ஆப்பிள் தேசம்-7: நயாகராவின் கதை!
நயாகரா பற்றி 1986-ல் எடுக்கப்பட்ட 45 நிமிட ஐமாக்ஸ் படத்தில், நயாகரா அருவியின் ஒரு பகுதிக்கு ஏன் "மெயிட் ஆஃப் தி மிஸ்ட்' என்ற பெயர் சூட்டப்பட்டது என்பதற்கான கர்ண பரம்பரைக் கதை காட்சிப்படுத்தப்பட்டிருக்


நயாகரா பற்றி 1986-ல் எடுக்கப்பட்ட 45 நிமிட ஐமாக்ஸ் படத்தில், நயாகரா அருவியின் ஒரு பகுதிக்கு ஏன் "மெயிட் ஆஃப் தி மிஸ்ட்' என்ற பெயர் சூட்டப்பட்டது என்பதற்கான கர்ண பரம்பரைக் கதை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இளம் கணவன் இறந்த சோகத்தைத் தாங்க முடியாத ஆதிவாசிப் பெண் தன்னந்தனியே படகில் நயாகரா ஆற்றில் சென்று அருவியில் விழப் போகும் தருணத்தில் அவளை இடி தேவதையான ஹெனோ காப்பாற்றுகிறது. மெல்ல மனதின் சோகம் மறைந்ததும், அவள் ஹெனோவின் கடைசி மகனைக் காதலித்து மணக்கிறாள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையும் இடி தேவதையாகிறது. ஆதிவாசிப் பெண்ணின் கிராம மக்களை ஒரு மலைப்பாம்பு கொன்று சாப்பிடப் போகும் தகவலை இடி தேவதை அவளுக்குத் தெரிவிக்கிறது. பாம்பு வரும் முன்பே அவள் சென்று கிராமவாசிகளைக் காப்பாற்றி அழைத்துப் போய்விடுகிறாள். ஏமாந்த பாம்பு சீறும்போது ஹெனோ அதைக் கொல்கிறது. இறந்த பாம்போ நயாகரா ஆற்றை அடைத்துக் கொண்டு குதிரை லாட வடிவில் ஒரு புதிய அருவியை உருவாக்குகிறது. நயாகரா ஆற்றில் ஆபத்தில் சிக்குவோரைக் காக்க எப்போதும் இடி தேவதையும் ஆதிவாசிப் பெண்ணும் அங்கே இருந்துகொண்டிருப்பதாக ஒரு பழைய நம்பிக்கை உள்ளது. பனிச் சாரல் போல் அருவி தெறிப்பதால், ஆதிவாசிப்பெண்ணுக்குப் பனிப் பெண் என்று பெயர்.
படத்தில் இந்தக் கதையை காட்சிப்படுத்தியிருந்தார்கள். நயாகரா அருவி மீது பல சாகசங்களைச் செய்ய முயன்று வென்ற, தோற்றவர்களின் சில உண்மைக் கதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுமார் 180 வருடங்களுக்கு முன்னால் சாம் பிட்ச் என்பவர் அருவியின் உச்சியில் இருந்து கீழே குதித்து உயிரோடு தப்பினார். அதன் பின்னர் சுமார் 15 பேர் குதிப்பதும் அருவியின் குறுக்கே கம்பியில் நடப்பது, பீப்பாய்க்குள் இருந்துகொண்டு அருவியில் உருண்டு வருவது என்று பலவிதமாக சாகசங்கள் செய்திருக்கிறார்கள். பள்ளி ஆசிரியையான ஆனி எட்சன் டெய்லர் என்பவர் பீப்பாய்க்குள் தன்னை அடைத்துக் கொண்டு அருவியில் உருண்டார். லேசான காயங்களுடன் தப்பினார். தான் பீப்பாயில் உருள்வதற்கு முன்னால், தன் பூனைக்குட்டியை அதில் வைத்து முதலில் உருட்டிப் பார்த்தார். பூனை பத்திரமாக வந்ததும் ஆனி பீப்பாயில் சென்றார் இப்படி ஏதாவது செய்து புகழடைந்தால், தன் வறுமை போய்விடும் என்று ஆனி நினைத்தார். ஆனால் அவர் கடைசியில் வறுமையில்தான் செத்தார்.
