இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம் - 20: நியூயார்க் பொங்கல்!

நான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜூன் ஜூலை மாதங்கள் அங்கே கோடைக் காலம். எனினும் அங்கே கோடை என்பதே நம்முடைய வசந்த காலம் போலத்தான் எனக்கு இருந்தது. விதிவிலக்காக நியூயார்க் நகரத்தில் நான் இருந்த இரு தி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

ஞாநி

நான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜூன் ஜூலை மாதங்கள் அங்கே கோடைக் காலம். எனினும் அங்கே கோடை என்பதே நம்முடைய வசந்த காலம் போலத்தான் எனக்கு இருந்தது. விதிவிலக்காக நியூயார்க் நகரத்தில் நான் இருந்த இரு தினங்களும் சென்னை வெயிலைப் போல நூறு டிகிரி தாண்டிவிட்டன. நியூயார்க் நகரின் அமைப்பு, ஜன நெரிசல் எல்லாம் எனக்கு மும்பையில் வெயிலில் சுற்றுகிற உணர்வை ஏற்படுத்தின.

வெயிலில் பல தெருக்களை நடந்து கடந்து எனக்கு இந்திய உணவு வாங்கித் தருவதற்காக ராஜேஷ் அலைந்தார். அன்றைய தினம் ஜூலை 4. அமெரிக்காவின் சுதந்திர தினம். எனவே பல கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரே தெருவில் நிறைய இந்திய உணவகங்கள் இருந்தன. ஒன்றிற்கு நல்ல தமிழ்ப்பெயர் - பொங்கல்.  சென்னை கார்டன் என்றொரு ஓட்டல். புதுச்சேரி ரபீக், சிதம்பரம் முத்து, கொழும்பு ரஹ்மான் என்று மூன்று தமிழர்கள் நடத்தும் சைவ உணவகத்தில் சாப்பிட்டோம். அதன் பிறகு நகரை ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதற்காக அமெரிக்காவின் உயரமான கட்டடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங்குக்கு சென்றோம்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் உயரமான கட்டடம் என்ற புகழில் இருந்த எம்பயர் இப்போது நியூயார்க்கின் உயரமான கட்டடமாகிவிட்டது. 102 மாடிகள் 1250 அடி உயரம். உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் இதை விட உயரமானவை. அவை தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதும் பழைய பெருமை எம்பயருக்கு வந்துவிட்டது. இது கட்டப்பட்டு 79 ஆண்டுகள் ஆகின்றன. உச்சியில் இருந்து நகரைப் பார்ப்பது என்ற அனுபவத்தைத் தவிர வேறு எதுவும் இங்கு சிறப்பம்சம் இல்லை. பெரும்பாலான டி.வி வானொலி ஒளி(லி) பரப்புக் கருவிகள் இந்தக் கட்டடத்தில்தான் பொருத்தப்பட்டிருக்கின்றன.  

கிங்காங் திரைப்படம் எம்பயர் கட்டடத்தை உலக அளவில் பிரபலப்படுத்தியது. நகரையே நாசம் செய்யும் ராட்சதக் குரங்கான கிங்காங் கையில் கதாநாயகியுடன் இந்த கட்டடத்தின் உச்சியில் ஏறிக் கொள்வதாகப் படத்தில் வரும். எம்பயர் கட்டடத்தின் உச்சி மாடிக்குச் செல்லும் நுழைவாயிலருகே கிங்காங் வேடம் போட்ட ஒருவருடன் கை குலுக்கி போட்டோ எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நானும் எடுத்துக் கொண்டேன். பாஸ்டன் ப்ரூடென்ஷியல் கட்டடத்தின் உச்சியில் தகவல்கள் நிரம்பிய காட்சியகம் இருந்ததைப் போலெல்லாம் எதுவும் இங்கே இல்லை. ஆனாலும் உயரமான இடத்திலிருந்து ஊரைப் பார்க்கும் ஆசையில் வருடத்துக்கு  38 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.  

