ஆப்பிள் தேசம்-4: ரைட் சகோதரர்களின் ரைட் சகோதரி!

நம்மைச் சூழ்ந்திருக்கும் அரசியல் அவலங்கள், ஊழல்கள், முறைகேடுகள் பற்றியெல்லாம் நண்பர் அருளுடன் உரையாடும்போது, மூன்று அம்சங்கள் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார். பகிரங்கத் தன்மை எனப்படும் டிரான்ஸ
ஆப்பிள் தேசம்-4: ரைட் சகோதரர்களின் ரைட் சகோதரி!

நம்மைச் சூழ்ந்திருக்கும் அரசியல் அவலங்கள், ஊழல்கள், முறைகேடுகள் பற்றியெல்லாம் நண்பர் அருளுடன் உரையாடும்போது, மூன்று அம்சங்கள் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார். பகிரங்கத் தன்மை எனப்படும் டிரான்ஸ்பேரன்சி, நேர்மை, எளிமை இவைதான் அந்த மூன்று அம்சங்கள். நேர்மையோ எளிமையோ குறைவாக இருந்தால் கூட, பகிரங்கத்தன்மை இருந்தால் எல்லாம் அம்பலத்துக்கு வந்துவிடும்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் பயணம் செய்யும் அதி பாதுகாப்பான விமானப்படை விமானம் ஏர்ஃபோர்ஸ் ஒன் என்று இப்போது அழைக்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் அவரவர் விமானத்துக்கு  வெவ்வேறு  பெயர் வைத்திருந்தார்கள். இந்த விமானங்களைக் காட்சிக்கு வைத்திருக்கும் அமெரிக்க விமானப்படையின் காட்சியகத்தை நான் பார்க்க வேண்டுமென்று அருள் விரும்பினார்.

அருள் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேரத் தொலைவில் இருக்கும் டெய்ட்டன் என்ற சிற்றூரில் அந்தக் காட்சியகம் இருக்கிறது. டெய்ட்டன்தான் காற்றைவிட கனமான விமானம் காற்றில் பறப்பதற்கு வழிமுறைகளைக் கண்டுபிடித்து விமானத்தை உருவாக்கிய ரைட் சகோதரர்களின் சொந்த ஊர். விமானத்துக்கு முன்னோடியான கிளைடர்களை 110 வருடங்களுக்கு முன்பே உருவாக்கிய வில்பர் ரைட், அவர் தம்பி ஆர்வெல் இருவரும் கூடவே சைக்கிள் தயாரிப்புக் கடை நடத்தி வந்தார்கள். அச்சகம் வைத்து பத்திரிகைகளை வெளியிட்டார்கள். தானாக நிற்கமுடியாத சைக்கிளை, ஓட்டுபவர் தன் பேலன்சிங் மூலம் நிலையாக்கி ஓட்ட முடியுமென்றால், அதே போல நிலையில்லாத விமானத்தையும் ஓட்டுபவர் பேலன்ஸ் செய்து ஓட்ட முடிந்தாக வேண்டும் என்ற நம்பிக்கையுடன்தான் ரைட் சகோதரர்கள்  தங்கள் விமான ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள்.

இருவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை. விமானமே எங்கள் எல்லா நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது;  மனைவிக்கு ஒதுக்க நேரமில்லை என்று தமாஷாகச் சொல்லியிருக்கிறார்கள். இருவரையும் அன்புடன் பராமரித்தவர், ஆதரித்தவர் அவர்களுடைய தங்கையான கேதரின். ஆசிரியையான கேதரினும் நீண்ட காலம் திருமணம் செய்துகொள்ளவில்லை. வில்பர் தன் 45வது வயதில் இறந்த பின்னர், ஆர்வில் முழுக்க முழுக்க கேதரினைச் சார்ந்தே இருந்து வந்தார். கேதரின் தன் 52வது வயதில்  பழைய சிநேகிதர் ஒருத்தரைத் திருமணம் செய்தது ஆர்விலுக்குப் பிடிக்கவில்லை. கேதரினுடன் உறவை முறித்துக் கொண்டார். கேதரின் சாகும்வரை அவரைச் சந்திக்கவோ பேசவோ இல்லை. மரணப் படுக்கையில் கேதரின் இருந்தபோது ஆர்விலை அவருடைய அண்ணன் லோரின் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். அரை நினைவில் இருந்த கேதரினிடம் லோரின் ,ஆர்விலை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டார். கேதரினால் தலையை மட்டுமே ஆமென்று அசைக்க முடிந்தது.

