ஆப்பிள் தேசம் - 10: ஹே மார்க்கெட்டும் மூர் மார்க்கெட்டும்!

பாஸ்டன் நகரம் அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்திருக்கும் நகரம். பாஸ்டன் படுகொலைகளும், பாஸ்டன் டீ பார்ட்டி எனப்படும் கலகமும்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் ப
ஆப்பிள் தேசம் - 10: ஹே மார்க்கெட்டும் மூர் மார்க்கெட்டும்!

பாஸ்டன் நகரம் அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்திருக்கும் நகரம். பாஸ்டன் படுகொலைகளும், பாஸ்டன் டீ பார்ட்டி எனப்படும் கலகமும்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தின. பாஸ்டனில் நான் சுற்றிப்பார்த்த ஒவ்வொரு இடமும் வரலாற்றில் ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கிறது.

பாஸ்டன் சுங்க அலுவலகம் வாசலில் காவலில் இருந்த பிரிட்டிஷ் சிப்பாயுடன், ஒரு கடைக்காரரின் வேலையாளுக்கு ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் வாய்த் தகராறு முற்றி, பெரும் மக்கள் கூட்டம் அங்கே திரண்டு, சிப்பாய்களுக்கு எதிரான கல்வீச்சில் ஈடுபட்டது. சிப்பாய்கள் சுட்டதில் ஐந்து பேர் இறந்தார்கள். மார்ச் 5, 1770-ல் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம், நகரில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் இருப்பது பற்றி, உள்ளூர் வாசிகளுக்குத் தொடர்ந்து இருந்து வந்த வெறுப்புதான். இதையடுத்து, பிரிட்டிஷ் சிப்பாய்கள் நகருக்கு வெளியே அனுப்பப்பட்டார்கள். விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த சம்பவத்தில் ஆச்சரியமான விஷயம், விடுதலைப் போராட்ட வீரர் ஜான் ஆடம்ஸ் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக, கொலைக் குற்றம்சாட்டப்பட்ட சிப்பாய்கள் சார்பாக வாதாடியதுதான். இவர்தான் அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியாக பின்னாளில் இருந்தவர். சிப்பாய்கள் துப்பாக்கிச்சூடு செய்வதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், கொலை செய்யும் நோக்கில் சுடவில்லை. தங்கள் தற்காப்புக்காகத்தான் சுட்டார்கள் என்று வாதாடி, அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்காமல் செய்தார் ஆடம்ஸ்.      

இப்போதும் ஆண்டுதோறும் மார்ச் 5 அன்று, சுங்க அலுவலகம் வாயிலில் பாஸ்டன் படுகொலை நினைவாக அந்த சம்பவம் நடித்துக் காட்டப்படுகிறது.  

அமெரிக்க விடுதலைக்கு உந்துதலாக அமைந்த இன்னொரு நிகழ்ச்சியான, பாஸ்டன் டீ பார்ட்டி என்பது தேநீர் விருந்து அல்ல. இந்தியாவில் உப்பு வரிக்கெதிராக காந்தி மாபெரும் உப்பு சத்யாக்கிரகம் நடத்தியது போல, அமெரிக்காவில் பிரிட்டிஷ் அரசு விதித்த தேயிலை வரிக்கு எதிராகப் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசுக்குத் தேயிலை வரி கட்டிவிட்டு எடுத்து வந்த சரக்குப் பெட்டிகளை, அமெரிக்க துறைமுகங்களில் இறக்கக்கூடாது என்று போராடினார்கள். பல மாநிலங்களில் டீ கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆனால், பாஸ்டனில் டீ பெட்டிகளுக்குப் பிரிட்டிஷ் வரியை செலுத்தியே ஆகவேண்டும் என்று மாநில ஆட்சி பிடிவாதமாக இருந்தது.  

