கொலுசு தீபாவளிகள்

மாலதிக்கு அம்மாவை நினைக்கையில் மனம் துவண்டு போயிருந்தது.   சில அம்மாக்கள் ஏன் இப்படி கோபக்காரர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.
கொலுசு தீபாவளிகள்

மாலதிக்கு அம்மாவை நினைக்கையில் மனம் துவண்டு போயிருந்தது. சில அம்மாக்கள் ஏன் இப்படி கோபக்காரர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும் இருக்கிறார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் பணத்தில் மொத்தத்தையும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து நூறோ, இருநூறோ வீசியெறிந்து விட்டு பிள்ளைகளையும், பொண்டாட்டியையும் அடித்து விரட்டும் அப்பாக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு குடிகாரனைச் சமாளித்து அவர்களிடமிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றி குடும்பத்தைக் காப்பாற்றுகிறவர்கள் எத்தனை அம்மாக்கள்.

எத்தனை குடும்பத் தலைவிகள் இவர்களின் நடுவே தன்னுடைய அம்மா செய்யும் அட்டகாசம் மாலதிக்கே தாங்க முடியாததாயிருந்தது. எப்போதும் பிள்ளைகளிடம் கடு, கடு என்றுதான் இருப்பாள். அதிலும் அப்பா தவமணியைக் கண்டுவிட்டால் சொல்லி வைத்தது போல் முகம் எண்ணெய்ப் பொறியலாய் பொறியும். காலையில் ஒன்பது மணிக்கு ஆபிஸிற்கு போகிறவர் இரவு ஏழு மணிக்குத்தான் கால்களும், உடம்பும் துவள தலைகுனிந்து வருவார். முகமெல்லாம் வேலை செய்த அலுப்பில் வாடிக் கிடக்கும்.

தன் வரவுக்காகக் காத்திருக்கும் மகளைப் பார்த்ததும் அந்தச் சோகத்திலும் பளிச்சென்ற ஒரு சிரிப்பு கண்களில் அன்பின் கனிவு. அப்பாவிடம் இந்த மாற்றத்தைக் கண்ட உடனே மாலதிக்கு உடம்பெல்லாம் உற்சாகம் துள்ளி ஓடும்.

மறுபிறப்பே பிறந்து விட்டதுபோல் "" வாங்கப்பா'' என்று வரவேற்று காப்பியை கொண்டு வந்து கொடுப்பாள். அவர் குடித்து முடிக்கும் முன்பே வெந்நீர் பானை குளியல் அறைக்கு வந்துவிடும். காப்பிடம்பளரை மகள் கையில் கொடுத்து விட்டு, புத்தகம் விரித்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளிடம், "" என்னப்பா படிக்கிறீங்களா ?'' என்று தலை தடவி தோள் தொட்டு ஒரு விசாரிப்பு. அவர்கள் அவரை நிமிர்ந்து பார்க்கும் சிரிப்பிலும், ""ஆமாப்பா படிக்கிறோம்'' என்று சொல்வதிலும் அப்பாவின் முகத்தில் உரசிய தீக்குச்சியின் வெளிச்சம் பிற்கால நம்பிக்கைகளாய் சுடர் தெளிந்து நிற்கும்.

அம்மா வெளிவாசல்படி ஓரத்தில் உட்கார்ந்திருப்பாள். அப்பா வீட்டுக்குள் நுழையும் முன்பே காலா, காலத்தில் வீட்டுக்கு வருவதுக்கென்ன, என்னமோ"கிளார்க்கு' வேலை பார்த்து மாதம் அம்பதாயிரம் ரூபாய் சம்பளம் கொண்டாந்து தர்ற மாதிரி, காலா காலத்திய வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்தாதான் மறு நாள் காலையில் பொம்பள புள்ளைக உறங்கலாம். இங்க என்ன பொம்பளைக சும்மாவா உக்காந்திருக்கோம். ஆக்கவும், பெருக்கவும், கழுவவும், துணி துவைக்கவும் இடுப்பு ஒடிஞ்சி போவுது, வீட்டுல இப்படி வேல செஞ்சிக்கிடு கிடக்கவளுக்கு ஒரு நல்ல பலகாரம் உண்டா, பண்டா உண்டா, கோயிலு குளமுன்னு எங்கேயும் போக முடியுதா, வர முடியுதா? அவ, அவ நகையும், நட்டும், பட்டுமா பெரும கொழிச்சிக்கிட்டு அலயிதா.

