'சிறுத்தை'யை நினைத்தால் பயமாக இருக்கிறது!

சிறுத்தை' பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியது: ""கௌதம் வாசுதேவ்மேனனின் "காக்க காக்க' படத்தில் என்கவுன்டர் போலீஸôகவும், பாலாவின் "பிதாமகன்' படத்தில் துறு துறு இளைஞனாகவும் நடித்திருந்தேன்.
'சிறுத்தை'யை நினைத்தால் பயமாக இருக்கிறது!

சிறுத்தை' பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியது: ""கௌதம் வாசுதேவ்மேனனின் "காக்க காக்க' படத்தில் என்கவுன்டர் போலீஸôகவும், பாலாவின் "பிதாமகன்' படத்தில் துறு துறு இளைஞனாகவும் நடித்திருந்தேன். இரண்டு கேரக்டர்களும் பெரிய அளவில் பேசப்பட்டன. என் சினிமா கேரியரை மாற்றிப் போட்ட படங்கள் என அந்தப் படங்களை சொல்லலாம். அந்த இரண்டு படங்களுக்காவும் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்தப் படங்களின் உந்து சக்திதான் என்னை அடுத்த இடங்களுக்குக் கொண்டு சென்றது. ஆனால் என் தம்பி கார்த்தி 5-வது படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறான். "சிறுத்தை' படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், அதே நேரத்தில் இன்னொரு கேரக்டரிலும் நடித்திருக்கிறான். நான் இரண்டு படங்களில் மாற்றி மாற்றி கஷ்டப்பட்டு நடித்ததை இவன் ஒரு படத்திலேயே செய்து விட்டான். சிறுத்தையை நினைத்தால் எனக்கே பயமாக இருக்கிறது'' என்றார்.



ஷக்தியின் ஆக்ஷன் அவதாரம்!



"ஆட்டநாயகன்' படம் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் ஷக்தி. ""இதுவரை மென்மையான கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்திருக்கிறேன். ரசிகர்கள், நண்பர்கள் என எல்லோரும் ஆக்ஷன் படங்கள் எதுவும் நடிக்கும் எண்ணம் இல்லையா? எனக் கேட்டனர். அந்தக் குறை இப்போது நீங்கி உள்ளது. இப்போது ஆக்ஷன் படம் வந்திருக்கிறது. வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் எல்லோரும் ரசிக்கும்படியான திரைக்கதை கிடைத்ததால் உடனே வந்து விட்டேன். நிறைய பேர் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். அப்பாவும் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வெகுவாகப் பாராட்டினார். மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இதே மாதிரியான படங்களில் நடிப்பேனா என்பது தெரியவில்லை. ஆக்ஷன் படம் என்றதும் எந்த இடத்திலும் பன்ச் வசனங்கள் வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். அதே மாதிரியே இயக்குநரும் செயல்பட்டார். முதல் ஆக்ஷன் படத்திலேயே பன்ச் வசனம் பேச எனக்குப் பிடிக்கவில்லை'' என்றார் ஷக்தி.



காதலின் பரிணாமங்கள்!




மாருதி குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "முதல் காதல் மழை'. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கன்னட படவுலகைச் சேர்ந்த சுவாதிகா என்பவர் அறிமுகமாகிறார். மதுவண்ணன் இயக்குகிறார். ""காதலின் வெவ்வேறு பரிணாமங்களைச் சொல்லுவதுதான் கதை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான காதலை தாண்டி, உறவு, நேசம், அன்பு ஆகியவற்றின் உணர்வுகளில் பயணிப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான காதல் இருக்கிறது. பெண், பணம், பக்தி என நாளுக்கு நாள் மனிதனுக்கு மனிதன் காதல் மாறிக் கொண்டே வருகிறது. இந்தக் காதலின் மாற்றங்களைத்தான் இதில் படமாக்கியிருக்கிறோம். இரண்டு வேறுபட்ட குடும்பங்களின் பின்னணியில் இது சொல்ல முடிந்திருக்கிறது. புது அனுபவமாக இருக்கும். வைரமுத்து, கிருத்தியா பாடல்களை எழுதியுள்ளனர். எஸ்.பி.பி. ""வீர தீர மாருதி...'' என்ற பாடலை பாடியுள்ளார். ஆஞ்சநேயரின் மகிமையை சொல்லும் பாடலாக இது அமைந்துள்ளது'' என்றார் இயக்குநர் மதுவண்ணன்.



