இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம் - 12: மீன் மீண்ட கதை!

கட்டடக் கலைஞர் சார்லஸ் மெக்கிம் கட்டிய பாஸ்டன் நூலகக் கட்டடம் அவர் பெயராலேயே இன்று அழைக்கப்படுகிறது. பழைய ரோமாபுரி, பாரிஸ் நகரங்களின் கட்டடக் கலை பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான கட்டட நுழ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:17 pm

ஞாநி

கட்டடக் கலைஞர் சார்லஸ் மெக்கிம் கட்டிய பாஸ்டன் நூலகக் கட்டடம் அவர் பெயராலேயே இன்று அழைக்கப்படுகிறது. பழைய ரோமாபுரி, பாரிஸ் நகரங்களின் கட்டடக் கலை பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான கட்டட நுழைவாயிலின் படிக்கட்டுகளின் இருபுறமும் கலை, அறிவியல் இரண்டையும் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. எல்லாமே பிரம்மாண்டம்தான்.  

முகப்புகளில் சில பொன்மொழிகள் கல்லில் பொறித்திருக்கின்றன. அதில் ஒன்று - ஒழுங்கையும் சுதந்திரத்தையும் காப்பாற்றுவதற்கு மக்களுக்குக் கல்வி தேவை என்பதாகும். பாஸ்டன் நூலகத்தில் மொத்தமாக 89 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. டேப், வீடியோ, குறுந்தகடு போன்ற இதர வடிவத்தில் உள்ள கல்விக் கருவிகளை சேர்த்தால் மொத்தம் 2 கோடி பொருட்கள். ஒரு சமயத்தில் ஒரு கோடி பொருட்கள் வெளியே புழக்கத்தில் வாசகர்களிடம் இருக்கின்றன.   

பாஸ்டன் நூலகத்தைப் பயன்படுத்திய படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் கலீல் கிப்ரான் (1883-1931). லெபனானைச் சேர்ந்த கிப்ரான் கவிஞர் மட்டுமல்ல. ஓவியரும்கூட. பாஸ்டனில்தான் அவர் வளர்ந்தார். படித்தார். வாழ்ந்தார். அவர் அம்மா தையல் வேலை பார்த்து அவரைப் படிக்க வைத்தார். அம்மாவும்  குடும்பத்தினரும் நோயில் இறந்தபின், எஞ்சிய ஒரு சகோதரி தையல் வேலை செய்து கிப்ரானைக் காப்பாற்றிவந்தார். பின்னால் பெரும் புகழடைந்த கலீல் கிப்ரான், தான் படித்த பாஸ்டன் நூலகத்துக்குப் பெரும் நன்கொடையை  அளித்திருக்கிறார். நூலகத்துக்கு எதிரே அவருக்கு ஒரு நினைவிடம் இருக்கிறது.

பாஸ்டன் நூலகக் கட்டடத்தில் படிப்பறைகள், கம்ப்யூட்டர் அறைகள், ஓவிய கேலரிகள், சொற்பொழிவு அறைகள் எல்லாமே விசாலமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கின்றன.  தினமும் ஏதாவது நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், சொற்பொழிவுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. பிரதான படிப்பறையின் கூரையை ஏறிட்டுப் பார்த்தால் அதுவே ஒரு கலை பொக்கிஷமாக இருக்கிறது. படிக்க விரும்பும் ஒருவருக்கு அருமையான சூழல்.

பொது மக்கள் யாரும் இங்குள்ள கணினிகளைத் தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம். இன்டர்நெட் இணைப்பும் உண்டு. நானும் பயன்படுத்தி ஈமெயில்களைப் பார்த்தேன். பாஸ்டன் நூலகத்தைப் பயன்படுத்திய இன்னொரு படைப்பாளி என்ற பெருமையை அடைந்தேன். அமெரிக்க நூலகங்களிலேயே முதல்முறையாக கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது பாஸ்டன் நூலகம்தான். உள்ளூர் முனிசிபாலிட்டி நிர்வாகத்தில் ஒரு பிரம்மாண்ட நூலகம் தொடங்கப்பட்டதிலும் இதுதான் முதல்.

