பிள்ளை தாகம்
சரோஜினி அவளின் வீட்டு வாசலில் குனிந்து மும்முரமாய்க் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கோலத்தின் எந்த வளையத்துக்குள்ளும் அடைபடாமல்


சரோஜினி அவளின் வீட்டு வாசலில் குனிந்து மும்முரமாய்க் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கோலத்தின் எந்த வளையத்துக்குள்ளும் அடைபடாமல் ஒரு புள்ளி மட்டும் சுயேட்சை எம்.எல்.ஏ. மாதிரி தனியாக நிற்கவும், கோலத்தில் எங்கே தவறு என்ற தீவிர யோசனையில், கோலத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது வீட்டு வாசலில் காரொன்று வந்து நின்றதையோ அதிலிருந்து இறங்கிய கலைவாணி, ஒருத்தரை மெதுவாய்க் கை பிடித்து நடத்திக் கொண்டு வந்ததையோ அவள் கவனிக்கவில்லை. அவளுக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு, ""சரோஜினி மிஸ்'' என்று கலைவாணி குரல் கொடுக்கவும் தான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
திடீரென்று கலைவாணியை அவளின் வீட்டு வாசலில் பார்த்ததும் சரோஜினிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வீட்டிற்கு வந்திருப்பவர்களை வரவேற்கவும் மறந்து, ""என்னங்க மிஸ் இவ்வளவு தூரம் என்னைத்
தேடிக்கிட்டு, என் வீட்டு அட்ரஸ் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?'' என்று ஆச்சர்யத்தில் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
""உங்க வீடு தேடி வந்துருக்க எங்கள வீட்டுக்குள்ள கூடக் கூப்பிட மாட்டீங்களா மிஸ்?'' என்று கலைவாணி சொல்லவும் தான், ""ஐயோ, ஸாரி... ஸாரி மிஸ்'' என்று பதறி கேட்டைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்துப் போனாள் சரோஜினி.
கலைவாணி தன்னுடன் வந்திருப்பவரை, ""இவர் தான் என் ஹஸ்பண்ட் மிஸ்'' என்று அறிமுகப்படுத்தி வைக்கவும், சரோஜினிக்கு அவரின் முகம் எங்கோ பார்த்த மாதிரி மிகவும் பரிச்சயமானதாக இருந்தது. ஆனால் சட்டென்று யாரென்பது புத்தியில் உறைக்கவில்லை.
அவர் கண்களுக்கு கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். கலைவாணியின் கைகளைப் பிடித்த
படியே தான் நடந்து வந்தார். அதனால் அவர் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பது சரோஜினிக்குப் புரிந்தது.
அவர்களை உள்ளே அழைத்துப் போனதும், அவர்களுக்கு உட்கார ஷோபாவைக் காட்டியபடி, ""இப்பவாச்சும் சொல்லுங்க மிஸ், என்ன விஷயமா இவ்வளவு தூரம் என்னைத் தேடிக்கிட்டு வந்துருக்கீங்கன்னு?'' என்றாள் சரோஜினி மிகவும் ஆர்வமாக.
""ஏன் மிஸ், இவ்வளவு நெர்வசா இருக்கீங்க சும்மா இந்தப் பக்கமா ஒரு சின்ன வேலையா வந்தோம். அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போலாமேன்னு தான். ஏன் வரக் கூடாதா மிஸ்?''
""அய்யய்யோ, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மிஸ். தாராளமா வரலாம்.. ஆனா என் வீட்டு அட்ரஸ் எப்படிக் கிடைச்சது உங்களுக்கு?''
""கூகுள்ள சரோஜினி மிஸ்ஸூன்னு உங்க பேர சும்மா அடிச்சுப் பார்த்தேன். உடனே உங்க அட்ரஸ் வந்துருச்சு மிஸ்'' என்றாள் சிரித்துக் கொண்டே.
