விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காதல் என்கிற பெயரில்...!

தன்னைக் கல்யாணம் செய்ய மறுத்த காதலியின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு ஓடிப் போனான் அவளின் முன்னாள் காதலன்.

News image
Updated On :2 ஜூலை 2016, 12:26 pm

சோ.சுப்புராஜ்

நான் ராஜமாணிக்கம். படித்தது என்ஜினியரிங். ஆனால் பார்ப்பது பத்திரிகைப் பணி.
 என் அலுவல்களில் ஒரு பகுதி தினப் பத்திரிகைகளை வாசித்து, அதில் சுவாரஸ்யமாக அல்லது மனதைப் பாதிக்கும் விதமாக செய்தி ஏதாவது வந்திருந்தால், அதைத் துரத்திக் கொண்டு போய், சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசி, மேலும் விவரங்களைச் சேகரித்து, கட்டுரையாக எழுதுவேன்.
 அப்படித்தான் காதலர் தினத்திற்கு அடுத்த நாளும் தினப் பத்திரிகை செய்திகளை அசுவாரஸ்யமாக மேய்ந்து கொண்டிருந்தேன். சில அமைப்புகள் காதலர்தினக் கொண்டாட்டங்களை எதிர்ப்பதும், இன்னும் சில அமைப்புகள் அவற்றை ஆதரிப்பதுமான வழக்கமான செய்திகளே நிரம்பிக் கிடந்தன. ஆனால் அதிலிருந்த ஒரு செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது.
 இந்த வருஷக் காதலர் தினத்தில் ஒரு காதலன் தன் காதலியின் முகத்தில் திராவகம் ஊற்றிக் கொண்டாடியிருக்கிறான்.
 செய்தியின் சுருக்கம் இதுதான்.
 மதுரையில் காதலர் தினத்தில் நடந்த பயங்கரம்:
 தன்னைக் கல்யாணம் செய்ய மறுத்த காதலியின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு ஓடிப் போனான் அவளின் முன்னாள் காதலன்.
 
 பளிச்சென்று மூளைக்குள் பல்பு எரிந்தது எனக்கு. இந்த செய்தியைத் துரத்திக் கொண்டு போய் விசாரித்து ஒரு நீண்ட கட்டுரையாக எழுதும் உத்தேசத்தில் அன்றைக்கு இரவே, அலுவலகத்தில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு மதுரை நோக்கிப் பயணமானேன்.
 முகத்தில் ஆசிட் வீசப்பட்ட ஆனந்தி அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவளின் தாயால் அதிகம் பேச முடியவில்லை. அவள் பேச வாய் திறந்தாலே அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது.
 ஆசிட் ஊற்றப்பட்ட பெண்ணின் அக்காளும் அவளின் கணவனும் அவர்களுடனிருந்தார்கள். அவர்களும் இந்நிகழ்ச்சியின் பின்னணிகள் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
 அக்கம் பக்கத்தில் நிறைய நபர்களைச் சந்தித்து பேட்டி கண்டு இது சம்பந்தமான விவரங்களைச் சேகரித்தேன். அதில் மூன்று முக்கியமான நபர்கள் தந்த வாக்குமூலங்கள் இந்த சம்பவத்தின் பின்னணிகளைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தன. என்னிடமே நீண்ட நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த மூன்று வாக்குமூலங்களையும், கொஞ்சம் பட்டிதட்டி, எடிட் பண்ணி என்னுடைய புனைவு மொழியில் அப்படியே என்னுடைய இணையதள வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
 வாக்குமூலம்: 1 - முத்தையா
 என் பெயர் முத்தையா. அப்பா ஆதிமூலம். ஆனந்தி என்னுடைய சொந்த மாமன் மகள் தான். எனக்கு முறைப்பெண்ணும் கூட. அவளின் பெயரை உச்சரித்தாலே மனசின் ஓரத்தில் தித்திக்கும். அவள் பிறந்த போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். அப்போது நாங்கள் பந்தல்குடியில் குடி இருந்தோம்.