பாஸ்டன் நூலகத்தின் கீழ் மொத்தம் 26 கிளைகள் உள்ளன. அதாவது மொத்தம் 7 லட்சம் மக்கள் தொகைக்கு இத்தனை நூலகங்கள். இதுதான் அமெரிக்காவின் சிறப்பு.

அமெரிக்காவின் இன்னொரு சிறப்பு எந்த இடத்தையும் சுற்றுலாவுக்கு உரிய இடமாக ஆக்கிக் கொள்வது. சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் சட்டமன்றக் கட்டடத்தை சுற்றிப் பார்க்க விரும்புவது அபூர்வம். இத்தனைக்கும் கோட்டையில் ராணுவத்தின் அருமையான மியூசியம் இருக்கிறது. அதைக் கேள்விப்பட்டு அங்கே செல்பவர்கள்கூட நம் சட்டமன்றம் எப்படி நடக்கிறது, அது எப்படி இருக்கும் என்று பார்க்கச் செல்வதும் இல்லை. விரும்பினாலும் லேசில் அனுமதி கிடைக்காது.  

அமெரிக்காவில் மாநில சட்டமன்றங்களை சுற்றுலா பயணிகள் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கென்றே தனி சுற்றுலா டூர்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் நான் எந்த விளம்பரத்திலும் புனிதஸ்தலங்களுக்கு சுற்றுலா என்ற அறிவிப்பைப் பார்க்கவில்லை. பொழுதுபோக்கு இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடங்கள் ஆகியவையே சுற்றுலாவுக்கு விளம்பரப்படுத்தப்படுகின்றன. மக்களாட்சியின் கேந்திரங்களான சட்டமன்றக் கட்டடங்கள் அமெரிக்காவில் வரலாற்றுச் சிறப்புள்ளவையாகக் கருதப்படுகின்றன.

பாஸ்டனில் இருக்கும் மாசசூசெட்ஸ் மாநில சட்டமன்றக் கட்டடத்துக்கு ஆனந்த் என்னை அழைத்துச் சென்றார். திருப்பதி கோவிலிலும் சிதம்பரம் கோவிலிலும் நாம் தங்கக் கலசம், கூரை வேய்ந்திருக்கிறோம். அதுபோல மாசசூசெட்ஸ் ஸ்டேட் ஹவுசுக்கு தங்கக் கும்பம் வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் செம்பில் இருந்ததை மாற்றித் தங்கம் வேய்ந்திருக்கிறார்கள்.  

ஸ்டேட் ஹவுஸ் கட்டடம் உள்ள இடம் முதலில் மாடுகள் மேய்ப்பதற்கான புல்வெளியாக இருந்திருக்கிறது. மாட்டுப் பண்ணையின் சொந்தக்காரர் ஜான் ஹேன்காக் அமெரிக்க விடுதலைப் போராட்ட வீரர். அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தில் முதல் கையெழுத்து இவருடையதுதான். தன் நிலத்தை சட்டசபை கட்டுவதற்காக 1798ல் கொடுத்தார்.  

அமெரிக்க அரசியல் சட்டம் உருவாவதற்கும் முன்பே மாசசூசெட்ஸ் மாநிலம் தனக்கான சட்டத்தை எழுதி வைத்திருந்தது. உலகிலேயே எழுதி வைக்கப்பட்ட முதல் அரசியல் சட்டம் இதுதான். இப்போதும் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் ஒரு சட்டம் இயற்றவேண்டுமென்று மனு கொடுக்கும் உரிமை எல்லா பிரஜைகளுக்கும் உண்டு. மனுவை ஒரு கமிட்டி பரிசீலித்து ஏற்றுக் கொண்டதும், ஒரு சபை உறுப்பினர் சபையில் அறிமுகப்படுத்துவார். விவாதம், வாக்கெடுப்புக்குப் பின் சட்டம் நிறைவேறலாம். நிராகரிக்கப்படலாம்.

