ஆப்பிள் தேசம்-5: பரவச அனுபவத்தின் மறுபெயர்!

சுற்றுலாப் பயணிகள் சென்னைக்கு வந்தால் மெரீனா கடற்கரையையும் மதுரைக்குச் சென்றால் மீனாட்சி கோயிலையும், டெல்லிக்குச் சென்றால் தாஜ் மஹாலையும் பார்க்காமல் போவதில்லை என்பது போல, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கு
ஆப்பிள் தேசம்-5: பரவச அனுபவத்தின் மறுபெயர்!

சுற்றுலாப் பயணிகள் சென்னைக்கு வந்தால் மெரீனா கடற்கரையையும் மதுரைக்குச் சென்றால் மீனாட்சி கோயிலையும், டெல்லிக்குச் சென்றால் தாஜ் மஹாலையும் பார்க்காமல் போவதில்லை என்பது போல, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்க்கும் இடம் நயாகரா அருவி.

அருள் என்னை நயாகராவுக்கு அழைத்துச் சென்றார். காரில் சுமார் ஆறு மணி நேரப் பயணம். அமெரிக்காவில் இருந்த நாட்களில் இது போல நியூயார்க்கிலிருந்து நியூஜெர்சி பிஸ்காட்டவேவுக்கு, ட்ரெண்ட்டனிலிருந்து ஃபிலடெல்பியாவுக்கு, கனெக்டிகட்டிலிருந்து நியூஜெர்சிக்கு என்று பல முறை காரில் இரண்டு மணி நேரப் பயணங்கள் செய்தேன்.

அமெரிக்காவில் நண்பர்களிடம் ஓர் இடத்துக்குச் செல்ல எவ்வளவு தொலைவு என்று கேட்டால், அதற்கு மணிக் கணக்கில்தான் பதில் சொல்கிறார்கள். ஒரு மணி நேர தூரம், மூன்று மணி நேர தூரம் என்று. அதை மைல் கணக்கில் கணக்கிடுவதானால், சராசரியாக நெடுஞ்சாலைகளில் எண்பது மைல் வேகத்துக்குக் குறையாமல் கார்கள் ஓட்டப்படுகின்றன.

நம் ஊரில் கிலோமீட்டர் பழக்கத்துக்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் மைல்கள்தான் கணக்கு முறை. மீட்டர் கிடையாது. அடிதான். கார், பஸ்களில் இடது பக்கத்தில் ஸ்டியரிங். தெருவில் எல்லாம் கீப் ரைட்தான். ஏதாவது ஒரு விதத்தில் தங்களை பிரிட்டிஷ் வேர்களிலிருந்து வேறுபடுத்தி வைத்துக் கொள்ள முயற்சித்ததன் விளைவுகள் இவை.

வித்தியாசமாக இருக்க முயற்சிப்பது ஓ.கே.தான். ஆனால் அநியாயத்துக்கு கட்டடங்களில் எல்லா ஸ்விட்ச்களையும் கூட தலை கீழாக வைத்திருக்கிறார்கள். மேலே தள்ளினால் ஆன். கீழே தள்ளினால் ஆஃப். பிளக்குகளைக் கூட ஃ மாதிரி இல்லாமல் தலைகீழாக வைத்திருக்கிறார்கள்.

அருளுடன் நயாகரா சென்ற நீண்ட கார் பயணம் முதல், எல்லா கார் பயணங்களிலும் வழியில் நான் முக்கியமாக கவனித்து மகிழ்ந்த விஷயம், நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓய்விடங்களும் பூங்காக்களும்தான். அடுத்த ஓய்விடம் எத்தனாவது மைலில் என்ற அறிவிப்புகள் தெளிவாக இருக்கின்றன. ஓய்விடங்களில் கழிப்பறைகள் படு சுத்தமாக, அதாவது படுத்துத் தூங்கும் அளவுக்கு சுத்தமாக இருக்கின்றன. உடற்குறையுள்ளவர்களுக்கு வசதியாகவும், கைக் குழந்தைகளை சுத்தப்படுத்தி உடை மாற்ற வசதியான அமைப்புகளுடனும் இல்லாத ஓய்விடமே இல்லை.

நமது நெடுஞ்சாலைப் பயணங்களின்போது எந்த ஓட்டலிலும், எந்தக் கழிப்பிடத்திலும் இன்று வரை சுத்தமான டாய்லெட்டுகளை நான் பார்த்ததே இல்லை. கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு பிரும்மாண்டமான தண்ணீர் தொட்டி மாதிரி தலைமைச் செயலகம் கட்டுகிற நம் அரசால், குடிமக்களுக்கு தூய்மையான கழிப்பறைகளை இன்று வரை அளிக்க முடியவில்லை.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் பத்து நாள் புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தேன். பல முறை முறையிட்டும், பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் தலையிட்டும் கூட, பொதுக் கழிப்பறைகளை உள்ளூர் நிர்வாகத்தால் சுத்தமாகப் பராமரிக்க முடியவில்லை.