 அவளைப் பார்ப்பதற்காக அப்பா என்னைக் கைபிடித்து கொப்புச்சித்தன் பட்டிக்கு நான்கு மைல் தூரம் நடத்திக் கொண்டு போனது நேற்று நடந்தது போல் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. அப்பா எவ்வளவோ வற்புறுத்தி அழைத்த போதும் அம்மா எங்களுடன் வர மறுத்து விட்டாள்.
 என்னைத் திண்ணையில் சம்மணங்கால் போட்டு உட்கார வைத்து என் மாமன் அவளைத் துணிப் பொட்டலமாய்த் தூக்கிக் கொண்டு வந்து என் மடியில் கிடத்தினார்.
 ""நல்லாப் பார்த்துக்கடா... இவதான் உன் பொண்டாட்டி'' என்று சொன்னார். அப்பாவும் ஆமோதிப்பது போல் சிரித்தார். அப்போது நான் ரொம்பவும் வெட்கப்பட்டேன். அவளுக்கு பெயர் கூட சூட்டப்பட்டிருக்கவில்லை. என் விரலை அவளிடம் கொடுக்கவும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு எச்சில் ஒழுக பல் முளைக்காத ஈறுகள் விரித்து அவள் சிரித்தது இன்னும் என் நினைவிலிருக்கிறது.
 ஆனந்தியின் அக்காள் என்னிடம் வந்து, ""என் தங்கச்சிய நீ ஏன்டா தூக்கி வச்சுருக்குற?'' என்று சொல்லி கால்சட்டைக்கு கீழே தெரிந்த என் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள். நான் அம்மா என்று அலறினேன். அவளும், ""என் தங்கச்சிய என்கிட்டக் குடுடா'' என்று என்னை விடச் சத்தமாய் அழத் தொடங்கி விட்டாள். மாமன் வந்து அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனாலும் குழந்தையை என் மடியிலிருந்து இறக்கிய பின்பு தான் அவளின் அழுகை நின்றது.
 அவளின் அக்காவிற்கு அப்போது என்னை விட இரண்டு வயது அதிகம். அவளுக்கு என்னைக் கண்டால் எப்போதுமே பிடிக்காது. அவளுக்கு மட்டுமல்ல, அவளின் அம்மா - அதாவது என் அத்தைக்கும் எங்கள் குடும்பத்தைப் பிடிக்காது. அது அவளுக்கும் என் அம்மாவுக்குமான ஆரம்பகால நாத்தனார் சண்டைகளாலும் மனஸ்தாபங்களாலும் மனதில் வரித்துக் கொண்ட வன்மத்தால் நிறைந்தது.
 ஆனந்தியின் அப்பா சிறுவயதிலேயே ஒரு சாலை விபத்தில் இறந்து போனார். வாழ வழி தெரியாமல் அவர்கள் நிர்கதியாய் நின்ற போது, அம்மாவின் எதிர்ப்பையும் மறுப்பையும் மீறி ஆனந்தியின் குடும்பத்தை அப்பா பந்தல்குடிக்கே கொண்டு வந்து தனி வீடெடுத்து குடி வைத்து அவர்கள் கெüரவமாய் பிழைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
 கால ஓட்டத்தில் அத்தைக்கு எங்கள் குடும்பத்தின் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையத் தொடங்கியது. ஆனால் என்னுடைய அம்மா இன்னும் கூட அவர்களின் குடும்பத்தின் மீது அதே தீராப் பகையுடனேயே தான் இருக்கிறார். என்ன சொல்லியும் அவளை மாற்ற முடியவில்லை என்னால்.
 ஆனந்தி ஓர் அற்புதமான பெண். அவள் பந்தல்குடியில் பெரும்பாலும் எங்கள் வீட்டிலிருந்து தான் வளர்ந்தாள். அவளுக்கு நன்றாக படிப்பு வந்தது. எனக்கோ அது எட்டிக்காயாய்க் கசந்தது. அதனால் அவள் படித்தாள். நான் அவள் படிப்பதை வேடிக்கை பார்த்தேன். ஆனால் நானும் அவளும் ஒன்றாய்த் தான் வளர்ந்தோம். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அளவுக்கதிகமான பிரியமுமிருந்தது.
