இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம்-24: நிதி நெருக்கடியைத் தீர்த்த பத்திரிகையாளர்!

சுதந்திரதேவி சிலையைப் புகைப்படங்களில் நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்க்கும்போது கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. நான் நினைத்த அளவுக்கு சுதந்திர தேவி உயரமான (அமெரிக்க அல்லது ப்ரெஞ்ச்) பெண்ண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:22 am

ஞாநி

சுதந்திரதேவி சிலையைப் புகைப்படங்களில் நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்க்கும்போது கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. நான் நினைத்த அளவுக்கு சுதந்திர தேவி உயரமான (அமெரிக்க அல்லது ப்ரெஞ்ச்) பெண்ணாக இருக்கவில்லை. கொஞ்சம் சராசரியான இந்தியப் பெண் போல குள்ளமாகவே தோன்றினாள். ஒருவேளை அது காட்சிப் பிழையாகக் கூட இருக்கலாம். பொதுவாக மனிதர்களுக்குச் சிலை வைக்கும்போது அசல் அளவில் செய்ய மாட்டார்கள். கூடுதல் உயரம், அகலம் வைத்து செய்தால்தான் தரையிலிருந்து சிலையை அண்ணாந்து பார்க்கும்போது அசல் மனிதரின் அளவிலேயே இருப்பது போலத் தோன்றும். அப்படிப் பார்த்த போது எனக்கு சுதந்திரதேவி சற்று குள்ளமோ என்று தோன்றியது.

 ஆனால் சிலையின் அளவு மிக பிரம்மாண்டமானது. சிலையின் முகத்தில் இருக்கும் மூக்கு மட்டுமே நான்கடி நீளம். வாய் மூன்றடி அகலம். ஆள்காட்டி விரல் மட்டும் எட்டடி நீளம். கையின் மொத்த நீளம் 42 அடி. சிலை மட்டும் 151 அடி உயரம் இருக்கிறது. (சுமார் பத்து மாடிக் கட்டட உயரம்). அதன் பீடம் இன்னொரு பத்து மாடி உயரம். 154 அடிகள். அதற்குள் இரண்டு லிஃப்டுகள் இருக்கின்றன. இந்த சிலையின் உச்சி வரை சிலையின் உட்புறமாகவே செல்ல முடியும். உயர்த்திப் பிடித்திருக்கும் ஜோதியைச் சுற்றிலும் ஆட்கள் நிற்கும் அளவுக்கு ஒரு பால்கனியே இருக்கிறது. ஆனால் அங்கே செல்ல

 1916}க்குப் பிறகு யாரையும் அனுமதிப்பதில்லை. தலையில் சூட்டியுள்ள கிரீடத்தில் இருக்கும் ஜன்னல்கள் போன்ற அமைப்பு வரை செல்லலாம். எனக்கு உயரத்தில் இருந்து கீழே பார்த்தால் தலை சுற்றும் என்பதால் நான் செல்லவில்லை. சிலையின் நூற்றாண்டு விழாவின்போது 1986-ல் அதிபர் ரீகனின் மனைவி நான்சி அங்கிருந்துதான் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

 இந்தச் சிலை உருவான வரலாறு மிகவும் சுவையானது. பிரான்சில் உருவாக்கப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தச் சிலை எட்வர்ட் லபோலே என்ற ஒரு பிரெஞ்ச் சட்டப் பேராசிரியரின் கனவு. அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து விடுதலையடைய நடத்திய போரில் அதற்குப் பெரும் உதவிகள் செய்த நாடு பிரான்ஸ். அங்கே மூன்றாம் நெப்போலியனின் அரசாட்சி முடிந்து அமெரிக்காவைப் போன்ற ஒரு குடியரசு மலர வேண்டுமென்பது லபோலேவின் விருப்பமாக இருந்தது.

