காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம் 21: மலைக்க வைக்​கும் மர வீடு​கள்

ப்ரூக்ளின் பாலத்தில் ராஜேஷும் நானும் நடந்து செல்லச் செல்ல எதிரே வந்தவர்கள், பின்னே வந்தவர்கள் என்று பல வாசகர்கள், அடுத்தடுத்து என்னை அடையாளம் கண்டு கொண்டு, வந்து பேசியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.  இப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:03 am

ஞாநி

ப்ரூக்ளின் பாலத்தில் ராஜேஷும் நானும் நடந்து செல்லச் செல்ல எதிரே வந்தவர்கள், பின்னே வந்தவர்கள் என்று பல வாசகர்கள், அடுத்தடுத்து என்னை அடையாளம் கண்டு கொண்டு, வந்து பேசியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.  இப்படி அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பாலத்தின் மீது சுமார் 25 தமிழர்களைச் சந்தித்துவிட்டேன்.

எல்லாரும் அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, விடுதலை தின விடுமுறையை ஒட்டி, சுற்றுலா வந்தவர்கள். சிலர் இந்தியாவிலிருந்து வந்திருந்த பெற்றோருக்கு, ஊர் சுற்றிக் காட்ட அழைத்து வந்தவர்கள். பலரும் தொடர்ந்து என்னை வாசிப்பவர்களாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

எல்லாருடனும் பேசியதில் இரு விஷயங்கள் திரும்பத் திரும்பப் பேசப்பட்டன. இந்தியாவில், தமிழகத்தில் சீரழிந்திருக்கிற அரசியலை எப்படி மாற்றி எப்படி நம் சமூகத்தை முன்னேற்றுவது என்ற கவலை, அமெரிக்காவில் இருந்துகொண்டு இதற்கு தான் என்ன செய்ய முடியும் என்ற குழப்பம் இரண்டும் அவர்கள் உரையாடல்களில் பிரதிபலித்தன. 

அன்றிரவு புரூக்ளின் பாலத்திலிருந்து வாண வேடிக்கைகளைப் பார்த்தேன். வழக்கமாக நடக்கும் இரு இடங்களில் ஒன்றில் நிகழ்ச்சி, பணப் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பொருளாதார நெருக்கடியினால் புரவலர்கள் முன்போல செலவு செய்ய முன்வரவில்லை. பார்த்த அளவில் வாண வேடிக்கைகள் வண்ணமயமாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தன. புரூக்ளின் பாலத்தருகே இருந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறி டைம் ஸ்கொயர் சென்றோம்.

டைம் ஸ்கொயர் நியூயார்க்கின் கவர்ச்சிப் பகுதி. எல்லா கட்டடங்களிலிருந்தும் மின்னும் வண்ண வண்ண நியான் விளம்பரங்கள் இந்தப் பகுதியைக் கவர்ச்சிகரமாக ஆக்கியிருக்கின்றன. நியூயார்க்கின் மன்ஹாட்டன் வட்டாரத்தில் பிராட்வே தியேட்டர்கள் இருக்கும் தெருவுக்கும் ஏழாவது அவென்யூவுக்கும் குறுக்கே இருக்கும் நாற்சந்திதான் டைம் ஸ்கொயர். பல சினிமாக்களில் இந்தப் பகுதியைப் பார்க்கலாம். சுற்றுலா பயணிகளுக்காக இங்கே இன்னும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தன் அலுவலகத்தை இங்கே 1904}ல் ஏற்படுத்தியதிலிருந்து இந்தப் பகுதிக்கு டைம் ஸ்கொயர் என்ற பெயர் வந்தது.  தினசரி செய்திகளை நியான் போர்டுகளில் ஒளிபரப்புவது இங்கே வழக்கம்.