 நான் பத்தாம் வகுப்பு பெயிலான கையோடு, ஊர் சுற்றிக் கொண்டு அலைந்தேன். அப்புறம் அப்பாவுக்கு ஒத்தாசையாக அவருடன் சேர்ந்து விவசாயத்தைக் கவனித்துக் கொண்டேன். ஆனந்தி ப்ளஸ் டூ முடித்த பின்பு, அவளுக்கு கோயம்புத்தூரில் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது.
 அவளின் அம்மா அவ்வளவு தூரம் போயெல்லாம் படிக்க வேண்டாம் என்றாள். அத்தை அப்படிச் சொன்னதற்குக் காரணம் மகளைப் பிரிந்திருக்க வேண்டுமே என்பது மட்டுமல்ல, அவளால் அவ்வளவு செலவழித்து படிக்க வைப்பது சிரமம் என்றும் நினைத்தாள்.
 நானும் அப்பாவும் தான் பிடிவாதமாக அத்தையைச் சமாதானப்படுத்தி ஆனந்தியை கோயம்புத்தூருக்கு அழைத்துப் போய் கல்லூரியிலும் பெண்கள் விடுதியிலும் சேர்த்து விட்டு வந்தோம். அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் உதவினார் என்றாலும் ஆனந்தி படித்து முடிப்பதற்குள் அத்தை படாத பாடு பட்டு விட்டாள். அல்லும் பகலும் அயராத உழைப்பு. ஆனந்தியும் பொறுப்பை உணர்ந்து சிரத்தையாகப் படித்தாள். அவள் என்ஜினீயரிங் படித்து முடிக்கவும், அவளுக்கு காம்பஸ் இன்டர்வியூவில் மதுரையில் இருந்த ஒரு கம்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
 ஆனந்தி அங்கேயே விடுதியில் தங்கிக் கொண்டு விடுமுறை தினங்களில் பந்தல்குடிக்கும் வந்து போய் கொண்டிருந்தாள். போன வருஷந்தான் என்னுடைய அப்பாவும் தவறிப் போனார்.
 ஆனந்தியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க அத்தைக்கு ஆசை இருந்தது.
 ஆனாலும் அவ்வளவு படித்த பெண்ணை பத்தாம் வகுப்பு பெயிலான நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தயங்கி நான் தான் தெரிந்தவர்கள் பலரிடம் சொல்லி வைத்து, அவளுக்கு மாப்பிள்ளை தேடினேன்.
 சிவகாசியிலிருந்து ஒரு வரன் வந்தது. அது தகைந்து, ஆனந்தியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை நானும் அத்தையும் செய்து கொண்டிருந்தோம். அதற்குள் என்னன்னவோ நடந்து விட்டது.
 எவனோ ஒரு முட்டாள் ஆனந்தி ஆபிஸ் போகும் போது மறித்து அவள் மீது ஆசிட் வீசி விட்டு ஓடி விட்டான். பத்திரிகைகளும் போலீஸும் அவனைக் காதலன் என்று கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக எனக்குத் தெரியும், இது காதல் இல்லை.
 நீங்களே சொல்லுங்கள், நிஜமாக காதலிப்பவன் எவனும் தான் காதலிக்கும் பெண்ணின் முகத்தை இப்படிக் கோரப்படுத்திப் பார்க்க விரும்புவானா? அவனொரு மிருகம், அவ்வளவு தான்.
 அழகு தேவதையாய் வலம் வந்த என் அத்தை பெண்ணின் முகம் ஆசிட் வீச்சால் இப்போது கோரமாகி, அவள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். ஆசிட் ஊற்றியவனின் முகத்திலும் இதே மாதிரி ஆசிட் ஊற்றி அதன் வலியையும் வேதனையையும் அவனை உணரச் செய்ய வேண்டும் அப்போது தான் என்
 மனசு ஆறும்....