விடுதலைப் போராட்டத்தினர் டிசம்பர் 16, 1773 அன்று, இந்தக் கப்பல்களில் ஏறி தேயிலை சரக்குப் பெட்டிகளை உடைத்துக் கடலில் எறிந்தார்கள். இந்த கலகத்தைத்தான் தேநீர் விருந்து கொண்டாட்டம் என்று சொல்கிறார்கள். அடுத்த இரண்டே வருடங்களில், விடுதலை உணர்வு பெரும் கொந்தளிப்பாகி, பாஸ்டன் அருகே பிரிட்டிஷ் அரசுக்கெதிரான யுத்தம் தொடங்கியது.  

எனக்குப் பிடித்தமான உலகப் பிரபலங்களில் ஒருவரான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பாஸ்டனில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்க விடுதலை தொடர்பான மிக முக்கியமான ஆவணங்கள் நான்கு. ஒன்று,  விடுதலைப் பிரகடனம். இரண்டாவது, பிரான்சுடன் ஒப்பந்தம். மூன்றாவது, பிரிட்டனுடன் சமாதான உடன்படிக்கை. நான்காவது, அமெரிக்க அரசியல் சட்டம். இந்த நான்கு ஆவணங்களிலும் கையெழுத்திட்ட  ஒரே மனிதர் என்ற பெருமைக்குரியவர் பெஞ்சமின்.  

ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெஞ்சமினைப் பாதிரியாக்க வேண்டுமென்று விரும்பிய அப்பா அவரை லத்தீன் பள்ளியில் சேர்த்தார். பத்து வயதிலேயே படிப்பை விட்டுவிட்டு வந்த பெஞ்சமின், சகோதரமுறை உறவினரான ஜேம்ஸ் நடத்திய அச்சகத்தில் அச்சு கோர்க்கும் வேலை பார்த்தார். ஜேம்ஸ் தன் பத்திரிகையில் எழுதிய அரசியல் விமர்சனங்களுக்காக சிறை வைக்கப்பட்டபோது, பெஞ்சமின் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 16.

தன் பெயரில் எழுதினால் வெளியிடமாட்டார்கள் என்பதால், "மிஸஸ் சைலன்ஸ் டூகுட்' என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதி, ஜேம்சின் அலுவலகத்தில் இரவில் கதவுக்குக் கீழே ரகசியமாகப் போட்டுவைப்பார். இப்படி 16 கட்டுரைகள் வெளியாகிப் பெரும் வாசகர் வரவேற்பைப் பெற்றன. இதையெல்லாம் எழுதியது பெஞ்சமின்தான் என்று ஜேம்சுக்குத் தெரியவந்ததும் இருவருக்கும் சண்டையாகிவிட்டது. இனி இந்த ஊரில் இருக்க முடியாது என்று பெஞ்சமின் ஃபிலடெல்பியாவுக்குப் பிழைக்கப் போய்விட்டார்.  

பின்னாளில் பெஞ்சமின் எட்டாத சிகரங்களே இல்லை. சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டத் தலைவர், சட்ட மேதை, கண்டுபிடிப்பாளர், விஞ்ஞானி, வணிகர், வெளிநாட்டுத் தூதர், தபால் துறைத் தலைவர், மாநில முதலமைச்சர் என்று பல துறை சாதனையாளராக இருந்தார். படிப்பதற்கான கண்ணாடி, பார்ப்பதற்கான கண்ணாடி இரண்டையும் ஒரே லென்சில் மேலும் கீழுமாக அமைப்பதை அவர்தான் கண்டுபிடித்தார். மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டுபிடித்துக் கட்டடங்களைக் காப்பாற்ற இடிதாங்கிகளை உருவாக்கினார். குதிரை வண்டிகள் எவ்வளவு தூரம் ஓடுகின்றன என்பதைக் கண்டறிய ஸ்பீடா மீட்டர்களைக் கண்டுபிடித்தார். தன் அடிமைகளை விடுவித்து, அடிமை முறை ஒழிப்பில் உதவினார்.  

