படித்த ஜான் ஹார்வர்ட் என்பவர் பெயர் பல்கலைக் கழகத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இவர் முப்பது வயதிலேயே இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்னால் தன் நண்பர் ஈட்டன் பணி புரிந்த நியூகாலேஜுக்குத் தன் சொத்தில் சரிபாதியையும் தன்னிடமிருந்த 320 நூல்களையும் நன்கொடையாக எழுதிவைத்தார். அப்போது கட்டிய கட்டடம், நூலகம் எல்லாம் 128 வருடங்கள் கழித்து பெரும் தீ விபத்தில் அழிந்தன. ஹார்வர்ட் கொடுத்த 320 புத்தகங்களில் ஒன்றே ஒன்றுதான் மிஞ்சியதாம். 1920-களில் ஒரு சுருட்டு கம்பெனி தன் லேபிளில் ஹார்வர்ட் கல்லூரியின் நிறுவனர் என்று ஈட்டன் படத்தை வெளியிட்டிருக்கிறது.

முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கிறித்துவ இறையியல் சார்ந்ததாக இருந்தது. அதன் பின் மத சார்பற்ற பொதுக் கல்விக்கான இடமாகியது. ப.சிதம்பரமும் சுப்பிரமணியன் சுவாமியும் உயர் படிப்பு படித்தது இங்கேதான். அவர்கள் மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதிகளான ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி,ஜார்ஜ் புஷ், ஒபாமா, அறிஞர்கள் தோரோ, எமர்சன், விஞ்ஞான எழுத்தாளர் கார்ல் சாகன், கவிஞர் டி.எஸ்.எலியட், இப்போதைய ஐ.நா செயலாளர் பான் கி மூன், இந்திய சினிமா இயக்குநர் மீரா நாயர் என்று பலவிதமான பிரபலங்கள் இங்கே படித்திருக்கிறார்கள்.

இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் 75 பேர் இந்தப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடையவர்கள். ஹார்வர்டின் இன்னொரு சிறப்பு இதன் மொத்தம 20 ஆயிரம் மாணவர்களில் சரிபாதி பேர் பெண்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் மேல். அமெரிக்காவிலேயே பணக்காரப் பல்கலைக்கழகம் ஹார்வர்டுதான்.

பாஸ்டன் பாலா அறிமுகப்படுத்திய இளம் நண்பர் ஆனந்த் என்னை ஹார்வர்டுக்கு ரயிலில் அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் பல ஊர்களில் நான் ரயில் பயணம் மேற்கொண்டேன். சென்னை பீச்-செங்கற்பட்டு போல. நகரங்களுக்குள்ளேயும் புற நகரையும் இணைக்கும் ரயில்கள் சில. அவற்றில் பூமிக்கடியில் ஓடும் மெட்ரோ ரயில்களும் உண்டு. பெரு நகரங்களை இணைக்கும் ரயில்கள் சில - சென்னை-மும்பை போல. விதவிதமான் ரயில் நிலையங்களைப் பார்த்தேன். மிகச் சிறியவை முதல் மிக மிகப் பெரியவை வரை. நியூ ஜெர்சியின் எடிசன் ரயிலடியும் மெட்ரோபார்க்கும் சிறியவை. நியூயார்க்கின் நியூபென் பிரம்மாண்டமானது.

எல்லா ரயில் நிலையங்களும் தூய்மையானவை. டிக்கட்டைச் சோதித்து உள்ளேயோ வெளியேயோ செல்ல அனுமதிக்கும் இடங்களில் எல்லாம் சோதிக்க மனிதர்கள் இல்லை. இயந்திரக் கதவு டிக்கட்டை செருகினால் மூடி திறக்கிறது. பெரிய ரயில் நிலையங்களில் இருக்கும் உணவகங்கள் முதல் பத்திரிகைக் கடைகள் வரை எல்லாவற்றிலும் ஒழுங்கும் வசதியும் நிறைந்திருக்கின்றன.

ரயில்களின் உட்பகுதி, நகர்ப்புற ரயில்களில் நிறைய பேர் நிற்பதற்கான வசதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் இருக்கைகளில் நிம்மதியாக வசதியாக உட்கார்ந்து தூங்கலாம், படிக்கலாம். கணிணியில் வேலை செய்யலாம். கழுத்து, முதுகு வலிகள் வரும் வாய்ப்பு குறைவு.