""அய்யோ கலாய்க்கிறீங்களே கலைவாணி மிஸ்..'' என்றபடி சரோஜினி செல்லமாய் அவளின் இடுப்பில் குத்தவும், ""உங்க அட்ரஸ் கண்டுபிடிக்கிறது என்ன அவ்வளவு பெரிய விஷயமா மிஸ்? நம்ம ஆபீஸ் கிளார்க் குருகிட்டப் போன் பண்ணித் தான் விசாரிச்சேன். அந்த மனுஷன் எப்படிப் போகணுமின்னு வாயாலயே ஸ்கெட்ச் போட்டேக் காண்பிச்சுட்டார். அவருக்கும் இந்தப் பக்கம்தான் எங்கேயோ வீடாமே?'' என்ற கலைவாணி, ""எங்க மிஸ் வீட்ல யாரையும் காணோம்?''
என்றாள் பார்வையை வீட்டுக்குள் ஓட்டியபடி.
""அவரு சிவில் என்ஜினியர். சைட்ல ஏதோ அவசர வேலைன்னு போயிருக்கார். ஞாயிற்றுக்கிழமை கூட அபூர்வமாத்தான் வீட்ல இருப்பார். எங்க பொண்ணு இங்க தான் எதிர்த்த வீட்ல போய் விளையாடிக்கிட்டு இருப்பாள். அங்கதான் அவள் கூட விளையாடுறதுக்கு ரெண்டு வாண்டுகள் இருக்கும்'' என்றாள் சரோஜினி.
இவர்களின் சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் அமைதியாக சோபாவில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு இவர்கள் பேசுவதை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்த தன்னுடைய கணவனைக் காட்டி சரோஜினியிடம், "" இவர யாருன்னு தெரியுதா மிஸ்?'' என்றாள் கலைவாணி.
""நானும் அதான் ரொம்ப நேரமா யோசிச்சுக்கிட்டு இருக்கேன் மிஸ். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு. ஆனா சட்டுன்னு ஞாபகம் தான் வரவே மாட்டேன்குது'' என்று சரோஜினி நொந்து கொள்ளவும், கலைவாணி ஒரு டீ.வி. சேனலின் பெயரைச் சொல்லி, ""அதுல வர்ற புரோகிராம்கள் எதுவும் பார்ப்பிங்களா மிஸ்?'' என்று கேட்டாள். உடனே சரோஜினிக்கு பளீரென்று ஞாபகம் வந்து விட்டது.
""வாரம் வாரம் வாசகர்களைக் கேள்விகள் எழுதி அனுப்பச் சொல்லி அதைப் பிரபலங்கள் கிட்டக் கேட்டு, கேள்விகளாலேயே அவங்களக் கழுவிக் கழுவி ஊத்துற செங்குட்டுவன் ஸார் தான?'' என்றாள் சந்தோஷத்தில் குதித்தபடி.
""எங்க வீட்ல எல்லோருமே வாரம் தவறாம உங்க புரோகிராம் பார்ப்போம் ஸார். இந்நேரம் வீட்ல இருந்திருந்தா அவருமே சந்தோஷப்பட்டிருப்பார்'' என்றபடி எழுந்து நின்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சரோஜினி.
""நீங்க ஒவ்வொரு வாரமும் பிரபலங்கள் பேரைச் சொல்லிக் கேள்விகளை எழுதி அனுப்பச் சொன்னதும், நானும் அவரும் நிறையக் கேள்விகள் எழுதி அனுப்புவோம். ஆனால் ஒரு வாரம் கூட நாங்க கேட்ட கேள்விகள் எதையும் நீங்க பிரபலங்கள் யார்கிட்டயும் கேட்டதே இல்லை ஸார்?''
""அப்படியா ரொம்ப சந்தோஷங்க. பெரும்பாலான கேள்விகளை செலக்ட் பண்ணிக் குடுக்குறதே கலைவாணி தான்'' என்று மனைவியைக் கைகாட்ட அவளும் சிரித்துக் கொண்டாள்.