 
 வாக்குமூலம்: 2 - கதிர்வேல்
 விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டிக்கும் பட்டாசுக்கும் பெயர் போன சிவகாசி தான் எனக்கு சொந்த ஊர். நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீகம் கூட சிவகாசி தான் தெரியுமா? சில மாதங்களுக்கு முன்பு பந்தல்குடி என்னும் ஊருக்கு அம்மாவுடன் போய் எனக்கு திருமணத்திற்காக ஆனந்தி என்கிற பெண்ணைப் பார்த்து பேசி முடித்து விட்டு வந்தோம்.
 நாங்கள் பெண் பார்த்துவிட்டு வந்த அடுத்த நாளே, அகிலன் என்றொருவன் என்னை எங்களின் பள்ளியில் வந்து சந்தித்தான். அவன் தன்னை ஆனந்தியின் காதலன் என்று சொல்லிக் கொண்டான்.
 அன்றைக்கு நான் காலையில் பள்ளிக்குள் நுழைந்து கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் போது, என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியை புவனேஸ்வரி மேடம், ""கதிர்வேல் ஸார், அகிலன்னு ஒருத்தர் உங்களச் சந்திக்கணும்னு காலையிலருந்து வந்து காத்திருக்கிறார். பார்த்தீங்களா?'' என்றாள்.
 எனக்கு அகிலன் என்று யாருடனும் பரிச்சயமிருக்கவில்லை. எனக்குத் தெரிந்த ஒரே அகிலன் தமிழின் பிரபல எழுத்தாளர் "சித்திரப் பாவை' என்ற நாவலுக்காக ஞானபீட விருதெல்லாம் வாங்கியவர். அவர் இப்போது உயிரோடு இல்லை. அப்படியே உயிரோடிருந்தாலும் இவ்வளவு காலையில் என்னைச் சந்திக்க அவர் வந்து காத்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று தோன்றியது.
 ""அப்படியா, நான் பார்க்கலையே எங்க இருக்கார்?'' என்றேன் ஆர்வம் மேலிட.
 சுற்றுமுற்றும் கண்களை அலைய விட்டவள், ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தவனை விரல் சுட்டி, ""அதோ அவர் தான்'' என்றாள்.
 அதிகம் கட்டட வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளி எங்களது. பாதி வகுப்புகள் மரத்தடிகளில் தான் நடக்கும். மரத்தடியில் காத்திருந்தவனுக்கும் என்னுடைய வயது தானிருக்கும்.
 அவனுக்கு அருகில் போய், ""ஹலோ, நான் தான் கதிர்வேல் நீங்க என்னையா தேடி வந்துருக்கீங்க?'' என்று கை கொடுத்தேன். ரொம்பவும் பதட்டப்படுகிறவனாகவும் பரபரப்பாகவும் தெரிந்தான். அவன் எனக்கு கை எதுவும் கொடுக்கவில்லை.
 ""உங்க கூட நான் கொஞ்சம் பேசணும்'' என்றான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு. முன்பின் அறிமுகமில்லாத என்னிடம் இவன் ஏன் இத்தனை கடுமையான முகபாவம் காட்டுகிறான் என்று மனசுக்குள் நினைத்தபடி, ""எது சம்பந்தமா?'' என்றேன்.
 ""நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற ஆனந்தி சம்பந்தமா'' என்றான் அதே விரைப்புடன்.
 பிரேயர் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. முதல் பீரியட் எனக்கு அன்றைக்கு வகுப்பெதுவும் இல்லை. அகிலனை ஸ்டாஃப் ரூமிற்கு அழைத்துப் போனேன். ஸ்டாஃப் ரூமில் யாருமில்லை. எல்லோரும் பிரேயருக்கான ஆயத்தங்களில் வெட்ட வெளிகளில் அலைந்து கொண்டு இருந்தார்கள்.
 ""சொல்லுங்க'' என்றேன் அங்கிருந்த ஒரு பெஞ்ச்சில் அகிலனை உட்காரும்படி சைகையில் காட்டியபடி.