ஹார்வர்ட் ரயிலடியில் இறங்கி சில நூறடிகள் நடந்தால் ஹார்வர்ட் பல்கலைக்ககழகம் வந்துவிடுகிறது. எனக்கு நான் படித்த சென்னை கிறித்துவக் கல்லூரிதான் நினைவுக்கு வந்தது. தாம்பரம் ரயிலடியில் இறங்கி சில நூறடி தூரத்தில் என் கல்லூரி. மரங்கள் நிறைந்த வளாகம். ஹார்வர்டும் அது போலவே இருந்தது. ஆனால் கட்டடங்கள் எல்லாம் பிரம்மாண்டமான கட்டடங்கள். நூலகத்தின் தோற்றமே அறிவின் கம்பீரத்துக்கு அடையாளம் போல இருந்தது. நம் பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி வளாகங்களுக்குள் நுழைந்ததுமே கண்ணுக்குத் தெரியாமல் அதிகாரத்தின் பார்வை நம்மை நோக்கி நீண்டிருப்பதை உணரமுடியும். காற்றிலேயே அதிகாரத்தின் உஷ்ணம் கலந்து வீசும். அமெரிக்க கல்வி வளாகங்களில் அப்படிப்பட்ட இறுக்கம் என்னால் உணரப்படவில்லை. மாணவர்கள் இயல்பாக எந்தப் பதற்றமும் இன்றி நடமாடிக் கொண்டிருந்தார்கள். பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பார்க்க குழுக்களாக வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே கைடுகளின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டு நின்றார்கள். முன்கூட்டி ஏற்பாடுகள் செய்யாததால் என்னால் எந்த வகுப்பறைக்கும் சென்று பார்க்க முடியவில்லை. வராந்தாக்களில் மட்டுமே சுற்றினேன்.

பல்கலைக்கழகத்திலிருந்து சற்று நடந்து ஹார்வர்ட் நகர மையத்துக்குச் சென்றோம். அங்கே மூன்று நான்கு பிரம்மாண்டமான புத்தகக்கடைகள் இருந்தன. ஒவ்வொன்றையும் சுற்றிப் பார்க்கவே நிறைய நேரம் தேவைப்பட்டது. இதற்கு முன்பு பாஸ்டன் நகரத்துக்குள் பார்ன் அண்ட் நோபிள்ஸ் புத்தகக்ககடைக்கு பாலாவுடன் சென்றிருந்தேன். நகர்ப் பகுதியிலேயே பழைய புத்தகங்கள் மட்டும் விற்கும் ஒரு கடையையும் பார்த்தேன். நம்மை விடப் பல மடங்கு குறைவான மக்கள் தொகை உடைய அமெரிக்க ஊர்களில் இருக்கும் புத்தகக் கடைகள் நம்முடைய மிகப் பெரிய கடைகளை விடப் பெரிதாக இருக்கின்றன. நம் ஊரில் எந்தப் புத்தகக் கடைக்குச் சென்றாலும் வாஸ்து, ஜோதிடம், சமையல், தன் முன்னேற்ற நூல்கள் என்ற நான்கு தலைப்புகளில் நிறைய நூல்கள் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அமெரிக்கப் புத்தகக்கடைகளில் இப்படிப்பட்ட போக்கு எதுவும் காணப்படவில்லை. இந்தத்துறைகளிலும் நூல்கள் இருக்கின்றன. ஆனால் அவையே நம் கவனத்தை ஈர்க்கும் அளவு ஆக்கிரமிப்பது போல் பெரும் சதவிகித இடத்தை எடுப்பதில்லை. எல்லாத் துறைகள் தொடர்பாகவும் பல அருமையான ஆழமான நூல்களைக் காண முடிகிறது.

குறிப்பாக ஹார்வர்ட் பலகலைக்கழகம் அருகே இருந்த புத்தகக்கடைகள் ஒவ்வொன்றும் ஒரு மாணவருக்கும், வாசகருக்கும் பொக்கிஷம் போன்றவை. சென்னையிலோ, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை என்று பல்கலைக் கழகங்கள் இருக்கும் எந்தத் தமிழக ஊரிலும் பல்கலைக்கழகம் அருகே இப்படி ஒரே ஒரு புத்தகக் கடை கூட நம்மிடம் கிடையாது. டாஸ்மாக் கடைகள் தவறாமல் இருக்கின்றன.

அடுத்து பாஸ்டன் பொது நூலகத்துக்கு ஆனந்த் அழைத்துச் சென்றார்.

சுமார் 160 வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட பாஸ்டன் நூலகத்துக்கான பிரம்மாண்டமான கட்டடத்தை 110 வருடங்கள் முன்னால் கட்டியபோது அதை மக்களுக்கான அரண்மனை என்று வர்ணித்தார்கள்.

சரியான வர்ணனை.... எதற்கும் பயன்படாமல் இருக்கிற பித்ம்மாண்டங்களின் கலையழகைப் போற்றி ஆயிரமாவது வருட விழா கொண்டாடுகிறோம். என்றைக்கும் பய

யன்படக்கூடிய இடங்களைத் தண்ணீர் தொட்டி வடிவத்திலும், கான்க்ரீட் தீப்பெட்டி மாதிரியும் துளியும் கலை ரசனையே இல்லாமல் கட்டுகிறோம். பாஸ்டன் நூலகக் கட்டடம் ஓர் உண்மையான அறிவாலயம்....கோவில், அரண்மனைகளின் பிரம்மாண்டத்தோடு என்னை வரவேற்ற அதன் படிக்கட்டுகளில் ஏறுகிறபோதே அறிவைப் போற்றும் இடத்தின் உணர்வை காற்றில் உணர்ந்தேன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.