ரைட் சகோதரர்கள் என்றாலே வில்பர், ஆர்வில் மட்டுமே நினைவில் வருவார்கள். அவர்களுடைய அண்ணன்கள் இரண்டு பேர். ஒருவர் லோரின், மூத்தவர் ரூஷ்லின். இவர்கள் இருவரும் விவசாயிகள். திருமணம் செய்துகொண்டு   குடும்பம் குழந்தைகள் என்று வாழ்ந்தவர்கள். ஆர்வில், வில்பர் செய்த விமானக் கண்டுபிடிப்புகளில் இவர்களுக்குச் சம்பந்தமில்லை. கேதரின்தான் முழுக்க சம்பந்தப்பட்டிருந்தார். 1905ல் பிரான்சில் விமானத்தில் பறந்த முதல் பெண் என்ற பெயரையும் பெற்றார். ரைட் சகோதரர்களின் அப்பா மில்டன் ரைட் ஒரு மத போதகர். யுனைட்டட் பிரதரன் என்ற கிறித்துவப் பிரிவில் பிஷப்பாக இருந்தவர். இந்தப் பிரிவினர் அப்போதைய அமெரிக்காவில் இருந்த அடிமை முறையை எதிர்த்தவர்கள்.

டெய்ட்டனில் ரைட் சகோதர்களின்  தொழிற்சாலை இப்போது அரசாங்கத்தினால் அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நான் அங்கே செல்ல நேரம் இருக்கவில்லை. டெய்ட்டனிலேயே இருக்கும் விமானப்படையின் அருங்காட்சியகத்துக்குச் சென்றேன். அங்கே ரைட் சகோதர்களின் சைக்கிள், பல்வேறு விமானப் பாகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் காட்சியகத்தில் அமெரிக்க விமானப்படை  உருவான காலம் முதல் இப்போது வரை எப்படியெல்லாம் தொழில்நுட்பம் மாறி வந்திருக்கிறது, நவீன ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட வரலாறு எல்லாம் விவரமாகக் காட்சிப் பொருட்கள், வீடியோ, ஐமேக்ஸ் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றன. காட்சியகத்தை நிர்வகிப்பது தொண்டர்கள்தான். கடந்த வருடம் மட்டும் 480 தொண்டர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். மிகவும் இளையவர் வயது 19. மூத்தவர் வயது 93 முன்னாள் படை வீரர்கள் முதல் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை தொண்டர்களாக வேலை செய்கிறார்கள்.

அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும்போதே இப்படிப் பொது விஷயங்களில் தொண்டு செய்வது என்பது வலியுறுத்தப்படுகிறது. ஒரு மாணவர் 200 மணி நேரம் தொண்டு செய்திருந்தால், அது உயர் படிப்புக்கான அட்மிஷனில் அவருக்கு கூடுதல் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. நான் சென்ற பல மியூசியங்களில் நிறைய பள்ளி, கல்லூரி மாணவத் தொண்டர்களை சந்தித்தேன். ஒவ்வொருவரும் காட்சியகத்தில் எதை விளக்கும் பொறுப்பில் இருக்கிறார்களோ, அதை விவரமாகப்  படித்துத்தெரிந்து வைத்திருக்கிறார்கள். குறுக்குக் கேள்விகள்  கேட்டால் ( நாம்தான் நிச்சயம் கேட்போமே)தயங்காமல் பதில் சொல்கிறார்கள். எதைப் பற்றியாவது தனக்குச் சரியாகத் தெரியவில்லை என்றால்,   தெரியாது என்று சொல்லிவிட்டு, அந்தத் தகவல் வேறு எங்கே கிடைக்கக் கூடும் என்பதையும் சொல்கிறார்கள்.

இந்தக் காட்சியகத்தில் ஏன் அருள் என்னை ஜனாதிபதிகளின் விமானங்களைப் பார்க்கச் சொன்னார் என்பது அவற்றைப் பார்த்ததுமே புரிந்தது. கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தன்று பயணம் செய்த விமானம் உட்பட, ஜனாதிபதிகள் ட்ரூமன், ரூஸ்வெல்ட், ஐசன்ஹோவர் போன்ற பழைய ஜனாதிபதிகள் பயணித்தவை எல்லாமே அங்கே இருந்தன. அவற்றுக்குள்ளே ஜனாதிபதியின் படுக்கை, நாற்காலி, மேசை எல்லாமே ஆடம்பரங்கள் இல்லாமல்  சாதாரண மரப்பலகையில் இருந்தன. அதிகபட்சம் நம் ரயிலின் மூன்றாம் வகுப்பு மெத்தைதான் சிலவற்றில் இருந்தது.

