தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை: பார்வைகள்

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு ரூ.15,000 பெற்ற கதை
தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை: பார்வைகள்

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு
ரூ.15,000 பெற்ற கதை


சங்கரைப் பார்த்திருக்கக் கூடாது என எனக்கு இப்போது தோன்றியது. ஆனால் இனி அவனைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்பதும் கேள்வியாக இருந்தது. நான் அவனைப்  பார்த்திருக்கிறேனா என்றால் அதுவும் இல்லை. உணர்ந்திருக்கிறேன். அவன் என் கையைப் பிடித்து அழைத்துப் போகும் ஜாக்கிரதையான தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.  கொஞ்சம் "கீச்'சென்று ஒலித்தாலும் அந்த குரலில் தெரியும் நட்பில் உணர்ந்திருக்கிறேன். என்னை ஒருநாள் பார்க்காவிட்டாலும் தேடிவரும் அவனது அன்பில் உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் அவனை ஏன் பார்த்தோம் இன்று தோன்றிக் கொண்டிருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.


சங்கரை முதலில் எங்கு சந்தித்தேன்? கல்லூரியில் எனது இறுதியாண்டு பரீட்சையில்தான் நான் அவனைப் சந்தித்தேன். எனக்காக அவன் பரீட்சை எழுத வந்திருந்தான். ஒரு தனியார் அமைப்பு அவனை எங்களைப் போன்ற பார்வையற்ற மாணவர்களுக்கு பரீட்சை எழுதும்  சேவைக்காய் அனுப்பி
யிருந்தது. 

ஹாலில் அவன் என்னருகே வந்து அமர்வதை உணர்ந்தேன். நான் என் கண்ணாடியைக் கழற்றி வைத்தேன். எனது வெள்ளை ஸ்டிக்கை டேபிளில் சாய்த்தேன்.  சங்கர்  என் கைகளைக் குலுக்கி அறிமுகப்படுத்திக் கொண்டான். லெவண்டர் வாசனை. தூக்கலான பெர்ஃபியூம். அவன் உயரமாய் இருப்பதை அவன் குரல் உணர்த்தியது. பரீட்சை பேப்பர் வந்தது. பேர், பரீட்சை எண் என எல்லாம் கேட்டு குறித்துக் கொண்டான். ஹாலில் "குசுகுசு'வென நிறைய குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. கேள்விகளை அவன் படித்துக் காட்டினான். நான் பதில் சொல்ல அவன் எழுதத் தொடங்கினான். சொல்வதை உடனே புரிந்து வேகமாய் எழுதினான். இடையே அவனுக்கு காபி வந்தது. எனக்கும் வேண்டுமா? என்றான். 

""நான் குடிக்கக்கூடாது'' என்றேன். உறிஞ்சும் சப்தமின்றி சாப்பிட்டான். மீண்டும் எழுதினான். பரீட்சை முடிந்து டேக் மாட்டி பேப்பரை என்னிடம் தந்தான். நான் அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். அவன் கிளம்பினான். 
வெளியே வந்து நின்றேன். காற்று சுகமாய் அடித்தது. மனசும் ஏனோ சந்தோசமாக இருந்தது. யாரோ என் கையைப் பிடிப்பதை உணர்ந்தேன். 

""சங்கர்தான்... சிவக்குமார்...'' என்றான்.

""ஓ.. தேங்க்ஸ் சங்கர்...'' என்றேன் மீண்டும்.

""அதுதான் அங்கயே சொல்லிட்டீங்களே...''

""இல்ல.. பேப்பர பார்த்துட்டு உங்க கையெழுத்து அழகா இருக்குன்னு சாரு சொன்னாரு''

""ம்... அது அழகாத்தான் இருக்கு... தலையெழுத்து சரியில்லையே...''

"" ஏன்.. அப்படி சொல்றீங்க...?''

""படிச்சும் இன்னும் சரியான வேலை கிடைக்கலயே... இன்னைக்குகூட நான் சேவைக்காக வந்து இத பண்ணல...  ஒரு நூறு ரூபா தர்றாங்கன்னு என் பிரண்ட் சொன்னான். அதுக்காகத்தான் வந்தேன்'' என்றான்.

வெளிப்படையாகப் பேசுகிறான். வார்த்தைகளில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அவன் எப்படி இருப்பான் என்று பார்க்கும் ஆசை சட்டென வந்தது. பார்க்க முடியாமல் போனதன் வருத்தமும் கூடவே வந்தது. 