 ""நீங்க யாரு... ஆனந்தியப் பத்தி என்ன சொல்லணும் உங்களுக்கு?''
 ""ஆனந்திய நீங்க கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு எச்சரிச்சுட்டுப் போகத்தான் வந்தேன்'' என்றான் எரிச்சலூட்டும் தொனியில். இன்றைய நாளின் தொடக்கம் சரியில்லை என்று மனக்குறளி சொல்லியது.
 ""காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? திடீர்னு வந்ததும் வராததுமா மொட்டைத் தாத்தா குட்டையில விழுந்தான்ங்குறது போல ஆனந்திய கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்? முதல்ல உங்களுக்கும் ஆனந்திக்கும் என்ன சம்பந்தமுன்னு சொல்லுங்க'' என்றேன்.
 ""நான் அவளக் காதலிச்சவன். இப்பவும் அவளக் காதலிச்சுக்கிட்டு இருப்பவன். அவளும் என்னைக் காதலிக்குறா. ஆனா வீட்டுல உள்ளவங்க இதை விரும்பல. அவங்கள நான் சமாளிச்சுக்குவேன். இப்ப நீங்க அவளக் கல்யாணம் பண்ணக் கூடாது. ஏதாவது காரணம் சொல்லி அவள வேண்டாமின்னுடணும்'' என்றான்.
 ஏனோ அகிலன் சொல்வதெல்லாம் பொய்யென்று எனக்குள் ஓர் உள்ளுணர்வு எச்சரித்தது. அதனால், ""உங்களப் பத்தி எல்லா விபரமும் ஆனந்தி ஏற்கெனவே என்கிட்ட சொல்லியாச்சு நீங்க கிளம்பலாம்'' என்று சும்மாவாச்சும் அவனிடம் சொல்லி வைத்தேன்.
 அவனும் விடாமல், ""என்னப்பத்தி உங்க கிட்ட அவள் என்ன சொன்னாளோ தெரியாது. ஆனா நீங்க ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கணும் எங்களோடது சினிமாக் காதலில்ல கைபடாம காதலிக்கிறதுக்கு... எங்களுக்குள்ள எல்லாமே நடந்துருச்சு. புரிஞ்சுக்குங்க'' என்றான்.
 அவன் எல்லாமே என்பதைத் தேவைக்கு மேலேயே அழுத்திச் சொன்னான்.
 ""இங்க பாருங்க அகிலன், நீங்க சொல்ற எதையும் நான் நம்பத் தயாரில்ல. அப்படியே நீங்க சொல்றது உண்மையாவே இருந்தாலும் எனக்கு அதுபற்றியெல்லாம் அக்கறை இல்ல. கல்யாணத்துக்கு முன்னால ஒரு பெண் காதலிக்கிறதுங்குறது பெரிய குத்தமும் இல்ல. அதோட உண்மையாக் காதலிக்கிற எவனும் தான் நேசிக்கிற பொண்ணப்பத்தி இப்படி அபாண்டமா சொல்லிக்கிட்டு இருக்கவும் மாட்டான். முடிஞ்சா எங்க கல்யாணாத்துக்கு வந்து ஒருவாய் சாப்பிட்டுட்டுப் போங்க'' என்று படபடவென்று அவனிடம் பேசிவிட்டு வகுப்பறை நோக்கிப் போய் விட்டேன்.
 ஆனால் இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட மனதில்லை. ஆனந்தியிடமே இதைப் பற்றி நேரிடையாகப் பேசி விடாலாமென்று தீர்மானித்து, பள்ளிக்கு அரைநாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு அன்றைக்கு மத்தியானமே மதுரைக்குப் பஸ் ஏறி அவளை அவளின் அலுவலகத்தில் போய் சந்தித்தேன்.