""நீங்களும் கேள்வி எழுதி அனுப்புவீங்களா மிஸ். தெரியாமப் போயிடுச்சே. ஒவ்வொரு வாரமும் ஏகப்பட்ட கடிதங்கள் வருது. அதுலருந்து கேள்விகளை செலக்ட் பண்றதுக்குள்ள போதும் போதுமின்னு ஆயிடுது. அடுத்த முறை கண்டிப்பா உங்க கேள்விகளச் செலக்ட் பண்ணிக் கேட்கச் சொல்றேன்'' என்றாள்.
அவரும், ""நட்சத்திரக் கேள்வி கேட்டவங்கன்னு நிகழ்ச்சியோட இறுதியில ஒருத்தரக் காண்பிக்கிறோம்ல... அதுல உங்களையும் காண்பிக்க ஏற்பாடு பண்ணீட்டாப் போச்சு'' என்றார்.
சரோஜினி கும்மிடிப்பூண்டியிலிருக்கும் அரசு பள்ளிக்கு மாற்றலாகி வந்தே இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தன. அதுவரைக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். நான்கு வருஷங்களுக்கு முன்பு அங்கு தான் அவளுக்கு முதல் போஸ்டிங் ஆகியிருந்தது.
அவர்களின் வீடிருப்பதோ திருநின்றவூரில். அதுவும் கணவனே பார்த்துப் பார்த்துக் கட்டிய சொந்த வீடு. புருஷன் சென்னையிலும், அவளும் அவளின் குழந்தையும் காஞ்சிபுரத்திலுமாக அல்லாடிக் கொண்டிருந்தார்கள். கும்மிடிப்பூண்டிக்கு வேலை மாற்றி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
இப்போதும் அவளுக்குப் பள்ளிக்குப் போய்விட்டு வருவது ரொம்பவும் சிரமமான காரியம் தான். பஸ், மின் இரயில், ஷேர் ஆட்டோ என்று ஒரே நாளில் கப்பலையும் ஏரோபிளேனையும் தவிர்த்து எல்லா வகையான போக்குவரத்து வாகனங்களையும் பயன்படுத்தித்தான் தினசரி அவள் வேலைக்குப் போய் வந்து கொண்டிருக்கிறாள்.
ஆனால் கலைவாணிக்கு வீடும், வேலை பார்க்கும் இடமும் கும்மிடிப்பூண்டியில் தான். இருவரும் மேல்நிலை வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கிறார்கள். கலைவாணி தமிழும், சரோஜினி கணிதமும். சரோஜினி கும்மிடிப்பூண்டி பள்ளிக்கு வேலைக்கு வந்த முதல் தினமே கலைவாணி அவளிடம் வலியப் போய் பேச்சுக் கொடுத்தாள்.
""எங்கிருந்து வருகிறீர்கள்? எத்தனை பிள்ளைகள்? புருஷன் எங்கு வேலை செய்கிறார்?''
என்று வாய் மூடாமல் ஏகப்பட்ட கேள்விகள். சரோஜினியின் இயல்புக்கு அவ்வளவு சுலபத்தில் அவள் யாரிடமும் ஒட்டிக் கொள்ளவே மாட்டாள். அதனால் கலைவாணியின் தொடர்ந்த கேள்விகளில் அவள் ரொம்பவே எரிச்சலடைந்தாள்.
""இப்ப உங்களுக்கு என்னப்பத்தி என்ன தான் தெரியணும் மிஸ்? வந்த அன்னைக்கே தொணதொணத்துக்கிட்டு..'' என்று சரோஜினி கோபப்படவும், கலைவாணி முகம் சுருங்கி ""ஸாரி மிஸ்'' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டாள்.
அப்புறம் சரோஜினி மற்ற ஆசிரியைகளிடம் விசாரித்தபோது தான் தெரிந்து கொண்டாள். கலைவாணி எல்லோரிடமுமே இப்படித்தானாம். மிகவும் வெள்ளந்தியானவளாம். கொஞ்சம் படபடவென்று பேசுவாளாம். யாரிடமும் சீக்கிரம் நெருங்கி தோழமை கொண்டு விடுவாளாம்.
யாருக்காவது ஏதாவது பிரச்னையென்றாலும் ஓடிப் போய் உதவுகிற குணமாம் அவளுக்கு. மறுமுறை கலைவாணியைப் பார்த்தபோது சரோஜினி அவளிடம் ஸாரி சொன்னாள்.
