ஆப்பிள் தேசம்-6: நயாகராவும் நம்ம ஊரு குற்றாலமும்!

சில வருடங்களுக்கு முன்னர் திருச்சி லயன்ஸ் மாவட்ட சங்கத்தினர் நடத்திய விஷன் 2020 திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுடன் இந்தியச் சுற்றுப் பயணம் சென்றிருந்தேன். அப்போது பீகாரில் நாளந்தா பல்கலைக்கழக இடிபா

சில வருடங்களுக்கு முன்னர் திருச்சி லயன்ஸ் மாவட்ட சங்கத்தினர் நடத்திய விஷன் 2020 திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்களுடன் இந்தியச் சுற்றுப் பயணம் சென்றிருந்தேன். அப்போது பீகாரில் நாளந்தா பல்கலைக்கழக இடிபாடுகளைப் பார்த்துவிட்டு, அருகில் இருந்த ஒரு கிராமத்துக்குச் சென்றோம். அங்கே ஒரு மலை உச்சியில் ஜப்பானியர்கள் புத்தருக்கு சலவைக் கல்லில் கோவில் கட்டியிருந்தார்கள். மலை உச்சிக்குக் கம்பி ரயிலில்தான் செல்ல வேண்டும்.

பெயர்தான் ரோப் கார், விஞ்ச் என்றெல்லாம். அசலாக அது கம்பியில் ஒரு கொக்கியில் தொங்கும் ஒற்றை இரும்பு நாற்காலி. பத்தடி இடைவெளியில் அடுத்தடுத்துத் தொங்கும் நாற்காலி. ஒன்றில் ஒருவர்தான் உட்காரலாம். உட்கார்ந்ததும் குதிரை வண்டிகளில் பின்புறம் இருப்பது போன்ற கொக்கியை நாமே எடுத்து செருகிக் கொள்ளவேண்டும். துருப் பிடித்திருந்த அந்தக் கம்பி நாற்காலி மலை உச்சி நோக்கிப் பயணத்தை தொடங்கியதும், அது ஆடிய ஆட்டம் இருக்கிறதே, இத்தனை வருடம் கழித்து நினைத்துப் பார்த்தால் கூட நடுக்கமாக இருக்கிறது. கீழே குனிந்து பார்த்தால் இன்னும் பயம் அதிகரிக்கும். காரணம், கம்பி நாற்காலி செல்லும் பாதை நெடுக நேர்கீழே கரடுமுரடாகப் பாறைகள். விழுந்தால் நிச்சயம் மரணம்தான்.

மேலே போய்ப் பார்த்த புத்தர் கோயிலின் அழகும் அமைதியும் தருகிற மகிழ்ச்சி, திரும்பவும் இதே கம்பி நாற்காலியில் இறங்க வேண்டுமென்று நினைக்கும்போதே காலியாகிவிடும். மரணத்தில் இருந்து தப்பிக்க இரண்டு வாய்ப்புகளைத் தருவதாக அந்தக் கம்பி நாற்காலி இருந்தது.

நயாகராவின் பிரம்மாண்டத்துடன் ஒப்பிடும்போது அந்த பீகார் குன்று ஒரு சுண்டைக்காய். அதைக் கடப்பதையே பெரும் ஆபத்துகள் உடையதாக நாம் ஆக்கி வைத்திருக்கிறோம். நயாகராவிலோ, முதலில் அருளிடம் நான் படகில் போகமாட்டேன் என்று பயந்தது எவ்வளவு அசட்டுத்தனம் என்று வெட்கப்படும் அளவுக்குப் பாதுகாப்பான ஏற்பாடுகள்.

படகுப் பயணத்தில் நயாகரா அருவியில் அமெரிக்கப் பகுதியில் இருக்கும் முதல் அருவியில் தொடங்கி, அடுத்து மணமகள் முகத்திரை ( பிரைடல் வெய்ல்) எனப்படும் மெல்லிய திரை போல சாரல் அடிக்கும் இரண்டாம் அருவி விழும் இடமருகே போய் அடுத்து கனடா பகுதியில் இருக்கும் லாட வடிவ அருவியின் அடிப்பகுதியைக் கடந்து திரும்புகிறோம். இயற்கையின் பிரும்மாண்டமும், அழகும் வசீகரிக்காத மனங்களே, அப்போது அந்தப் படகில் இருக்க முடியாது.

அன்றிரவு அருளுடன் அருவி அருகே ஓர் ஓட்டலில் தங்கினேன். முன்னிரவில் மறுபடியும் நயாகராவைக் காண வந்தபோது வண்ண வண்ண ஒளிவிளக்குகளால் நயாகராவின் முகமே மாறிப் போயிருந்தது. இரவு உணவுக்கு வேறொரு இந்திய உணவகத்தைத் தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து சாப்பிட்டோம். இந்திய உணவு என்பதற்கு பதில் அதற்கு வேறு ஏதாவது பெயர் வைத்து இந்தியாவின் பெயரைக் காப்பாற்றலாம்.

நயாகாரவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் ஏராளமான இந்தியர்கள் இருக்கிறார்கள். கணிசமான அளவு தமிழர்களும் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் இதர பகுதிகளில் இருக்கும் அளவு, தரமான இந்திய உணவகங்கள் ஏனோ நயாகராவில் இல்லை.

மறுநாள் நயாகராவின் இன்னொரு பக்கத்தை தரிசித்தேன். அருவியின் மேல்பகுதியில் பக்கத்தில் இருக்கும் சமவெளியில் இருந்து, நெடுக ஒரு சுரங்க லிஃப்ட் அமைத்திருக்கிறார்கள். லிஃப்ட்டில் கீழே வந்து இறங்கினதும், மரப்பாலப் படிக்கட்டுகள் ஆரம்பிக்கின்றன. இவை அருவியின் அடிப்பாகத்தில் தொடங்கி, மேல் வரை அருவியின் பக்கத்திலேயே கட்டப்பட்டிருக்கின்றன. இதில் நட(னை)ந்து சென்றால், அருவியைத் தொட்டுப் பார்க்கலாம். சோப்பும் ஷாம்பூவும் இருந்தால் குளிக்கக் கூட குளித்துவிடலாம். (அனுமதி கிடையாது). எந்த அளவுக்குப் பக்கத்தில் செல்கிறோம் என்றால் நீங்கள் விரும்பாவிட்டால் கூட முழுக் குளியல் முடிந்துவிடும்.

இங்கே செல்லும்போது அணிவதற்கு ஒரு மெல்லிய பிளாஸ்டிக் கோட்டையும், காலுக்கு ரப்பர் செருப்பையும் தருகிறார்கள். அவற்றை நினைவுப் பொருட்களாக நாமே வைத்துக் கொள்ளலாம். நான் செருப்பை பத்திரமாகக் காப்பாற்றி இந்தியாவுக்குக் கொண்டு வந்துவிட்டேன். (என் மூக்குக் கண்ணாடியைத்தான் பயணத்தின்போது தொலைத்த இடம் தெரியாமலே தொலைத்துவிட்டேன்.)

மொத்தத்தில் நயாகரா அருவியைப் பல இடங்களில் இருந்து பல கோணங்களில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. லாங் ஷாட், டாப் ஆங்கிள், லோ ஆங்கிள், மிட்ஷாட், க்ளோசப், வலது பக்கம், இடது பக்கம் என்று பல விதங்களில் பார்க்க முடிகிறது.

நயாகரா அருவியின் மேற்புறத்தில் இருக்கும் தீவுப்பகுதிகள், அற்புதமான புல்வெளிகள் மரங்களுடன், பூங்காக்களாகத் திகழ்கின்றன.

அண்மையில் நம்ம ஊர் குற்றாலத்துக்குப் போயிருந்தேன். குளிப்பதற்கான அருவிகள் நிறைந்த இடம் குற்றாலம். 31 வருடங்கள் கழித்து குற்றாலத்தைப் பார்க்கும்போது தென்பட்ட முக்கியமான வித்தியாசம், குளிக்கும் இடங்களில் பிரகாசமான விளக்குகளுடன் பாதுகாப்பான கைப்பிடிக் கம்பிகள் போட்டிருப்பதுதான். மற்றபடி அருவியோரத்தில் இருக்கக் கூடிய கோவில்கள் முதல், கடைகள், நுழைவுப்பாதை எல்லாமே அழுக்காகத்தான் இருக்கின்றன.

ஐந்தருவியில் ஒரு கண்காணிப்பு டவர் கட்டியிருக்கிறார்கள். அதிலும் இன்னார் உபயம் என்று விளம்பரதாரர் பெயர். பெண்கள் இங்கே உடை மாற்றக் கூடாது என்று போர்டு வைத்தால் அதில் மூன்றில் ஒரு பகுதி ஒரு உபயதாரரின் பெயர். நயாகராவிலும் அறிவிப்புப் பலகைகள் இருக்கின்றன. கவனத்தை ஈர்த்து, அதே சமயம் கண்ணை உறுத்தாமல் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடைகள் உள்ள பகுதிகள் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டைப் பிடித்திருக்கிற ஃபிளெக்ஸ் வியாதியை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மரபான பெயர்ப் பலகை தீட்டும் ஓவியர்களை ஒழித்துக் கட்டிவிட்டோம்.

பூப்பெய்திய சிறுமிக்குக் கொண்டாடும் மஞ்சள் நீராட்டு விழா ஃபிளெக்ஸ்களில் அவள் படத்தை சினிமா நடிகைகள் மாதிரி போட ஆரம்பித்துவிட்டார்கள். எதற்குத்தான் ஃபிளெக்ஸ் என்று வரையறையே இல்லை. இன்று மாலை 6.30க்கு தன் வீட்டு டி.வி.யில் மானாட மயிலாட பார்க்க விருக்கும் சுரேஷை வாழ்த்தி, சொந்தமும் நட்பும் என்று ஃபிளெக்ஸ் போடும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

