ஆப்பிள் தேசம் - 9: நாடகத்துக்குக் கூட்டம் அதிகம்!
சிகாகோ சதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு பலூன் நாடகத்தை எழுத என்னைத் தூண்டியவர் எம்.ஜி.ஆர். அவர் ஆட்சிக்காலத்தில் 1981-ல் அடுத்தடுத்து பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. பெரிய கட்சிகள் பெரிதா


சிகாகோ சதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு பலூன் நாடகத்தை எழுத என்னைத் தூண்டியவர் எம்.ஜி.ஆர். அவர் ஆட்சிக்காலத்தில் 1981-ல் அடுத்தடுத்து பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. பெரிய கட்சிகள் பெரிதாக எதிர்ப்பைக் காட்டவில்லை. நானும் நண்பர்களும் குரல்கள் சமூக நல அமைப்பு என்ற பெயரில் ஒரு கன்ஸ்யூமர் இயக்கத்தைத் தொடங்கி பஸ் கட்டண உயர்வை எதிர்த்தோம். எதிர்ப்பு பேட்ஜுகளை அணிந்துகொண்டு பஸ்களில் சுற்றினோம்.
1981 ஜூன் 12-ம் நாள் சென்னை மெரீனா கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலையிலிருந்து அண்ணா சாலையில் அமெரிக்கன் சென்ட்டர் எதிரே அண்ணா மேம்பாலப் புல்வெளி வரை ஊர்வலம் செல்வதாக அறிவித்து காவல் துறை அனுமதியும் பெற்றோம். இப்போது இந்தப் பாதையில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கவே மாட்டார்கள்.
எங்கள் ஊர்வலத்தின் பெயர் பலூன் ஊர்வலம். பஸ் கட்டணம் ஏறிக் கொண்டே போனால் ஒவ்வொரு பிரஜையும் ஆளுக்கொரு பலூன் வைத்துக் கொண்டு அதில்தான் பயணம் செய்ய வேண்டிய நிலை வந்துவிடும் என்று நையாண்டியாக இந்த ஊர்வலத்தை நடத்தினோம். நகரின் முக்கிய பகுதிகளில் கையால் எழுதிய 100 சுவரொட்டிகளை ஒட்டினோம்.
உழைப்பாளர் சிலையருகே நாங்கள் பத்துப் பனிரெண்டு பேர் உட்கார்ந்து பலூன்களை ஊதிக் கொண்டிருந்தபோது இரண்டு லாரி நிறைய நூற்றுக் கணக்கான போலீசார் வந்தார்கள். ஓர் இன்ஸ்பெக்டர் என்னிடம் வந்து ஊர்வலத்துக்கு இன்னும் எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டார். வராத நண்பர்கள் பெயர்களை நினைவுபடுத்தி இன்னும் ஆறேழு பேர் வரவேண்டியிருக்கிறது என்று சொன்னேன். நாங்கள் 200 பேர் வந்திருக்கிறோமே என்றார் இன்ஸ்பெக்டர். எல்லாரையும் மஃப்டியில் எங்களுடன் வரச் சொல்லுங்கள் என்றேன். அவர் சிரித்துவிட்டுப் போய் 60 காவலர்களை மட்டும் வைத்துக் கொண்டு மீதி பேரை திருப்பியனுப்பிவிட்டார்.
முன்னால் 30 போலீஸ், பின்னால் 30 போலீசுடன், நாங்கள் 19 பேர் முகமூடிகள் அணிந்து நிறைய பலூன்களுடன் முழக்கங்களைப் பாடலாகப் பாடியபடி ஊர்வலம் சென்றோம். அதில் ஒரே ஒரு பெண்.(பின்னாளில் அவர் தமிழக அரசில் இணைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.) அப்போது சென்னையின் மக்கள் தொகை 10 லட்சம்.
சிகாகோவில் யுத்த எதிர்ப்புக்கு 15 ஆயிரம் பேர் ஊர்வலம் வந்தது போல இங்கேயும் பஸ் கட்டண எதிர்ப்புக்கு ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து அரசு பொய் வழக்குகளை எங்கள் மீது போட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அந்த நாடக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு பலூனை எழுதி அரங்கேற்றினோம்.