""அய்யோ அதெல்லாம் பரவாயில்ல மிஸ்..'' என்றபடி எதுவுமே நடக்காதது போல் மறுபடியும் தொணதொணக்கத் தொடங்கி விட்டாள். ஆனாலும் இப்படி திடுதிப்பென்று வீட்டிற்கே வந்து நிற்பாள் என்பதை சரோஜினி கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆறேழு வயதிருக்கும் சரோஜினியின் பெண் வெளியில் விளையாடி ஓய்ந்து வீட்டிற்குள் வந்து, புதிதாய் இருவர் வீட்டிற்குள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் தயங்கி அம்மாவைப் பார்த்தது.
கலைவாணி குழந்தையிடம், ""ஏய், மை ஸ்வீட்டி இங்க வா'' என்று கை நீட்டினாள். சரோஜினி குழந்தையிடம் ""போ'' என்று கண்ணசைக்கவும் கலைவாணியிடம் ஓடிப்போய் அவளின் மடியில் மிக இயல்பாக உட்கார்ந்து கொண்டு, ""என் பெயர் ஸ்வீட்டி இல்ல ஆண்ட்டி செளபர்னிகா'' என்றது.
""அப்படியா, ஸ்வீட் நேம். என்ன படிக்கிறடா செல்லம்?'' என்று கலைவாணி கேட்கவும், ""செகண்ட் ஸ்டாண்டர்டு பி செக்ஷன்'' என்றாள் செளபர்னிகா.
கலைவாணி ஹேண்ட் பேக்கைத் திறந்து வாங்கிப் போயிருந்த விலை உயர்ந்த சாக்லேட்டை எடுத்து குழந்தையிடம் கொடுக்கவும், மறுபடியும் சரோஜினியின் முகம் பார்த்து, அவள் பார்வையாலேயே அனுமதித்த பின்பு வாங்கிக் கொண்டு,""நீங்க எங்கருந்து வர்றீங்க ஆண்ட்டி?'' என்று பெரிய மனுஷியைப் போல் கேள்வி கேட்டது.
""கலைவாணி மிஸ், இவளும் உங்களப் போலத் தான் யார் கூடயும் உடனே போய் ஒட்டிக்குவா. வாய் மூடாம கேள்வியும் கேட்பாள்'' என்றாள் சரோஜினி.
""அப்படி இருக்குறது தான் நல்லது. அப்புறம் உங்களப் போலவா சிடுசிடுன்னு இருப்பாங்க?'' என்ற கலைவாணி, குழந்தையின் கன்னத்தில் இதழ் பதித்து முத்தமிட்டாள்.
செளபர்னிகா கலைவாணியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சாக்லேட்டைப் பிரித்துச் சாப்பிட்டபடி மறுபடியும் விளையாடுவதற்கு வெளியிலே ஓடிப் போனாள்.
""உண்மையச் சொல்லணுமின்னா உங்க குழந்தையப் பார்த்துட்டுப் போலாமின்னு தான் நாங்க வந்தோம் மிஸ்'' என்று தொடங்கினாள் கலைவாணி. சரோஜினி தன் பார்வையாலேயே, ""அப்படியா?'' என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்த, ""செளபர்னிகா, உங்களுக்கு ரொம்ப வருஷங்கழிச்சுப் பொறந்த குழந்தை இல்லையா, அதுவும் டெஸ்ட் டியூப் மூலம். சரிதான மிஸ்'' என்றாள் கலைவாணி.
""அதெப்படி உங்களுக்குத் தெரியும்?''
என்றாள் சரோஜினி அவளைக் கூர்ந்து பார்த்தபடி.
""நீங்க காஞ்சிபுரத்துல ஒர்க் பண்ணுனீங்கள்ல... ஒரு ஸ்கூல். அங்கயும் எனக்கொரு ப்ரண்ட் இருக்குறாங்க. மரியபுஷ்பம்னுட்டு. நானும் அவங்களும் ஒரே நாள்ல தான் வேலைக்குச் சேர்ந்தோம் கவுன்சிலிங்குலேயே ப்ரண்ட்ஸாயிட்டோம் இல்ல. அவங்க மூலம் தான் தெரிஞ்சுக்கிட்டேன்..''
