அலுவலகத்திலிருந்து களைப்பாக வந்து, வீட்டுக்குள் நுழைந்த கணேசனிடம், அவருடைய பதின்மூன்று வயது பெண் ப்ரீத்தி ஒரு பாட்டம் பாடினாள்.
""அப்பா! இன்னிக்கி பாட்டி, அம்மாவ பெண்டு கழட்டிட்டாங்க!''
""என்ன பண்ணினாங்க?''
""அம்மா, பாட்டிக்குப் போடுற "டயாப்பர்' இல்லைன்னு துணியைக் கட்டிவுட்ருக்காங்க... என்னிக்கும் படுத்தேயிருக்கிற பாட்டி இன்னிக்கு புலம்பிக்கிட்டே சுத்தி சுத்தி வந்திருக்காங்க... "நான் என் பொண்ணைப் பாக்கப் போகணும்... என் வீட்டுக்குப் போகணும்..' அப்படின்னு வாசலுக்கும் ஹாலுக்கும் உட்கார்ந்தே நகர்ந்து நகர்ந்து போயிட்டு வந்திருக்காங்க.. சாயந்திரம் அஞ்சு மணிக்கு நான் பள்ளிக்கூடம் விட்டு வந்து பாத்தப்போ வீடு முழுக்க டெட்டால் வாடை... அப்புறம்தான் தெரிஞ்சுது ஹால் முழுக்க பாட்டி ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போய் வெச்சிருக்காங்க... பாவம்பா அம்மா!''
""வந்ததும் வராததுமா பாட்டியப் பத்தி அப்பாகிட்ட ஒப்பிச்சாச்சா.. போடி போய் உன்னோட ஹோம் ஒர்க்கப் பண்ணு... போ! நீங்க கைகால் அம்பிட்டு வாங்க... காபி குடிக்கலாம்...''
கடந்த பத்து நாள்களாகவே கணேசனின் தாயார் விசாலத்தின் புலம்பல் அதிகமாகிப் போனது. என்ன செய்கிறோம், யார் வீட்டில் இருக்கிறோம், சாப்பிடுகிறோமோ இல்லையா என்பதுகூடத் தெரியாத அளவுக்கு நினைவு தப்பிப் போயிருக்கிறது அவருக்கு. சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க அழைத்துப் போனால் தானாகவே அதனைச் செய்கிறவர், இப்போதெல்லாம் அப்படியே படுக்கையிலேயே போய்விடுகிறார். சாப்பாட்டைக் கூட தானாக எடுத்து சாப்பிடத் தெரியவில்லை. என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளற ஆரம்பித்துவிடுகிறார்.
சில நேரங்களில், ""என்னைக்கூப்பிட எங்க அப்பா வந்திருக்காரு... அவரை உள்ளே கூப்பிடு...'' என்கிறார்.
""என் வீட்டிற்குப் போகணும், என்னை இங்க எதுக்கு வச்சிருக்கீங்க?'' என்று அழுகிறார்.
கடந்த வருடம் வரை நன்றாகத்தான் இருந்தார் விசாலம். போன மாதம்தான் தொண்ணூற்றி மூன்று வயது ஆரம்பமானது. முழுமையான ஜாதகக் குறிப்பு இருந்தால் ஜோசியரிடம் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தால் பிறந்த நட்சத்திரத்தைத் தவிர வேறு எந்த விவரமும் தெரியவில்லை. தாயாரிடமே கேட்கலாம் என்றால் அதுவும் இப்போது முடியாது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியிருக்குமோ தெரியவில்லை.
இப்படி தினம் தினம் போராட்டமாகவே இருக்கிறது. கணேசனின் மனைவி தேவிதான் அவரைப் பார்த்துக் கொள்கிறாள். மாமியாரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பார்த்துக் கொண்டிருந்த அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வீட்டிலிருக்கிறார்.
இரவு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, மாமியாரையும் படுக்கவைத்துவிட்டு வந்தாள் தேவி.
""என்னங்க, என்ன பலத்த யோசனை?''
""..........''
""அடுத்தடுத்த மாசம் எத்தனை மணி நேரம் கரண்ட் கட்டாகும்னு யோசிக்கறீங்களா? அல்லது அடுத்த பாராளுமன்றத் தேர்தல்ல யாரு எவ்வளவு சீட் வருவாங்கன்னு யோசனையா?'
""அதெல்லாம் என்ன இப்போ? அதான் தனியா எங்க பலத்தைக் காட்டுறோம்னு சொல்லிட்டாங்களே?''
""என்னையப் பாத்தா உனக்கு கிண்டலா இருக்குதில்ல தேவி?''
""கிண்டல் பண்ணாம என்ன பண்றது? உங்களை மாதிரியே நானும் கன்னத்தில் கையை வெச்சு மோட்டு வளையப் பார்த்துக்கிட்டிருந்தா எல்லா சரியாப் போயிடுமா?''
""அப்படிச் சொல்லல தேவி... எத்தனை நாளைக்கு நீ அம்மாவ இப்படிப் பார்த்துக்க முடியும்?''
