காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம் - 13: பாஸ்டனில் இருக்கும் நினைவுச் சின்னங்கள்!

நீண்ட தூரம் நடந்து நடந்து களைத்திருந்ததால் பாஸ்டன் காமன்ஸ் பூங்காவின் பரந்த புல்வெளியில் படுத்து ஓய்வு எடுப்பது சுகமான அனுபவமாக இருந்தது. படுத்திருந்த...

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:34 pm

ஞாநி

நீண்ட தூரம் நடந்து நடந்து களைத்திருந்ததால் பாஸ்டன் காமன்ஸ் பூங்காவின் பரந்த புல்வெளியில் படுத்து ஓய்வு எடுப்பது சுகமான அனுபவமாக இருந்தது. படுத்திருந்த புல்தரை சாதாரணமானதல்ல. சரித்திரப் புகழ்பெற்றது.

கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங் இந்தப் பூங்காவில் உரையாற்றியிருக்கிறார். 1969-ல் ஒரு லட்சம் அமெரிக்க மக்கள் இங்கே திரண்டு வியட்நாமில் அமெரிக்கா நடத்தும் யுத்தத்தை கண்டித்திருக்கிறார்கள். 1728-ல் தொடங்கிய இந்தப் பூங்காதான், உலகத்திலேயே முதன்முதலில் பொது மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட நகரப் பூங்கா.இதன் ஓரத்தில்தான் அமெரிக்காவின் முதல் நிலத்தடி ரயில்வே நிலையம் அமைந்திருக்கிறது.  

அமெரிக்காவில் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கூர்மைப்படுத்தி, சமயத்தில் ஊதிப் பெரிதாக்கி, ஆவணப்படுத்தி வரலாற்றுச் சின்னமாக்கிக் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. பாஸ்டன் பாலா, கரூர் செந்தில்,ஆனந்த் ஆகியோருடன் நான் சென்ற ப்ரூடென்ஷியல் டவர் அப்படிப்பட்டதுதான். அமெரிக்காவின் பெரிய நகரங்கள் பலவற்றில் மிக உயரமான கட்டடங்கள் இருக்கின்றன. அதிஉயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்று அங்கிருந்து வேடிக்கை பார்க்க விரும்புவது மனித இயல்பு.   

அப்படிப்பட்ட இரண்டு கட்டடங்களில் நான் ஏறிப்பார்த்தேன். ஒன்று பாஸ்டனில் இருக்கும் ப்ரூடென்ஷியல் டவர். இது 52 மாடிக்கட்டடம். இன்னொன்று நியூயார்க்கில் இருக்கும் உலகிலேயே உயரமான கட்டடம் என்ற பெயர் எடுத்திருந்த எம்பயர் ஸ்டேட் கட்டடம். இதில் 102 மாடிகள்.  

பாஸ்டனில் 1964-ல் கட்டப்பட்ட ப்ரூடென்ஷியல் டவரின் உச்சி மாடியில் வேடிக்கை பார்ப்பதற்கென்று கண்ணாடி ஜன்னலுடன் வராந்தா இருப்பது தவிர, அந்த பகுதியையே ஒரு தகவல் தரும் கண்காட்சியாகவும் மாற்றியிருந்தார்கள். ஜன்னல்களை ஒட்டி நான்கு திசைகளிலும் நடந்து செல்லும்போது ஒவ்வொரு திசையிலும் என்ன பார்க்கிறோம், என்னென்ன முக்கிய இடங்கள் கண்ணில் தெரியக் கூடும் என்ற விவரங்களை எழுதி வைத்திருப்பது மட்டுமல்ல,  ஆடியோவாகவும் ஒலிபரப்புகிறார்கள்.  

அமெரிக்காவில் பல மியூசியங்களில் இந்த முறை இருக்கிறது.  ஸ்பீக்கர் அல்லது ஹெட் போன் உள்ள செல்போன் சைசிலான ஒரு கருவியை நம்மிடம் கொடுத்துவிடுகிறார்கள். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பகுதிக்கு ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. அந்த எண்ணை நம்மிடம் உள்ள கருவியில் அழுத்தினால், அதைப் பற்றிய விவரங்கள் ஒலிபரப்பாகின்றன. ப்ரூடென்ஷியல் டவரில் இந்தச் செவி வழி ஒலிபரப்பு ஆங்கிலம் தவிர, பிரெஞ்ச், ஜப்பானிய மொழிகளிலும் தரப்படுகிறது.  

