இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம்-8: ஹிப்பிகளின் யுத்த எதிர்ப்பு!

நயாகராவிலிருந்து திரும்பிய மறு நாள் காலை ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் ஓர் அமிஷ் கிராமத்துக்குச் செல்வதென்று நானும் அருளும் முடிவு செய்திருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அருள் வீட்டிலிருந்து சுமார் 9 மண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:19 pm

ஞாநி

நயாகராவிலிருந்து திரும்பிய மறு நாள் காலை ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் ஓர் அமிஷ் கிராமத்துக்குச் செல்வதென்று நானும் அருளும் முடிவு செய்திருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அருள் வீட்டிலிருந்து சுமார் 9 மணி நேரத் தொலைவில் இருக்கும் நார்த் கரோலினா மாநிலத்திலிருந்து பல வருடங்களாக நான் சந்தித்திராத என் சகோதர முறை உறவினர் சிவா, காரில் புறப்பட்டு என்னைக் காண அருள் வீட்டுக்கு வரப் போவதாகத் தெரிவித்தார். சிவாவை சந்தித்தால் அமிஷ் கிராமத்துக்குச் செல்ல முடியாது.

அடுத்த 15 நாட்களில் வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ஓர் அமிஷ் கிராமத்துக்குப் போய்க் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அருள் வருத்தப்பட்டார். உறவினர்களை சந்திப்பதை விட அமிஷ் கிராமத்துக்குச் செல்லவே நான் முடிவெடுப்பேன் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். பொதுவாக நானும் அப்படி முடிவெடுக்கக்கூடியவன்தான்.

ஆனால் ஓரிரு தினங்கள் முன்னர்தான் சிகாகோவிலிருந்து ஒரு பழைய சிநேகிதி என்னைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். ஆனால் நான் எந்த தினத்தில் சிகாகோ வருவது, எப்படி வருவது என்பதைப் பற்றியெல்லாம் அவரால் தெளிவாகத் தெரிவிக்க முடியவில்லை. ஒவ்வொரு போன் காலிலும் அவர் சொன்ன திட்டம் மாறிக் கொண்டிருந்தது. இது அமெரிக்காவின் பிற இடங்களுக்கு நான் செல்வதையும் முடிவு செய்ய முடியாமல் குழப்பிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அருள் சொன்னார். உங்கள் நண்பர் உங்களைப் பார்க்க விரும்பினால், அவர் புறப்பட்டு இங்கே வந்திருக்கலாம். சில மணி நேரப் பயணம்தான். இப்படிக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றார்.

அதே ரீதியில்தான் நானும் யோசித்தேன். நான் நார்த் கரோலினா செல்லும் வாய்ப்பே இல்லை என்ற சூழலில், 9 மணி நேரப் பயணம் செய்து தான் வருவதாகத் தெரிவித்த சிவாவுக்கு முன்னுரிமை தர முடிவு செய்தேன். ஃபிலடெல்பியாவிலும் அமிஷ் கிராமத்தைப் பார்க்கலாம். அருளின் வருத்தத்தை நான் புரிந்துகொண்ட போதிலும் வேறு வழியில்லை. அவருடன் ஓர் அமிஷ் கிராமத்தைச் சுற்றிப் பார்ப்பதென்பது நிச்சயம் வேறு அனுபவமாகத்தான் இருந்திருக்கும் என்பதைப் பின்னர் உணர்ந்தேன்.

சிவா என்னைவிட சில வருடங்கள் மூத்தவர். சுமார் 30, 35 வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா சென்று குடியேறிய பொறியாளர். அவருடன் இப்போது அமெரிக்காவில் தங்கிப் படித்து முடித்திருக்கும் என் சகோதரி மகன் ஸ்ரீராமும் வந்திருந்தான். அமெரிக்காவில் தாக்குப் பிடிக்கக் கஷ்டப்பட்டு ஹோம் சிக்காகிவிடக் கூடிய வாய்ப்புள்ளவன் என்று நான் கருதிய ஸ்ரீராம் நேர்மாறாக இருந்தான்.

உறவினர்களையோ பழைய நண்பர்களையோ நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கும்போது, உண்மையில் உரையாட எதுவும் இருப்பதில்லை. பழைய நினைவுகளின் அடிப்படையில் மட்டுமே உறவாடுகிறோம். கால ஓட்டத்தில் பலரின் வாழ்க்கை முறைகளும், மதிப்பீடுகளும் வெவ்வேறானவையாக ஆகிவிடுகின்றன.