""எங்க போகணும் சிவா..?''  என்றான்.

""சைதாபேட்டைதான்...''

""வாங்க நான் அந்த வழியா கிண்டிதான் போறேன்... உங்கள அப்படியே டிராப் பண்ணிடறேன்...'' என்றான்.

அவன் என் கையைப் பிடித்துக் கொண்டான். நானே நடக்கிறேன் என்று சொல்லியும் விடாமல் என்னை மெதுவாய் அழைத்துப் போனான். பைக்கில் ஏற்றிக் கொண்டான். நன்றாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னான். பைக் கிளம்பியது. அளவான வேகம். வழியெங்கும் என்னிடம் கேட்க அவனிடம் நிறையக் கேள்விகள் இருந்தன.

""உங்களுக்கு எப்ப இருந்து பார்வை போச்சு..?'' என்றான். 

""நானெல்லாம் பிறக்கும் போதே குருடுதான்...'' என்றேன். 

""தப்பா எடுத்துக்காதீங்க... உங்க உலகத்த பத்தி கொஞ்சம் நான் தெரிஞ்சுக்கலாமா...?''

""தாராளமா... என்னோட உலகம் இருள்னு சொல்ல முடியாது. அதுவொரு பழுப்பு நிறம்னு சொல்லலாம். எனக்கு நிறம் பத்தி தெரியாது. எங்கயோ படிச்சத வச்சுத்தான் சொல்றேன். தொடுதலில் உணர்ந்து கொள்கிற உலகம். பழகிட்டதால அதுவும் பிரச்னையா தெரியல. ஆனாலும் ஒவ்வொரு நொடியும் ஜாக்கிரதை உணர்வோடதான் நகரும். உங்களைவிட எச்சரிக்கை உணர்வு எங்களுக்கு அதிகம்...'' என்றேன்.

நான் வழி சொல்ல சரியாக வீட்டின் வாசலிலேயே வண்டியை நிறுத்தினான். உள்ளே வரச் சொல்ல அடுத்த முறை வருவதாகச் சொன்னான். என் நம்பரை வாங்கிக் கொண்டான். எங்கே பேசப் போகிறான் என்றுதான் நினைத்தேன். ஆனால், மறக்காமல் இரண்டு நாளில் அவனே கூப்பிட்டான். வீட்டிற்கே வந்தான். அம்மாவிடம் அறிமுகமாகிக் கொண்டான். குடித்த டீயை சூப்பர் என மனம் திறந்து பாராட்டினான். அம்மாவுக்கும் அவனைப் பிடித்துப் போனது.

""வேறென்ன ப்ரோக்ராம் சங்கர்...?'' என்றேன்.

"" பிரண்ட்ஸýக சத்யம் தியேட்டர் வர்றாங்க... படம் பார்க்க போறேன்.'' என்றான்.

""நானும் வரட்டுமா...?'' என்றேன்.

""நீங்க எப்படி படம் பார்ப்பீங்க  சிவா?'' 

"" நான் படம் பார்க்கறதெல்லாம் இல்ல... கேட்கறதுதான்... அதிலயே பாதிப்படம் புரிஞ்சுடும்''

""பாதி படமென்ன.. தமிழ் படமெல்லாம் முழுசாவே புரிஞ்சுடும்.. அவ்வளவுதானே விஷயம் இருக்கு'' என்றான்.

தமிழ் சினிமாவை அவன் கொஞ்சம் ஓவராகவே குறை சொல்வதாக தோன்றியது. நான் விவாதத்தில் இறங்கவில்லை. 

சத்யம் தியேட்டர். நான் அமைதியாக படம் கேட்டேன். அதுவொரு ஆங்கிலப் படம். இடையே அதன் கதையை சங்கர் மெதுவாய் என் காதிற்குள் ஓட்டிக் கொண்டிருந்தான். கதையை இன்னும் விளக்கமாய் வெளியே வந்தும் சொன்னான். அதன் பிறகு எங்கள் நட்பு இன்னும் பலமானது. பெரும்பாலும் என்னை வெளியே அழைத்துப் போவது சங்கராகத்தான் இருக்கும்.  அடிக்கடி பெசண்ட்நகர் பீச்தான் போவோம். நடைபாதை திட்டில்தான் அமர்ந்து கொள்வோம். படித்த புத்தகம் பற்றிதான் நிறையப் பேசுவான். சொளஸட்டியில் பார்க்கும் நல்ல சினிமாக்களைப் பற்றி விவாதிப்பான். அவனது பிரச்னையையும் வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொள்வான். பேச்சுக்கு நடுவே ஐஸ் க்ரீம்  பஜ்ஜியெல்லாம் தவறாமல் வரும்.  அடித்த கடல் காற்று எங்கள் நட்பை ஆரோக்கியமாய் வளர்த்தது. என் பார்வைக்குள் இருக்கும் பழுப்பு நிறங்கள் வண்ணங்களாக மாறத் தொடங்கின.