 என்னைச் சற்றும் எதிர்பார்க்காத ஆனந்தி ரொம்பவும் பதட்டமடைந்தாள். சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பின் அகிலன் என்னை வந்து சந்தித்தது பற்றிச் சொல்லி, ""நிஜமாகவே நீங்கள் இருவரும் காதலிப்பதாக இருந்தால் உங்களின் கல்யாணத்திற்காக உங்களின் அம்மாவை சந்தித்துப் பேசி அவர்களை என்னால் சம்மதிக்க வைக்க முடியும்'' என்று சொன்னேன். அவள் சிரித்தபடி சொன்னாள்.
 அகிலன் கொஞ்சமும் மெச்சூரிட்டியே இல்லாத விடலைத் தனமானவன் என்றும், அவன் ஆனந்தி தங்கி இருக்கும் மகளிர் விடுதி இருக்கும் பகுதியில் வசிப்பவன். விடுதி நடத்துபவர் அகிலனுக்கும் தெரிந்தவர் என்பதால் அவன் அவ்வப்போது விடுதிக்கு வரும் போது நட்புணர்வுடன் அவனுடன் பழகியதாகவும், அதை அவன் காதல் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக் கொண்டதாகவும், அதை அறிய நேர்ந்த அந்த கணமே அகிலனிடம், தனக்கு அவன் மீது அந்த மாதிரியான எந்த அபிப்ராயமும் இல்லை என்று சொல்லி விலகி விட்டதாகவும், ஆனால் அகிலனோ விடாமல் அவளைத் தொடர்ந்து தன்னை அவள் காதலித்தே ஆக வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.
 ஆனந்தியிடம் பேசி விட்டு வந்ததும் எனக்கு மனசில் பாரம் இறங்கி நிம்மதியாக இருந்தது. நாங்கள் திருமணத்திற்கான மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தோம்.
 அகிலனை அன்றைக்கு எதுவும் செய்யாமல் அப்படியே போக விட்டது எவ்வளவு பெரிய பிசகென்று இப்போதுதான் புரிகிறது எனக்கு.
 அவனைப் போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அவன் காலைச் சுற்றிய பாம்பென்பதைக் கணிக்கத் தவறி விட்டேன் அதனால் தான் ஆனந்திக்கு இப்போது இந்த மாதிரி நிகழ்ந்து விட்டது.
 
 வாக்குமூலம்: 3 - அகிலன்
 குறிப்பு : போலீஸ் கஸ்டடியில் லாக்கப்பிலிருந்த அகிலன் முதலில் பேசவே மறுத்தாலும் அப்புறம் இன்ஸ்பெக்டரின் அனுமதியுடன் பேசி நான் பதிவு பண்ணிய வாக்குமூலம் இது.
 ""என்பேரு அகிலன். அம்மா ஆசையா வச்சபேரு. அது ஓர் எழுத்தாளரின் பெயர் என்றும் நான் அவரின் பெயருக்கு எந்த வகையிலும் நியாயம் செய்யவில்லை என்றும் தமிழில் நான் ஓரிலக்க மதிப்பெண்களை வாங்கிக் கொண்டுவந்து காட்டிய போது அம்மா விசனப்பட்டு சொல்லியிருக்கிறாள்.
 எனக்குச் சொந்த ஊருன்னு எந்த ஊரையும் சொல்லிக்க முடியாது. யாதும் ஊரேங்குற வகையைச் சேர்ந்தவன். ஏன்னா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அரசாங்க உத்தியோகம். அப்பா சிவில் சப்ளைஸ்ல அதிகாரி. அம்மா அரசாங்க ஆஸ்பத்திரியில் நர்ஸ்.
 அப்பா அநியாயத்துக்கு நேர்மையாளரா இருந்ததால் அதுவே அவருக்கு பெரும் போதையாகி எப்பவும் எல்லோர் கூடவும் வாக்குவாதம் சண்டை. அதனால் அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர்.
 நானும் அப்பாகூட கொஞ்ச நாள் அம்மா
 கூடக் கொஞ்ச நாள்னு வெவ்வேறு ஊர்கள்ல ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, மெட்ரிக்குலேசன்னு விதவிதமான பள்ளிகள்ல படிச்சேன். ஆனா என் மண்டையில எந்தப் படிப்புமே ஏறல.