இரட்டை கோபுரத்தின் மீது தீவிரவாதிகள் விமானத்தாக்குதல் நடத்தியதற்கு ஒருவேளை எம்பயர் கட்டட விபத்து உந்துதலாக இருந்திருக்கலாம். 1945 ஜூலையில் ஓர் அமெரிக்க விமானப்படை போர் விமானம் தவறுதலாக எம்பயர் கட்டடத்தின் மீது மோதி நொறுங்கியது. எண்பதாவது மாடியருகே நடந்த இந்த விபத்தில் 14 பேர் இறந்தார்கள். லிஃப்ட் அறுந்து விழுந்து 75 மாடிகள் கீழே விழுந்து நொறுங்கியது. லிஃப்ட் ஆபரேட்டர் ஆலிவர் மட்டும் உயிர் தப்பினார்  

முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார்கள். முதல் தற்கொலை கட்டடம் கட்டும்போதே நடந்தது. வேலை நீக்கம் செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளர்களில் ஒருவர் உடனே தற்கொலை செய்துகொண்டார். இந்த உயரமான கட்டடத்திலிருந்து விழுந்து இறப்பது கொஞ்சம் கடினமானதுதான். எல்விதா ஆடம்ஸ் என்பவர் 1979}ல் 86}வது மாடியிலிருந்து குதித்தபோது வெளியே வீசிக் கொண்டிருந்த காற்று அவரைத் திருப்பி 85}வது மாடிக்குள் தள்ளிவிட்டது  அவர் இடுப்பு எலும்பு முறிவுடன் உயிர் தப்பினார்.

முக்கிய தினங்களில் எம்பயர் கட்டடத்தை வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். சுதந்திர தினம் கிறிஸ்துமஸ் மட்டுமல்லாமல், வர்த்தக அடிப்படையிலும் ஒளி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-95 மென்பொருளை அறிமுகப்படுத்தியபோது எம்பயர் கட்டடம் பல வண்ணங்களால் ஒளிர்விக்கப்பட்டது. நியூயார்க் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாக்களுக்கும் ஒளி அலங்காரம் உண்டு. இஸ்லாமிய விழாவான ரம்ஜானன்று 2007 முதல் ஒவ்வொராண்டும் பச்சை விளக்குகளால் அலங்கரிக்கப்

படுகிறது.  

நான் பகலில் சென்றிருந்ததால் இந்த ஒளி அலங்காரங்கள் எதையும் காண வாய்ப்பில்லை. சுதந்திர தினத்தன்று அமெரிக்காவின் பல நகரங்களில் பிரும்மாண்டமான வாண வேடிக்கைகள் நடத்தப்படும். அமெரிக்க சுதந்திர தினம் ஒரு சர்ச்சைக்குரிய தினம். விடுதலைப் பிரகடனத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய தினம்தான் சுதந்திர தினமாகக் கருதப்படுகிறது. ஜூலை 4, 1776 அன்று அது நிறைவேறியது. நாங்கள் அன்றைக்குத்தான் அதில் கையெழுத்திட்டோம் என்று பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஜான் ஆடம்ஸ் ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் முழு அவையும் அதில் ஆகஸ்ட் 2 அன்றுதான்  கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ந்தேதியில் பிறந்த ஒரே அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ். இவர் முப்பதாவது ஜனாதிபதி. விடுதலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட பெருமைக்குரியவர்களான ஜெபர்சனும், ஆடம்ஸýம் ஜூலை 4, 1826 அன்று ஒரே நாளில் இறந்துபோனார்கள். அது விடுதலைப் பிரகடனத்தின் பொன்விழா நாள்.   

அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும், பிரிட்டனிலும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் முக்கிய தினங்களில் பொது இடங்களில் வாண வேடிக்கைகள் நடப்பது வழக்கம். அங்கே வீட்டுக்கு வீடு பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை எப்போதோ ஒழித்துவிட்டார்கள். ஊர்ப் பொதுவில் நடத்தப்படும் வாண ஜாலங்களை எல்லாரும் திரண்டு வந்து பார்க்கும் வழக்கத்துக்கு மாறிவிட்டார்கள். இந்தப் பொது நிகழ்ச்சிகளை பெரும் வர்த்தக நிறுவனங்கள் புரவலராக இருந்து நடத்துகின்றன.