நாடகத்துக்குப் போலீசிடம் ஸ்கிரிப்டைத் தணிக்கைக்குக் கொடுத்து முன் அனுமதி வாங்கவேண்டுமென்ற கொடூரமான சட்டம் இன்னும் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. எம்.ஆர்.ராதாவின் திராவிட இயக்க பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒடுக்குவதற்காக, நான் பிறந்த ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த அந்த சட்டம் 56 வருடங்களாக திராவிடக் கட்சிகள் ஆட்சியிலும் தொடர்கிறது.
கடைசி நிமிடம் வரை பலூன் நாடகத்துக்குப் போலீஸ் அனுமதி வரவில்லை. நாடகம் நடிக்க முடியாவிட்டால், அன்றைய தினம் புத்தகமாவது வெளிவரவேண்டுமென்று முன்கூட்டி திட்டமிட்டு 21 நண்பர்களிடம் பொருளுதவி பெற்று புத்தகத்தைத் தயார் செய்தோம். கடைசியில் நாடகத்தைப் படிக்காமலே போலீஸ் அனுமதி கொடுத்துவிட்டது. நாடகம் நடிக்கப்பட்டதும் சி.ஐ.டி ரிப்போர்ட்டினால் பதறிப் போய் எங்கள் அடுத்த நாடகம் "கமலா'வுக்குக் கடும் பிரச்சினைகளை எழுப்பியது தனிக்கதை.
பலூன் நாடகத்தை முற்றிலும் தமிழ்ச் சூழலில் வடித்திருந்தேன். ஆனால் அதற்கு உந்துதலாக இருந்த சிகாகோ சதி வழக்கு நாடகப் பிரதியில் ஏறத்தாழ ஒரு மாத காலம் தோய்ந்திருந்தேன். அபி ஹாஃப்மன், ஜெரி ரூபின், டேவிட் டெலிங்கர், டாம் ஹேய்டன், ரெனி டேவிஸ், ஜான் ஃபிராய்ன்ஸ், லீ வெய்னர், பாபி சீல், ஆகியோரோடு சிகாகோ நகர வீதிகளிலும் கிராண்ட் பூங்காவிலும் லிங்கன் பூங்காவிலும் நானே சுற்றியது போன்ற உணர்வு இருந்தது. தண்டிக்கப்பட்ட வக்கீல்கள் வில்லியம் கன்ஸ்லர்,லியோனார்ட் வெயின்கிளாஸ் பக்கத்தில் நின்றுகொண்டு நீதிபதி ஜூலியஸ் ஹாஃப்மனின் திண்டாட்டத்தை நானே நேரில் பார்த்த உணர்வில் இருந்தேன்.
குற்றம் சாட்டப்பட்ட அபியும் ரூபினும் விசாரணைக்கு ஒரு நாள் நீதிபதி அணியும் கறுப்பு அங்கி அணிந்து வந்தார்கள்.
அதைக் கழற்றும்படி நீதிபதி உத்தரவிட்டார். கழற்றினார்கள். உள்ளே சிகாகோ போலீசின் யூனிஃபார்ம் இதையெல்லாம் நானே கோர்ட்டில் இருந்து பார்த்தது போன்ற உணர்வில் திளைத்திருந்தேன். என்றாவது சிகாகோவுக்குச் சென்றால் , அந்த வரலாற்று சிறப்பு மிக்க வீதிகளையும் பூங்காக்களையும் சுற்றிப் பார்க்கவேண்டுமென்ற ஆசை இருந்தது. சிகாகோ அதிக ஜனத் தொகை உள்ள அமெரிக்க நகரம். சுமார் 30 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இவர்களுக்காக ஆயிரம் பள்ளிக்கூடங்கள், 83 கல்லூரிகள், 88 நூலகங்கள், மொத்தமாக 7300 ஏக்கரில் 552 பூங்காக்கள் இருக்கின்றன. தொழிற்சாலைக் கழிவுகளால் சிகாகோ ஆறு கூவமாயிற்று. அது நகரத்துக்குக் குடிநீர் தரும் மிச்சிகன் ஏரியில் போய் கலப்பதால் ஏரியும் கெட்டது. இதை சரி செய்ய, ஆற்றின் போக்கை மாற்றி ஏரியிலிருந்து ஆறு ஓடுவது போல் அமைத்து சூழலை சுத்தமாக்கியிருகிறார்கள்.