அங்கே ஒரு மினி தியேட்டரில் பாஸ்டன் நகர் பற்றிய ஒரு குறும்படமும் காட்டுகிறார்கள். இது தவிர நான்கு புற நடைப்பகுதியிலும் சுவர் நெடுக ஒரு கண்காட்சி இருக்கிறது. அமெரிக்கா என்பது முழுக்க முழுக்க வந்தேறிகளின் தேசம். யாரெல்லாம் எங்கிருந்தெல்லாம் வந்து இங்கே குடியேறியிருக்கிறார்கள் என்பதைச் சுவையாக இந்தக் கண்காட்சி சொல்கிறது. பாஸ்டன் நகரத்தின் வரலாறு, பாஸ்டனில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள், பாஸ்டனின் பிரபலமான தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் எல்லாரைப் பற்றியும் இந்தக் கண்காட்சியில் விவரங்கள் உள்ளன.  

சுற்றுலா என்பதை உணர்ச்சிக்கும் அறிவுக்கும் பயனுள்ளதாக ஆக்குவதுதான் அமெரிக்க சுற்றுலா இடங்களில் பின்பற்றப்படும் அணுகுமுறை. அறிவுக்கான விஷயங்களைச் சுவையாக தருவதன் மூலம், வெறும் பொழுதுபோக்குக்கு வரக் கூடியவர்களைக் கூட அதில் கவனம் செலுத்தத் தூண்டுகிறார்கள்.

டவர் கண்காட்சியில் டெலிபோனைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல் பாஸ்டன்வாசி என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார்கள்.  பாஸ்டனில் இருக்கும்போதுதான் அவர் டெலிபோன் கருவிக்கான அடிப்படை சோதனையில் வெற்றி பெற்றார். யூ.கேவில் இருக்கும் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்தவரான பெல், கனடாவிலும் அமெரிக்காவிலும் வெவ்வேறு காலங்களில் வசித்தார். நான்கு நாடுகளுமே அவரைத் தம்மவர் என்று கொண்டாடுகின்றன.   

கிரஹாம் பெல்லின் அம்மா, மனைவி இருவருமே காது கேட்காதவர்கள். கிரஹாம் பெல்லின் தாத்தா காலத்திலிருந்தே குடும்பம் செவிப்புலன் இல்லாதவர்கள் தொடர்பான பேச்சு, ஒலி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. கிரஹாமின் அப்பா மெல்வில் இந்தத் துறையில் சாதனைகள் செய்தவர். செவி கேளாதோர் மற்றவர்கள் பேச்சை உதடு அசைவிலிருந்தே புரிந்துகொள்ளும் முறையை வடிவமைத்துக் கற்றுத்தந்தார். அவர் செல்லும் நாட்டுக்கெல்லாம் கிரஹாம் பெல்லையும் அழைத்துச் சென்றார். பாஸ்டன்  நகரில் செவி கேளாதோர் அமைப்பில் வேலை செய்ய தனக்குக் கிடைத்த வாய்ப்பை மகனுக்குக் கொடுக்கச் சொன்னார். அப்படித்தான் கிரஹாம் பாஸ்டன்வாசியானார். பாஸ்டனில் இருந்த அறிவுச் சூழல் கிரஹாம் பெல்லைத் தன் சோதனைகளில் தீவிரமாக ஈடுபட தூண்டியது. உலகப் புகழ் பெற்ற செவி கேளா வாய் பேசா அறிஞரான ஹெலன் கெல்லர், கிரஹாம் பெல்லின் மாணவியாக இருந்தவர்.

கம்பி வழியே மின் குறியீடுகள் மூலம் தந்தி அனுப்புவது போல, ஒலியையும் அனுப்ப முடியுமா என்பதே கிரஹாம் பெல் செய்துவந்த சோதனை. இதே சோதனையில் எலிஷா கிரே என்பவரும் ஈடுபட்டிருந்தார். ஏறத்தாழ ஒரே சமயத்தில் இருவரும் வெவ்வேறு வழிகளைக்  கண்டுபிடித்துவிட்டனர். எலிஷா கிரேவின் முறை திரவக் கடத்தியைப் பயன்படுத்தி மின் அலைகளை வேறுபடுத்துவதாகும். கிரஹாம் பெல் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தினார்.