அப்படியே ஒரு   டீ  ஷாப்பில் அமர்ந்து கொண்டோம். ""காப்பியா?  டீயா?'' என்றான். நான் டீ என்று சொல்வதற்குள் கடையில்  ஒரு சிறுவனின் அலறல் சத்தம் பலமாய் கேட்டது. அவனை நிறையப் பேர் அடிக்கிறார்கள் என்பது மட்டும் என்னால் ஊகிக்க முடிந்தது. சங்கர் அமைதியாக இருந்தான். எனக்கு ஏனோ பதட்டமாக இருந்தது. சங்கரின் குரல் கொஞ்சம் கோபமாய் ஒலித்தது.
""எழுந்திரு சிவா.. இங்க டீ வேண்டாம்.. வேற எங்காவது போய் குடிக்கலாம்...'' என்றான்.

என் கையைப் பிடித்துக் கொண்டான். இந்த முறை கொஞ்சம் வேகமாய் என்னை வெளியே இழுத்துப் போனான்.

""என்னாச்சு சங்கர்...? என்ன நடந்துச்சு...?''

""மனுசங்களா இவனுக... ஒரு சின்னப் பையன போட்டு இந்த அடி அடிக்கிறானுக...''

""எதுக்கு அடிச்சானுக?'' 

""அந்தப் பையன் பசிக்கு எதையோ திருடி இருப்பான் போலிருக்கு... அதுக்கு அடிச்சிருக்கானுக...'' ""ராஸ்கல்ஸ்.. கோடி கோடியா கொள்ளையடிக்கிற அரசியல்வாதிகள விட்டுருவானுக... எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க... ஏன்னா அவனுங்ககிட்ட அதிகாரம் இருக்கில்ல... அங்க இவங்களோட பருப்பு வேகாதில்ல... அதான்... ஒரு சின்ன பையன்கிட்ட அவங்களோட  மொத்த இயலாமையையும் இறக்குறாங்க... பொறம்போக்குக...'' 

சங்கர் கத்தியபடியே வண்டியை ஓட்டி வந்தான்.

""சரி தப்புதான்.. நீ ஏன் போய் அதை தடுக்கல'' என்றேன்.

""தடுத்தா திருந்திடுவானுகளா? அழுக்கு பிடிச்ச இந்த சமூகத்த சுத்தப்படுத்தறது எல்லாம் என்னோட வேலையில்ல... அதைச் சுத்தப்படுத்தவும் முடியாது'

""இல்ல சங்கர்... நீ செஞ்சதும் தப்பு...'' என்றேன்.  

""டோண்ட்  டாக் எனிதிங் சிவா... ப்ளீஸ்... லெட் மீ ஸ்டே காம்...'' என்றவன் லேசாய் முனங்கிக் கொண்டே வந்தான். 

""உன்னை மாதிரி கண்ணு தெரியாம இருந்திருக்கலாம்... இந்த அசிங்கத்தயெல்லாம் பார்க்காம   இருந்திருக்கலாமில்ல'' என்றான்.

எனக்கு அவனது வார்த்தைகள் அதிர்ச்சியாக இருந்தன. வண்டியின் வேகமும் அதிகமானது. நான் பின்புறம் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். வீடு வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. வீட்டிற்குள் வந்தும் அவனது குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. அம்மா என் முகத்தைப் பார்த்து புரிந்து கொண்டிருப்பாள் போலும்.

""என்னப்பா... சங்கர்கூட ஏதாவது பிரச்னையா?'' என்றாள்.

""ஒண்ணுமில்லம்மா.. ஒரு டீ மட்டும் போட்டு கொடு'' என்றேன்.

அடுத்த சந்திப்பின் போதுதான் அவன் அனிதாவை எனக்கு அறிமுகப்படுத்தினான். இரண்டு வருட காதல் என்றான். அனிதாவின் குரல் அழகாய் இருந்தது.

""நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பேசிட்டு வரட்டா... நீ கொஞ்சம் வெயிட் பண்றயா?'' என்றான்.

