'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 134
கருணாகரனின் வீட்டில் தலைவர்கள் கூடியது என்பது தொடக்கம்தான். காங்கிரஸ் கட்சியில் அதற்குப் பிறகு தலைவர்கள் கூடுவதும், பேசுவதும், பிரிவதும் நாளும் பொழுதும் நடந்து கொண்டிருந்தன.


கருணாகரனின் வீட்டில் தலைவர்கள் கூடியது என்பது தொடக்கம்தான். காங்கிரஸ் கட்சியில் அதற்குப் பிறகு தலைவர்கள் கூடுவதும், பேசுவதும், பிரிவதும் நாளும் பொழுதும் நடந்து கொண்டிருந்தன. தினசரி நிருபர்கள்போல இங்கும் அங்கும் அலைந்து செய்தி சேகரிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை என்றாலும், முக்கியமான தலைவர்கள் கூடும்போதும், சில தலைவர்களுடன் தனிமையில் உரையாடும் வாய்ப்பு ஏற்படும்போதும் அதை நான் தவறவிடவும் இல்லை.
காங்கிரஸில் நரசிம்மராவுக்கு எதிராகக் குரல்கள் எழும்பத் தொடங்கி இருந்தன என்றால், ஐக்கிய முன்னணி அரசுக்குள்ளும் தொடக்கம் முதலே குழப்பம் தொடங்கிவிட்டது. மத்திய அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க நிதியமைச்சர் ப. சிதம்பரம் எடுத்த முடிவு இடதுசாரிகளின் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது.
'199192இல் ரூ.36,325 கோடியாக இருந்த நிதிப்பற்றாக்குறை, 199596இல் ரூ.64,010 கோடியாக உயர்ந்துவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களுக்கான ஊதியச் செலவு ரூ.9,838 கோடியிலிருந்து ரூ.18,958 கோடியாக உயர்ந்துவிட்டது. எனவே ஒவ்வொரு அமைச்சகமும் தனது ஊழியர் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் குறைத்தாக வேண்டும்'' என்கிற நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் அறிவிப்பைக் கேட்டு இடதுசாரிகள் மட்டுமல்ல; ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தன.
அரசின் சிக்கன நடவடிக்கைத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்தது என்றால், சிக்கன நடவடிக்கை வலியுறுத்தப்பட்டால் வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று 12 தொழிற்சங்கங்கள் அறிவிப்பே செய்துவிட்டன. மத்திய ஆளும் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தலைப்புச் செய்தியானதால், காங்கிரஸில் நடக்கும் உள்கட்சிப் போராட்டங்கள் முக்கியத்துவம் பெறவில்லை.
தனக்கு எதிராக உயர்ந்து வரும் உள்கட்சிப் பிரச்னைகளை திசை திருப்பும் நோக்கத்தில் பி.வி. நரசிம்ம ராவ் எய்த அஸ்திரம்தான், அக்டோபர் மாதம் நடக்க இருந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஜூன் மாதமே அறிவிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், சாதாரணமாகத் தெரிந்தாலும் அந்தக் கூட்டணி வெளிப்படுத்தும் செய்திகள் ஏராளம். அதன் மூலம் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், தனது தலைமையை பலப்படுத்திக் கொள்வது மட்டுமல்ல, ஐக்கிய முன்னணி அரசுக்கு மிகப் பெரிய சவாலையும் ஏற்படுத்த முற்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கான்ஷிராமுடன் எனக்கு மிக நெருக்கமான தொடர்பு இருக்கவில்லை என்றாலும், அவரைப் பலமுறை பேட்டி எடுக்கவும், அவருடன் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்லவும் வாய்ப்புகள் கிடைத்தன. பாபாசாகேப் அம்பேத்கருக்குப் பிறகு, தேசிய அளவில் தலித் எழுச்சியை ஏற்படுத்த முடிந்த ஒரே தலைவர் கான்ஷிராம் மட்டுமாகத்தான் இருக்கும்.
கான்ஷிராமுடனான எனது தொடர்புக்கு 'புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசனும் ஒரு முக்கியமான காரணம். கான்ஷிராமின் நம்பிக்கைக்குரிய நண்பராக நடராசன் திகழ்ந்தார்.
1993இல் சமாஜவாதி கட்சி பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி உத்தர பிரதேசத்தில் அமைந்தபோது, ம. நடராசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க விரும்பியதாகவும், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் கான்ஷிராம் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.
நரசிம்மராவை கான்ஷிராம் ரகசியமாக சந்தித்ததும், தொடர்ந்து தொலைபேசியில் உரையாடி வந்ததும் வெளியில் தெரியாமல் இருந்தது என்பதுதான் ஆச்சரியம். நரசிம்ம ராவ் நிருபர்களைச் சந்திக்க இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்க இருக்கிறார் என்றுதான் பெரும்பாலான நிருபர்கள் எதிர்பார்த்தனர். நானும் கூடத்தான். அவசர அவசரமாக அந்த நிருபர் கூட்டத்துக்கு விரைந்த எங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி என்னவென்றால், காங்கிரஸ் தலைவர் பி.வி. நரசிம்ம ராவுடன், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமும் இருந்ததுதான்.
