காணவில்லை

அந்த முப்பது ரூபாயை கந்தசாமிகிட்ட கொடுத்திட்டயா...?'' என்று  கேட்ட போதுதான் சோபனா சொன்னாள். ""கந்தசாமியை பத்து நாளா
காணவில்லை


""அந்த முப்பது ரூபாயை கந்தசாமிகிட்ட கொடுத்திட்டயா...?'' என்று  கேட்ட போதுதான் சோபனா சொன்னாள். ""கந்தசாமியை பத்து நாளா பார்க்கவேயில்லீங்க..''

""அட... ஆமாம்''  என்று அந்த  உண்மை அப்போதுதான்  எனக்குள் உறைத்தது. எப்படி மறந்து போனேன்? அடிக்கடி சந்திக்கிற  மனிதர்களில்  அவனும் ஒருவன். வீதியில் கடந்து போகிற கணங்களில்  கை தூக்கி அவன் வணக்கம் சொல்லாமல் இருந்ததேயில்லை. அவனை எப்படி மறந்து போனேன்? என் மீதே எனக்கு கோபம் வந்தது. 

""கந்தசாமியைப் பற்றி நீயாவது ஞாபகப்படுத்தியிருக்கக் கூடாதா?'' என மனைவியிடம் சம்பந்தம் இல்லாமல்  கோபித்துக் கொண்டேன். அவன் என்ன ஆனான்? என்ற கேள்வி மனதில் சட்டென பெரிய சுமையாய் வந்து நின்றது.
கந்தசாமி எங்க வீதியின் டெய்லர்தான். நடமாடும் தையல்காரர். அந்த தையல் மிஷினை தள்ளியபடி கண்களில் நம்பிக்கையோடு எங்கள் வீதிக்குள் நுழைந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம். பங்கஜா மாமி வீட்டு மரத்தடிதான் அவனது இருப்பிடம். வேப்பமரத்தின் இதமான காற்று. அவனுக்கு குடை பிடித்தபடி இருக்கும் அந்த மரத்தின் நிழல். தைக்கிற போது வண்டியைச் சுற்றி வட்டம் போட்டு உதிர்கிற இலைகள். ஆட்கள் வந்து போவது தவிர துணைக்கு பேசும் பறவைகள் என அழகிய சூழலுக்குள் அவனது தொழில் வளாகம். வாரத்தில் இரண்டு முறையாவது அவனது கடையை அங்கே பார்க்கலாம். அவனுக்கு வயது கிட்டதட்ட நாற்பத்தைந்து இருக்கலாம். கருத்த நிறம். மிக ஒல்லியான உருவம். அளவான உயரம். ஆங்காங்கே வெள்ளை ஊடுருவிய தலைமுடி. நெற்றியில் எப்போதும் தெரியும் சந்தனம். இதுதான் கந்தசாமி. நான்தான் அடிக்கடி கேட்பேன்.

""என்ன கந்தசாமி... நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்தக்கூடாதா..? இந்த வண்டியை எப்படிதான் தள்றயோ..?''

""சாப்பிடறதே பெரிய விஷயம்...  இதில எங்க சார் நல்லா சாப்பிடறது...? சர்க்கரை வியாதி.. ஒரு தடவ நெஞ்சுவலி வேற வந்திருச்சு... வண்டி ஓடற வரைக்கும் ஓடட்டும் சார்...'' 

நான் கொடுத்த என் பேண்ட்டின் இடுப்பளவைச் சரி செய்தபடியே கந்தசாமி பேசிக் கொண்டிருந்தான். 

""குழந்தைகள் எத்தன கந்தசாமி...?'' 
""ரெண்டு பசங்க சார்... ஒருத்தன் ஏழாவது படிக்கிறான்... இன்னொருத்தன் நாலாவது படிக்கிறான்...''

""வீட்டுக்காரம்மா வேலைக்கு போறாங்களா ?''
""எங்க சார்...  பசங்களப் பார்த்துக்கறதே அவளுக்கு நேரம் சரியா இருக்கு.  அதுவுமில்லாம ஆஸ்துமா தொல்லை இருக்கறதால அவளுக்கும் அப்பப்ப முடியறதில்ல... சார்''

""அப்புறம் இவ்வளவு பிரச்னைய வச்சுட்டு உடம்ப கவனிக்க மாட்டேன்னா எப்படி கந்தசாமி?''