""அப்கோர்ஸ்... கோ அஹெட்...'' என்றேன்.

இருவரும் போனார்கள். பார்க்கில்  அடித்த காற்றில் ஓர்  இதம் இருந்தது.

குழந்தைகள் விளையாடிய பந்து என் காலில் உரசி நின்றது.  பந்தை எடுத்துப் போட்டேன். நன்றி ஒலித்தது. நிறையப் பேர் நடக்கிற ஓசைகள்...  மரத்தில் இலைகளின் சலசலப்பு... கூடவே கேட்கும் பறவைகளின் சப்தங்கள்... என் வாட்ச்சை தடவி நேரம் பார்த்தேன். 

அடுத்து மூவரும் ஒரு காபி ஷாப்பில் சந்தித்துக் கொண்டோம்.  ஸ்கைவாக்கில் ஒரு படம்கூட பார்த்தோம். அனிதா அவ்வப்போது எனக்கும் போன் பண்ணி நலம் விசாரிப்பாள். ஒரு வாரமாய் அவளிடமிருந்து எனக்கு எந்தப் போன் காலும் வரவில்லை. சங்கரையும் காணவில்லை.  போன் அடிக்க இருவருமே எடுக்கவில்லை. மனது கஷ்டமாக இருந்தது. அம்மாவிடம் புலம்பினேன். பிறகு சங்கரே போன் பண்ணினான். சாயந்திரம் கிரவுண்டில் சந்திக்கலாம் என்றான். அவனே வந்து என்னைக் கூட்டிப் போனான். கிரவுண்டுக்கு வந்தும் அமைதியாக இருந்தான்.

""என்ன ஆச்சு... சங்கர்?'' என்றேன்.

""அனிதா என்னைவிட்டுட்டுப் போயிட்டா''  என்றான்.

   எனக்கு திக்கென்றது. 

""என்னாச்சு சங்கர்?'' என்றேன் மீண்டும் அதிர்ச்சியாய்.

""இதில அதிர்ச்சியடைய ஒண்ணுமில்ல... நான் எதிர்பார்த்ததுதான்... வேலயில்லாத வசதியில்லாத ஜெயிச்சுருவேன்னு வெறும் கனவுகளை சுமக்கறவனை எந்த பொண்ணு நம்பிட்டு இருப்பா?''

""ரியலி ஐ காண்ட் பிலீவ்... பேசறப்ப அனிதா அப்படி பண்ற பொண்ணு மாதிரியே எனக்கு தோணல... சரி... ஏன் எங்கிட்ட முதல்யே சொல்லல? உட்கார்ந்து பேசினா இந்த பிரச்னை தீர்ந்திரும்னு நினைக்கறேன்...     அனிதாகிட்ட இப்ப பேசி பார்க்கலாமா?'' என்றேன்

""போயி... ஏம்மா இப்படி பண்ணிட்டேன்னு அவகிட்ட கெஞ்சணுமா? அது அசிங்கமாயில்ல''”

""சரி... நீயும் ஒரு வேலையில இருந்திருந்தா அவ உன்னைவிட்டு போயிருக்க மாட்டாள்ல?''”

""நிச்சயமாப் போயிருப்பா...  டெல்லி ஐகோர்ட்ல வேலை பார்க்கிற ஒரு மாப்பிள்ள அவள கட்டிக்கறேன்னு ஏற்கெனவே ரெடியாத்தான் இருந்தான். அவ ஓக்கே சொல்லிட்டு போயிட்டே இருப்பா''

நான் அமைதியாக இருந்தேன். இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா? சட்டென வேண்டாமென தூக்கிப் போடும் சாதாரண பொருளா இந்த காதல்? பெண்கள் அப்படி நினைப்பவர்களாயென்ன? என்னால் நம்ப முடியவில்லை. சங்கர் மெதுவாய் அழுதான். அவன் முதுகில் தட்டிக் கொடுத்தேன்.

""விடு சிவா... பணம்தான் இங்க எல்லாத்தையும் தீர்மானிக்குது. காதலெல்லாம் ஒண்ணுமே இல்ல. சுத்த ஹம்பக். உன்னை மாதிரியே எனக்கும் கண்ணு தெரியாம இருந்திருக்கலாம். இந்த மாதிரி மோசமான பெண்களைப் பார்க்காம இருந்திருக்கலாமில்ல'' என்றான்.