நிருபர் கூட்டத்தில் நரசிம்ம ராவ்தான் அதிகம் பேசினார். கூட்டணி அமைத்திருப்பது குறித்த அறிவிப்பும் அவரால்தான் தெரிவிக்கப்பட்டது.
கான்ஷிராம் அமைதியாக அமர்ந்திருந்தார்.
'பாரதிய ஜனதாதான் எங்களது முக்கிய எதிரி. வகுப்புவாத சக்திகளை பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கூட்டணி வெல்லும்'' என்று அறிவித்ததுடன், முதல்வர் பதவி பகுஜன் சமாஜ் கட்சிக்கு என்பதையும் நரசிம்ம ராவ் தெரிவித்தார். நிருபர்களின் கேள்விகளுக்கு அதிகம் இடம் தராமல் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி இந்தக் கூட்டணிக்கு சம்மதித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. 1993இல் ஏற்பட்ட சமாஜ்வாதி கட்சி பகுஜன் சமாஜ் கூட்டணி, கடுமையான கருத்துவேறுபாடு, மோதலுடன் முறிந்தது. அதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதுதான் காரணம்.
பாபர் மசூதி இடிப்புக்கும், கல்யாண் சிங் அமைச்சரவை டிஸ்மிஸூக்கும் பிறகு நடந்த பேரவைத் தேர்தல் அது. 425 இடங்களைக் கொண்ட அன்றைய உத்தர பிரதேச சட்டப்பேரவையில், 1993 பேரவைத் தேர்தலில் பாஜக 177 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 67 இடங்களிலும் வென்றிருந்தன. காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், ஜனதா தளம் 27 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக, காங்கிரஸூம் ஜனதா தளமும் சமாஜவாதி பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முற்பட்டன. முலாயம்சிங் முதல்வராகப் பதவி ஏற்றார். இரண்டு ஆண்டுகள்தான் அந்தக் கூட்டணி தாக்குப் பிடித்தது. அந்தக் கூட்டணியால் தங்களது செல்வாக்கு சரிகிறது என்று கான்ஷிராமும், மாயாவதியும் கருதினார்கள். முலாயம்சிங்கும் சரி, யாதவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கினார் என்பதும் உண்மை.

அதனால் முலாயம்சிங் தலைமையிலான அரசுக்கு வழங்கும் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சி விலக்கிக் கொள்வதாக மாயாவதி அறிவித்தார். லக்னோவிலுள்ள ஓர் அரசினர் விருந்தினர் விடுதியில் மாயாவதி தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். மாயாவதியின் ஆதரவு வாபஸ் முடிவால் ஆத்திரமடைந்த சமாஜவாதி கட்சித் தொண்டர்கள், அந்தக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்கத் தொடங்கினர். அவர்கள் மாயாவதியையும் தாக்க முற்பட்டனர்.
விவரம் கேள்விப்பட்ட பாஜகவின் எம்.எல்.ஏ. பிரம்ம தத் துவிவேதி தனது ஆதரவாளர்களுடன் அங்கே விரைந்து, மாயாவதி தாக்கப்படுவதைத் தடுத்துப் பாதுகாப்பான இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றார். அந்தத் தாக்குதல் முலாயம்சிங் யாதவால் தூண்டப்பட்டு நடந்தது என்பது மாயாவதியின் குற்றச்சாட்டு.
177 உறுப்பினர்கள் கொண்ட பாரதிய ஜனதா கட்சி அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு அளித்து பாஜக பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டணி ஆட்சியை அமைத்தது. மாயாவதி அந்தக் கூட்டணியின் முதல்வராகப் பதவியேற்றார். பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியாவின் முதல்வராகி சாதனை படைத்தார்.
அந்தக் கூட்டணி ஐந்து மாதங்கள்தான் நீடித்தது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதும் மாயாவதிதான்.
இந்தப் பின்னணியில்தான் நரசிம்ம ராவும் கான்ஷிராமும் கூட்டணி அமைத்தனர். சமாஜ்வாதி கட்சி, பாஜக இரண்டையும் பகைத்துக் கொண்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வேறு வழியில்லை. ஆட்சியையும் இழந்து, கட்சியிலும் குழப்பம் நிலவும் சூழலில், பி.வி. நரசிம்ம ராவுக்கும் பிரச்னைகளை திசைதிருப்ப இப்படியொரு அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டது.
நிருபர் கூட்டம் முடிந்ததும், ஹிமாயூன் சாலையில் உள்ள கான்ஷிராமின் வீட்டுக்கு நான் சென்றேன். வேறு யாரும் வந்திருக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். கான்ஷிராம் என்னை சந்திப்பாரா, மாட்டாரா என்றுகூடத் தெரியாது. ஆனாலும், முயன்றுதான் பார்ப்போமே என்கிற எண்ணத்துடன் விரைந்தேன்.