கம்பியில் நடக்கும் சாகசத்தைப் பல பேர் செய்திருக்கிறார்கள். ஸ்டீவ் ட்ராட்டர் என்பவர்தான் அருவியில் பீப்பாயில் உருண்டவர்களிலேயே இளைஞர். வயது 22. இவர் 1985-ல் ஒரு முறையும் மறுபடியும் 1995-ல் ஒரு முறையும் இதே சாதனையைச் செய்தவர். இரண்டு பேர் ஒரே பீப்பாய்க்குள் இருந்துகொண்டு உருள்வதை பீட்டர் டிபர்னாடியும் ஜேம்ஸ் பெட்கோவிச்சும் 1989-ல் செய்தார்கள். இவர்கள் ஃபைபர்கிளாஸ் பீப்பாய்க்குள் இசை கேட்க ரேடியோவும், படம் பிடிக்க கேமராவும் பொருத்திக் கொண்டு சென்றார்கள். நயாகரா அருவியில் இப்படிப்பட்ட சாகசங்கள் செய்வது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யாரையும் தடுப்பதில்லை. சாகசத்தில் தோற்றால் மரணமே தண்டனை. ஜெயித்து வந்தால், அமெரிக்க, கனடா அரசுகள் தடையை மீறியதற்காக சில ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கின்றன. உயிர் தப்பினாலும் நிறைய காயங்களுடனும் அபராதமும் செலுத்தும் கொடுமை சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
நயாகரா தகவல் மையத்தில் நான் படம் பார்க்கச் சென்றிருந்த சமயம், திடீரென தீ எச்சரிக்கை மணி ஒலித்தது. அடுத்த ஐந்தே நிமிடங்களில் நூற்றுக் கணக்கானவர்கள் இருந்த முழு அரங்கையும் மைய வரவேற்புக் கூடத்தையும் காலி செய்துவிட்டார்கள். பதற்றம் இல்லாமல், தள்ளு முள்ளு ஏற்படாமல், அதே சமயம் விரைவாகவும் ஒழுங்காகவும் காலி செய்த நேர்த்தி அசர வைத்தது. மக்களின் ஒத்துழைப்பு அபாரமாக இருந்தது. அடுத்த அரை மணி நேரத்துக்குள் மின்கசிவால் தீ ஏற்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு மையம் சகஜமாக இயங்க ஆரம்பித்தது.
நயாகராவிலிருந்து புறப்படும்போது, திரும்ப இன்னொரு முறை படகிலும் படிக்கட்டிலும் அருவியிடம் போகவேண்டுமென்று தோன்றியது. நயாகராவுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் படகில் அருவியிடம் சென்றவர்கள் குறைவு. இந்தியாவிலிருந்து ஒரே ஒரு பிரதமர் ஜவஹர்லால் நேரு, அமெரிக்க ஜனாதிபதிகள் ரூஸ்வெல்ட், ஜிம்மி கார்ட்டர், சோவியத் பிரதமர் கோசிஜின், அதிபர் கார்பசேவ், நடிகை மர்லின் மன்றோ, இளவரசி டயானா எனச் சிலர்தான் படகில் போயிருக்கிறார்கள்.
நயாகரா அருவி பார்ப்பதற்கான அருவி மட்டுமல்ல. கேட்பதற்கான அருவியும் கூட. படகிலும் படிக்கட்டிலும் அதன் அருகில் செல்லும்போது நெருக்கமாகக் கேட்கும் பிரும்மாண்டமான ஓசை ஓர் இசை. அங்கிருந்து விலகி விலகி, பார்வை கோபுரத்திலிருந்தும், பூங்காவிலிருந்தும் கேட்கும்போது சற்றே தொலைவில் கேட்கும் ஓசை இன்னொரு இசை. கண்களை மூடிக் கொண்டு அருவியின் ஒலியைக் கேட்கும்போது, சக சுற்றுலா பயணிகள் சள சளவென்று பேசுவது நிச்சயம் எரிச்சலாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு அருவிக்கும் ஓசை உண்டு. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. நயாகராவின் ஓசை ஒரே சமயத்தில் பிரம்மாண்டமானதாகவும் அச்சுறுத்தாமல் அமைதி தருவதாகவும் இருக்கிறது.