உரிமை பதிவு செய்யும் அலுவலகத்தில் பிப்ரவரி 14, 1876 அன்று இருவரும் விண்ணப்பங்களைக் கொடுத்தனர். யார் முதலில் கொடுத்தார் என்பது இன்றுவரை சர்ச்சிக்கப்படுகிறது. பேடண்ட் உரிமை கிரஹாம் பெல்லுக்கே கிடைத்தது. பெல் மிகப் பெரிய  கண்டுபிடிப்பாளர் என்பதில் சந்தேகமே இல்லை. காந்த அலைகள் மீது ஒலியைப் பதிவு செய்யும் சோதனையில் அவர் ஈடுபட்டார். ஆனால் தொடரவில்லை. அதே கோட்பாட்டில்தான் பின்னாளில் டேப், சி.டி. டி.விடி குறுந்தகடு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. மீதேனை எரிபொருளாகப் பயன்படுத்துவது பெல்லின் அணுகுமுறை.  தாவரங்களிலிருந்தும் மனிதக் கழிவிலிருந்தும் மீதேனை எடுத்து எரிபொருளாக்கலாம் என்று பெல் செய்து காட்டினார். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.

பெல்லின் கண்டுபிடிப்புகள் பாஸ்டன் சோதனைக் கூடங்களில் நடந்தன என்பதால் பாஸ்டன் பெருமையடைவது நியாயம்தான். ஆனால் ஒரு பிரபலமோ ஒரு சாதனையோ சின்ன அளவில் தங்களுடன் தங்கள் ஊருடன் தொடர்புகொண்டிருந்தாலும், அதை பெரிதாக்கிக் காட்டி பெருமைப்படுவது மனித இயல்பு. விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் சொந்த ஊர் டெய்ட்டன், ஒஹையோ மாநிலம். ஆனால் விமானத்தை ஓட்டிக் காட்டிய இடம் கிட்டி ஹாக், வடக்குக் கரோலினா மாநிலம், இரு மாநிலங்களும் "விமானம் கண்டுபிடித்தவர் எங்க ஆளு' என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

அதே போல பாஸ்டன் டவர் கண்காட்சியில் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்தாக (அனெஸ்தீஷியாவாக) ஈதரை உபயோகப்படுத்தியது முதலில் எங்க ஊரில்தான் என்ற பெருமை சொல்லப்பட்டிருந்தது. இதுவும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். பாஸ்டனை சேர்ந்த வில்லியம் மார்ட்டன் எனபவர் பல் வைத்தியர்களிடம் உதவியாளராக இருந்தார். இவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. திருமணத்துக்குப் பின் மருத்துவம் படித்தாகவேண்டும் என்று பெண் வீட்டார் வற்புறுத்தியதால் ஹார்வர்ட் மெடிகல் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் படிப்பை முடிக்கவில்லை.  

ஒரு நோயாளிக்கு பல் பிடுங்கும்போது ஈதர் கொடுத்தர். அது வலி தெரியாமல் இருக்கச் செய்ததைக் கண்டுபிடித்தார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட  பாஸ்டன் பொது மருத்துவமனை சர்ஜன் ஜான் காலின்ஸ் வாரன் என்பவர் மார்ட்டனை அழைத்து தன் நோயாளிக்கு ஈதர் கொடுக்கச் சொல்லி, நோயாளி எட்வர்ட் கில்பர்ட் அபாட்டின் கழுத்தில் இருந்த கட்டியை அகற்றினார். இது நடந்தது 1846 அக்டோபர் 16ம் நாள்.

வலி தெரியாமல் இருக்கத் தான் கொடுத்த ஈதருக்கு  லெதியான் என்று வேறு பெயர் சூட்டி மார்ட்டன் ஒரு பேட்டண்ட் உரிமை வாங்கினார். ஆனால் இதர மருத்துவர்களுக்கெல்லாம் லெதியான் என்று எதுவும் கிடையாது என்பது தெரியும். அவர்கள் ஈதரைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். மார்ட்டன் தன் பேட்டண்ட் உரிமைக்காகவும் தான்தான் ஈதரை முதலில் மயக்க மருந்தாகப் பயன்படுத்திய பெருமைக்குரியவன் என்று ஸ்தாபிக்கவும் கடைசி வரை போராடிக் கொண்டே இருந்தார். ஆனால் ஜார்ஜியாவைச் சேர்ந்த மருத்துவர் கிராஃபோர்ட் லாங் 1846க்கு முன்பிலிருந்தே ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் அதை விளம்பரப்படுத்தவில்லை.  