 அப்பாவும் அம்மாவும் என் மூளைக்குள் படிப்பைத் திணித்து விட முயன்றார்கள். எப்படி உருண்டு பொரண்டும் என்னால பி.எஸ்.ஸியைக் கூட முழுசாக முடிக்க முடியவில்லை இன்னும் நாலஞ்சு பேப்பர் அரியர்ஸ் இருக்கு.
 அப்பாவுக்கு மேலூருக்கு மாற்றல் உத்தரவு வந்தபோது, அம்மா சிவகங்கையில் வேலையிலிருந்தாள். எப்படியோ முட்டி மோதி யார் யாரிடமோ கெஞ்சி மதுரையில் இருக்குற மருத்துவமனைக்குத் தலைமை நர்ஸாக வந்து சேர்ந்தாள்.
 அங்கு நாங்கள் குடியிருந்த அதே தெருவில் இருந்த லேடீஸ் ஹாஸ்டலில் தான் ஆனந்தி தங்கி இருந்தாள். அவளை நான் முதல் தடவையாக பார்த்த நிமிஷமே பளிச்சுன்னு மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டுன மாதிரி தோணுச்சு, "இவள் தான் எனக்கானவள்'னு. ஆம். அந்த நிமிஷத்திலருந்தே நான் அவளைக் காதலிக்கத் தொடங்கி விட்டேன்.
 ஆனால் அவளை அணுகுவது தான் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. அவள் தங்கியிருந்த ஹாஸ்டல் நடத்துன ஓனரோட பையனை நண்பனாக்கிக்கிட்டு அடிக்கடி அவனைச் சந்திக்கப் போறது போல் ஹாஸ்டலுக்குப் போகத் தொடங்கினேன்.
 அவள் பின்னால நாயாய்ப் பேயாய் அலைந்தேன். அவள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுறப்ப, பொம்பள மனசு எம்மாத்திரம்? கடைசியில அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள். அதுவே எனக்கு பெரிய வெற்றியாக எதையோ சாதித்து விட்ட சந்தோஷத்தைத் தந்தது.
 ஒரு கட்டத்தில் அவளிடம் எனக்கு அவள் மேலிருந்த தீவிரமான காதலைப் பற்றிச் சொல்லவும், அவள் தனக்கு அப்படிப்பட்ட உணர்வுகள் எதுவும் இல்லை என்றும் என்னைத் தன்னுடைய நண்பனாக மட்டுமே பாவித்துப் பழகியதாகவும் சொன்னாள்.
 ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியம்? காதல் தான் அது என்று அவளை நான் நச்சரிக்கத் தொடங்கினேன். அதற்கப்புறம் அவள் என்னைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டாள்.
 நான் என் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அதனால் என் முகத்தில் சிறு வாட்டத்தையும் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. மேலும் சிறு வயதிலிருந்தே அம்மாவும் அப்பாவும் அருகிருந்து அரவணைத்து என்னை வளர்க்கவில்லை.
 அந்தக் குற்ற உணர்ச்சியாலோ என்னவோ, நான் எதை ஆசைப்பட்டுக் கேட்டாலும் அதை எப்படியாவது தருவித்துத் தந்து விடுவார்கள். இதுவரை நான் ஆசைப்பட்டு எதுவும் கிடைக்காமல் போனதில்லை என்பதால் ஆனந்தியையும் என்னால் எப்படியும் அடைந்து விட முடியும் என்று திடமாக நம்பினேன். என்னுடைய அப்பாவிடம் அவள் வீட்டில் போய் பெண் கேட்கச் சொன்னேன்.
 முதல் தடவையாக அவர் என்னிடமும் ஓர் அரசாங்க அதிகாரி போலவே, ""பாவம் அந்தப் பொண்ணோட வாழ்க்கைய நான் பாழாக்க விரும்பல'' என்று ஒரே வாக்கியத்தில் என்னோட ஆசையை நிராகரித்து விட்டார். அம்மாவிடம் சொல்லவும், அவள் என்னை ஏதாவது வேலை தேடிக் கொள்ளும்படியும் அதற்கு அப்புறம் அவர்கள் வீட்டில் போய் பேசுவதாகவும் சொன்னாள்.