நியான் விளக்குகள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பே இந்தப் பழக்கம் இங்கே இருந்திருக்கிறது. 1921}ல் நியூயார்க் டைம்ஸ் அலுவலகம் வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று ஒரு குத்துச்சண்டையின் முடிவுகளைப் பலகையில் பார்க்க ஆவலாக இருந்திருக்கின்றனர்.  உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் பெர்னாட் ஷா, குத்துச்சண்டை வீரர் பிரெஞ்சுக்காரர் கார்ப்பெண்ட்டியர்தான் ஜெயிப்பார் என்று பெட் கட்டினார். நியூ ஜெர்சியில் நடந்த இந்த குத்துச்சண்டையை சுமார் ஒரு லட்சம் பேர் நேரில் பார்த்திருக்கிறார்கள். இன்னும் பல ஆயிரம் பேர் நியூயார்க் டைம்ஸ் அலுவலக வாசலில் கூடியிருக்கிறார்கள். கடைசியில் ஜாக் டெம்ப்சி ஜெயித்தார் கார்ப்பெண்ட்டியரும் ஷாவும் தோற்றார்கள்.

டைம் ஸ்கொயர் நியூயார்க்கின் கலாசாரத் தலைமையகமாக இருக்கிறது. பிராட்வேயில் நிறைய நாடக அரங்குகள், நடன அரங்குகள், உல்லாச சூதாடும் விடுதிகள் இருக்கின்றன. எண்பதுகள் வரையில் இந்தப் பகுதி போக்கிரிகளும் விபசாரிகளும் நிறைந்த ஆபத்தான பகுதியாகவே கருதப்பட்டது. தொண்ணூறுகளில் இதை மாற்றியமைக்க நகர மேயர்கள் கடும் நடவடிக்கைகள் எடுத்தபின்னர், இந்தப் பகுதி கெüரவமானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்கப்பட்டது. 

அமெரிக்கப் பொருளாதார சீர்குலைவுக்குக் காரணமாக இருந்த லெஹ்மன் பிரதர்ஸ் கம்பெனியின் தலைமையகம் டைம் ஸ்கொயரில்தான் இருக்கிறது.  புத்தாண்டு பிறக்கும் இரவுக் கொண்டாட்டம் டைம் ஸ்கொயரில் பிரபலமானது. பிரம்மாண்டமான வண்ண  பலூன் பந்தை உயர்ந்த கட்டடத்தின் உச்சியில் இறக்குவது கொண்டாட்டத்தின் ஓர் அம்சம். டைம் ஸ்கொயர் பகுதியில் டிசம்பர் 31 இரவுகளில் சுமார் 10 லட்சம் மக்கள் புது வருடத்தைக் கொண்டாட தெருவில் திரள்கிறார்கள்.  

அந்த மாதிரியான ஒரு பகுதியில் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும்?  நான் அங்கு செல்வதற்கு ஒரு மாதம் முன்னால் மே 1 2010 அன்று டைம் ஸ்கொயரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரிலிருந்து புகை வந்ததைப் பார்த்த ஒரு நடைபாதை வியாபாரி போலீசை அழைத்தார். சோதனையிட்டபோது அதில் வெடிமருந்துகள் இருப்பது தெரியவந்தது. எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அடுத்த 53 மணி நேரத்துக்குள் காரை அங்கே குண்டுகளுடன் நிறுத்தியவர் என்று பைசல் ஷாசாத் என்ற இளைஞரை நியூயார்க்கிலிருந்து துபாய்க்குப் புறப்பட்ட விமானத்தில் போலீஸ் கைது செய்தது. அவருக்கு உதவியதாக பாகிஸ்தானில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். 

நான் டைம் ஸ்கொயருக்குச் சென்ற சமயம் அங்கே மக்களிடம் எந்தப் பதற்றமும் இல்லை.  வெடிகுண்டு கார் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியில் இப்போது கூடுதலாக ஒரு போலீஸ் வண்டி நிறுத்திவைக்கப்பட்டதைத் தவிர வேறு சலனங்கள் மக்களிடம் இல்லை. உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தார்கள்.  