 அமெரிக்கா விடுதலையடைந்து நூறாண்டுகள் முடிந்தபோது 1865-ல் , பிரான்சின் வெர்செய்ல்ஸ் நகரில் லபோலே நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் பேசும்போது, சுதந்திர உணர்வைக் குறிக்கும் ஒரு பிரம்மாண்டமான சிலையை, அமெரிக்காவுக்குப் பிரான்சின் பரிசாகத் தரவேண்டும் என்றார். விருந்தில் இருந்த அவரது இளம் நண்பரும் சிற்பியுமான பர்த்தோல்டி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

 பர்த்தோல்டி எகிப்து நாட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த பிரமிடுகள் அவரைக் கவர்ந்தன. அந்த அளவுக்குப் பிரம்மாண்டமாக தன் சுதந்திர தேவி சிலை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆறு வருடம் கழித்து, அமெரிக்கா சென்றபோது, பர்த்தோல்டி எந்த இடத்தில் சிலையை வைக்கலாம் என்று (சிலை தயாரிப்பதற்கு முன்பாகவே) சுற்றிப் பார்த்தார். எல்லீஸ் தீவுக்குப் பக்கத்திலிருக்கும் பெட்லோ தீவில் நட்சத்திர வடிவத்தில் ஒரு பழைய கோட்டை இருந்தது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் சிலையை வைக்கலாம் என்று பர்த்தோல்டி முடிவு செய்தார்.

 சிலை அவ்வளவு வேகமாகத் தயாராகிவிடவில்லை. நெப்போலியன் ஆட்சி முடிந்து மூன்றாம் குடியரசு பிரான்சில் அமைந்த பின்னர், 1876-ல்தான் வேலை ஆரம்பித்தது. சுதந்திர தேவியின் காலடியில், அறுக்கப்பட்ட அடிமைச் சங்கிலி ஒரு குறியீடாக வைக்கப்பட்டது. ஒரு கையில் ஒளிபரப்பும் ஜோதி. இன்னொரு கையில் சட்டத்தைக் குறிக்கும் புத்தகம். தன் பட்டறையில் பர்த்தோல்டி முதலில் நான்கடி சைசில் களிமண்ணில் சிலை செய்தார். அதன் பிறகு ஒன்பதடி உயரத்தில் மரத்தில் ஒரு சிலை செய்தார். அடுத்து 36 அடி உயரத்தில் ஒன்றை உருவாக்கினார். இந்தச் சிலைகளுக்கு மாடலாக இருந்தது பர்த்தோல்டியின் அம்மாதான். சிலையின் முகம் அவருடையது. உடலமைப்புக்கு மாடல் பர்த்தோல்டியின் சிநேகிதி எமிலியின் உடல்.

 சுதந்திரதேவி சிலையை உட்புறம் வலிவான இரும்பு சட்டங்களால் ஆன ஓர் எலும்புக் கூடு போன்ற அமைப்புதான் தாங்கி நிற்கிறது. அதன் மீது சுற்றிலும் பொருத்தப்பட்ட செப்புத்தகடுகளால் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. உட்புற இரும்புக் கூட்டை தயாரித்தவர் பிரான்சின் புகழ் பெற்ற பாலம் கட்டும் நிபுணர் குஸ்தாவே ஈஃபல். இவர் உருவாக்கியதுதான் பாரிசில் இருக்கும் ஈஃபல் டவர்.

 சிலை தயாரிப்புச் செலவுக்குப் பணம் பிரான்சிலும் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் திரட்டப்பட்டது. சிலையின் முக்கிய பாகங்களை முதலில் தயாரித்து அவற்றை ஊர் ஊராக எடுத்துப் போய் கண்காட்சி நடத்தி அதற்கு டிக்கட் வைத்து மக்களிடம் பணம் திரட்டினார்கள். முதலில் தயாரானது ஜோதியும் அதை ஏந்தி நிற்கும் வலது கையும்தான். இதை 1876-ல் அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் நடந்த அமெரிக்க புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காட்சிக்கு வைத்தார்கள். பிரான்சிலிருந்து இதைக் கப்பலில் அமெரிக்காவுக்குக் கொண்டு வருவதற்கே 21 பெட்டிகள் தேவைப்பட்டன.

 பின்னர் 1878-ல் சிலையின் தலை தயாராயிற்று. இதை பாரிசில் கண்காட்சியாக வைத்து பணம் திரட்டப்பட்டது. ஜோதி பிடித்திருக்கும் கை, தலை, இவற்றுக்குள் ஏறிப் பார்க்க ஆளுக்கு 50 சென்ட் கட்டணம். இப்படியெல்லாம் பணம் திரட்டியும் கிடைத்த பணம் போதவில்லை. சிறப்பு லாட்டரி குலுக்கல் நடத்தினார்கள். சிலையின் களிமண் பொம்மைகளை விற்று பணம் திரட்டினார்கள். 1879-ல் ஒருவழியாக ஏழரை லட்சம் டாலர்கள் வரை சேர்க்க முடிந்தது.

 சிலை தயாரிப்பு வேலை 1884-ல் முடிந்தபோது அதைப் பார்க்க லபோலே உயிரோடு இல்லை. முன் வருடமே அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.