நியூயார்க்கில் நான் இருந்தது சுதந்திர தினத்தன்று என்பதால், அங்கே நடக்கும் வாண ஜாலங்களைக் காண புரூக்ளின் பாலத்துக்குச் செல்ல நானும் ராஜேஷும் திட்டமிட்டோம். புரூக்ளின் என்றதும் தமிழகத்தில் என் போன்றோருக்கு  நினைவுக்கு வருவது எம்.ஜி.ஆர் அங்கே சிகிச்சைக்காக சென்றிருந்ததுதான். தலையில் குல்லா இல்லாத வழுக்கைத் தலை எம்.ஜி.ஆர் புகைப்படத்தை புரூக்ளின் மருத்துவமனையில் எடுத்து, வெளியிட்டு 1987}ல் வீக் ஆங்கில வார இதழ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புரூக்ளின் பாலம் தமிழ் சினிமாவால் அண்மையில் பிரபலமானது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இறுதிக் காட்சியில் நாயகனும் நாயகியும் இந்த பாலத்தில்தான் சந்திப்பார்கள்.   

புரூக்ளின் பாலம் மிகப் பழமையானது. இதை

1883}ல் கட்டி முடித்தார்கள். சுமார் 1600 அடி நீளமுள்ள இது ஒரு தொங்கு பாலம். பாலத்தின் இரு புறங்களிலும் வாகனப் போக்குவரத்துக்கு இடம். நடுவில் உயரத்தில், நடந்து செல்லுவோருக்கும் சைக்கிளில் செல்லுவோருக்குமான வழி. சைக்கிள் பாதசாரிகளுக்கான வழி என்பது புதுமையானதும் சிறப்பானதும் ஆகும். நியூயார்க்கில் ரயில்வே, டாக்சி வேலை நிறுத்தம் போன்றவை நடக்கும்போது மக்கள் இந்தப் பாலத்தின் வழியே பாதுகாப்பாக நடந்தே செல்வார்கள். நகரத்தின் மேயர்களாக இருந்தவர்களே இதில் நடந்து வந்திருக்கிறார்கள்.   

இந்தப் பாலத்தின் கட்டுமானத்துக்குப் பின்னால் ஒரு சோகக் கதை இருக்கிறது. இரும்புக் கம்பிகளால் தொங்கும் பாலமாக இதை வடிவமைத்த ஜான் ரீப்ளிங் ஜெர்மனியிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர். பால வேலை தொடங்கும்போது அவருக்குக் காலில்  ஏற்பட்ட காயம் கடுமையாகி, அவர் இறந்தார். சாகும் முன்பு பால வேலையை தன் மகன்  வாஷிங்டன் ரீப்ளிங்கிடம் ஒப்படைத்தார். வாஷிங்டனுக்கும் நோய்

ஏற்பட்டது.  ஆற்றில் பாலங்கள் , மதகுகள் கட்டும்போது, பாலத் தூண்களுக்கு அஸ்திவாரம் போடுவதற்காக பூமிக்கடியில் சரியான மண்வாகைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போது குழியில் செயற்கையான காற்றழுத்தம் தரப்படும். அந்தச் சூழலில் வேலை செய்வோருக்கு இயற்கையான சூழலுக்குத் திரும்பும் போது அழுத்தமாற்ற நோய் ஏற்படும்.  கை கால்கள் செயலிழக்கும். உயிர் போகும் ஆபத்தும் உண்டு. புரூக்ளின் பாலத்தில் பணியாற்றிய பல தொழிலாளர்களுக்கு இந்த நோய் வந்தது.. வாஷிங்டனுக்கும் வந்தது. நகரமுடியாதவரானார். அவர் மனைவி எமிலி பாலக் கட்டுமானப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அடுத்து 11 வருடங்கள் வீட்டிலிருக்கும் கணவர் ஆலோசனையுடன் பாலத்தைக் கட்டி முடித்தார். திறப்புவிழாவில் முதலில் பாலத்தில் சென்றவர் எமிலிதான்.  