நயாகரா செல்லும் வழியில் இருந்த ஓய்விடங்களில், அவற்றைப் பராமரிக்கும் உள்ளூர் நிர்வாகம் அஞ்சல் அட்டைகளை பொது மக்கள் பார்வையில் வைத்திருக்கிறது. கழிப்பறை பராமரிப்பு எப்படி உள்ளது என்பது பற்றி அதில் பல கேள்விகள். நிரப்பி எந்த அஞ்சல் பெட்டியிலும் போடலாம். ஸ்டாம்ப் ஒட்டத் தேவையில்லை.

நயாகராவுக்குச் செல்லும் வழியில் நெடுஞ்சாலை உணவகத்தில் சாப்பிட்டேன். அமெரிக்காவில் இருந்த நாட்களில் பெரும்பாலான வேளைகள், தமிழ் நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டதால் தப்பித்தேன். முட்டை தவிர வேறு அசைவ உணவு சாப்பிடாத பழக்கமும், சைவ உணவில் பழங்களைத் தவிர வேறெதையும் சமைக்காமல் சாப்பிடுவதில்லை என்ற பழக்கமும் உடையவன் என்பதால், வெளியே சாப்பிடுவது எனக்கு சிரமமாகவே இருந்தது.

ரொட்டி, பன் போன்ற தோற்றத்தில் இருக்கக் கூடிய பொருட்களைத் தேடித் தேடி சாப்பிட்டேன். வெஜிடேரியன் பர்கர் என்று கேட்டால், அதில் உள்ளே வைப்பது எல்லாம் சமைக்காத சேலட் போன்ற காய்கறித் துண்டுகள், கீரைகள்தான். நிறைய சமயங்களில் ஆப்பிள் பை, டோநட்ஸ், ஹேஷ் பிரவுன் போன்ற தின்பண்டங்களே கை கொடுத்தன. மறைந்த எழுத்தாளர் மணியன் சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்னால், உலகத்தின் பெரும்பாலான நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு பயணக் கட்டுரைகள் எழுதியபோது, ஒவ்வொரு ஊரிலும் எங்கே இட்லி,வடை, தோசை, பொங்கல், சாம்பார், சட்னி கிடைக்கும் என்று, ஏன் எழுதினார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

அப்போது இருந்திருக்கக் கூடிய அளவு சிக்கல் இப்போது இல்லைதான். நயாகராவிலேயே மூன்று இந்திய உணவகங்களைப் பார்த்தேன். எல்லாம் பஞ்சாபிகளால் நடத்தப்படுகின்றன. தென்னிந்திய தட்டுச் சோறு கூடப் போடுகிறார்கள். தரம் சுமார்தான்.

நயாகராவில் அருளும் நானும் அருவிக்குச் சென்றபோது மதிய நேரம். நயாகராவைப் பார்ப்பது நிச்சயம் ஒரு பரவசமான அனுபவம். இயற்கையின் பிரும்மாண்டத்தை, எழிலை, இந்தியாவில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவற்றிலிருந்து வேறுபட்ட அனுபவமாக நயாகரா இருந்தது.

நயாகராவிலிருந்து சுற்றுலா பற்றியும் வளர்ச்சி பற்றியும் நாம் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலக வரலாற்றிலேயே மிக மோசமான, ஆபத்தான, ஒரு கருத்தை உதிர்த்த பெருமைக்குரியவராக நம் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார். சுற்றுச் சூழல் முக்கியம்தான். ஆனால் வளர்ச்சியைப் பலி கொடுத்து சூழலைக் காப்பாற்ற முடியாது என்று அவர் அண்மையில் சொல்லியிருக்கிறார்.

நியாயமாக சொல்லப்படவேண்டிய கருத்து - வளர்ச்சி முக்கியம்தான். ஆனால் சூழலை பலி கொடுத்து வளர்ச்சியை செய்யக் கூடாது என்பதுதான்.

நயாகராவில் இந்த சூழல்-வளர்ச்சி சமரசத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நயாகரா அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பெரும் சுற்றுலா வருவாயை ஈட்டித்தரும் இடமாகவும் இருக்கிறது. வருடத்துக்கு சுமார் 3 கோடி பேர் நயாகராவைப் பார்க்க வருகிறார்கள். நயாகரா அருவி நீர் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள புனல் மின் நிலையங்கள் மொத்தமாக 4.4. கீகாவாட் மின்சார உற்பத்தித்திறன் உடையவை.

அதே சமயம் இந்த இடத்தின் இயற்கை எழிலும் சூழலும் கெட்டுவிடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரே இடத்தில் சுற்றுலா, மின்சாரம், இயற்கைப் பாதுகாப்பு என்பது இன்றைய உலகில் விளையாட்டான, எளிதான விஷயமே அல்ல.