மார்ட்டனை கெüரவிக்கவேண்டுமென்று பாஸ்டனில் சிலர் கமிட்டி அமைத்து முயற்சி செய்தார்கள். அதெல்லாம் வெற்றி பெறவில்லை. மார்ட்டன் முழுக்க மோசடி ஆசாமியும் இல்லை. ஒரு யுத்தத்தில் 2000 சிப்பாய்களுக்கு ஈதர் கொடுத்து ஆபரேஷனுக்கு உதவியிருக்கிறார். பாஸ்டன் பூங்காவில் அனெஸ்தீஷியாவைக் கண்டுபிடித்தவர் சிலை என்று ஒரு மருத்துவர் சிலையும் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சிலைக்குப் பெயர் கிடையாது. ஈதர் நினைவுச் சின்னம் என்று அதற்குப் பெயர். நம்ம ஊர் ஆள் என்று ஒருத்தரைக் கொண்டாடியும் கொண்டாட முடியாத நிலைமை இது.  

பாஸ்டனில் நான் பார்த்த வேறு ஒரு முக்கியமான நினைவுச் சின்னம் நம்ம ஊர் ஆள் என்று சொல்ல முடியாத யூதர்களுக்கானது. அமெரிக்காவில் வந்தேறியவர்களில் யூதர்கள் முக்கியமானவர்கள். அங்கு யூதர்களின் அரசியல், சமூக செல்வாக்கு மிகப் பெரியது. பல சுற்றுலா இடங்களில் யூதர்கள் ஹிட்லரால் அழிக்கப்பட்டதை நினைவுபடுத்தும் குறிப்புகள் ஏதேனும் ஒரு வடிவத்தில் இடம் பெறுகின்றன.  

பாஸ்டனில் இருக்கும் நினைவுச் சின்னம் சதுர வடிவிலான ஆறு கண்ணாடி கோபுரங்கள். ஆறு என்பது அழிக்கப்பட்ட ஆறு மில்லியன் யூதர்களைக் குறிக்கும். ஆறு சித்ரவதை முகாம்கள் ஹிட்லரால் நடத்தப்பட்டன. இந்தக் கொடுமைகள் ஆறு வருடங்கள் நடந்தன. கோபுரங்களில் பல்வேறு எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தரையில் பாதை நெடுக ஹிட்லரின் கொடுமைகள் பற்றிய குறிப்புகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

யூதர்களை,கறுப்பினத்தவரை வெறுக்கும், வெள்ளையர்களே மேன்மையானவர்கள் என்ற நிற,இன வெறி உடைய குழுக்களும் அமெரிக்காவில் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவரான லியோ ஃபெல்ட்டன், தன் சிநேகிதி எரிக்காவுடன் சேர்ந்து பாஸ்டன் யூத நினைவுச் சின்னத்தை 2005ல் குண்டு வைத்துத் தகர்க்க திட்டமிட்டான். ஒரு கடையில் கள்ள டாலர் நோட்டைக் கொடுத்து மாற்ற முயற்சித்தபோது இருவரும் போலீசிடம் மாட்டிக் கொண்டார்கள். லியோவுக்கு 26 வருடம் சிறை தண்டனை தரப்பட்டது. எரிக்காவுக்கு வெறும் 57 மாதங்கள்தான். அவள் மனம் மாறி தன் நிறவெறிக் கருத்துகளுக்கு வருத்தப்படுவதாக அறிவித்துவிட்டாள். கருவுற்றிருந்த அவள் குழந்தை பெறுவதற்காக சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டாள்.

யூத நினைவுச் சின்னத்திலிருந்து நடக்கும் தொலைவில்தான் இருக்கிறது பாஸ்டன் துறைமுகம். பிரபலமான டீ பார்ட்டி கலகம் நடந்த துறைமுகம். நான் துறைமுகத்தை வெளியிலிருந்து பார்த்தேன். டீ பார்ட்டி கலகம் நடந்தது 1773ல். ஆனால் அதைக் குறியீடாகக் கொண்டு இப்போது டீ பார்ட்டி இயக்கம் அமெரிக்காவில் நடந்து வருகிறது. ஒபாமாவுக்குத் தலைவலியாக இருக்கும் இந்த இயக்கம் என்ன சொல்கிறது?  

(தொடரும்)  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.