ரூஸ்வெல்ட் போலியோவினால் பாதிக்கப்பட்டு  நடக்க முடியாமல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியவர். ஆனால் பொது மக்கள் முன்பு வரும்போதெல்லாம், இரும்புக் கவசங்கள் பொருத்திய கால்களால், இடுப்பை அசைத்து அசைத்து ஒரு மாதிரி நடப்பவர் போலக் காட்டிக் கொள்வார். அவருடைய சக்கர நாற்காலியை அப்படியே தரையிலிருந்து விமானத்தின் இருக்கைக்கு எடுத்துச் செல்ல ஒரு லிஃப்ட் பொருத்தியிருந்தது. அமெரிக்காவில் வருடத்துக்கு வருடம் அதிகரித்து வரும் பகிரங்கத் தன்மையினால், ரூஸ்வெல்ட் காலத்தில் லேசாக மறைக்க முற்பட்ட  சக்கர நாற்காலி விஷயம் கூட இப்போது எக்சிபிஷனுக்கு வந்துவிட்டது.

உலகின் வெவ்வேறு நாடுகளில் போர் செய்யச்  செல்லும் அமெரிக்கச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தி, கேளிக்கை வழங்கி தேச சேவை செய்த நடிகர்-பாடகர்-காமெடியன் பாப் ஹோப் இந்தக் காட்சியகத்தில் கொண்டாடப்பட்டுள்ளார்.  நூறாண்டுகள் வாழ்ந்த பாப் ஹோப் இரண்டாம் உலக யுத்தம் முதல், வியட்நாம் யுத்தம், கொரியன் யுத்தம், வளைகுடா யுத்தம் வரை எல்லா யுத்தங்களும் அமெரிக்கச் சிப்பாய்களை களத்துக்குப் போய் சந்தித்து மகிழ்வித்திருக்கிறார். கிளிண்டன் ஆட்சிக்காலத்தில் பாப் ஹோப்புக்கு  மூத்த போர் வீரர் ( வெடரன்) என்ற ஒரு சிறப்பு விருது வழங்கப்பட்டது.  சிப்பாயல்லாத ஒரு குடிமகனுக்கு இந்த விருது தரப்பட்டது இதுவரை இந்த ஒருமுறைதான்.

இந்தக் காட்சியகத்தில் இருந்த பல பிரிவுகளில் ஒன்று ஹிட்லர் காலக் கொடுமைகள் பற்றியது. ஹிட்லரின் ஒடுக்குமுறைக்குத் தப்பி அமெரிக்காவுக்கு வந்து டெய்ட்டன் பகுதியில் குடியேறிய யூதர்களின் அனுபவங்களை இங்கே காட்சிப்படுத்தியிருந்தார்கள். மந்தை மந்தையாக மக்களை ரயிலேற்றி வதை முகாம்களுக்குக் கொண்டு செல்லும்போது விரட்டுவதற்கு அடிப்பதற்குப் பயன்படுத்திய ஒரு மாட்டுவால் சவுக்கைப் பார்த்தேன்.

இன்னொரு பொருள் ஒரு வயலின். ராபர்ட் காஹ்னென்ர என்ற 15 வயது சிறுவனுடைய வயலின் அது. ஹிட்லரின் சிப்பாய்கள் ராபர்ட்டின் அப்பாவை அடித்து உதைத்துக் கொண்டிருந்தபோது ஒரு சிப்பாய் வயலினை ராபர்ட்டிடம் எடுத்துக் கொடுத்து அதில் சந்தோஷமான ஜெர்மன் பாடல்களை இசைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறான். ராபர்ட் வயலின் வாசிக்க வாசிக்க, அவன் அப்பா அவன் கண் முன்னாலேயே அடித்துத் துவைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் ராபர்ட் ஜெர்மனியிலிருந்து தப்பி அமெரிக்காவுக்கு சென்று டெய்ட்டனில் குடியேறினான். யுத்தம் முடிந்ததும், தன் பழைய வீட்டுப் பரணில் ஒளித்து வைந்திருந்த  வயலினை அவனால் மீட்க முடிந்தது. அதுதான் இப்போதைய காட்சிப் பொருள்.