சட்டமன்றக் கட்டடத்தை எங்களுக்கு சுற்றிக் காட்டிய கைடு ஒரு பள்ளி மாணவர்.  அறிவியலில் மேல் படிப்பு படிப்பதற்கான செலவுக்குச் சம்பாதிப்பதற்காக இந்த பகுதி நேர வேலை செய்கிறார். ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் அவர் விளக்கிச் சொன்னதும், நாம் கேட்கும் குறுக்குக் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லும் திறமையுடன் இருக்கிறார். அதற்கான பயிற்சி முதலிலேயே தரப்படுகிறது. எனக்குத் தெரியாது என்ற பதிலுக்கு பதிலாக, இந்த இடத்தில் தேடினால் உங்களுக்கு இதற்கான பதில் கிடைக்கும் என்பது போன்ற பதில்களே வருகின்றன.

சட்டப் பேரவை மண்டபத்தில் பார்வையாளர் கேலரிக்கு மேலே மாடத்தின் கூரையில் ஒரு பெரிய மீன் சின்னம் வைக்கப்பட்டிருக்கிறது. இதை 1784ல் பரிசளித்தவர் ஜோனாதன் ரோவ் ஒரு மீன் வியாபாரி. மாசசூசெட்ஸ் மாநிலத்தின் பொருளாதாரத்தில் மீன் வர்த்தகம் பெரும் பங்காற்றுவதைக் குறிக்க இந்தப் பரிசு.  ஒரு முறை விளையாட்டாக ஹார்வர்ட் மாணவர்கள் இந்த மீன் சின்னத்தைத் திருடிக் கொண்டு போய்விட்டார்களாம். திருப்பிக் கொடுத்துவிட்டால்,வேறு நடவடிக்கை எடுக்கப்படாது என்று அவைத்தலைவர் அறிவித்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டார்களாம். பாஸ்டன்தான் ஜான் எஃப் கென்னடியை அரசியல் தீவிரப்படுத்திய இடம். ஸ்டேட் ஹவுசில் லிங்கன் தவிர கென்னடிக்கும் சிலை இருக்கிறது.

ஸ்டேட் ஹவுஸில் பல பெரிய கூடங்கள் இருக்கின்றன. ஒரு கூடத்தில் சிப்பாய்க்கு சிகிச்சை செய்யும் நர்சின் சிலை பெரிதாக வைக்கப்பட்டிருக்கிறது. சிவில் யுத்தத்தின்போது நர்சுகள் ஆற்றிய பணியைப் போற்ற இந்த சிலை. இந்த கூடத்துக்கே நர்சுகள் கூடம் என்று பெயர்.  

இதன் சுவர்களில் பாஸ்டன் டீ பார்ட்டிக் கலகம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் சுவரில் புடைப்போவியங்களாக சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

கடத்தல் பொருட்களைத் தேடுவதற்காக யார் வீட்டிலும்  முன் அனுமதி இல்லாமல் பிரிட்டிஷ் சிப்பாய்கள் நுழையலாம் என்ற சட்டத்தை எதிர்த்து 1761ல் ஃபீஸ் வாங்காமல் வாதாடினார் ஜேம்ஸ் ஓட்டிஸ். அவர் கோர்ட்டில் வாதாடும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு கூடத்தில் போருக்கு சென்ற ராணுவக்குழுக்கள் வெற்றிகரமாகத்திரும்பி வந்து தங்கள் கொடிகளை ஆளுநரிடம் ஒப்படைத்ததன் அடையாளமாகக் கொடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மாநிலத்தின் 351 நகர்களின் கொடிகளும் இன்னொரு கூடத்தில் உள்ளன. செனட் ஹவுசில் 1838ல் செனட்டர்  ஆஞ்செலினா க்ரிம்கே ஆற்றிய உரையின் நினைவாகக் குறிப்பு இருக்கிறது. அமெரிக்க சட்டமன்றத்தில் முதலில் பேசிய பெண் அவர்தான். அது மட்டுமல்ல முதல் உரையே அடிமை முறையை ஒழிப்பது பற்றியாகும்.

மாசசூசெட்ஸ் சட்டமன்ற வளாகத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறு பெண்களின் படங்களுக்கு ஒரு சுவர் ஒதுக்கப்பட்டது. அறுவரும் சமூகப் போராளிகள். டாரதி டிக்ஸ் மன நலம் குன்றிய ஏழை நோயாளிகளுக்கான முதல் அமெரிக்க விடுதிகளை ஏற்படுத்தியவர்.  லூசி ஸ்டோன் மாநிலத்தின் முதல் பெண் பட்டதாரி. அடிமை முறையை எதிர்த்து பெண்கள் ஓட்டுரிமையை ஆதரித்துப் போராடியவர். பெண்கள் தலைமுடியை வெட்டிக் கொள்வதையும் பேண்ட் அணிவதையும் அறிமுகப்படுத்தியவர்.  