"ம். என் தல விதி இந்த வக்கத்த மனுசனுக்கு வாக்கப்பட்டு உடுத்தின சீலைக்கு மறு சீல உண்டா?' என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பாள். அவள் சொல்லும் வேலைகளில் முழு வேலையும் மாலதியுடையது. அதைச் சொல்ல போனால் வீடு ரகளைப்பட்டுப் போகும். முதன், முதலில் அவளை சமாதானப்படுத்திய மாலதி இப்போது அதை விட்டு, விட்டாள். தூக்கம் வரும் வரை புலம்பி தீர்க்கும் வளர்மதிக்கு இப்போது அதுவே பழக்கமாகிவிட்டது.

அப்பா தலை சுமை சுமந்து மாதம் கொண்டு வரும் பதினைந்து ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் குடும்பம் ஏதோ கௌரவமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காலையில் ஒரு மூடி டிபனோடு வேலைக்கு போவார் அப்பா. இரண்டடுக்கு டிபன், மூன்றடுக்கு டிபனெல்லாம் அவர்கள் குடும்பத்துக்கு ஆகாது. ஒரு குழம்பு, ஒரு பொறியல் என்பது கூட அவர்கள் குடும்பத்தில் ஏக தேசம்தான். ஒரு குழம்பும், சோறுமாய் பாதி நாள் போய்விடும். ஒவ்வொரு நாளைக்கு வெறும் அப்பளம் ரசத்தோடு சாப்பாடு முடிந்து விடும். அன்றைக்கெல்லாம் அம்மாவின் அலப்பரையும், அகங்காரப் பேச்சும் தாங்க முடியாது.

"இப்படியெல்லாம் சாப்பிடணுமின்னு என் தலையெழுத்தா? இந்த வார்த்தை என் அண்ணன் காதுல விழுந்ததோ? நீ இங்கே இருந்து பொழச்சது போதுமின்னு அப்பவே கார் வச்சி அவன் வீட்டுக்கே கூட்டிட்டுப் போயிருவான்' என்று அரட்டிக் கொண்டே இருப்பாள்.

மாலதியோ அம்மா சொல்வது எதையும் கேட்காமல் பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து "" அப்பா கையில் கொடுப்பாள். அப்பா இன்னைக்கு நம்ம வீட்டுல அப்பளம் தாம்பா பொறிச்சிருக்கு. நீங்க ரெண்டு வட வாங்கி தொட்டுக்க வச்சிக்கோங்கப்பா...'' என்று சொல்லும்போது தவமணி மறுத்து விடுவார்.

""வேண்டாம்மா ஒரு பிளாஸ்டிக் பையில அப்பளத்த போட்டு கொடு நான் போய் சாப்பிட்டுக்கிறேன். இந்த ரூபாய உன் தம்பிகளுக்கு கொடு. ஏதாவது வாங்கி சாப்பிடட்டும்'' என்று சொன்ன அப்பாவை இரக்கத்தோடு பார்த்தாள் மாலதி.

அம்மாவும் இதே குணத்தோடு இருந்தால் குடும்பத்துக்கு வேறு சந்தோஷம் தேவைப்படுமா? சந்தோஷமானஸ குடும்பத்தில் இல்லாமை, வறுமை என்பதே காற்றாக மறைந்து விடாதா?

தீபாவளி வருவதற்கு ஒரு மாதம் இருக்குமுன்னு வளர்மதி தனது மகளிடம் "" இந்தா பாருடி இந்த வருச தீபாவளிக்கு நீயும், உன் அப்பாவும் என்ன செய்வீர்களோ? என்னம்மோ அவரு கொண்டு வார போனஸில எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு பட்டுப் புடவை எடுத்தாகணும். என்னிலயும் கேடு கெட்டதெல்லாம் பத்தாயிரம், பதினைஞ்சு ஆயிரமுன்னு கலர், கலரா பட்டுப் புடவ எடுத்துக் கட்டிக்கிட்டு என்னப் போல உண்டான்னு அலயிதுக. நானு அம்புட்டு வெலைக்கெல்லாம் உன்கிட்ட சீல கேக்கல கேட்டாலும் உன் அப்பனும், நீயும் என்ன வச்சிருக்கீங்க...? எடுத்துக் கொடுக்க'' என்று சொன்னதும் மாலதிக்கு கோபம் உச்சி மண்டையைத் தாக்கியது.