""ஏன் முடியாது? அப்பப்ப உங்களுக்கு லீவு கிடைக்கும்போது நீங்களும்தானே பார்த்துக்கறீங்க...''
""அம்மா முன்ன மாதிரி இல்லியே! சுத்தமா நினைவு போயிடுச்சே! முன்னெல்லாம் உன்னையும் என்னையும் யாருன்னு கேட்டிட்டு இருந்தாங்க.. இப்பப்ப சாப்பாடக்கூட தானா சாப்பிடத் தெரியல.. நீதான் ஊட்டிவிட வேண்டியிருக்கு. பாத்ரூம் போகத் தெரியல. "டயாப்பர்' போடவேண்டியிருக்கு...''
""அதனால என்ன? காலையிலேயே நான் சமையல் வேலையெல்லாம் முடிச்சுடறேன்... அப்புறமா அம்மாவைப் பாத்துக்கறதுதானே வேலை. இதுக்காகத்தான் இவ்வளவு பெரிய யோசனையா? பேசாமப் படுங்க... மணி பதினொன்னு ஆகுது... காலையில ஆபீஸ் போக வேண்டாமா?''
""எனக்கு ஒரு யோசனை தோணுது தேவி...''
""......''
""தொண்ணூத்தி மூணு வயசுலயும் அம்மா வீடு, புள்ளைங்க, சாப்பாடுன்னு ஏதேதோ பொலம்புறாங்க. இரவுல தூங்கறதில்ல. பகல்ல என்ன பண்றோம்னு அவங்களுக்கே தெரியறதில்ல. அவுங்க உள் மனசுல ஏதோ ஆழமா ஒரு ஆசை பதிஞ்சு போயிருக்குன்னு நினைக்கிறேன்....''
""அதனால...?''
""இப்படி ஆசையை வெச்சுக்கிட்டு இருக்கிறவங்க அவ்வளவு சீக்கிரம் உயிரை விடமாட்டாங்களாம்..... அவங்க சுய நினைவு இல்லங்கறதினால அவங்க மனசுல என்ன ஆசையிருக்குங்கிறதும் தெரியல.. இப்படி இருக்கறவங்கள, அவங்களுக்கு புடிச்ச பிள்ளைங்க கையால அவங்க போட்டிருக்கிற நகையை லேசா மண்ணுல உரசி அந்த மண்ணை எடுத்து துளசித் தண்ணியில கலந்து...''
"'போதும்... போதும்... நிறுத்துங்க... நீங்க சொல்றபடி செஞ்சா உங்க அம்மா சீக்கிரம் உயிரை விட்ருவாங்க, அப்படித்தானே? அய்யோ... ராமா! என் புருஷனுக்கு இப்படியொரு கொலை செய்யற எண்ணம் வரணுமா? நல்லாத்தானே இருந்தீங்க? யாரு என்ன பண்ணினாங்களோ தெரியலையே?''
""கத்தாத தேவி! ப்ரீத்தி முழிச்சுக்கப் போறா...''
""உங்களைப் பெத்த அம்மாவுக்கு நீங்க செய்யிற நன்றிக் கடனாங்க இது? நாளைக்கு எனக்கு உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா ஆயிட்டாலும் இதேமாதிரிதான் பண்ணுவீங்களா?''
""என்ன தேவி நீ இப்படியெல்லாம் பேசற? நானென்ன கொன்னுடணும்னா யோசிக்கிறேன்.... அம்மா கஷ்டப்படாம போகணும்னு யோசிக்கறேன். நினைவில்லாம படுத்த படுக்கையா உடம்பெல்லாம் புண்ணு வந்து வேதனையை அனுபவிக்காம என்னைப் பெத்தவ போகணும்னு நான் யோசிக்கிறேன்.. நீ என்னைய கொலைகாரப் பாவி மாதிரி பாக்குறியே..'' என்று அழுதான் கணேசன்.
""நீங்க என்ன காரணம் சொன்னாலும் இது கொலை செய்யற மாதிரிதான்! இந்த உயிரை நினைச்சா உற்பத்தி பண்றதுக்கும்.. வேண்டாம்னா விடுறதுக்கும் நமக்கு அதிகாரம் இல்லீங்க. இந்த உயிர் ஆண்டவன் கொடுத்தது.... அது எப்போ போகணுமோ அப்போ தானா போறதுதான் நல்லது. உங்கம்மாவா இருந்தாலும் எங்கம்மாவா இருந்தாலும் இதுதான். நாம முடியறவரைக்கும் உடம்பு புண்ணாகாம அவங்களுக்கு வேதனை தெரியாம பாத்துப்போம். அதுக்கு அந்த ஆண்டவன் நமக்கு வழிகாட்டுவான் நீங்க பேசாம இப்பப் படுத்துத் தூங்குங்க...'' என்று அழுது கொண்டிருந்த கணேசனை அணைத்துக் கொண்டாள் தேவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