நிறைவேறிய சினிமா கனவு!




அறிமுக இயக்குநர் ஏ.எஸ். பிரபு இயக்கி வரும் "படை சூழ' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் கணேஷ் பிரசாத். ""படிப்பை முடித்தவுடன் சினிமாவில் ஆர்வம் வந்து சென்னை வந்து விட்டேன். சினிமாவுக்கான பயிற்சிகளைக் கடந்த 4 வருடங்களுக்கு மேல் கற்று வருகிறேன். இப்போது "படை சூழ' படத்தின் மூலம் என் சினிமா கனவு நிறைவேறி இருக்கிறது. படத்தில் பிரகாஷ்ராஜ் தம்பி பிரசாத்ராஜ்தான் வில்லன். அவருடன் இரண்டு பயங்கர சண்டை காட்சிகளில் மோதினேன். சண்டை காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன. ஆக்ஷன் படம் என்பதால் நிறைய பயிற்சிகள் எடுத்து இந்தப் படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். படத்தின் பிரிவியூ காட்சிகளைப் பார்த்த பல தயாரிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள். தற்போது மேலும் சில கதைகளைக் கேட்டு வருகிறேன்'' என்றார் கணேஷ் பிரசாத்.



ஆணுக்கும் பெண்ணுக்குமான...



நாசிகா பிலிம்ஸ் நிறுவனத்துடன் கோல்டன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் "சங்கர்'. கந்தேஷ் என்பவர் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஹாசிகா நடிக்கிறார். இவர்களுடன் புதுமுகங்கள் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். வீரா என்ற புதுமுகம் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசிய போது, ""தினம் தினம் எத்தனையோ பெண்களைக் கடந்து போகிறோம். ஆனால் ஏதோ ஒரு பெண்ணின் மீதுதான் காதல் ஏற்படுகிறது. இதே மாதிரியான உணர்வுகள்தான் பெண்களுக்கும். ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள்தான் படைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் மட்டும் அனைத்தையும் வெளிப்படுத்தி விடுகிறார்கள். இதை மையப்படுத்திதான் கதை உருவாகி இருக்கிறது. கதை முழுவதும் எதார்த்தமாக வந்துள்ளது. பெரும்பகுதி ராஜபாளையம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தஷி என்பவர் இசையமைக்கிறார். முத்துலிங்கம் உள்ளிட்டோர் பாடல்களை எழுதுகின்றனர் என்றார்.



மகாபலிபுரம் டூ பாங்காக்!




தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மங்கத்தா'. அஜித்தின் 50-வது படமான இந்தப் படத்தை வெங்கட்பிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நாகார்ஜூனா நடிப்பதாக முதலில் பேசப்பட்டது. ஆனால் இப்போது அர்ஜூன் அந்தப் பாத்திரத்தில் நடித்து வருகிறார். "ஜி', "கிரீடம்' படங்களுக்குப் பின் திரிஷா அஜித்துடன் இந்தப் படத்தின் மூலம் ஜோடியாகிறார். லட்சுமிராய், வைபவ், பிரேம்ஜி, ஜெய்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக மும்பை தாராவி பகுதியைப் போலவே செட் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய காட்சிகள் இந்த செட்டில் கடந்த 40 நாள்களாக படமாக்கப்பட்டு வருகின்றன. இதே போல் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் பாங்காக் நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. யுவன்ஷங்கர் ராஜா இசையில் வாலி, கங்கை அமரன் எழுதிய மூன்று பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



அட்டையில் : தமன்னா



தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com