திருமணத்துக்குப் பின் கணவர் பெயரால் அறியப்படுவதை மாற்றியவரான சாரா பார்க்கர் கறுப்பினப் போராளி. டாக்டரான சாரா உலகம் முழுவதும் சுற்றி அடிமை முறைக்கெதிராகப் பிரசாரம் செய்தார். ஜோசபின் ரஃபின் கறுப்பினப் பெண்களுக்கான முதல் பத்திரிகையான விமன்ஸ் ஈராவை தொடங்கி நடத்திய பத்திரிகையாளர். மேரி கென்னி புத்தக பைண்டராகத்தொடங்கி பெண் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்தை உருவாக்கி பல சட்ட உரிமைகள் வருவதற்குப் போராடியவர்.  

பிளாரன்ஸ் லஸ்கோம்ப் எம்.ஐ.டியில் படித்த முதல் பெண் கட்டடக் கலைஞர். பெண் என்பதால் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ள பதினாறு கம்பெனிகள் மறுத்தன. போராடி படித்த பிளாரன்ஸ், பெண்களின் வாக்குரிமைக்கான இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். அங்கே சட்டமன்றங்களில் இப்படிப்பட்ட பெண்களைப் போற்றி சிலை வைக்கிறார்கள். இங்கே உயிரோடு இருக்கும்போதே தன் படத்தை மாட்ட அவசரம் காட்டும் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள். ஒரு முத்துலட்சுமி ரெட்டிக்கோ, மூவலூர் ராமாமிர்தத்துக்கோ சட்டப் பேரவையில் சிலைகள் உண்டா இல்லையே?

கட்டடத்தின் பல பகுதிகளை சுற்றிப் பார்த்தபின், மாநில ஆளுநர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். அங்கே ஆளுநர் என்பவர் நம் முதலமைச்சருக்கு சமம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் சென்றபோது ஆளுநர் அவர் அறையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கதவுக்கு மறுபுறம் உள்ள வராந்தா வரை நாங்கள் சென்றோம். மிரட்டுகிற செக்யூரிட்டிகள், கெடுபிடி செய்யும் பி.ஏக்கள், கரை வேட்டிபந்தாக்கள் எதுவும் இல்லாமல் இங்கேயும் இப்படி ஒரு முதல்வர் அறை வரை பொதுமக்கள் செல்ல முடிந்தால்தான் இது உண்மையில் ஜனநாயகம். இப்போதைக்கு வாய்ப்பே இல்லை.  

பாஸ்டன் ஹவுசிலிருந்து வெளியே வந்தால் எதிரே அழகான பூங்கா. பரப்பளவு 50 ஏக்கர்.  காமன்ஸ் பார்க் என்ற இந்த இடத்தில்தான் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் முகாமடித்துத் தங்கியிருந்தார்கள். ஒரு காலத்தில் இந்த பூங்காவில்தான் பொது மக்கள் முன்னால் தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்கள். கடவுளுடன் தொடர்பு கொள்ள நேரடியாக பைபிளைப் படித்தால் போதும்  இடைத்தரகர்களாகப் பாதிரிகள் தேவையில்லை என்று கருதிய ஒரு மதக் குழுவைச் சேர்ந்தவர் மேரி டயர்.  இது அப்போது குற்றமாகக் கருதப்பட்டதால் அவருக்கு மரன தண்டனை விதிக்கப்பட்டது. இரு முறை மன்னிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டபோதும் மேரி திரும்பித் திரும்பி மாசசூசெட்சுக்கு வந்து தன் கருத்தைப் பிரசாரம் செய்தார். 1660ல் மக்கள் முன்னால் இந்தப் பூங்காவில் தூக்கிலிடப்பட்டார்.   

ஆனந்தும் நானும் இந்த சரித்திரப் புகழ் பெற்ற பூங்காவின் புல்வெளியில் சந்தோஷமாக இளைப்பாறினோம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.