நயாகராவில் மட்டுமல்ல, அமெரிக்காவில் நான் சென்ற எந்த இடத்திலும் ஃபிளெக்ஸ் போர்டுகள் இந்த அளவுக்கு இல்லை. மொத்தமாக விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுதான் இருக்கும். வினைல் எனப்படும் பிளாஸ்டிக் பூச்சுடைய துணிகளில் அச்சிடுவதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் மேலை நாடுகள்தான். வினைல், ஃபிளெக்ஸ்களை உருவாக்கியதும் அவர்கள்தான். வெளி நாட்டிலிருந்துதான் இதற்கான மெஷின்களை நாம் தருவித்துக் கொண்டிருக்கிறோம். சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி நமக்கு விற்றுவிட்டு அவர்கள் எச்சரிக்கையோடு பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் பயோ டீகிரேடபிள் எனப்படும் இயற்கையாக மக்கி இயற்கையுடன் கலந்துவிடக் கூடிய பொருட்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

சின்னச் சின்ன விஷயங்களில்கூட இந்த கவனம், அவர்களுக்கு இருக்கிறது. உணவகங்கள் ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களில் மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டிருக்கும் பகுதிகளில், மரத்தையும் செடியையும் சுற்றியுள்ள பகுதியில் மண்ணைப் பார்த்தபோது அது வேறு மாதிரியாகத் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தால் மண் மீது, மரச் சக்கைகளை, தச்சுக் கழிவுகளை பரப்பியிருக்கிறார்கள். அவை மண்ணில் இறங்கியது போக எஞ்சிய உபரி நீரை உறிஞ்சிக் கொண்டு விடுகின்றன. தண்ணியில்லாதபோதும் செடிக்கு, இந்த சக்கைகளிலிருந்து நீர் கிடைக்க முடியும். தண்ணீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இப்படிச் சூழல் பராமரிப்பு பற்றிய ஒரு நுட்பமான கவனம் அங்கே செயல்படுகிறது.

நயாகரா மின் திட்டமே சூழல் அக்கறைக்கு ஒரு எடுத்துக் காட்டு. அருவிக்கு மேலே ஆற்றில் இருந்தே நிலத்துக்குள் வெட்டப்பட்ட, பிரும்மாண்டமான நான்கு சுரங்கக் கால்வாய்கள் மூலம் நயாகரா ஆற்று நீர், அருவியின் கீழ்ப்புறம் கொண்டு வரப்பட்டு, அங்கே அதிலிருந்து டர்பைன்கள் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது. மின் உற்பத்தி முடிந்ததும், நீரை அப்படியே ஆற்றில் விட்டு விடுவதில்லை. மறுபடியும் சுரங்கக் கால்வாய்கள் குழாய்கள் வழியே அருவிக்கு மேல் பக்கம் ஆற்றுக்கு அனுப்புகிறார்கள். அது அருவியாகக் கொட்டுகிறது.

சுற்றுலாவா, மின்சாரமா என்ற கேள்வி நயாகரா திட்டத்தில் எழுந்தது உண்டு. 1870களில் பொது மக்கள் நயாகரா அருவியைப் பார்க்கச் செல்லவே அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்கப் பகுதியில் இருக்கும் ஆட்டுத் தீவில், நயாகரா மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உருவாகி வந்தன. தீவே நாசமாகிவிடும் நிலை வந்தது.

அப்போது ஃப்ரீ நயாகரா - நயாகராவை விடுதலை செய் என்ற இயக்கம் தொடங்கப் பட்டது. இதை நடத்தியவர்கள் ஓவியர்கள், சிற்பிகள், கட்டடக் கலைஞர்கள், பேராசிரியர்கள். (இங்கே இவர்களெல்லாம் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம் )

நயாகராவைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் தொழிற்சாலைகளை அகற்றிவிட்டு, பழையபடி இயற்கை எழிலுடன் பூங்காக்கள் அமைக்க வேண்டுமென்று கோரிய மக்கள் இயக்கம் வலுவடைந்தது. 1882ல் நயாகரா அருவி சங்கம் என்ற அமைப்பு மக்களைத் திரட்டி, பெரும் கடித இயக்கம் நடத்தியது.

இதையடுத்து தனியார்வசம் இருந்த பகுதிகளையெல்லாம் நியூயார்க் மாநில அரசு விலைக்கு வாங்கியது. தொடர்ந்து அவ்வபோது அமெரிக்க அரசும் கனடா அரசும் போட்ட பல்வேறு ஒப்பந்தங்களின்படி, நயாகரா ஆற்று நீரில் பாதி அளவை மட்டுமே மின்சாரத்துக்காக எடுப்பதென்று முடிவாயிற்று. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காலங்களில், இந்த நீரின் அளவைக் குறைத்துக் கொண்டு, அருவியில் அதிக நீர் வருவதற்கும் வழி செய்யப்பட்டது. சராசரியாக நிமிடத்துக்கு 20 முதல் 40 லட்சம் கன அடி நீர் அருவியில் விழுகிறது.

நயாகராவைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகள் முதல், அதில் தொடர்ந்து சாகசங்கள் செய்ய முயற்சித்தவர்கள் வரை பல சுவையான நிகழ்ச்சிகள் நயாகராவின் வரலாற்றில் இருக்கின்றன. இவற்றைத் தொகுத்து ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். நயாகராவில் இருக்கும் தகவல் மையத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com