எனக்கு சட்டென ஒரு மாதிரி இருந்தது. அவன் மீண்டும் அழ ஆரம்பித்தான். நான் இந்த முறை அவனுக்கு ஆறுதல் சொல்லவில்லை.

நான் வீட்டிற்கு வந்தேன். ஞாபகத்தில் சங்கரும் அனிதாவுமே வந்தார்கள். என்னால் இன்னும் எதையும் நம்ப முடியவில்லை. பேசிப் பார்த்தால் நிச்சயம் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமென மனசு மீண்டும் மீண்டும் சொல்லியது. உடனே போன் பண்ணினேன். அனிதாவின் போன் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்தது. 
சங்கரின் சந்திப்புகள் ஒரு டிரைலராய் வந்து போனது. அவனது சந்திப்பிற்குப் பிறகே எனது உலகம் சற்று பெரியதாய் தெரிந்தது. சுவாரஸ்யமாய் மாறியது. அவனது விரல்கள் தந்த அழுத்தங்கள் இந்த வாழ்வின் மீதான நம்பிக்கைகளை என்னுள் பரவச் செய்தது உண்மைதான். ஆனால் சமீபத்திய நிகழ்வுகளும் அதற்கு அவன் காட்டும் எதிர்வினைகளும் என்னை சற்றே குழப்பமாக்கியது. என் பார்வைக்குள் பழுப்பு நிறம் மாறி முற்றிலும் இருள் சூழ்வதாய் உணர்ந்தேன். சட்டென சங்கரை விட்டு விலகிவிடலாமா என்றும் தோன்ற ஆரம்பித்தது. என் மீது அவன் வைத்திருக்கும் அன்பில் குறை சொல்ல எதுவும் இருப்பதாகத்  தோன்றவில்லை. அந்த எண்ணம் பிரிவது தீர்வாகாது என உடனே தீர்ப்பு சொன்னது. நான் அமைதியானேன்.

அதன் பிறகும் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் இருவரின் அடுத்த சந்திப்புகளும் அப்படியேதான் நடந்தன. பைக்கில் போய் ஹெல்மெட் போடாமல் டிராபிக் போலீஸிடம் மாட்டிய போது சங்கர் லஞ்சமாய்ப் பணத்தைக் கொடுத்துவிட்டே நகர்ந்தான். ஆனால் வழியெங்கும் அந்த டிபார்மெண்ட்டை கழுவி கழுவி ஊத்தினான். நான் எதுவும் பேசவில்லை.  நான் நடந்ததை யோசித்தபடியே வந்தேன். சங்கரின் மீதான நம்பிக்கையில் மட்டும் குழப்பம் இன்னும் அதிகமாகவே செய்தது. 

அடுத்த முறை பைக்கில் நுங்கம்பாக்கம் பக்கம் போகிறபோதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஏதோவொரு டூ வீலர் ரோட்டில் விழுகிற சத்தம்  கேட்டது. கூடவே ஒரு பெண்ணின் குரலும் குழந்தை அலறும் சத்தமும் கேட்டது. சங்கர் வண்டியை ஓர் ஓரமாய் நிறுத்தினான். 

""என்னாச்சு சங்கர்?'' என்றேன் பதட்டமாய்.

ரோட்டில ஒரு பள்ளம். அது தெரியாம வண்டிய விட்டு ஒரு பேமலி விழுந்திடுச்சு... பாவம் அந்த குழந்தைக்குதான் பெரிய அடி போல இருக்கு...'' என்றான்.

""எதுக்கு நின்னுட்டு இருக்கே... வா சங்கர்... போய் ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்...'' என்றேன்.

""இங்க பாரு சிவா... இங்க சிஸ்டம் சரியில்ல... நீ எதையுமே மாத்த முடியாது... இந்த குழியில நாலு பேர் விழுந்து ஏதாவது ஓர் உயிர் போனாத்தான் நடவடிக்கையே எடுப்பாங்க... அவ்வளவுதான் இந்த நாட்டில உயிர்களுக்கு இருக்கற மதிப்பு... மக்கள் மட்டும் சரியா இருக்கறாங்களாயென்ன? பணத்தை வாங்கிட்டு ஓட்டு போட்டா... திரும்ப கிடைக்கிற விளைவு இப்படித்தான இருக்கும்.  பணத்த தவிர இங்க எதுக்குமே வேல்யூ இல்ல... வா சிவா போலாம்... இதெல்லாம் பார்க்கறதுக்கு''

""நல்ல வேளை உனக்கு கண்ணு தெரியலன்னு சொல்லுவே... அதுதானே... அத கேட்டு கேட்டு வெறுப்பாயிடுச்சு சங்கர்... நீ வேணுன்னா கிளம்பு...  நான் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு பார்க்கறேன்'' என்றேன்.