உலகத்திலேயே மிக நீளமான தொங்கு பாலம் புரூக்ளின் பாலம்தான். அது கட்டப்பட்ட காலத்திலேயே கட்டிய பல பாலங்கள் பழுதாகி மாற்றப்பட்டுவிட்டன. புரூக்ளின் இன்னமும் உறுதியாக நிற்கிறது. கட்டப்பட்டபோது அதன் உறுதி சந்தேகிக்கப்பட்டது. அதை நிரூபிக்க, சர்க்கஸ் நடத்துபவரான பார்னம் என்பவர் 21 யானைகளை பாலத்தின் மீது ஊர்வலமாக அழைத்துச் சென்றாராம்.

புரூக்ளின் தனி நகராகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. புரூக்ளின் பாலம் கட்டப்பட்ட பின்னர் அதை நியூயார்க் நகரின் ஒரு மண்டலமாக இணைக்க முற்பட்டார்கள். இதற்காக மக்களிடம் கருத்துக் கணிப்புத் தேர்தல் 1894}ல் நடத்தப்பட்டு அது நியூயார்க்கின் ஒரு மண்டலமாகியது. தொடர்ந்து புரூக்ளின் பாலம் அமெரிக்க மக்களால் ஒரு வரலாற்று சின்னமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு சிலை, ஒரு கோயில் போன்றவற்றை மட்டும்தான் வரலாற்று சின்னமாகப் பார்க்கவேண்டும் என்பதில்லை. பாலம், சாலை முதலியவற்றையும் பார்த்து பாதுகாத்து பராமரித்துக் கொண்டாடலாம் என்ற பார்வை அமெரிக்கர்களுக்கு இருக்கிறது. புரூக்ளின் பாலத்தின்  நூற்றாண்டு விழாவுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் வந்து பாலத்தின் மீது காரில் ஊர்வலமாகச் சென்றார்.

இந்தப் பாலம் என்னுடையது. விற்கிறேன் வாங்கி கொள்கிறீர்களா என்று சுற்றுலா பயணிகளிடம் கேட்டு காசு வாங்கி ஏமாற்றிய பேர்வழிகள் இரண்டு பேர் உண்டு.  நியூ ஜெர்சியைச் சேர்ந்த வில்லியம் மெக்ளவுண்டி என்பவன் 1901}ல் இந்தப் பாலத்தை விற்க முயன்று மாட்டிக் கொண்டு இரண்டரை வருடம் சிறையில் இருந்தான். ஜார்ஜ் பார்க்கர் இன்னும் பெரிய கில்லாடி. வாராவாரம் இரண்டு பேருக்குப் பாலத்தை விற்கும் வேலையை வருடக் கணக்கில் மாட்டாமலே செய்துவந்திருக்கிறான். நீங்கள் பாலத்தை என்னிடம் வாங்கிவிட்டால், அதில் போய் வரும் கார்கள், மனிதர்களிடம் சுங்கம் வசூலிக்கலாம் என்று சொல்லி விற்றிருக்கிறான். இதை நம்பி வாங்கிய சிலர், பாலத்தின் மீது சுங்கச்சாவடி அமைக்க வந்திருக்கிறார்கள். போலீஸ் விசாரித்து துரத்திவிட்டது.  

ஜார்ஜ் பார்க்கர் புரூக்ளின் பாலத்தை மட்டும் விற்கவில்லை. நியூயார்க் ஓவிய காட்சியகம், சுதந்திரதேவி சிலை எல்லாவற்றையும் ஆவணப்பூர்வமாக விற்றிருக்கிறான். இதற்கென்றே ஒரு ஆபீசும் நடத்தியிருக்கிறான். மாட்டிக் கொண்டு மூன்று முறை தண்டனை அனுபவித்த ஜார்ஜுக்கு கடைசியில் சிக்கியபோது ஆயுள் தண்டனை கொடுத்துவிட்டார்கள். அமெரிக்காவில் ஆயுள் தண்டனை என்றால் ஆயுளுக்கும்தான். கடைசியில் ஜார்ஜ் சிறையிலேயே 1936}ல் இறந்தான்.  

புரூக்ளின் பாலத்தின் மீது நானும் ராஜேஷும் நடக்க ஆரம்பித்தபோது எங்களைப் போல நிறைய சுற்றுலா பயணிகள் நடந்து கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் அந்தப் பாலத்தில் காத்துக்

கொண்டிருந்தது.  

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.