 அது கொஞ்சமும் சாத்தியமில்லாத பாதை. ஆண்கள் என்றால் வேலைக்குப் போக வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பது இந்த சமூகத்தின் சாபக்கேடு என்பது என் அபிப்ராயம். என்னால் தினசரி கடிகார முட்களைத் துரத்தும் மாதச் சம்பளத்துக்காரனாக ஒருபோதும் மாறவே முடியாது.
 அதனால் அப்பாவிடம், ""கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணித் தாருங்கள் ஏதாவது பிஸினஸ் பண்ணுகிறேன்'' என்றேன். அவருக்கு என்மேல் எந்த நம்பிக்கையும் இல்லை யாதலால் நான் சொன்னதை அவர் பொருட்படுத்தவே இல்லை.
 இதற்கிடையில் ஆனந்திக்கு அவர்கள் வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேடத் தொடங்கினார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அவளே தான் சொன்னாள். இனியும் தாமதித்தால் அவளுக்கு வேறு யாருடனாவது திருமணம் செய்து அனுப்பி விடுவார்களென்று எனக்கு பயமும் பதட்டமும் வந்து விட்டது.
 அவளுக்கு சிவகாசியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவனுடன் திருமணம் கூடி வந்து விட்டதை அறிந்து, கதிர்வேலையும் சந்தித்து விஷயத்தைச் சொல்லி அவனை ஆனந்தியைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிற புரபோசலில் இருந்து விலகி விடும்படி கெஞ்சினேன். அவனும் என்னை சீரியசாக எடுத்துக்கவில்லையே..... நான் என்னதான் செய்வது? நான் காதலிக்கும் பெண்ணை எப்படி இன்னொருவனுக்கு மனைவியாக்க அனுமதிப்பது?
 அதனால் காதலர் தினத்தன்று அவள் ஹாஸ்டலில் இருந்து ஆபிஸுக்குக் கிளம்பும் போது அவளைப் பின் தொடர்ந்து போனேன். அவள் ஆபிûஸ நெருங்கியதும் அவளிடம் பேச்சுக் குடுத்தேன். சட்டென்று கையோடு நான் கொண்டு போயிருந்த ஆசிட்டை எடுத்து அவள் முகத்தில் ஊற்றி விட்டு ஓடிப் போய் விட்டேன்.
 நான் செய்தது தவறு தான் எனக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கிடைக்கட்டும்... அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம். நான் ஆசைப் பட்டது எதுவும் எனக்குக் கிடைத்தாக வேண்டும் அது பொருளாக இருந்தாலும், பொண்ணாக இருந்தாலும்.... எனக்குக் கிடைக்கலைன்னா அதை வேற யாருக்கும் கிடைக்க விட மாட்டேன்
 
 கடைசிச் செய்தி:
 
 சில நாட்களுக்கு முன்பு ஆனந்தி, மருத்துவம் பலனளிக்காமல் இறந்து விட்டாள். அவளின் அக்காள் தங்கையின் சார்பில் கேட்ட கேள்விகள் அங்கிருந்த யாவரையும் உலுக்கி விட்டன.
 "என் தங்கை என்ன குற்றம் செய்தாள்? பெண்ணாய்ப் பிறந்ததா அல்லது பார்க்கக் கொஞ்சம் இலட்சணமாய் இருந்ததா? அவளுக்கு ஏனிந்தத் தண்டனை?
 பெண்கள் எல்லாம் ஆண்களின் விளையாட்டு பொம்மைகள் தானா? எங்களுக்கென்று உணர்வுகளும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இருக்கவே கூடாதா?
 இந்தச் சமூகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே ஆனதா? இன்னும் இவளைப் போல் எத்தனை பெண்கள் இப்படி சிதைக்கப்படுவதை இந்தச் சமூகம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறது?' ய்

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.