""ஓகே  சார்.. பார்த்துக்கறேன் சார்.. இந்தாங்க வீட்டில போய் இந்த பேண்ட்டை போட்டு பார்த்துட்டு சரியா இருக்கான்னு சொல்லுங்க''

இப்படி நிறைய முறை அவனுடன் நான் உரையாடி இருக்கிறேன். தனது தனிப்பட்ட விஷயங்களை மனசு விட்டு அவ்வப்போது அவன் என்னிடம் சொல்வதுண்டு. நான் ஆறுதலாய் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பது அவனுக்கு அவ்வளவு சந்தோசமாய் இருக்கும். அது தவிர,  காலையில் நான் வேலைக்கு போகும்போது  அருகில் குவிந்திருக்கும்  துணிகளுக்கு இடையில் இருந்து, ""வணக்கம் சார்'' என்பான். வேலையில்லாத சமயங்களில் படித்துக் கொண்டிருக்கும் தினசரியை விலக்கியபடி அந்த வணக்கம் வரும். அவ்வவ்போது அருகில் இருக்கும் டீக்கடையிலும் அவனைப் பார்ப்பதுண்டு. கையில் டீயும் வாயில் பீடியும் இருக்கும்.  என்னைப் பார்த்ததும் பீடியை மறைத்தபடி அவன், ""சார் வாங்க  டீ சாப்பிடலாம்..'' என்பான். வார்த்தைகளுக்கிடையே புகை நழுவும். 

நான் ""பரவாயில்ல கந்தசாமி'' என்றபடி வேகமாய் நகர்வேன். 

 மழைக்காலம் மட்டுமே அவனுக்கு எப்போதும் எதிரி. எந்த  வேலையையும் எடுக்கவிடாமல் அது அவனை பட்டினி போடும். அந்த சமயங்களில்  குடும்பத்தை எப்படிச் சமாளிக்கிறான் என்ற கேள்வியை ஒருநாள் அவனிடமே கேட்டேன்.

""தெரிஞ்சவங்க கடையில நானா வேலை கேட்டு போய் செய்வேன் சார்.. என்னை நம்பி மூணு ஜீவன் இருக்கே சார்''  என்பான்.

 அவனது குடும்பத்தின் மீது அவனுக்கு இருக்கும் அன்பு அபரிதமானது. குழந்தைகளை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து விட வேண்டும் என்பது அவனது கனவாய் இருந்தது. அவன் அடிக்கடி பேசுவது அதைப் பற்றித்தான். 
சாயந்திரம் வேலை முடிந்ததும் அவனது தையல் மெஷினை பங்கஜா மாமி வீட்டு மாடிப்படியின் பின்புற இடத்தில் நிறுத்திவிடுவான். பாதுகாப்பான இடம்தான் அது. மூடியெல்லாம் போட்டு மெஷினை மேலும் பத்திரப்படுத்தியிருந்தான். மாமி வண்டியை நிறுத்த வாடகையெல்லாம் வாங்கிக் கொள்வதில்லை. மாமியின் துணிகளை தைக்கிற போது அவன் காசு வாங்கிக் கொள்வதில்லை என்று மட்டும் கேள்விப்பட்டேன். 

கடைசியாய் கந்தசாமியிடம் பேசும் போதுதான் அவன் கேட்டான்.

""சார் நீங்க வேலை பார்க்கற இடத்தில லோனெல்லாம் தர மாட்டாங்களா?''
""நான் வேலைப் பார்க்கறது பைக் விக்கிற கம்பெனி.. லோன்ல வண்டி வேணா தருவாங்க. லோனெல்லாம் தரமாட்டாங்க கந்தசாமி.  ஆமா எதுக்கு கேட்கறே..?''
""இல்ல... இந்த மழையிலும் வெய்யிலிலும் வேலைப் பார்த்து பார்த்து வெறுத்துப் போச்சு சார்.. பெரிய வருமானமும் இங்க இல்ல... அதான் ஏதாவது லோன் கிடைச்சா சின்னதா கடை போட்டு பொழைச்சுக்கலாம்னு பார்க்கறேன்  சார்''

அவன் கேட்டது எனக்கு பரிதாபமாய் இருந்தது. நியாயமாகவும் பட்டது.
""எங்க சித்தப்பா பையன் ஸ்டேட் பேங்க்லதான் வேலை  பார்க்கிறான். ஏதாவது லோன் கொடுப்பாங்கலான்னு கேட்டுப் பார்க்கிறேன்''

""கேட்டு சீக்கிரம் சொல்லுங்க சார்''  என்றபடி தைத்த எனது லுங்கியை என்னிடம் தந்தான். நான் நூறு ரூபாயை நீட்டினேன். ""சில்லரை இல்லை'' என்றான்.

""எவ்வளவு ஆச்சு கந்தசாமி ?'' என்றேன்.
""முப்பது ரூபாய் சார்''  என்றான்.
""சரி.. அப்புறம் தர்றேன்'' என்றேன்.