அவனது எந்த பேச்சுக்கும் காத்திருக்காமல் நான் கிளம்பினேன். கண்ணாடியை இன்னும் அழுத்திக் கொண்டேன். நான் எனது ஸ்டிக்கை எடுத்து நீட்டிக் கொண்டேன். நடக்க ஆரம்பித்தேன். சங்கர் கோபமாய்ப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. 

கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்தேன். சங்கர் போயிருக்கவில்லை. என்னைக் கூப்பிட்டான். ரோட்டோர மரநிழலில் எனக்காகக் காத்திருந்தான் போலும். நான் அருகில் போனேன்.

""நீ மட்டும் போய் என்ன பண்ணிட்டே?'' என்றான்.

அவன் இருக்கும் திசையை உற்றுப் பார்த்தேன். பிறகு பேச ஆரம்பித்தேன்.

""இங்க பாரு சங்கர். உடனே இந்த சிஸ்டத்தை மாத்த முடியாதுன்னு எனக்கும் தெரியும்.  அதுக்காக எல்லாத்தையும் குறை சொல்லிட்டே இருக்கறது மட்டும் எப்படி சரியாகும்? ரோட்டில ஓர் ஆணி கிடக்குதேன்னு தாண்டிப் போகாம அதை எடுத்து ஒரு ஓரமா போடறது ஒரு சேவை இல்லையா? இப்ப போய் என்ன பண்ணிட்டேன்னுதானே  நீ கேட்டே? அந்தக் குழந்தைக்குத்தான் ரொம்ப அடின்னு நினைக்கறன்... எல்லாரும் பரபரப்பா இருந்தாங்க... நான் ஆம்புலென்ஸýக்கு போன் பண்ணினேன். உடனே அவங்க வந்து அடிபட்டிருந்த அந்த குழந்தையையும் அவங்கம்மாவையும் தூக்கிட்டு போயிட்டாங்க. 

இப்ப எல்லா பிரச்னையும் தீர்ந்திடுச்சா..

இல்ல... அப்றம் பக்கத்து கடையில ஒருத்தர்கிட்ட கார்ப்பரேசனுக்கு நம்பர் போட்டுக் கொடுக்கச் சொன்னேன். போட்டு தந்தாரு.  நடந்ததச் சொன்னேன். உடனே வந்து இந்த குழிய மூட நடவடிக்கை எடுங்க... இல்லையின்னா நான் கேஸ் போடுவேன்னேன். உடனே வர்றேன்னு சொல்லியிருக்காங்க.  வருவாங்க. இல்லைன்னா நான் சொன்னத நிச்சயமா செய்வேன்.  விடமாட்டேன். இந்த உலகம் உடனே மாறும்னு நானும்  எதிர்பார்க்கல... சங்கர்.   ஆனா மாறணும்னு ஆசைப்படறேன். எல்லாப் பிரச்னைக்கும் தூரத்தில நின்னு வேடிக்கை பார்த்துட்டு போற நம்ம அப்ரோச்சும் ஒரு காரணம்ன்னு நினைக்குறேன். முயற்சி பண்ணினா நல்லது நடக்கும்னு நினைக்கறது முட்டாள்தனமா சங்கர்? எனக்கு நிச்சயமா ஒருநாள் கண்ணு தெரியும்.  எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்போ இந்த உலகம் கொஞ்சமாவது அழகாத் தெரியணும்னு ஆசைப்படறேன்.  போலாமா சங்கர்'' என்றேன்.

சங்கர் வண்டியை ஸ்டார்ட் செய்தான். நான் கையில் இருந்த ஸ்டிக்கை மடக்கிக் கொண்டேன். கண்ணாடியைச் சரிபடுத்திக் கொண்டேன். வண்டியின் பின்னால் உட்கார்ந்தேன். அவனது தோளில் கை போட்டேன். வண்டி கிளம்பியது. அவன் எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருந்தான். அந்த ரோட்டின் முனையில் திரும்பினோம். அப்போது சங்கர் சொன்னான்.

""கார்ப்பரேசன் ஆட்கள்  ஆக்ஸிடெண்ட் ஆன ஸ்பாட்டுக்கு போயிட்டிருக்காங்க சிவா''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com