நயாகராவிலிருந்து அருளின் லூயி செண்ட்டர் வீட்டுக்குத் திரும்பியதும் மறு நாள் அமிஷ் கிராமத்துக்குச் செல்வதாக திட்டமிட்டிருந்தோம். அமிஷ் யார் என்பதை முதலில் பார்ப்போம். எனக்கு அமிஷ் பற்றி முதலில் தெரியவந்தது நான்காண்டுகளுக்கு முன்னர்தான். அருள்தான் அப்போது அக்டோபர் 2006-ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை எனக்கு சுட்டிக் காட்டியிருந்தார். அதைப் பற்றி அப்போது என் வாராந்தர பத்தியான ஓ பக்கங்களிலும் எழுதியிருந்தேன். இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்ச்சி அது.
பென்சில்வேனியா மாநிலத்தில், நிக்கல்மைன்ஸ் என்ற அமிஷ் கிராமத்துக்குப் பக்கத்து ஊரில் வசிக்கும் பால்வண்டி டிரைவரான சார்லஸ் கார்ல் ராபர்ட்ஸ் என்பவன், கிராமப் பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் பத்து சிறுமிகளைப் பிணைக்கைதிகளாக்கினான். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். பள்ளிக்கூடம் என்பது ஒரே ஒரு அறைதான். அறைக்குள் தாழிட்டுக் கொண்ட ராபர்ட்ஸ், அங்கிருந்து தன் மனைவியுடன் போனிலும் பேசினான். சிறுமிகளைப் பாலியல் வன்முறை செய்யப்போவதாக மிரட்டினான். (ஆனால் செய்யவில்லை). பள்ளி ஆசிரியை தகவல் சொன்னதும், போலீஸ் வந்தது. ராபர்ட்ûஸ வெளியே வரும்படி எச்சரித்தது. அவன் அதைப் பொருட்படுத்தாமல், பத்து சிறுமிகளை ( 6 முதல் 13 வயது வரை) பின்னந்தலையில் சுட்டான். ஐந்து பேர் இறந்தார்கள். ராபர்ட்ஸ் தன்னையும் சுட்டுக் கொண்டு செத்தான்.
கொலை செய்ய வருவதற்கு முன்பு ராபர்ட்ஸ் தன் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போய்விட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறான். வீட்டில் தற்கொலைக்கடிதங்களும் வைத்துவிட்டு வந்திருக்கிறான். பல வருடங்களுக்கு முன்னர் இரு குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்தது தன்னை உறுத்திக் கொண்டிருப்பதாகக் கடிதத்தில் சொல்லியிருந்தான். ஆனால் ஏன் அமிஷ் சிறுமிகளைக் கொன்றான் என்று புரியவில்லை.
இந்தக் கொடூரமான நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த அமிஷ் சிறுமிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட அந்த கிராமவாசிகள் என்ன செய்தார்கள் என்பதுதான் முக்கியம்.
ராபர்ட்ûஸ மன்னிப்பதாகச் சொன்னார்கள். அவனுடைய இறுதிச்சடங்கில் வந்து கலந்துகொள்ளலாமா என்று அவன் மனைவியிடம் கேட்டு அனுப்பினார்கள். நிராதரவாகிவிட்ட அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் உதவுவதற்காக நிதி திரட்டித்தந்தார்கள். ராபர்ட்ஸின் இறுதிச்சடங்கில் 40 அமிஷ்கள் பங்கேற்றார்கள். வன்முறையும் பதிலுக்குப் பதிலாக செய்யும் வன்முறையும் எதையும் தீர்க்காது. அன்பு ஒன்றுதான் தீர்வு என்பதே அமிஷ்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஜெர்மனியில் உதயமாகி அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த ஒரு மைனாரிட்டி கிறித்துவப் பிரிவின் பெயர்தான் அமிஷ். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த இந்த அமிஷ் கிறித்துவர்களின் மதக் கோட்பாடு - எளிமை (ஜெர்மன் மொழியில் hochmut என்ற சொல்லுக்குக் கர்வம் பெருமை, படாடோபம் என்றெல்லாம் அர்த்தம். இதற்கு எதிராக demut என் கிற அடக் கத் தை யும் gelassenheit என் கிற சர ணா க தியையும் பின்பற்றுவதுதான் அமிஷ் கிறித்துவம். எல்லாமே கடவுள் விருப்பப்படிதான் நடக்க வேண்டும். அதை நாம் மீறியவர்கள் அல்ல என்பதுதான் இவர்களின் சரணாகதிக் கோட்பாடு.