 அமெரிக்காவில் சிலைக்கான பீடம் தயாரிப்பு வேலைகள் நடந்தன. பீடத்துக்கு மட்டும் 24 ஆயிரம் டன் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவர் அமெரிக்காவின் பிரபலமான ஆர்க்கிடெக்ட் மாரிஸ் ஹண்ட்.

 பீடச் செலவுக்கும் முதலில் பணம் கிடைக்கவில்லை. அமெரிக்க மத்திய அரசும் நியூயார்க் நகர நிர்வாகமும் கொஞ்சம் பணம் கொடுத்தன. ஆனால் போதவில்லை. அப்போது யாரும் இதை அமெரிக்காவுக்கான சிலையாகக் கருதவில்லை. நியூயார்க்குக்கான சிலை என்றே அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் நினைத்தார்கள். பிரான்சில் ஏழரை லட்சம் டாலர் திரட்டின அதே சமயத்தில் அமெரிக்காவில் வெறும் ஒன்றே முக்கால் லட்சம் டாலர்தான் திரண்டிருந்தது.

 ஒரு பத்திரிகையாளர்தான் இந்த நிதி நெருக்கடியைத் தீர்த்து வைத்தார்.

 சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருதுகள் இன்றும் வழங்கப்படுவது அவர் பெயரில்தான். அவர்தான் ஜோசப் புலிட்சர். ஹங்கேரியிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவரான புலிட்சர், தி வேர்ல்ட் என்ற இதழை நடத்திக் கொண்டிருந்தார். சிலைக்கு நன்கொடை தருவோர் பெயர்கள் தன் இதழில் தினமும் வெளியிடப்படும் என்று அறிவித்தார். பத்திரிகையின் விற்பனை 50 ஆயிரம் பிரதிகள் கூடியது. ஆளுக்கு ஒரு டாலர், அரை டாலர் என்றெல்லாம் பள்ளிக் குழந்தைகள் முதல் சாதாரண மக்கள் வரை அனுப்பினார்கள். ஆகஸ்ட் 11, 1885 அன்று வெளியான தி வேர்ல்ட் இதழின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் புலிட்சர் அறிவித்தார்: ஒரு லட்சம் டாலர்கள் குவிந்துவிட்டன.

 பிரான்சில் தயாராகி இருந்த சிலையில் மொத்தம் முன்னூறு பாகங்கள் இருந்தன. அவற்றை 214 பெட்டிகளில் பிரித்து வைப்பதற்கே நான்கு மாதங்கள் ஆகின. பிரெஞ்ச் கடற்படைக் கப்பலில் அமெரிக்காவுக்கு அனுப்பினார்கள். நான்கு வாரப் பயணத்துக்குப் பின் கப்பல் வந்து சேர்ந்தது. திரும்பவும் முன்னூறு பாகங்களை இணைத்து சிலையை நிறுவ நேரம் பிடித்தது. இதற்கான செலவுக்கும் பணம் திரட்டப்பட்டது. பீடத்தை உருவாக்கிய கிராண்ட் அதற்காக தனக்குக் கிடைத்த சம்பளமான ஆயிரம் டாலரை நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.

 கடைசியில் 1886, அக்டோபர் 28-ந்தேதி சிலை திறக்கப்பட்ட அன்று நியூயார்க் நகரத்தில் பத்து லட்சம் பேர் கூடினார்கள். சிலை மீது பிரெஞ்ச் கொடி மூடப்பட்டிருந்தது. பீடத்தின் உச்சியில் சிலையின் காலடியில் நின்ற சிற்பி பர்த்தோல்டி, கீழே விழாவில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த செனட்டர் ஈவார்ட்டின் பேச்சு முடிந்ததும் கொடியை இழுத்து சிலையை திறக்க வேண்டுமென்று ஏற்பாடு. அந்த உயரத்தில் பேச்சு கேட்காது என்பதால், கீழிருந்து தனக்கு கைக்குட்டையை ஆட்டி சைகை செய்ய ஒரு பையனை நியமித்திருந்தார்.