"" ஏம்மா நீயெல்லாம் ஒரு பொம்பளயா? அப்பா வாங்குற சம்பளம் உனக்குத் தெரியும். நம்ம வீட்டு நிலைமையும் உனக்கு தெரியும் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு நீ இப்படி பேசுனா என்ன செய்ய? மூவாயிரத்துக்கு பட்டு உடுத்த வேண்டிய குமரிப் பொண்ணு நானு நானே ஐநூறுக்கு ஒரு சேலை எடுத்துக்கலாமின்னு நினைக்கேன்'' என்று மாலதி சொல்லி முடிக்கும் முன்பே "" எங்கண்ணன் வீட்ல அஞ்சாயிரத்துக்கு பட்டு எடுத்து உடுத்துனாலே கௌரவ குறைச்சலா நினைப்பாக தெரியுமா'' என்றாள்.

"" அப்ப நீ இந்த தடவ உன் அண்ணன் வீட்டுலேயே போயி தீபாவளியைக் கொண்டாடிட்டு விட்டு வா எங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல'' என்றதும், வளர்மதி ஆத்திரத்தோடு மகள் மாலதியைப் பார்த்தாள்.

"" என்ன அப்படி பாக்குற? போன மாசம் அப்பாவ சைக்கிள்ல்ல போன அப்பாவ பைக்கில போனவன் இடிச்சிட்டு போயிட்டான். அதுக்கு எவ்வளவு செலவாச்சி தெரியுமா ? சின்னத் தம்பிக்கு காய்ச்சல் வந்து மூணு நாளு ஆஸ்பத்திரியில் வச்சிருந்தோம் மருந்து, மாத்திரைன்னு ரொம்ப செலவாயிருச்சி. கரோனா காலத்தில் அப்பாவுக்கு வேலையை கிடைக்கல. அப்ப அக்கம், பக்கம் கடன் வாங்கிதான சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு வீட்டுக்கு எவ்வளவு செலவு ஆவுது. நீயும் எல்லாத்தையும் பார்த்துக் கிட்டுத்தான இருக்கே, மூணு புள்ளைகள் பெத்த மாதிரி பேசு. அப்பா உன்ன மாதிரி கோயிலு, குளமின்னு போறாரா? அப்பா எவ்வளவு போனஸ் வாங்கிட்டு வாராருன்னு பார்ப்போம். அது அப்புறம்தான் பட்டுச் சேலை, கிட்டுச் சேலை எல்லாம்'' என்றாள் மாலதி.

அவ்வளவுதான் வீடே இரண்டு பட்டு போகும்படி வஞ்சி தீர்த்தாள் வளர்மதி. அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட மெல்ல எட்டிப் பார்க்க மாலதிக்கு அவமானமாயிருந்தது.

தீபாவளி போனஸôக அப்பா கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்த மாலதி திடுக்கிட்டாள்.

""என்னப்பா இது இருபதாயிரம் கிடைக்குமின்னு நினைச்சேன். பதி மூணு ஆயிரம்தான்'' இருக்கு என்றாள்.

""என்னம்மா செய்ய போன வருசம் கடன் கொடுத்த ஏழாயிரத்த வார வழியிலேயே பிடுங்கிட்டானே'' என்றார். அவர் முகம் பார்க்க சகிக்காமல் வாடியிருந்தது.

"" இத வச்சி எப்படிப்பா தீபாவளி கொண்டாடுறது. தம்பி வேற இப்பவே பட்டாசு, புதுச்சட்டைன்னு கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கிறாங்கப்பா ?'' என்று கையில் ரூபாயை வைத்துக் கொண்டு கவலையுடன் மாலதி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விறு விறு அங்கே வந்த வளர்மதிகையில் இருந்த ரூபாயை வெடுக்கென்று பிடுங்கியவள், அதில் இருந்த மூவாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தெருவுக்கு இறங்கி போனாள்.

தீபாவளிக்காக பட்ஜெட் போட்ட மாலதிக்கு தலைசுற்றியது. ஆடம்பரமில்லாத தீபாவளிக்கே பணம் அதிகமாகி அவர்களை பதற வைத்தது. மகளிடம் எதுவுமே பேசாமல் நடைக்கு வெளியேறியவர் இந்த தீபாவளி நேரத்தில் யாரிடம் போய் கடன் கேட்பது என்று தெரியாமல் நடை தளர்ந்து நடந்தார். அவர் வீட்டுச் சன்னலை தாண்டும்போது ஒரு ஜோடி கொலுசு அவர் காலடியில் விழ அவர் நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தார். மாலதியின் முகம் தெரிந்தது. ஆனால் இருவரின் பார்வைகளும் கண்ணீரால் நிரம்பியதில் இருவருக்குமே முகம் அடையாளம் தெரியாமல் போனதில் வியப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com