என் பள்ளிக் காலத்தில் கோடை விடுமுறைக்கு வேலூரில் இருக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவேன். கோடையில் ஊட்டிக்குப் போக முடியாவிட்டாலும், வேலூர் செல்வதென்பது எப்படிப்பட்ட கொடுமை என்பது வேலூர்க்காரர்களுக்கு மட்டுமே புரியும். அப்போது செல்லும் வீடுகளில் சிவாவின் வீடும் ஒன்று. அவருடைய அப்பா உலகம் சுற்றும் வாலிபனாக இருந்தவர். மர்ச்சண்ட் நேவியில் பணி புரிந்தபடி எப்போதும் கடல் பயணங்களிலேயே இருந்தவர். சிவா ஐ.ஐ.டி முடித்துவிட்டு அமெரிக்கா போய்விட்டார். அதன் பின் என் தொடர்புகள் மிகக் குறைவு.

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை அமெரிக்கப் பள்ளிக் கல்வி முறை பற்றி அவரிடம் விவரங்கள் கேட்டிருந்தேன். தன் மகளின் ஆரம்பப் பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்தையும் இணைத்து அனுப்பியிருந்தார்.

இப்போது சந்தித்தபோது வழக்கம் போல பழைய நினைவுகள் தவிர புதிதாகப் பகிர, பெரிய விஷயம் எதுவும் இல்லை. ஆனால் அவர் தெரிவித்த ஒரு செய்தி எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

எந்தப் பெண்ணின் பள்ளி நோட்டை எனக்கு அனுப்பியிருந்தாரோ அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. மணமகன் அமெரிக்கக் கிறித்துவர். சாதி,மதம், மொழி, இனம் இவற்றையெல்லாம் கடப்பது அமெரிக்காவுக்குப் போய்விட்ட எல்லா இந்தியர்களுக்கும் சாத்தியமில்லை. சிலருக்கே சாத்தியப்படுகிறது. இது இப்படி ஆகிவிடக் கூடாது என்ற கவலையினாலேயே இந்தியாவுக்குக் குழந்தைகளுடன் திரும்பி விட நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

தொடர்ந்து அமெரிக்காவில் நான் சந்தித்த பல இந்தியர்களிடமும் இந்த விஷயங்களை விவாதிக்க முடிந்தது. அவற்றைக் கடைசியில் அலசுவோம்.

அடுத்த நாள் பாஸ்டனுக்குப் புறப்பட்டேன். இதுவரை அமெரிக்காவில் என்னை கவனித்துக் கொண்ட அருள் எனக்கு ஏற்கனவே நன்கு பழக்கமானவர். ஆனால் அருள் வீட்டிலிருந்து புறப்பட்டபின் இந்தியா திரும்பும்வரை என்னை கவனித்துக் கொண்டவர்கள் பலரும் இப்போதுதான் எனக்கு முதல்முறையாக அறிமுகம் ஆனவர்கள். எனினும் ஒவ்வொருவரும் என்னோடு பல காலமாக உறவாடியவர்கள் போல பழகினார்கள்.

ரயிலில் வெளியூருக்கு நீண்ட பயணம் போகும்போது, கட்டு சாத மூட்டை கட்டிக் கொண்டு போவது போல, பாஸ்டனுக்குப் புறப்பட்ட எனக்கு, வழிச் சாப்பாட்டுக்காக தயிர் சாதம் கட்டிக் கொடுத்து அனுப்பினார் அருளின் மனைவி சுதா.

கொலம்பசிலிருந்து சிகாகோ போய் அங்கிருந்து விமானம் மாறி பாஸ்ட்டன் செல்ல ஏற்பாடு செய்திருந்தார் பாஸ்ட்டன் பாலா. இந்த விமானங்கள் எல்லாம் நிஜமாகவே குட்டி விமானங்கள். ஒரு பக்கம் ஒற்றை சீட்டு. இன்னொரு பக்கம் இரட்டை சீட்டு என்று பஸ் மாதிரி இருந்தன. ஒரே ஒரு ஏர் ஹோஸ்ட்டஸ் எல்லாருக்கும் ஜூஸýம் வேர்க்கடலையும் கொடுத்தார்.