இது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொந்த ஊர். எல்லா அமெரிக்க நகரங்களையும் போல இதுவும் பூர்வகுடிகளான பொட்டாவடோமிகளை அழித்து வெள்ளையர்கள் ஆக்ரமித்த பகுதிதான். சிகாகோ என்பது ப்ரெஞ்ச் உச்சரிப்பு. பூர்வகுடி மொழியில் "சிகாக்வா' என்றால், வெங்காயம் அல்லது வெள்ளைப் பூண்டு என்று அர்த்தம்.
இப்படிப்பட்ட சிகாகோவை சுற்றிப்பார்க்க முடியாமல், ஒரு மணி நேரம் சிகாகோ விமான நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் வாய்ப்பு மட்டும்தான் எனக்குக் கிடைத்தது என்றால், என் ஏமாற்றம் எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம். சொந்தமான பண வசதியும் இல்லாத , பெரும் புரவலர் உதவிகளையும் நாடவிரும்பாத ஓர் எழுத்தாளனுக்குச் சாதாரண நண்பர்கள் , வாசகர்கள் உதவியால் இத்தனை வாய்ப்புகள் கிட்டுவதே பெரிய விஷயம்தான்.
பாஸ்டனுக்கு என்னை அழைத்த பாலா கணினித் துறையில் உயர்பதவியில் இருப்பவர். தீவிரமான வாசகர். சென்னை மந்தைவெளிக்காரர். சாந்தோமிலும் பிலானியிலும் படித்தவர். அப்பா சமையற்கலைஞர். அம்மா பக்திக்கட்டுரைகளும் கதைகளும் எழுதுபவர். பாலா தனக்கென்று மூன்று நான்கு வலைப்பூக்கள் வைத்திருப்பது தவிர, அம்மாவின் படைப்புகளை வெளியிடவும் வலைப்பூ வைத்திருக்கிறார்.
பாஸ்டனில் நான் என்ன பார்க்க விரும்புகிறேன் என்று அவர் போனில் கேட்டிருந்தபோது சொன்ன பல விஷயங்களில் ஒன்று நாடகம். எனவே என்னை விமான நிலையத்தில் வரவேற்று அங்கிருந்து நேராக ஒரு நாடக அரங்கிற்கு அழைத்துப் போய்விட்டார்.
அமெரிக்காவில் பள்ளியிலும் கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும் நாடகம், இசை நாடகம் முதலிய நிகழ் கலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பாஸ்டனில் நான் பார்த்த நாடகம், வால்தாம் பப்ளிக் ஸ்கூல்ஸ் எனப்படும் பள்ளிக்கூட அமைப்பும் ரீகிள் மியூசிக் தியேட்டர் எனும் குழுவும் இணைந்து நடத்தியவை. வால்தாம் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 41 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய குழுதான் ரீகிள். இப்போது அதில் முழு நேரத் தொழில்முறை நடிகர்களுடன் பள்ளி மாணவர்களும் இணைந்து நாடகங்களைத் தயாரிக்கிறார்கள்.
நான் பார்த்த, சிண்ட்ரெல்லா கதையை அடிப்படையாகக் கொண்ட இண்ட்டு தி உட்ஸ் (காட்டுக்குள்ளே) ஓர் இசை நாடகம். நடித்தவர்களில் யார் முழு நேர நடிகர், யார் மாணவர் என்று பிரித்துச் சொல்லமுடியாத ஒரே தரத்தில் உயர்ந்த நடிப்பு. அபாரமான இசை. காட்சி மாற்றங்களும் ஒளி, ஒலி அமைப்புகளும், நம்ம ஊர் ஆர்.எஸ்.மனோகரைப் போல அங்கே ஊருக்கு நாலு பேராவது இருக்கிறார்கள் என்று தோன்றவைத்தன.