டைம்ஸ்கொயரில் சுற்றிவிட்டு ராஜேஷும் நானும் அவர் வீட்டுக்கு ரயிலில் திரும்பினோம்.  மறுநாள் காலை அமெரிக்காவின் நுழைவாயிலைப் பார்க்க ராஜேஷுடன் புறப்பட்டபோது வழியில் எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. இத்தனை நாட்களும் அமெரிக்காவில் பல பகுதிகளுக்கும் சென்று பல நண்பர்களுடைய வீடுகளில் தங்கியபோதெல்லாம், அந்த வீடுகள் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தன. எல்லாமே மர வீடுகள்தான். ஆனால் பார்வைக்கு மரமென்றே தெரியாது. இப்படி நம் ஊரிலும் செங்கல், சிமெண்ட், கான்கிரீட், இரும்புக் கம்பிகள் இல்லாமல் வீடு கட்ட முடிந்தால் எவ்வளவு மணற்கொள்ளையை நிறுத்தி  ஆறுகளைக் காப்பாற்றலாம் என்று  எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.

உண்மையில் மரவீடுகள் நாம் கட்டும் சிமெண்ட் செங்கல் வீடுகளைவிட மலிவானவை. இவற்றைவிட நீண்ட காலம் நீடிக்கக்கூடியவை. சுற்றுச் சூழலைக் கெடுக்காதவை. வீடுகளுக்கான மரங்களுக்காகப் பிரத்யேகக் காடுகளை வளர்ப்பது உலகெங்கும் நடக்கிறது. அமெரிக்காவில் வீடு கட்டும் மரங்கள் பெரும்பாலும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இது தொடர்பாக கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரிய வர்த்தக சண்டை பல வருடங்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.  

கனடாவில் மரம் வெட்டுவோருக்கு, அந்த அரசு நிறைய வரிச் சலுகைகள் கொடுப்பதாகவும் அதனால் குறைந்த விலைக்கு அவர்களால் மரம் விற்க முடிவதாகவும் இது தங்கள் உள்நாட்டு மர வர்த்தகர்களைக் கடுமையாக பாதிப்பதாகவும் அமெரிக்கா புகார் செய்து வருகிறது. இது பற்றி லண்டனில் உள்ள சர்வதேச மத்தியஸ்த நீதி மன்றம் விசாரித்து அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது.

ராஜேஷ் குடியிருக்கும் பகுதியிலேயே ஒரு புது வீடு கட்டப்பட்டு வருவதை காரில் செல்லும்போது பார்த்தேன். காரை நிறுத்திவிட்டு அந்த மர வீடு உருவாகும் விதத்தை நேரில் சென்று பார்த்தேன். கட்டட காண்ட்ராக்டர் ஒரு வட இந்தியர்.

குறைந்தது 50 வருடங்கள் அந்த வீடு தாக்குப் பிடிக்கும் என்றார் அவர். சில வீடுகளை இரண்டு நாட்களில் கட்டிவிடலாம். பெரும்பாலான வீடுகளுக்கு ஒரு மாதம் தேவைப்படும் என்றார்.  அநேகமாக எல்லா வீடுகளுக்கும் பேஸ்மெண்ட் எனப்படும் நிலத்தடி அறை இருக்கிறது. அந்தப் பகுதியில் மட்டுமே கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு அடித்தளத்திலிருந்து மாடி வரை எல்லாம் மரம்தான். இணைப்புகளில் அலுமினியம், எஃகு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. சதுர மீட்டருக்கு 660 டாலர் முதல் 2200 டாலர் வரை செலவாகிறது.

செங்கல், சிமெண்ட் வீடுகளைவிட, மர வீடுகள் பலவீனமாக இருக்கும். நில நடுக்கம் ஏற்பட்டால் எளிதில் சிதைந்துவிடும் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால் மர வீடுகள்தான் சிமெண்ட் வீடுகளைவிட நில அதிர்ச்சியை எளிதில் தாங்கக் கூடியவை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். கான்கிரீட் அஸ்திவாரம் நில நடுக்கத்தில் குலைந்தாலும், மேலுள்ள மர வீடு அப்படியே ஒரு சில அடிகள் இடம் மாறுமே தவிர, உடைந்து நொறுங்காது என்கிறார்கள்.