வீட்டுக்கு வெளியேயோ, புல் தரையிலோ, வரவேற்பறையிலோ யாருமே இருக்கவில்லை. எனது முகவரி அட்டையை உள்ளே அனுப்பினேன். என்னவொரு ஆச்சரியம், உள்ளே அழைத்து வரும்படி உத்தரவு வந்தது. உள்ளே நுழைந்தபோது, சோபாவில் கான்ஷிராம் அமர்ந்திருந்தார். சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். சிறிது மாதங்கள் முன்பு வரை, உத்தர பிரதேசத்தின் முதல்வராக இருந்த மாயாவதி, சோபாவுக்குக் கீழே அவரது காலடியில் அமர்ந்திருந்தார். அதுவும் எப்படி? மிகுந்த பயபக்தியுடன். குருவுக்கு அருகே அமர்ந்திருக்கும் சீடர்போல... இப்போதும் அந்தக் காட்சி என் கண்ணை விட்டு அகலவில்லை.
எதிரில் அமர்ந்த நான் கான்ஷிராமிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான் 'இந்தக் கூட்டணியாவது நிலைக்குமா?''
'கூட்டணி என்றாலே சந்தர்ப்பவாதம்தான். கூடிப் பிரிவதுதான் கூட்டணி. எங்களைப் பொருத்தவரை, முதல்வர் பதவியோ, உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதோ அல்ல இலக்கு. பிரதமர் பதவியும், மத்தியில் ஆட்சி அமைப்பதும்தான் எங்களது குறிக்கோள். அதை நோக்கிய பயணத்தில், இந்தக் கூட்டணியும் ஒன்று.
அவ்வளவுதான்.''
'நீங்கள் சமாஜவாதி கட்சி, பாஜகவைப் போல, காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள், குற்றச்சாட்டுகள் எழுப்பியிருக்கிறீர்கள். அதையெல்லாம் மறந்து விட்டீர்களா அல்லது மன்னித்து விட்டீர்களா?''
'மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது? காங்கிரஸை நாங்கள் இழிவாகப் பேசியதே கிடையாது, விமர்சித்திருக்கிறோம். விமர்சனம் என்பது ஜனநாயகத்தில் சகஜம். மதச்சார்பின்மை, சமூக மாற்றத்துக்கு உறுதிபூண்டுள்ள கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படுவதில் என்ன தவறு?''
'பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகும் காங்கிரஸை மதச்சார்பற்ற கட்சி என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?''
'பாபர் மசூதி இடிப்புக்கு பாஜகதான் காரணம். அயோத்தியில் பாபர் மசூதியின் உள்ளே ராம்லாலாவைத் திறந்துவிட்டது ராஜீவ் காந்தி அரசு. இந்தியா முழுவதும் அத்வானியின் ரத யாத்திரையை அனுமதித்தது வி.பி. சிங் அரசு. நரசிம்ம ராôவின் கைகள் கட்டப்பட்ட நிலையில், பாபர் மசூதி இடிப்பு நடந்துவிட்டது. அவரை மட்டுமே குற்றவாளியாக்குவதை நான் ஏற்கவில்லை.''
அதற்குப் பிறகு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் கான்ஷிராம். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையை முதல்வர் கருணாநிதியும், மூப்பனாரும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் முடுக்கி விட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அது குறித்து நான் சில கருத்துகள் கூற முற்பட்டபோது, என்ன தோன்றியதோ, 'அது குறித்து நாம் விவாதிக்க வேண்டாம்' என்று தவிர்த்துவிட்டார்.
கான்ஷிராம் வீட்டிலிருந்து நான் சென்ற இடம் கோல்ஃப் லிங்ஸிலுள்ள ஆர்.கே. தவானின் வீடு. உள்ளே ஏதோ முக்கிய ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக உதவியாளர் சொன்னார். யார் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்தேன். சரத் பவார், ராஜேஷ் பைலட், அஜித் சிங் மூவரும் இருப்பதாகத் தெரிவித்தார் அவர். நிச்சயமாக காங்கிரஸ் தலைமை மாற்றம் குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் யூகிக்க முடிந்ததது.
வெளி வராந்தாவில் இருந்த நாற்காலியில் அமைதியாக நான் அமர்ந்திருந்தேன். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெளியில் வந்தபோது அவர்களுக்கு என்னைப் பார்த்ததும் ஒரே அதிர்ச்சி. அந்த நேரத்தில், பத்திரிகையாளர் ஒருவர் வந்து அமர்ந்திருப்பார் என்பதை சரத் பவார் எதிர்பார்க்கவில்லை.
சரத் பவாரின் கோபமும் எரிச்சலும் கலந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் நான் நெளிந்தேன்.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...