நாடக டிக்கட்டுகள் 57 டாலர்கள் முதல் மாணவர்களுக்கு 25 டாலர்கள் என்று வெவ்வேறு விகிதங்களில் இருந்தன. நாடகத்தில் பங்கேற்கும் எல்லாருக்கும்சம்பளம் தரப்படுகிறது. இதை புரவலர்களிடமிருந்து நன்கொடையாகக் கேட்கிறார்கள். பின்மேடைக் கலைஞர்களுக்கு 24 டாலர். பிரதான நடிகருக்கு 500 டாலர். பிரபலமான நடிகரென்றால் 1000 டாலர். இயக்குநருக்கு 5000 டாலர். துணை நடிகர்களுக்கு 100 டாலர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் மாற்று நடிகரை தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஊதியம் 50 டாலர்.
காட்டுக்குள்ளே நாடகம் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. அடுத்த எட்டு நாள் இன்னொரு நாடகம். பிறகு அதே போல இன்னொன்று என்று கோடைக்காலத்தில் தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. நான் சென்ற அன்று அரங்கு நிறைந்து வழிந்தது. எந்திரனுக்கு வருகிற கூட்டம் மாதிரி அங்கே நாடகம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு சினிமாவுக்குக் கூட வருவதில்லை.
அமெரிக்காவில் என் சுற்றுலாவின்போது வேறு நகரங்களிலும் சில நாடகங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி அந்தந்த நகரங்களுக்குச் செல்லும்போது விரிவாகப் பார்ப்போம்.
நாடகம் பார்த்துவிட்டு பாலா வீட்டுக்கு வெஸ்ட்ஃபோர்டுக்கு சென்று அவருடன் தங்கினேன். இரவு நேரம் பின்பக்கம் தோட்டத்தைப் போய் பார்க்க வேண்டாம். கரடி வந்தாலும் வரும் என்றார். காட்டுக்குள்ளே வீடுகளைக் கட்டியமாதிரி இருந்தது.
பாலா வீடு அருள் வீட்டுக்கு நேர்மாறு. அருள் வீட்டில் பொருட்கள் எல்லாமே கச்சிதமாக ஏறத்தாழ ஒழுங்காக சீராக வைக்கப்பட்ட சூழல் இருந்தது. பாலா வீட்டின் உட்புறம் ஒரு மந்தவெளி ஃபீலிங்கைக் கொடுத்தது. எந்த அறையிலும் எதுவும் இருக்கலாம் என்ற போக்கில் வாழ்வது நமக்கு சகஜமானது. இப்போது கூட என் கட்டில் மீது புத்தகங்கள், நோட்டுகள், சார்ஜர், மருந்துப் பெட்டி, வாட்டர் பாட்டில், டவல், ஜட்டி எல்லாம் இருக்க, அதன்மீது என் லேப்டாப் மினி கணினியை வைத்துக் கொண்டு கட்டிலை மேசையாக்கி நான் தரையில் உட்கார்ந்து எழுதுகிறேன். பாலாவின் வீடு இதே போல இருந்தது.
அவர் மனைவியும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தார்கள். அதனால் இப்படி இல்லை எப்போதுமே இப்படித்தான் என்றார் பாலா. அவருடைய நூலகம் என்னை பிரமிக்க வைத்தது. தமிழில் கடந்த பல பத்தாண்டுகளில் வந்திருக்கக்கூடிய எந்த முக்கியமான புத்தகமானாலும் அங்கே இருந்தது. எல்லாமே தீவிரமான வாசிப்புக்குரியவை. அதற்கு நிகரான ஓர் ஆங்கில நூலகம்.
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வீட்டுக்குள் நம்ம ஊர் மாதிரியே சூழலை ஏற்படுத்திக் கொண்டு இரு உலகங்களிலும் சஞ்சரிக்கும் கலையை நம்மவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...