""ரொம்பவே ஆச்சர்யப் படுத்துறீங்க கலைவாணி. என்னைத் தவிர எஜுகேசன் டிபார்ட்மெண்ட்ல எல்லோரையுமே உங்களுக்குத் தெரியும்னு நெனைக்கிறேன்..''
""நானும் இவரும் காசு பணம் சம்பாதிக்கிறதக் காட்டிலும் மனுஷங்களச் சம்பாதிக்கிறது தான் முக்கியம்னு நெனைக்கிறோம் மிஸ். அதனால நாங்க ரெண்டு பேருமே மானம் அவமானம் எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க மாட்டோம். யார் கூடயும் நாங்களே போய்ப் பழகிடுவோம். இவரு என்னவிட ஒருபடி மேலயே. ஏன்னா உறவுன்னு சொல்லிக்கிறதுக்கு இவருக்கு யாருமே கிடையாது மிஸ். ஒரு அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவர். இவரோட டி.வி. புரோகிராம்கள் பார்த்து, இவர் பேசுற தமிழ்ல மயங்கி இவர நான் விரட்டி விரட்டிக் காதலிச்சேன்.
பிடிவாதமா எங்க வீட்டுக்காரங்களோட எதிர்ப்பையும் மீறி இவரையே கல்யாணம் பண்ணிக் கிட்டதால, என் பக்கத்து உறவுக்காரங்களும் எங்க கிட்டருந்து தூரமா விலகிப் போயிட்டாங்க. அதனால எங்களுக்கு உறவுன்னா உங்கள மாதிரியானவங்க தான் மிஸ்..'' என்றாள் கலைவாணி கண்கள் கசிந்தபடி.
சரோஜினி மிகவும் நெகிழ்ந்து போய் கலைவாணியை அப்படியே தாவி அணைத்துக் கொண்டாள்.
""எல்லாத்துக்கும் சேர்த்து ஸாரிப்பா ஒரு நிமிஷம் உட்கார்ந்துருங்க, உங்களுக்கு சாப்புடுறதுக்கு ஏதாச்சும் எடுத்துட்டு வர்றேன்.'' என்று சமையலறைக்குள் ஓடிப் போய் ஒரு பிளேட்டில் பிஸ்கட்டையும் மிக்ஸரையும் போட்டுக் கொண்டு வந்து அவர்களுக்கு முன்னால் வைத்தாள்.
""சாப்பிட்டுக்கிட்டு இருங்க காஃபி கலந்து எடுத்துட்டு வர்றேன்'' என்றபடி மறுபடி சமையலறைக்குக் கிளம்பப் போன சரோஜினியிடம், ""ஒரு நிமிஷம் உட்காருங்க மிஸ் உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்'' என்றாள் கலைவாணி.
சரோஜினியும் உட்கார்ந்து கொண்டு அவளின் முகம் பார்த்தபடி, ""இன்னும் நீங்க ரெண்டு பேரும் அவ்வளவு தூரத்துலருந்து எதுக்கு என்னத் தேடி வந்துருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே மிஸ்?'' என்றாள்.
""எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு மிஸ் இன்னும் குழந்தையே பெறக்கல. அதை நாங்க பெரிசு படுத்தவும் இல்ல. இப்பக் கொஞ்ச நாளாத்தான் அவரு கொஞ்சி மகிழ ஒரு குழந்தையக் கூட பெத்துக் குடுக்க முடியலையேன்னு எனக்குக் கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருந்துச்சு.
அதான் ஒரு வருஷமா குழந்தை பெத்துக்கிறதுக்காக தீவிரமா டீரிட்மெண்ட் போயிக்கிட்டு இருக்கோம்.. எல்லா வகையிலயும் முயற்சி பண்ணீட்டோம். ஆனா இன்னும் ஒண்ணுமே ஃபார்ம் ஆகல. ஐ.வி.எஃப். அதான் டெஸ்ட் டியூப் பேபின்னு சொல்றாங்களே, அதன் மூலம் முயற்சிக்கலாமின்னு டாக்டரம்மா போன வாரம் தான் பரிந்துரை பண்ணாங்க.
