நினைவு தெரிந்த நாளிலிருந்து...
படிப்பில் படு சுட்டி. பத்தாம் வகுப்பில் எல்லா நிலைகளிலும் முதலிடம் பிடித்தவர். நகர் முழுவதும் இவர் புகழ்பாடிக் கொண்டிருந்த


படிப்பில் படு சுட்டி. பத்தாம் வகுப்பில் எல்லா நிலைகளிலும் முதலிடம் பிடித்தவர். நகர் முழுவதும் இவர் புகழ்பாடிக் கொண்டிருந்த நேரம். நிச்சயமாக இந்தப் பெண் மருத்துவம் எல்லது என்ஜினியரிங் படிப்பைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று ஆசிரியர்கள் அனைவரும் முடிவு செய்திருந்த நேரம்...
எதிர்காலத்தில் மேலே படிக்கப் போவதில்லை. கையில் தூரிகையை எடுத்துக் கொண்டு ஓவியராகப் போகிறேன் என்று அந்த இளம்பெண் முடிவெடுத்தார். பள்ளியில் தலைமையாசிரியர் முதல் எல்லாருக்கும் அதிர்ச்சி. பெண்ணைத் திட்டித் தீர்க்காத குறைதான்.
ஆனால், பெற்றோர் மட்டும் அந்தப் பெண்ணை ஊக்குவித்து, அவளுடைய விருப்பப்படியே ஓவியத்துறைக்கு அவள் செல்ல அனுமதி கொடுத்தார்கள். பெண்ணுக்கோ விண்ணில் ஏறிப் பறப்பது போன்று உணர்வு எழும்பியதில் ஆச்சரியமில்லை.
இன்று அந்தப் பெண் இந்தியாவின் புகழ்பெற்ற எழுபது ஓவியக்கலைஞர்களில் ஒருவர். அவர்தான் பார்வதி நாயர்.
கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர்.
மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர்களின் கைவண்ணம் இருக்க வேண்டும் என்று விரும்பியது மத்திய அரசு.
அதற்கான ஓவியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஜெயா பச்சனிடம் கொடுக்கப்பட்டது. அவர் தேர்ந்தெடுத்த எழுபது ஓவியர்களில் பார்வதி நாயரும் ஒருவர். இவரது கலைவண்ணம் இப்போது மும்பை விமான நிலையத்தில் அழகுற வீற்றிருக்கிறது.
""நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வரைந்து கொண்டுதான் இருக்கிறேன். எல்லாக் குழந்தைகளுக்குமே படம் வரைவதில் விருப்பம் இருக்கத்தான் செய்யும். எனக்கோ, நான் வரைந்த கிறுக்கல்களில்கூட என்னையே பார்த்தேன். எனது அம்மாவும் ஓவியர்தான். அதனால் எங்கள் வீட்டில் வரைவதற்கான பொருட்கள் எப்போதும் தாராளமாகக் கிடைத்ததும் நான் ஓவியரானதற்கு ஒரு காரணம்'' என்று கூறிப் புன்னகைக்கிறார் பார்வதி நாயர்.
முதலில் அதீத வண்ணச் சிதறல்களில் மனதைப் பறிகொடுத்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தவருக்கு சீக்கிரமே தனித்துவமான ஒரு ஸ்டைல் அமைந்தது. யாரும் அதுவரை செய்யாத பல முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால், எப்போதும் தனது ஓவியங்களில் நுணுக்கமான விஷயங்கள் அனைத்தும் இருக்கும்படி பார்த்துக் கொண்டதுதான் தனியொரு ஸ்டைலை இவருக்குப் பெற்றுத் தந்தது. பென்சில் ஓவியங்களிலும் இவரது திறமை பளிச்சிட்டது. பென்சில் ஓவியங்களில் ஒரு பெரிய மாயத்தையே உருவாக்கி பார்ப்பவர்களின் கண்களை விரிய வைத்திருக்கிறார்.
""உங்கள் ஓவியங்களில் சிறுசிறு விஷயங்கள்கூட இடம்பெற்றால் அது ஒரு கதைசொல்லி ஆகிவிடும். இலக்கியம் போலவே ஓவியமும். நீங்கள் அதில் மூழ்க மூழ்க புதிது புதிதாக உங்களுக்கு முத்துக்கள் கிடைக்கும்'' என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்திய சினிமாவையும் இவர் விட்டுவைக்கவில்லை. ராஜ்கபூர், அமிதாப் பச்சன் மற்றும் நமது தென்னாட்டு நடிகர் நடிகைகள் அனைவரையும் தனது பாணியில் வரைந்து தள்ளியிருக்கிறார்.
அமிதாப் பச்சனின் எழுபதாவது பிறந்த நாளின்போது அதைக் கொண்டாடும்விதமாக இவர் வரைந்த எழுபது சித்திரங்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்தன.
கேரள நாட்டின் தெருக்களின் அழகை வரைந்து தான் பிறந்த இடத்துக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்பது இப்போதைக்கு இவரது லட்சியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...