அமெரிக்காவில் உள்நாட்டு விமானப் பயணங்களில் பெரிய லக்கேஜ்கள் எடுத்துச் செல்லத் தனியே கட்டணம் செலுத்தியாக வேண்டும். என் லக்கேஜ் ஒரே ஒரு மீடியம் பெட்டிதான் என்பதால் எனக்குப் பிரச்னை இல்லை. திரும்பவும் கொலம்பஸ் வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு செல்வேனா அல்லது நியூயார்க்கிலிருந்தே சென்று விடுவேனா என்பது நிச்சயமாகாத நிலையில் , அந்த ஒற்றைப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அருள் குடும்பத்திடம் விடைபெற்றேன்.

விமானத்தின் வாசற்கதவருகே படிக்கட்டில் நின்றுகொண்டு, கீழே தரையில் விமானத்தின் அடிவயிற்றில் ஏற்றப்படும் அவரவர் பெட்டிகளை அடையாளம் காட்டும்படி பயணிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது வழக்கமாக செய்யப்படுவதில்லை. எப்போதாவது மேற்கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடு.

அன்றைக்கு அந்த ஊருக்கு ஒபாமா வருவதால் இத்தனை கெடுபிடிகள் செய்கிறார்கள் என்றார் ஓர் அமெரிக்கப்பயணி. உண்மையில் அன்றைக்கு அங்கே ஒபாமா வருவது வெளியில் பெரிதாகத் தெரிந்திருக்கவே இல்லை. அவர் பேசச் செல்லும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் அநேகமாகத் தெரிந்திருக்கும்.

காலை செய்தித்தாட்களிலும், இன்று கருணாநிதி திருச்சி வருகை என்கிற மாதிரி எட்டு காலம் தலைப்பு செய்திகள் இல்லை. இன்னும் ஆறு மாதம் கழித்து இயங்கப்போகும், முடிவடையாத கலெக்டர் அலுவலகக் கட்டடத்தை த் திறந்து வைப்பதற்காக கருணாநிதி அண்மையில் திருச்சிக்கு வந்தபோது, பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் விடுமுறை விட்டார்கள். அவ்வளவு போக்குவரத்து நெரிசலாம். கொலம்பசுக்கு ஒபாமா வந்தது, எனக்கு திருச்சியில் நினைவுக்கு வந்தது.

கொலம்பசிலிருந்து விமானத்தில் 11.45க்கு ஏறி சிகாகோ விமான நிலையத்துக்கு 11.45க்கு வந்துவிட்டேன். இரண்டு ஊர்களுக்கும் நேர வித்யாசம் ஒரு மணி நேரம்

சிகாகோ விமான நிலையத்தில் அடுத்த ஒரு மணி நேரம் பாஸ்ட்டன் செல்லும் விமானத்துக்காகக் காத்திருந்ததுதான் அமெரிக்கப் பயணத்திலேயே எனக்கு மிகவும் கொடுமையான அனுபவம்.

துபை விமான நிலையத்தில் ஏழெட்டு மணி நேரமெல்லாம் போகும்போதும் வரும்போதும் காத்திருந்தது பெரும் பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் சிகாகோவில் காத்திருந்த ஒரே ஒரு மணி நேரம் ஒரு யுகமாகத்தோன்றியது.

காரணம், நான் சிகாகோ நகரத்துக்கு செல்ல விரும்பி அங்கே நுழைய முடியாமற் போய்விட்ட நிலைதான். எந்த நகரத்தை 29 வருடங்களாகப் பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேனோ, அதே நகரத்தின் விமான நிலையத்தில் உட்கார்ந்து தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை அங்கே சந்திக்க வேண்டுமென்று விரும்பிய சிநேகிதியும் அதே நேரத்தில் அதே நகரில் ஏதோ ஓர் அலுவலக த்தில் உட்கார்ந்து பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கூடும். தகவல் தொடர்பு, மனிதக் குளறுபடிகளினால் நான் சிகாகோவுக்குள் நுழையாமலே போக வேண்டியதாயிற்று.

சிகாகோவை நான் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் தோன்றிய ஆண்டு 1981. காரணம் வியட்நாம் யுத்தம், ஹிப்பிகள்....

என் முக்கியமான நாடகமான பலூன் உருவாக உந்துதலாக இருந்தது சிகாகோ நகரத்தில் 1968ல் ஹிப்பிகள் நடத்திய யுத்த எதிர்ப்புப் போராட்டம்தான். இப்போது கோபக்காரப் பெரியவனாக இருக்கும் நான் 1981ல் கோபக்கார இளைஞனாக , நானும் ஹிப்பிகள் போல நீண்ட முடி வைத்தவனாகத்தான் இருந்தேன்.