அவ்வளவு செலவு செஞ்சு அது சக்ஸஸ் ஆகுமான்னு எங்களுக்குச் சந்தேகமா இருந்துச்சு அப்பத்தான் மரிய புஷ்பம் சொன்னாங்க - நீங்களும் ஐ.வி.எஃப் பண்ணித் தான் குழந்தை பெத்துக்கிட்டீங்கன்னு. அதான் உங்களையும் உங்க குழந்தையையும் பார்த்துட்டு, உங்களோட ஆலோசனைகளையும் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம்'' நீளமாய்ப் பேசி நிறுத்தினாள் கலைவாணி.
சரோஜினி கலைவாணியின் முகத்தையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம், தான் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி நிதானமாகவும் மிக விரிவாகவும் சொல்லத் தொடங்கினாள்.
""உங்கள மாதிரித் தான் எங்களுக்கும் கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கும் மேலக் குழந்தையே உருவாகல. எங்களோடது அரேஞ்சுடு மேரேஜ் தான். எங்க மாமியாரும் அவரைச் சேர்ந்தவங்களும் என்னை மலடின்னே திட்டத் தொடங்கிட்டாங்க. என் வீட்டுக்காரருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணணுமின்னும் வீட்டுல அரசல் புரசலா பேச்சும் கிளம்பிருச்சு.
இப்பல்லாம் படிப்பு, வேலைன்னு இருந்துட்டு முப்பது வயசுக்குப் பக்கத்துல தான் நம்மள மாதிரிப் பெண்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகுது. அப்புறமும் ஒரு நாலஞ்சு வருசத்துக்குக் குழந்தைய பத்தியெல்லாம் யோசிக்காம வேலை சம்பாத்தியம்னு ஓடிக்கிட்டு இருக்குறோம்.
திடீர்னு ஐயோ நமக்கு இன்னும் குழந்தை பொறக்கலியேன்னு உணர்வு வந்து டாக்டர்கிட்ட ஓடுனா, முப்பது வயசத் தாண்டிட்டா இயல்பாக் கரு நிற்கிறது கஷ்டம்னுட்டு ஊசி, மாத்திரை, மருந்துன்னு தொடங்கி, உடம்பும் மனசும் இரணப்பட்டுப் போகுது. குழந்தையின்மைக்காக சிகிச்சை தர்ற மருத்துவமனைகள்ல முக்கால்வாசிக்கும் மேல போலிகளும் ஏமாத்துக்காரங்களும் தான் இருக்குறாங்க..
நாங்க ஒரு மருத்துவர் கிட்ட சிகிச்சை எடுத்துக்கிட்ட கதைய மட்டும் சொல்றேன் கேளுங்க. அவர்கிட்டே அப்பாயின்மெண்ட் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கும். திரும்பத் திரும்ப அலைய விட்டுத் தான் அப்பாயிண்ட் மெண்ட்டே கொடுப்பாங்க.
கிளினிக்குல கூட்டம் நிரம்பி வழியும். பத்திரிகைகள்ல எல்லாம் அந்த ஆஸ்பத்தியில போய் உட்கார்ந்துட்டு வந்தாலே பெண்களுக்குக் குழந்தை பொறந்துடும்ங்குற மாதிரி எல்லாம் - எழுதுனாங்க..
அடிச்சுப் பிடிச்சு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி சிகிச்சை தொடங்குனோம். ஆச்சர்யமா ஒவ்வொரு தடவை மருத்துவமனைக்குப் போறப்பையும் யாராவது ஒருத்தர் அல்லது ரெண்டு பேர் தங்களுக்குக் குழந்தை பொறந்துருக்குன்னு சொல்லி அவங்களோட குழந்தைகளோட வந்து சாக்லேட் குடுப்பாங்க. நமக்கும் எப்படியும் குழந்தை பொறந்துடும்னு நம்பிக்கையா, அந்த அம்மா கேட்குற பணத்தை யெல்லாம் கேள்வியே கேட்காமல் அள்ளி அள்ளிக் குடுத்தோம்.