அதுதான் நான் கந்தசாமியிடம் கடைசியாய் பேசியது. அப்புறம் எனது சித்தப்பா பையனிடம் கந்தசாமி கேட்ட லோன் சம்பந்தமாய் போன் பண்ணிக் கேட்டுப் பார்த்தேன். அவனும் கேட்டு சொல்வதாய் சொன்னான். அதற்கு பிறகு எனது வேலையில் நானும் கொஞ்சம் பிஸியாக கந்தசாமியை மறந்தே போனேன். இடையில் என்  தம்பி லோன் விஷயமாய் கந்தசாமியை வரச் சொல்லியிருந்தான். அதையும் அவனிடம் சொல்ல மறந்துவிட்டேன். அதை விட கந்தசாமிக்கு தர வேண்டிய அந்த முப்பது ரூபாய்தான் அவனை எனக்கு ஞாபகப்படுத்தியது. அதற்கு பிறகுதான் ஷோபனாவிடம் கேட்டுப் பார்த்தேன். எப்படி கந்தசாமியை மறந்து போனேன்? எனக்கு கஷ்டமாக இருந்தது. மனசு கேட்காமல் வாசலில் வந்து அவனது வண்டி வழக்கமாய் நிற்கும் மரத்தடியைப் பார்த்தேன். வீதி விளக்கின் மஞ்சள் வெளிச்சம் மரத்தை போர்த்தியிருக்க இடம் வெறுமையாய்த் தெரிந்தது. நான் அதையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஷோபனா ""வாங்க வந்து தூங்குங்க. காலையில என்னன்னு விசாரிச்சுக்கலாம்'' என்றாள். நான் வீட்டிற்குள் வந்தேன். கந்தசாமியின் போன் நம்பர் என்று எதுவுமில்லை. இருந்தால் கேட்டுப் பார்க்கலாம். படுக்கையில் வந்து படுத்தேன். என் பொண்ணுதான் ""அப்பாவுக்கு என்னாச்சும்மா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் காலையில் முதல் வேலையாய் பங்கஜா மாமி வீட்டுக்குத்தான் போனேன். கந்தசாமி பற்றி கேட்ட போது மாமிக்கும் அப்போதுதான் உறைத்தது. ""ஆமாம் என்னானான்?'' என்றார்கள்.

""வண்டி இருக்குதே'' என்றார்கள். இருவரும் போய் மாடி படிக்கு பின்புறம் இருந்த இடத்தில் அவனது வண்டியைப் பார்த்தோம். அது அப்படியேதான் இருந்தது. தூசி படிந்திருந்தது. அதன் மீதிருந்த ஒரு பல்லி குதித்தோடியது. நான் அந்த வண்டியையே பார்த்தேன். மனசு என்னவோ செய்தது.

""கந்தசாமி ஏதாவது சொல்லிட்டு போனானா மாமி..?''
""ஒண்ணும் சொல்லலயேப்பா.. ஏதாவது உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களோ என்னவோ...?''

""என்னன்னு தெரியலயே மாமி... அவனோட நம்பர் ஏதாவது இருக்குங்களா?''
""அப்படி எதுவும் அவன் தந்ததில்லையே.  அவனோட வீடு தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு பின்னாடி ஹவுசிங் யூனிட் பக்கத்தில இருக்கறதா ஒரு தடவ  சொல்லியிருக்கான்.  அங்க விசாரிச்சு பார்த்தா ஏதாவது தகவல் கிடைக்கலாம்ப்பா''

""நான் போய் விசாரிக்கறேன் மாமி''

வீட்டிற்கு வந்தேன். பைக்கை எடுத்துக் கொண்டேன். ஷோபனாவையும் கூட்டிக் கொண்டு கிளம்பினேன். வழியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆழ்ந்த யோசனையில் ஒரு சின்ன பயணம். தி.நகர் ஹவுசிங் யூனிட்டிற்கு பின்புறம் சின்ன சந்தாய் அந்த வீதி இருந்தது. அதில் இன்னும் குடிசைகளாய் நிறைய வீடுகள் தெரிந்தன. வெறும் ஜட்டியோடு விளையாடும் குழந்தைகள். வாசலில் கட்டியிருந்த ஆடுகள் வண்டியைத் திரும்பி பார்த்தன. ஒரு வீட்டுக்கு வெளியே படுத்திருந்த ஒரு வயதான அம்மா, "யாரு வேணும்?' என்கிற மாதிரி பார்க்க, வண்டியிலிருந்து இறங்கி அந்த அம்மாவிடமே கந்தசாமியை விசாரித்தேன்.

""யாரு டெய்லர் கந்தசாமியா ?''
""ஆமாங்க அவருதான்''

""அவன் செத்து ஒரு வாரமாச்சேய்யா'' என்று அந்தம்மா சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனேன். சட்டென கண் கலங்கியது. ஷோபனாவும் அதிர்ச்சியோடு என் கைகளை பிடித்துக் கொண்டாள். அந்தம்மாவே தொடர்ந்து பேசினார்கள்.

