

யார் பையன், கைதி கண்ணாயிரம் படங்களில் நடித்த பேபி டெய்சி ராணி, களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகம் ஆன கமலஹாசன், குட்டி பத்மினி, ஹாஜா ஷெரீப், ரோஜா ரமணி, சிம்பு, பேபி ஷாலினி வரிசையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பிரபல நடிகராக வர வேண்டும் என்ற ஆவலில் உள்ளார் சேலத்தைச் சேர்ந்த எஸ்.தனுஷ்குமார் (14).
தெலுங்கில் சக்கைப்போடு போட்ட ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் ராமனின் குழந்தைகளில் ஒன்றான குசா-வாக நடித்தவர் தனுஷ்குமார்.
சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தனுஷ்குமாரின் தந்தை எஸ்.செல்வக்குமார் ஜவுளி வியாபாரி. வடமாநிலங்களில் இருந்து மொத்த விலைக்கு ஆடைகளை வாங்கி வந்து சேலத்தில் விற்பனை செய்யும் செல்வக்குமாருக்கு தெலுங்கு படத் தயாரிப்பாளர் சாய் பாபு அறிமுகம் ஆகியுள்ளார். இதன் மூலம் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் குழந்தை நட்சத்திர பட்டாளங்களில் ஒருவராய் இடம் பிடித்த தனுஷ்குமார், படப்பிடிப்பு தொடங்கி ஒரு வாரம் வரையிலும் முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் சீடர்களில் ஒருவராகவே நடித்தார்.
ஆனால் ராமன் - சீதையின் மகன்களில் ஒருவரான குசாவாக நடித்த சிறுவனின் நடிப்பு சரியில்லை என்ற காரணத்தால் குசா வேடத்துக்குத் தேர்வாகிய தனுஷ்குமார், அதன் பிறகு கைதேர்ந்த நடிகன் என்ற அளவுக்கு படக் குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
""நடிப்பு என்பது எங்கள் குடும்பத்துக்கே புதியதான ஒன்று. அப்பாவின் நண்பர் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சரி போய்த்தான் பார்ப்போமே என்று ஹைதராபாத் சென்றேன். படம் முழுவதும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே எடுக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை சினிமாவை தியேட்டரிலும், டி.வி.யிலுமே பார்த்து வந்த எனக்கு படத்துக்குப் போடப்பட்ட புராணகால செட்டுகள் பிரமிப்பை ஏற்படுத்தின.
அதிலும் திரையில் மட்டுமே பார்த்து வந்த பாலகிருஷ்ணா, நயன்தாரா உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று தோன்றியதுமே உடம்பு முழுக்க உதறல் எடுத்துக் கொண்டது. ஆனால் பயந்திருந்த எனக்கு தமிழில் பேசி ஆறுதல் கொடுத்த நயன்தாரா, நடிப்பு ஒரு பெரிய விஷயமே இல்லை என்று எனக்கு அடிக்கடி உற்சாகமூட்டி, நடிப்பு கற்றுக் கொடுத்தார்.
அழும்போதும், சிரிக்கும்போதும் கண்களை எப்படி வைத்துக் கொள்வது, கைகளை எந்தெந்த இடங்களில் அசைக்க வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். முதல் ஒரு வாரம் நடிப்பு என்னிடம் நொண்டி விளையாடியது. ஆனால் அதன் பிறகு குழுவினர் வியக்கும் விதமாக ஒவ்வொரு ஷாட்களையும் செய்து முடித்தேன்.
சேலத்தில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டே ஹைதராபாதில் சுமார் ஓராண்டு நடைபெற்ற ஸ்ரீராமராஜ்ஜிய படப்பிடிப்புக்கு 2 மாதங்கள் கால்ஷீட் கொடுத்தேன். எனது பள்ளி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் எனக்குக் கொடுத்த ஊக்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படம் வெளியாகி வெற்றி பெற்றதும் ஆந்திராவில் உள்ள பிரபல அகாதெமியான பாரதமுனி ஆர்ட்ஸ் அகாதெமி கொடுத்த சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பாலகிருஷ்ணா கையால் பெற்று அதை அப்படியே பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் கையில் கொடுத்து மகிழ்ந்தேன்.
சிறு வயது முதல் கற்று வரும் நடனம் இனி எனது நடிப்புத் திறமைக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறேன். எனது முதல் பட அனுபவம் என்னை மனதளவில் மாற்றியுள்ளது. மிகப் பெரிய நடிகர்களான நாகேஸ்வரராவ், கே.ஆர்.விஜயா, பாலகிருஷ்ணா, நயன்தாரா, ரோஜா போன்றவர்கள் நடித்த படத்தில் நானும் நடித்தது இன்றும் கனவு போலவே தோன்றுகிறது.
ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தை தமிழில் பார்த்துவிட்டு சில புதிய படங்களில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். நல்ல கேரக்டர் எது கிடைத்தாலும் நடிப்பதைத் தொடருவேன். நடிகர் விஜய்தான் எனக்கு பிடித்தமான நடிகர். எதிர்காலத்தில் அவரைப் போன்று பிரபல நடிகராக வேண்டும் என்பதே லட்சியம்'' என்கிறார் தனுஷ்குமார்.
இவரது தாயார் விமலா, தனுஷூக்கு அமலாஸ்ரீ என்ற சகோதரியும், தளபதிகுமார் என்ற சகோதரரும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.