ஆனாலும் குழந்தை ஒண்ணும் பொறக்குற வழியவே காணோம். போகப் போகத் தான் தெரிஞ்சிக்கிட்டோம். பேப்பர்ல எழுதுனது, குழந்தை பொறந்துருக்குன்னு சாக்லேட் குடுத்தது எல்லாம் அந்த அம்மாவோட செட்டப்புகள்ன்னு.
குழந்தை பெத்துக்கிறதுக்காக உலகத்துல என்னென்ன மருத்துவம் இருக்கோ அத்தனையும் பண்ணுனோம் சித்தா, யுனானி, ஆயுர்வேதம்னு எல்லாத்தையும் முயற்சி பண்ணிப் பார்த்தோம்.
உருண்டை உருண்டையாய் லேகியங்களையும் கை கொள்ளாம மாத்திரைகளையும் முழுங்கி, உடம்புல ஒரு இடம் பாக்கி இல்லாம ஊசிகளாக் குத்திக்கிட்டும் ஒண்ணும் பிரயோசனப் படல. எங்க வீட்டுக்காரருக்கு சுகரும் எனக்கு பிரசரும் வந்தது தான் மிச்சம். குழந்தை ஒண்ணும் பொறக்கல.
ஐ.வி.எஃப். மட்டும் மூனு தடவை பண்ணோம். உடம்பும் மனசும் இரணப்பட்டு பணமும் செலவானது தான் மிச்சம். ஒரு காலத்துல காளான்கள் மாதிரி நர்சரி பள்ளிகள் முளைச்சது இப்ப வீதிக்கு வீதி குழந்தையின்மைக்கான மருத்துவமனைகள் பெருகிக்கிட்டு இருக்கு.
இதையெல்லாம் அனுபவப்பட்டு அவஸ்தைப் பட்டு ரொம்ப தாமதமாத்தான் தெரிஞ்சுக்கிட்டோம்'' என்று சொல்லி கொஞ்சம் நிறுத்தி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் சரோஜினி. அப்புறம் சமையலறைக்குப் போய் தண்ணீர் குடித்து விட்டு, அவர்களுக்கும் காஃபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். இருவரும் மெளனமாகக் காஃபி கோப்பையைப் பெற்றுக் கொண்டு அருந்தத் தொடங்கினார்கள்.
கலைவாணி காஃபியைக் குடித்து முடிக்கவும், அவளைத் தனியே அழைத்துப் போனாள் சரோஜினி.
சரோஜினியே தொடர்ந்து பேசத் தொடங்கினாள்.
""குழந்தை பெத்துக்கிறதுக்காக நான் எடுத்துக்கிட்ட சிகிச்சைகளோட பரிசு எனக்கு மார்புல புற்று. ஒரு மார்பை வெட்டி எறிய வேண்டியதாயிடுச்சு. அதுக்கு எடுத்துக்கிட்ட சிகிச்சையால தான் மார்புல புற்று வந்ததான்னு என்னால உறுதியாச் சொல்ல முடியாது ஆனா அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்னு சந்தேகம் இருக்கு. எவ்வளவு மாத்திரை மருந்துகள் அதோட பக்க விளைவுகள்னு அதுல தான் புற்று உருவாகியிருக்கும்னு தோணுது எனக்கு. டாக்டர்களும் கிட்டத்தட்ட அப்படித் தான் சொன்னாங்க.
கண்ணை வித்து சித்திரம் வாங்குறதுன்னு சொல்வாங்க. நான் கண்ண வித்தேன். ஆனா கடைசி வரைக்கும் சித்திரமும் வாங்க முடியல. அதுதான் கொடுமை'' என்று சொல்லி முடித்ததும், வெடித்து அழுதாள் சரோஜினி. அழுது முடிக்கக் காத்திருந்த கலைவாணி அதிர்ச்சியுடன் கேட்டாள்.