இப்போதைய மர வீடுகள் மரச் சட்டங்களுக்கிடையில் மரப்பலகைகளைப் பொருத்தி உருவாக்குவதாகும். ஆரம்ப காலங்களில்  லாக் கேபின் எனப்படும் மர வீடுகள் முழு மரத் தண்டுகளைக் கொண்டு அவற்றை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி சுவராக்கி உருவாக்கப்பட்ட மரக் குடில்கள்.  ஏழைகள், வசதியற்றவர்கள் அப்படிப்பட்ட லாக் கேபின்களில்தான் வாழ்ந்தார்கள். அமெரிக்காவில் ஆப்ரகாம் லிங்கன் உட்பட ஏழு ஜனாதிபதிகள் லாக் கேபின் வாழ்க்கையிலிருந்து வெள்ளை மாளிகைக்கு உயர்ந்தவர்கள். 

ராஜேஷுடன் அமெரிக்காவின் நுழைவாயிலுக்குச் சென்றேன். நியூ ஜெர்சி நகரில் ஹட்சன் நதிக்கரையில் ரயிலடி, படகுத் துறையாக இருந்த கம்யூனிபா ஸ்டேஷன்தான் அது. கம்யூனிபா என்றால் அமெரிக்காவின் ஆதிவாசிகளான லெனாப்பி மக்களின் மொழியில் ஆற்றுப் படித் துறை என்று பொருள். ஐரோப்பாவிலிருந்தும் வேறு பகுதிகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு வந்த மக்கள் எல்லீஸ் தீவில் வந்து இறங்கினார்கள். அங்கிருந்து படகுகளில் கம்யூனிபாவுக்கு வரவேண்டும். பிறகு ரயிலில் அமெரிக்காவின் இதர பகுதிகளுக்குச் செல்லலாம். நியூ ஜெர்சியிலிருந்து நியூயார்க் தீவுக்கும் இங்கிருந்துதான் படகுகளில் செல்ல வேண்டும். 

சுமார் ஒரு கோடி எழுபது லட்சம் பேர் 1892}லிருந்து 1954}க்குள் முதலில் சுதந்திர தேவி சிலை இருக்கும் தீவில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அடுத்து எல்லிஸ் தீவில் அவர்கள் விசாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து இந்த ரயிலடி வழியே வெவ்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்தார்கள்.

1967-ல் இந்த ரயில் கம்பெனி திவாலாகிவிட்டது. அதன்பிறகு இந்த ஸ்டேஷன், படித்துறை எல்லாம் தேசிய பூங்காக்கள் வசம் வந்துவிட்டன. சிவப்புக்கற்களால் கட்டிய சுவர்களுடன் உயர்ந்த கூரை, அலங்காரமான முகப்பு என்று கட்டப்பட்ட பிரம்மாண்டமான இந்தக் கட்டடம் இப்போது விழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலின்போது, ஏராளமான ஆம்புலன்ஸ் வண்டிகளை தயார் நிலையில் நிறுத்தி வைக்க இது பயன்பட்டது. இப்போது சுதந்திரதேவி சிலையிருக்கும் தீவுக்குச் செல்ல இங்கேதான் படகேற வேண்டும்.  வழியில் இருக்கும் எல்லிஸ் தீவில்தான் முதன் முதல் அமெரிக்காவுக்கு வந்தேறிகள் வந்த வரலாற்றை விளக்கும் பிரம்மாண்டமான மியூசியம் இருக்கிறது. அந்த வரலாற்றைப் பார்ப்பது சுதந்திரதேவி சிலையைப் பார்ப்பதைவிட எனக்குச் சுவையாக இருந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.