பதினாறு வயதில் பெஞ்சமின் காதலித்த டெபோராவுக்குத் திருமணமாகி அவள் கணவன் அவளை விட்டுவிட்டு ஓடி விட்டான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளை பெஞ்சமின் மணம் செய்து கொண்டார். அவர்களுடைய முதல் ஆண் குழந்தை 4 வயதில் இறந்துவிட்டது. அடுத்த குழந்தை பெண்-சாரா. பெஞ்சமினுக்கும் வேறொரு பெண்ணுக்கும் பிறந்த வில்லியம்மை தங்கள் மகனாக சுவீகரித்துக் கொண்டனர். ஆனால், வில்லியம் பிரிட்டிஷ் விசுவாசி. அப்பாவோ பிரிட்டிஷ் எதிர்ப்பு விடுதலை வீரர். புரட்சியின்போது வில்லியம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டான். பெஞ்சமின் கடைசி வரை மகனுடன் சமரசம் செய்யவில்லை. அவருக்குக் கடைசி வரை துணையாக இருந்தது மகள் சாராதான்.  பெஞ்சமின் ஃபிராங்க்ளின் சுயசரிதையையும், வரலாற்றையும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும்.  

பாஸ்டன் தெருக்களெங்கும் இப்படி பல வரலாற்று சுவடுகள் பரவிக் கிடக்கின்றன. அவற்றை போய் பார்ப்பதற்கென்றே, விடுதலைத் தடம் (ஃபீரிடம் டிரெய்ல்) என்று சுற்றுலா நடத்துகிறார்கள். நகர் முழுவதும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடங்களுக்குச் செல்லும் பாதையை சிவப்பு நிறத்தில் மார்க் செய்து வைத்திருக்கிறார்கள்.

பாலா முதலில் என்னை ஓர் உடுப்பி ஓட்டலுக்கு அழைத்துப் போய் நம்ம ஊர் உணவை வாங்கிக் கொடுத்து தெம்பூட்டி, அதன் பின் ஒரு நீண்ட நடைப் பயணம் அழைத்துச் சென்றார். நகரின் மையப்பகுதியில் இருக்கும் ஹே மார்க்கெட், குவின்சி மார்க்கெட், ஹார்பர் எல்லாம் சுற்றினோம்.  

ஹே மார்க்கெட் எனப்படும் வைக்கோல் சந்தைகள் எல்லா அமெரிக்க நகரங்களிலும் இருக்கின்றன. இப்போது அங்கே வைக்கோல் விற்பதில்லை. சில ஹே மார்க்கெட்டுகள் வரலாற்றில் அழியாத இடம் பெற்றிருக்கின்றன. நான் பார்க்க முடியாமல் போன சிகாகோ ஹே மார்க்கெட் அப்படிப்பட்டது. இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக மே 1 கொண்டாடப்படுவதற்குக் காரணம், சிகாகோவின் ஹே மார்க்கெட் பகுதியில் 1886 மே 4 அன்று நடந்த படுகொலைகள்தான்.

தினசரி வேலை நேரம் பத்து, பனிரெண்டு, பதினாறு என்று இருந்ததை, எட்டு மணி நேரமாக்க வேண்டுமென்பதுதான் அப்போது தொழிலாளர்களின் கோரிக்கை. இதற்காக அமெரிக்கா முழுவதும் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். சிகாகோ ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கடைசி நிமிடம் வரை மிக அமைதியாக நடந்த பேரணி, பொதுக் கூட்டத்தின் முடிவில், யாரோ ஒரு குழாய் குண்டை வீச, கலவரம் ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.  மொத்தமாக எட்டு போலீசாரும், நான்கு தொழிலாளர்களும் இறந்தார்கள். பெரும்பாலான போலீசார் இறந்தது இதர போலீசார் சுட்டதிலேயேதான்.  

இந்த நிகழ்ச்சிக்காக எட்டு தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒருவருக்கு 15 வருட சிறை தண்டனை. மீதி ஏழு பேருக்கு மரண தண்டனை. அப்பீலில் இருவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. மீதி ஐந்து பேரில்  நால்வர் தூக்கிலிடப்பட்டார்கள். ஒருவர் தூக்கு தினத்துக்கு முன்னாள், சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அமெரிக்காவையே உலுக்கிய இந்த  நிகழ்ச்சிக்கு, இரு வருடங்களுக்குப் பின்னர் வேலை நேரம் எட்டு மணி நேரமாக்கப்பட்டது. நடந்த கலவரத்துக்கு தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் பொறுப்பல்ல என்றும் போலீஸ் கமாண்டரின் அராஜகம்தான் காரனம் என்றும், ஏழு வருடங்கள் கழித்து மாநில ஆளுநர் அறிவித்தார். கமாண்டர் பின்னர் வேறு லஞ்ச ஊழல் வழக்கில் கைதாகி தண்டிக்கப்பட்டார்.