இது நயாகராவில் சாத்தியமாகியிருக்கிறது என்பது மட்டுமல்ல், இதில் இரண்டு வெவ்வேறு நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தம்மாத்தூண்டு ஒகேனக்கலில் நமக்கும் கர்நாடகத்துக்கும் தேவையற்ற பிரச்சினைகளை சிலர் கிளப்புகிறார்கள். ஒரே நாட்டுக்குள் இருக்கும் இரண்டு மாநிலங்களுக்குள். ஆனால் கனடா, அமெரிக்கா என்ற இரண்டு நாடுகள் நயாகராவை இருவர் நலனுக்காகவும் சிறப்பாகப் பயன்படுத்துகின்றன.

நயாகரா ஆறு உருவாகி சுமார் 12 ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அருவிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 400 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்திலேயே இரண்டாவது பெரிய அருவி இது. அமெரிக்கப் பகுதியில் இருக்கும் அருவி, ஆயிரம் அடி அகலமும் கனடா பக்கமுள்ள குதிரை லாட வடிவிலான பகுதி 2600 அடி அகலமும் உடையவை.

நயாகரா ஆற்றை , ஆட்டுத் தீவு என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவு தடுத்து இரண்டாகப் பிரிப்பதால் அமெரிக்கப்பக்கம் ஓர் அருவியும் கனடா பக்கம் ஓர் அருவியுமாக விழுகின்றன. ஸ்ரீரங்கம் காவிரியை , காவிரி, கொள்ளிடம் என்று பிரிப்பது போல. இது சமவெளி. அது மலைப்பகுதி.

பிரெஞ்ச், ஐரோப்பிய பாதிரிகள் இங்கிருந்த ஆதிவாசிகளான செவ்விந்தியர்களிடம் சென்று சமயப் பணி செய்யப் போனபோதுதான் 1600களின் ஆரம்பத்தில் அருவிகளைப் பார்த்தார்கள். இப்போது அருவியை சென்று பார்க்க பல நவீன வசதிகள் உள்ள காலத்திலேயே, அருவியை நெருங்கியதும், அதன் பிரும்மாண்டமும், அழகும் பயத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்துகின்றன. 400 ஆண்டுகள் முன்னால் அதனருகில் சென்று பார்த்தவர்களின் மன அனுபவம் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்தால் மலைப்பாக இருக்கிறது.

நயககரேகா என்றழைக்கப்பட்ட அந்தப் பழங்குடி மக்களின் மொழியில் ஓங்குவிஹாரா என்ற சொல்லிலிருந்துதான் நயாகரா என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. வளைகுடா என்று ஒரு பொருளும் இடி முழக்கம் என்று இன்னொரு பொருளும் உள்ளனவாம்.

அமெரிக்கப்பகுதியில் அருவியை சற்று தொலைவிலிருந்து பார்ப்பதற்கு சுமார் 300 அடி உயரத்தில் ஒரு மாடம் இருக்கிறது. அருளுடன் அங்கு சென்று அருவியைப் பார்த்தேன். கீழே போய் படகில் அருவியருகே போய்விட்டு வாருங்கள்,என்றார் அருள். 300 அடி கீழே பார்த்தேன் படகுத் துறையில் பலர் காத்திருந்தார்கள். மோட்டார் படகு தயாராக இருந்தது.

எனக்குப் பயமாக இருந்தது. அந்த அருவியின் அருகே போவதா அருள் பல முறை போய் வந்திருப்பதால் என்னைத் தனியாக வேறு போக சொல்கிறார். மிகவும் தயங்கினேன். இதயத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி ஆப்பு வைத்து ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. ஏதேனும் பாதிப்பு வருமோ, மருத்துவரிடம் இது பற்றிக் கேட்டுக் கொண்டு வராமல் போய்விட்டே னே என்றெல்லாம் யோசித்தேன். அருள், என்னைக் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறைதான். தைரியமாகப் போங்கள் என்றார்.

போனபிறகுதான் தெரிந்தது, எவ்வளவு பரவசமான அனுபவம், எவ்வளவு பாதுகாப்பான ஏற்பாடு என்பதெல்லாம்...

படகில் போய் அருவியின் அடியில் நனைந்ததுமட்டுமல்ல.. அடுத்த நாள் இன்னொரு பக்கம் அருவியின் அருகில் மரப்பாலத்தில் சென்று அதைத் தொட்டுப் பார்த்தது இன்னும் பரவசமான அனுபவமாக இருந்தது. அதற்கும் தனியாகவே சென்றேன்.

பீஹாரில் சிலவருடங்கள் முன்பு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மலைக்குச் சென்ற அனுபவம் நினைவுக்கு வந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com