இதேபோல இன்னொரு காட்சிப் பொருளாக இருந்தது இன்னொரு இசைக்கருவியான அகார்டியன். இது 14 வயதுச் சிறுவன் ஜெர்டூர்ட் உல்ஃபுடையது. ஹிட்லர் ஆட்சி யூதர்களை வதைக்கத் தொடங்கியபோது யுத்தத்துக்கு முன்பாக, 17 வயதுக்குட்பட்ட யூத சிறுவர்களை மட்டும்  வெளி நாடுகளுக்கு செல்ல அனுமதித்தது. அவர்களுடன் பெரியவர்கள் யாரும் செல்ல முடியாது. இப்படிச் சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் பிரிட்டனுக்குச் சென்றனர். அதில் ஒருவன் ஜெர்ட்ரூட். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் கையில் இரண்டே இரண்டு சூட்கேஸ்கலைத்தான் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஜெர்ட்ரூட் ஒரு சூட்கேஸ் மட்டும் எடுத்துக் கொண்டு இன்னொரு சூட்கேசுக்குப் பதிலாக தனக்கு அம்மா அளித்த பிறந்த நாள் பரிசான அக்கார்டியனை எடுத்துச் சென்றான். அம்மா நினைவாக அவனிடம் எஞ்சியது அது ஒன்றுதான். ஜெர்ட்ரூடும் பின்னர் டெய்ட்டன்வாசியானான். அக்கார்டியன் காட்சியகத்துக்கு வந்துவிட்டது.

யுத்தம், இனவெறி,இதர வெறிகளெல்லாமே மனிதர்களை எவ்வளவு கேவலமானவர்களாக ஆக்குமென்பதைத்தான் இவையெல்லாம் காட்டுகின்றன. ஆனால் விசித்திரம் என்னவென்றால், இந்த விஷயங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும் மியூசியமே அழிவுக்கான ஆயுதங்களைக் கொண்டாடுவதற்குத்தான். அமெரிக்கா எப்படி தன் விமானப்படை பலத்தை ஆயுத பலத்தைப் பெருக்கியிருக்கிறது என்று காட்டுவதற்குத்தான். 

ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளான,   குண்டன்,  சின்னப்பையன், அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணையான ராஸ்கல் எல்லாவற்றின் மாதிரிகளும் இந்தக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. ஹிட்லரின் ஒடுக்குதலை விவரிக்கும் பிரிவைப் போல, ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப் பலியாகி தலைமுறை தலைமுறையாக அழிந்துகொண்டிருப்போர் பற்றி விரிவாக எதுவும் கிடையாது. மனித உரிமைகள் என்ற ஒரு பட்டியலில்  ஒரு வரி மட்டும் ஜப்பானில் குண்டு வீச்சில் சாதாரண மக்கள் ஏராளமாக இறந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கர்களைப் பொறுத்தமட்டில்  எந்த விஷயத்தைக் காட்சியகத்தில் வைப்பதாக இருந்தாலும், அவர்களுடைய வரலாறே வெறும் 200  250 வருடங்களுடையதாக மட்டுமே இருந்தாலும், சொல்வதைத் திருத்தமாக, தெளிவாக, பார்வையாளருக்குப் புரியும் விதத்தில், எடுப்பாகவும், ஈர்ப்பாகவும் சொல்வதை நன்றாகப் பழகிவைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் யூசர் ஃபிரெண்ட்லி - அதாவது பயன்படுத்துவோருக்கு  வாகாக, என்ற சொற்றொடரே அமெரிக்கர்கள் கண்டுபிடித்ததுதான்  இந்த அணுகுமுறையை அமெரிக்கப் பயணம் முழுவதிலும் நான் பார்த்தேன்.

டெய்ட்டனில் காட்சியகத்துக்குச் சென்றதோடு என் பணி முடியவில்லை. அந்த ஊரில் பணி புரியும் சில தமிழக இளைஞர்களைச் சந்தித்தேன். தொடர்ந்து அமெரிக்காவில் இருந்த மீதி  நாட்களிலும் அங்கிருக்கும் இந்திய இளைஞர்களைச் சந்திப்பது என் முக்கிய வேலைகளில் ஒன்றாக வைத்துக் கொண்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com