சிகாகோ நகரத்தின் கிராண்ட் பூங்காவில் ஹிப்பிகள் என்று சொல்லப்பட்ட அமைதி விரும்பிகள், வியட்நாம் யுத்தத்தைக் கண்டித்து நடத்திய சந்திப்பு, அமெரிக்க சரித்திரத்தில் மிக முக்கியமான நிகழ்வாயிற்று.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்வதற்கான மாநாட்டை சிகாகோவில் ஜனநாயகக்கட்சி நடத்திய 1968 ஆகஸ்ட்டில், ஹிப்பிகள் வியட்நாம் யுத்தத்துக்கு எதிராக, அமைதிப் பேரணிகள் சந்திப்புகள் நடத்த அனுமதி கேட்டார்கள். போலீஸ் அனுமதி மறுத்தது.

தடையை மீறி சுமார் 15 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்தார்கள். முழுக்க முழுக்க அமைதியான ஊர்வலம். பாடல்கள் பாடிக் கொண்டும் நடனம் ஆடிக் கொண்டும், யுத்தம் இல்லாமல் அமைதியைக் கொண்டாடுவோம் என்ற முழக்கங்களோடும் வந்த ஊர்வலத்தின் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது.

எட்டு பேர் பெரும் வன்முறைகளை செய்ய திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். இதுதான் சிகாகோ சதி வழக்கு. உண்மையில் அவர்கள் செய்த எதிர்ப்பென்பது, அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகன் இருக்கும் திசை நோக்கி மூத்திரம் பெய்வதுதான்

ஹிப்பிகள் என்றால் நீண்ட முடி வளர்த்துக் கொண்டு, போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என்பதாக ஒரு கருத்து மட்டுமே நம் நாட்டில் நிலவுகிறது. நீண்ட முடி வளர்க்காமலே போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரும் உலகத்தில் உண்டு.

அறுபதுகளில் உலகெங்கும், குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் இளைஞர்கள் யுத்தத்துக்கு எதிரான போராட்டங்களைச் செய்தார்கள். இசை, நடனம், இலக்கியம், கவிதை என்று மகிழ்ச்சியாக இல்லாமல் மனித குலம் யுத்தம் என்று அலைவதை எதிர்த்தார்கள்.

மேலை நாடுகளில் கட்டாய ராணுவ சேவை என்பது இன்றும் இருக்கிறது. இதை எதிர்த்த இளைஞர்கள்தான், ராணுவத்துக்காக முடியை மிலிட்டரி கட் செய்யமாட்டேன் என்று குறியீடாக எதிர்த்து, நீண்ட முடி வளர்க்கத் தொடங்கினார்கள். ஏதாவது சாக்கு சொல்லி, ராணுவ சேவையை டபாய்த்தவர்கள் ஏராளம். (பின்னால் ஜனாதிபதியான, பில் க்ளிண்ட்டனே அப்படிப்பட்ட ஒருவர்தான்.)

இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத யுத்த வெறி அரசுகள் போலீசைக் கொண்டு இப்படிப்பட்ட இளைஞர்களை ஒடுக்கின. சிகாகோவில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் ஒருவர் கறுப்பின உரிமை இயக்கமான கருஞ்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த பாபி சீல். சாட்சி சொன்னவர்களில் கவிஞர் கின்ஸ்பர்க், எழுத்தாளர் நார்மன் மெய்லர் எல்லாம் உண்டு.

அரசின் இந்த பொய் வழக்கைக் கோர்ட்டில் தங்கள் கிண்டலான பதில்களினால், ஒரு நையாண்டி நாடகமாகவே இந்த எட்டு பேரும் மாற்றினார்கள். கோர்ட்டில் நடந்ததை வைத்து பின்னர் பத்து திரைப் படங்கள் வந்திருக்கின்றன. மேடையிலும் டெலிவிஷனிலும் பல நாடகங்கள், ஆவணப் படங்கள் உருவாக்கப்பட்டன.

என்னையும் இந்த சிகாகோ சதி வழக்கு கவர்ந்தது. அதன் உந்துதலில் பலூன் நாடகத்தை எழுதினேன். அது என்ன பலூன் அதுவும் இங்கே நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.