""திடீர்ன்னு நெஞ்சு வலி வந்து, ஆம்புலென்ஸில கூட்டிட்டு போனாங்க.  ஆஸ்பத்திரிக்கு போற வழியிலயே உசுறு போயிடுச்சுப்பா.. நீங்க யாரு.. துக்கம் விசாரிக்க வந்தீங்களா ?''

""ஆ.. ஆமாங்க.. அவங்க வீடு எங்கேன்னு சொல்றீங்களா..?''
""அதோ அந்த முக்கு திரும்பினதுமே ஒரு முருங்க
மரம் தெரியும். அதாங்க அவன் வீடு''

வண்டியைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். கந்தசாமியின் நினைவுகள் நிழலாய்ப் பின் தொடர்ந்தது. அவனது வாழ்க்கை அதற்குள் முடிந்துவிட்டதா? இனி அவனைப் பார்க்கவே முடியாதா? அவனது அன்பான வணக்கம் இனி எனக்கு கிடைக்காதா? என்ன வாழ்க்கை இது? எனக்கு கண்கள் கலங்கின.

முருங்கை மரம் வைத்த கந்தசாமியின் வீடு தெரிந்தது. ஆஸ்பெஸ்டாஸ் வீடுதான். வாசலிலேயே அவனது மனைவி நிற்பது தெரிந்தது. பக்கத்தில் கதவைப் பிடித்தபடி சிறுவர்கள் நின்றிருந்தார்கள். அந்த பெண்ணிடம் ஒருவன் பேசிக் கொண்டிருந்தான். அவனது குரல் சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.  நான் பக்கத்தில் போய் வண்டியை நிறுத்தினேன். கொஞ்சம் தடியாய் இருந்த அவன் மேலும் கத்தினான்.

""இங்க பாரும்மா.. இந்த சாக்கு போக்கெல்லாம் வேண்டாம். நாளைக்கு வருவேன். பணம் வந்தாகணும்... இல்லைன்னா என்ன நடக்கும்னு நாளைக்கு பாரு...'' என்றான்.
""சார்.. என்ன பிரச்னைன்னு தெரிஞ்சுக்கலாமா?'' என்று அவன் அருகில் போய் கேட்டேன்.

""ஆமா...  நீங்க யாரு ?'' என்றான் அதே கோபக்குரலில்.
""நான் கந்தசாமியோட பிரண்ட்''

""உடம்பு சரியில்ல டாக்டர்கிட்ட போகணும் ரெண்டாயிரம் ரூபா கேட்டான்... தந்தேன்... இப்ப செத்துப் போயிட்டான். பணம் எங்கிருந்து தர்றதுன்னு சொன்னா எப்படி ஒத்துக்க முடியும்... சொல்லுங்க...''

""ராஜண்ணா... பணத்தை தரமாட்டேன்னு சொல்லல... இப்ப முடியாதுன்னு சொன்னேன். சரி... அவரு விட்டுட்டு போன அந்த தையல் மிஷின வச்சுதான் எங்க  வாழ்க்கைய ஓட்டணும்னு நினைச்சோம். அது முடியாதுன்னு தெரியுது... எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க... அதை வித்து பணம் தந்தர்றேன்... போதுமா?''

""அதெல்லாம் முடியாதும்மா...  நாளைக்கு இதே நேரத்துக்கு வருவேன்... பணத்த தந்தே ஆகணும்''

""சார் ஒரு நிமிஷம்... கந்தசாமி உங்களுக்கு எவ்வளவு தரணும்?'' என்றேன்.
""ரெண்டாயிரம் ரூபா... வட்டியோட சேர்த்து ரெண்டாயிரத்து முன்னூறு ரூபா... எதுக்கு சார் கேட்கறீங்க ?''

நான் என் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து எண்ணினேன். என் மனைவி என்னைப் புரியாமல் பார்த்தாள். பணத்தை அவனிடம் தந்து, ""சரியா இருக்கா?'' என்று பார்க்கச் சொன்னேன். அவன் பணத்தை எண்ணிப் பார்த்தான். 

""ம்.. சரியா இருக்குது... தேங்க்ஸ் சார்...'' என்றபடி நகர,
கந்தசாமியின் மனைவி பதட்டமாகி என்னைப் பார்த்து கேட்டாள்.
""அண்ணா... எதுக்குண்ணா அவரு வாங்கின கடன நீங்க அடைக்கறீங்க..? எப்படியாவது நான் தந்துருவேன்''

""இல்லம்மா.  இதுவும் கடன்தான்.  நான் கந்தசாமிகிட்ட வாங்கின கடன். வட்டியோட திருப்பி தந்திருக்கேன். அவ்வளவுதான்'' என்றேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com