 மேடைப்பேச்சில் புகழ் பெற்றவரான ஈவார்ட் பேச ஆரம்பித்ததும் ஒரு நொடி இடைவெளி விட்டு அடுத்த 

 வாக்கியத்தை தொடங்கும் முன்னால், அவர் பேசி முடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, பையன் கைக்குட்டையை ஆட்ட, பர்த்தோல்டி சிலையை திறந்துவிட்டார். அதைப் பார்த்த பரவசத்தில் மக்கள் எழுப்பிய ஆரவாரம் ,பீரங்கி முழக்கம், வாண வேடிக்கை சத்தத்தில் ஈவார்ட் பேசவே முடியாமல் போய்விட்டது ஆரவாரங்கள் அடங்கியதும் அமெரிக்க அதிபர் கிளீவ்லாண்ட் மட்டும் பேசினார்.

 அடுத்த நூறு வருடங்களில் சின்னச் சின்னதாக பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1906-ல் எம்மா லாசரஸ் எழுதிய கவிதை சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டது. 1916-ல் தி வேர்ல்ட் பத்திரிகை மறுபடியும் வாசகர்களிடமிருந்து 30 ஆயிரம் டாலர் திரட்டி சிலைக்கு ஒளி விளக்குகள் பொருத்த ஏற்பாடு செய்தது.

 1986-ல் சிலையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது பெரும் பழுது பார்க்கும் வேலைகள் நடந்தன. சிலையின் கையிலிருக்கும் ஜோதி பழையதைப் போலவே புதியதாக செய்து பொருத்தப்பட்டது. வெளிப்புற செப்புத்தகடுகளில் களிம்பு ஏறாமல் தடுக்க உட்புறம் பர்த்தோல்டி செய்திருந்த ரசாயன பூச்சுகள் புதுப்பிக்கப்பட்டன. ஈஃபல் அமைத்த இரும்பு எலும்புக் கூட்டின் சாரங்கள் பல எஃகினால் மாற்றப்பட்டன.

 இரட்டை கோபுர தாக்குதலையடுத்து மூன்றாண்டுகளுக்குச் சிலைக்கு பீடமருகே செல்வது தடை செய்யப்பட்டது. இப்போது ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு பயணிகள் மட்டுமே சிலையின் கிரீடம் வரை செல்லலாம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. நான் 2010-லேயே போய் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். இந்த வருடம் சிலை பீடத்தில் இன்னொரு படிக்கட்டு அமைப்பதற்கான வேலைக்காக பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது. சிலையைச் சுற்றியுள்ள பூங்காவில் முக்கியமான ஐந்து சிலைகள் இருக்கின்றன. லபோலே, பர்தோல்டி, ஈஃபல், புலிட்சர், எம்மா ஆகியோருக்கான இந்தச் சிலைகள் எளிமையான கம்பிச் சிற்பங்கள். ஒவ்வொன்றும் சுமார் மூன்றடி உயரம்தான்.

 சுதந்திரதேவி சிலையை நாலா பக்கத்திலிருந்தும் சுற்றிப் பார்த்தபோது, நிச்சயம் பிரமிப்பாகத்தான் இருந்தது. இதற்கு நிகரான சிலையாக குமரி முனையில் திருவள்ளுவர் சிலையை நாம் உருவாக்கத் தவறிவிட்டோமே, வள்ளுவர் தலைக் கொண்டை மீது ஏறிப் பார்க்கிற மாதிரி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எனக்குத் தோன்றுகிறது.

 அடுத்து நியூயார்க்கின் பிரம்மாண்டமான சென்ட்ரல் பூங்கா, நவீன ஓவிய கேலரிகள், பிராட்வே தியேட்டர், அட்லாண்ட்டா நகரின் சூதாட்ட விடுதிகள், பிலடெல்ஃபியாவில் அமீஷ் கிராமம், நியூஜெர்சியின் முதியோருக்கான மையங்கள், அமெரிக்காவில் செனட்டராக துணை சபாநாயகராக இருக்கும் இந்தியரின் அலுவலகம், அடாத மழையிலும் நம்மவர்கள் கிரிக்கெட் ஆடும் பூங்கா, கிராமத்து விவசாயப் பண்ணை என்றெல்லாம் பல இடங்களுக்கும் சென்றேன். அதை பற்றியும், சந்தித்த அமெரிக்கவாழ் தமிழர்களுடன் நடத்திய விவாதங்களைப் பற்றியும் விரிவாக, விரைவில் வெளிவர இருக்கும் ஆப்பிள் தேசம் நூலில் சொல்வேன்.

 இருபத்து நான்கு வாரங்களாக என் அமெரிக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட தினமணி கதிர் வாசகர்களுக்கும் இதை சாத்தியப்படுத்திய தினமணி ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றிகள். பிரிவோம். சந்திப்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.