மின்சாரத்தை உபயோகிக்கமாட்டோம். கார், பஸ், டெலிபோன், டெலிவிஷன் எதுவும் வேண்டாம். பழைய குதிரை வண்டியே போதும். ஆடம்பர உடைகள் கூடாது. அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி உதவியும் பெற மாட்டோம். இயற்கைக்கு எதிராகப் போராடும் இன்ஷ்யூரன்ஸ் கூடத்தேவையில்லை. ராணுவத்திலோ, போலீசிலோ, அரசு வேலைகளிலோ சேரமாட்டோம். விவசாயமும் கைவினைப்பொருட்களும் எங்களுக்குப் போதும் என்று பிடிவாதமாக சொல்லிக் கொண்டு இன்றைய அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்கள் அமிஷ்கள். அமெரிக்காவில் 21 மாநிலங்களில் மொத்தமாக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அமிஷ்கள் வாழ்கிறார்கள்.
மனிதர்கள் ஒருவரோடொருவர் போட்டியிடக் கூடாது என்பதால் இவர்கள் குழந்தைகளை ரெகுலர் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. கல்வி என்பதே ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரை சார்ந்தும் ஒத்துழைத்தும் வாழ வேண்டும் என்பதைக் கற்றுத்தருவதுதான். எனவே இவர்கள் தங்களுக்கென்றே நடத்தும் பள்ளிகளில் குழந்தைகளுக்குப் போட்டிகள் கிடையாது. ஒவ்வொரு குழுவும் தன் முந்தைய சாதனையை தானே முறியடிக்கத்தான் பாடுபடும். இன்னொரு குழுவுடன் போட்டியிடாது. ஏட்டுப் படிப்புடன் கைத்தொழிலும் கட்டாயம்.
எல்லாருமே கிராம வாழ்க்கைதான். பின்னல் வேலைப்பாடுகள், மெத்தை நெய்வது, விவசாயம் மட்டுமே தொழில்கள். நவீன தொழில்நுட்பங்கள் கிடையாது. டிராக்டர் இல்லை. ஏர் பூட்டிய குதிரைகள்தான் உழும். திருமணத்திலோ மோதிரம் கூட மாற்றமாட்டார்கள். காரணம் நகை ஆடம்பரமானது. உடைகள் மங்கலான வண்ணங்களில்தான் இருக்கும். பட்டன்கள் கூட ஆடம்பரம். எனவே நாடாக்கள்தான். ஆண்கள் மீசை வைப்பது இல்லை. அது ராணுவத்தொழிலின் அடையாளம் என்பதால் குடும்பக் கட்டுப்பாடு கடவுளுக்கு விரோதமானது... குழந்தைகளுக்கு மத ஞானஸ்நானம் கூடக் கட்டாயமில்லை. பெரியவர்களான பின்னர் விருப்பப்படி செய்துகொள்ளலாம். மதகுரு கிராமவாசிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கிராமத்தில் யாரேனும் தவறு செய்தால் அவரிடம் இரு பெரியவர்கள் முதலில் அறிவுரை சொல்வார்கள். அடுத்த கட்டத்தில், ஊர் முன்னால் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். திருந்தாவிட்டால் ஊரிலிருந்து அவர்களை விலக்கி வைத்துவிடுவதுதான் அதிகபட்ச தண்டனை. ஆஸ்கர் விருது பெற்ற விட்னஸ் படம் அமிஷ்களின் வாழ்க்கை பற்றியது.
இப்படிப்பட்ட அமிஷ்களைக் காண மிகுந்த ஆர்வத்தோடு இருந்தேன்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...