""அப்படின்னா செளபர்னிகா உங்களுக்கு எப்படித் தான் பிறந்தாள் மிஸ்.?''
""செளபர்னிகா எங்களுக்குப் பொறந்த குழந்தை இல்ல. நாங்க ட்ரீட்மெண்ட்ட கம்ப்ளீட்டா நிறுத்தி விரக்தியில இருந்தப்ப, எங்க வீட்டுக்காரரோட நண்பர் ஒருத்தர் ஆலோசனை சொல்லி அவரே செளபர்னிகாவை ஓர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துலருந்து தத்தெடுக்குறதுக்கு உதவி பண்ணினார்.
செளபர்னிகா எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு அரசு பள்ளியில வேலை கிடைச்சது. வேலை செய்ற எடத்துல அவள தத்துப் பிள்ளைன்னு சொல்ல விரும்பாம எங்க மகள்ன்னே சொல்லத் தொடங்கிட்டேன்.
அவளப் பார்க்குறவங்க எல்லாரும் ஏன் மிஸ் வயசான உங்களுக்கு இவ்வளவு சின்னக் குழந்தைன்னு ஆச்சர்யமா விசாரிக்கவும், செளபர்னிகா எங்களுக்கு ரொம்ப வருஷங்கழிச்சு அதுவும் டெஸ்ட் டியூப் மூலம் பொறந்ததுன்னு பொய் சொல்லீட்டேன்..
நான் எல்லார்கிட்டயும் சொன்ன பொய்ய வீடு தேடி விசாரிக்க வந்த உங்க கிட்டயும் சொல்ல எனக்கு மனசு வரல மிஸ், அதான் உங்க கிட்ட உண்மையச் சொல்லீட்டேன்'' என்றாள் சரோஜினி.
அவளே தொடர்ந்து, ""ஐ.வி.எஃப்.ல சக்ஸஸ். ரேட் ரொம்பக் குறைச்சல் கலைவாணி. நூறு பேருக்கு சிகிச்சை குடுத்தா அஞ்சு பேருக்கு சக்ஸஸ் ஆனா அதுவே அதிகம். அதுலயும் நம்மள மாதிரி வயசாயிட்டவங்களுக்கு சக்ஸஸ் ஆகுறது ரொம்ப ரொம்ப அபூர்வம். இதையெல்லாம் டாக்டர்கள் யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு இது பிசினஸ்.
அதனால நீங்களும் எங்கள மாதிரி ஒரு குழந்தைய தத்தெடுத்துக்குங்க வேணுமின்னா நாங்களே அதுக்கும் ஏற்பாடு பண்றோம். அந்த குழந்தை வந்த யோகத்துல உங்களுக்கே இயல்பா ஒரு குழந்தை பிறந்தாலும் பிறக்கும்'' என்றாள்.
கனத்த மனதுடன், ""கண்டிப்பா யோசிக்கிறோம் மிஸ்'' என்றபடி கலைவாணியும் அவளின் புருஷனும் விடை பெற்றுப் போனார்கள்.
அடுத்த நாள் சரோஜினி பள்ளிக்குப் போனதும் கலைவாணியைத் தேடினாள். ஆனால் அவள் பள்ளிக்கு வந்திருக்கவில்லை. உதவி தலைமை ஆசிரியை சொன்னாள்.
""அவங்க ஒரு வாரம் மெடிக்கல் லீவு போட்டுட்டு ஐ.வி.எஃப். டிரிட்மெண்ட் எடுத்துக்கப் போயிருக்காங்களே.''
தன் வயிற்றில் சுமந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான பிள்ளை தாகத்தை பெண்களால் அவ்வளவு சுலபத்தில் விட்டுவிட முடியாது என்று சரோஜினிக்குத் தோன்றியது.
அவள் கடவுளிடம் ஐ.வி.எஃப். சிகிச்சை வெற்றி பெற்று கலைவாணிக்கு சீக்கிரமே ஒரு குழந்தை பிறக்க அருள் புரியும்படி வேண்டிக் கொண்டாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...