பாஸ்டனின் ஹே மார்க்கெட்டுக்கு, சிகாகோ ஹே மார்க்கெட் போன்ற அரசியல் வரலாறு இல்லை. ஆனால், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வாழ்ந்த சமயத்தில் மக்கள் தொகை வெறும். 5 ஆயிரம் பேர்தான். அடுத்த 100 வருடங்களில் இது 45 ஆயிரமாக ஆன சமயத்தில்தான், ஹே மார்க்கெட் ஒரு திறந்தவெளி சந்தையாக 1830ல் உருவாயிற்று. ( இப்போது பாஸ்டன் மக்கள் தொகை ஆறு லட்சத்து 45 ஆயிரம்) மிக மலிவான விலையில் காய்கறிகளும் பழங்களும் விற்கப்படுவதுதான் இதன் சிறப்பு. வெள்ளி, சனிக் கிழமைகளில் மட்டும் கூடும் இந்த சந்தையை சுமார் 200 தள்ளுவண்டிக்காரர்கள்தான் நடத்துகிறார்கள்.  

ஹே மார்க்கெட்டை சுற்றியுள்ள புராதன கட்டடங்களில் ஒன்றான குவின்சி மார்க்கெட், ஹே மார்க்கெட்டை விட 4 வயது மூத்தது. இங்கே எல்லா நவீன கடைகளும் உணவகங்களும் இருக்கின்றன. அமெரிக்காவின் சிறப்புகளில் ஒன்று, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழியவிடாமல் தடுத்துப் பாதுகாத்து, கூடவே பயன்படுத்துவதுமாகும்.  

எனக்கு சென்னையின் மூர்மார்க்கெட் நினைவுக்கு வருகிறது. சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்த ஜார்ஜ் மூர் பெயரில் அமைந்த மூர் மார்க்கெட், 1900லிருந்து 85 வருடங்கள் இயங்கி வந்தது. பழைய புத்தகப் பிரியர்களுக்கு  மூர்மார்க்கெட் ஒரு சொர்க்கம். அங்கே கிடைக்காத பொருளே இல்லை. சென்னை நகரின் அடித்தட்டு மக்களுக்கும் கீழ் நடுத்தர மக்களுக்கும் பெரும் புதையலாக இருந்தது மூர்மார்க்கெட். செண்ட்ரல் ரயில் நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக அதை இடிக்க அரசு விரும்பியது. வியாபாரிகளும் பொதுமக்களும் எதிர்த்தார்கள்.  ஒரு மர்மத் தீ மூர்மார்க்கெட்டை அழித்ததும், ரயில் நிலையத்தை அரசு  விரிவுபடுத்தியது. மூர்மார்க்கெட் என்ற பெயரில் சின்னதாக இன்னொன்று கட்டப்பட்டாலும் அதை சீந்துவார் இல்லை. அசல் அசல்தான்.  

அந்த மூர்மார்க்கெட்டின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களை வைத்து, மூர்மார்க்கெட் என்ற தலைப்பிலேயே மறைந்த எழுத்தாளர் அறந்தை நாராயணன் எழுதிய அருமையான நாடகத்தை எங்கள் பரீக்ஷா குழு 1979ல் நிகழ்த்தியது. அதில் நான் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் ரங்கனாக மேடையில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி நடித்தேன். இப்போது சென்னையில் அநேகமாக சைக்கிள் ரிக்ஷாவும் அழிந்து விட்டது.  

ஆனால் நியூயார்க்கில் நகர மையத்தில் டைம் ஸ்கொயரில் சைக்கிள் ரிக்ஷாக்கள் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com