'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 135
என்ன செய்வது என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் இருந்த என்னைப் பார்த்து, ஆர்.கே. தாவன் 'ஹலோ' சொன்னது என்னைக் காப்பாற்றியது. கோபமாக இருந்த சரத் பவார் சட்டென சாந்தமானார்.


என்ன செய்வது என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் இருந்த என்னைப் பார்த்து, ஆர்.கே. தாவன் 'ஹலோ' சொன்னது என்னைக் காப்பாற்றியது. கோபமாக இருந்த சரத் பவார் சட்டென சாந்தமானார்.
நட்புறவுடன் ராஜேஷ் பைலட்டும், அஜித் சிங்கும் என்னருகில் வந்து கை குலுக்கியபோது அசாதாரண சூழல் விலகி, ஒருவித இயல்புநிலை ஏற்பட்டது. நானும் சற்று சுதாரித்துக் கொண்டேன். சரத் பவாருடன் எனக்கு நெருக்கம் இல்லாவிட்டாலும், நீண்டகாலத் தொடர்பு உண்டு.
'என்ன தாவன், நீங்கள் அழைத்துத்தான் வந்திருக்கிறாரா?' என்று தாவனைப் பார்த்துக் கேட்டார் சரத் பவார்.
'இந்திராஜி காலத்திலிருந்தே இவரை எனக்குத் தெரியும். எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து போகும் அளவுக்கு அவருக்கு என்னிடம் நெருக்கம் உண்டு.'
'தாவன்ஜிக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வேண்டியவர்தான். எங்களுக்கு மட்டுமல்ல, பிரணாப்தா, கருணாகரன்ஜிக்கும்கூட வேண்டியவர்' என்றார் ராஜேஷ் பைலட்.
'எனக்கும்கூட வேண்டியவர்தான். மகாராஷ்டிராவிலிருந்து வெளிவரும் நான்கு முக்கிய பத்திரிகைகள் அவரது செய்தி நிறுவனத்துடன் தொடர்பு உடையவை. நாளைக்கே, 'தாவன் வீட்டில் சரத் பவார் கலந்தாலோசனை' என்று செய்தி வெளிவராமல் இருந்தால் சரி. நாம் ஏதோ ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறோம் என்பதுபோல வர்ணித்து விடுவார்கள்.'
சரத் பவார் சொன்னபோது எல்லோரும் சிரித்தோம். முதலில் சரத் பவாரும், அவரைத் தொடர்ந்து அஜித் சிங்கும் விடை பெற்றனர். என்னையும் ராஜேஷ் பைலட்டையும் உள்ளே அழைத்தார் தாவன். உள்ளே போய் வரவேற்பறையில் அமர்ந்தோம். பேச்சைத் தொடங்கினார் தாவன்.
'எங்கிருந்து வருகிறாய்? பிரணாப் முகர்ஜி என்னதான் சொல்கிறார்?'
'நான் பிரணாப்தாவைப் பார்க்கவில்லை. கான்ஷிராமை சந்தித்துவிட்டு வருகிறேன்.'
அதைக் கேட்டதும் அவர்கள் இருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
'கான்ஷிராம் என்ன சொல்கிறார்?'
'நரசிம்ம ராவுக்கு ஆதரவாகப் பேசினார். பாஜகதான் எதிரி என்கிறார்.'
'உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை ஒரேயடியாக ஒழித்துக் கட்டுவது என்று ராவ் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது. அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் தேர்தலுக்கு இப்போதே எதற்காகக் கூட்டணி என்று அவரிடம் கேட்டாயா?'
'இல்லை. உத்தர பிரதேசத் தேர்தல் அணுகுமுறை குறித்து யோசனை தெரிவிக்க சரத் பவார், அஜித் சிங் உள்ளிட்டவர்கள் கொண்ட ஐவர் குழு அமைத்திருப்பதாக, நிருபர் கூட்டத்திலேயே நரசிம்ம ராவ் தெரிவித்தார். கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஐயாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற 130 தொகுதிகளின் பட்டியலை கான்ஷிராமிடம் தந்திருப்பதாகவும் அவர் நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்.'

'மாநிலக் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கத் தொடங்கினால், தமிழ்நாடுபோல தனது தனித்தன்மையை இழந்துவிடுவோம் என்று பலமுறை நரசிம்ம ராவை நான் எச்சரித்திருக்கிறேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இப்போது திடீரென்று உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் உடன்பாடு மேற்கொண்டது, அவரது பிரச்னைகளை திசைதிருப்ப வேண்டுமானால் உதவலாம். காங்கிரஸின் வளர்ச்சிக்கு உதவாது.'
தாவன் கோபமாகப் பேசினார். எதுவும் பேசாமல் நான் ராஜேஷ் பைலட்டின் முகத்தைப் பார்த்தேன்.
'தாவன்ஜி, காங்கிரஸ் செயற்குழுவில் இது பற்றி நரசிம்ம ராவ்ஜி விவாதிக்கவில்லை. அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் என்போன்ற உறுப்பினர்களிடமாவது தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டாரா என்றால் கிடையாது. இந்தக் கூட்டணி குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. என்னதான் நடக்கிறது கட்சியில்...?' என்றார் ராஜேஷ் பைலட்.
என்னை ஓர் அந்நியனாகவோ, பத்திரிகையாளனாகவோ நினைக்காமல் அவர்கள் இருவரும் மனம் திறந்து சில விமர்சனங்களை முன்வைத்தனர். சிலர் குறித்த தங்களது கருத்தையும் பரிமாறிக் கொண்டனர். அதையெல்லாம் வெளிப்படுத்துவது என்பது பத்திரிகை தர்மமாகாது என்பதால் நான் இங்கே பதிவு செய்யவில்லை.
'உத்தர பிரதேசத்தில் காங்கிரஸால் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அப்படிப்பட்ட சூழலில், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம், ஓரளவுக்கு இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியை நிர்ணயம் செய்யும் நிலையில் காங்கிரஸை நிலைநிறுத்த வேண்டும் என்று நரசிம்ம ராவ் நினைத்திருக்கக் கூடும்' என்றேன் நான்.
என்னைப் பார்த்து சிரித்தார் ஆர்.கே. தாவன். ராஜேஷ் பைலட்டும் நான் ஏதோ சிறு பிள்ளைத்தனமாகப் பேசிவிட்டதுபோலப் பார்த்தார்.
'காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்த்துக் கொள்ளவில்லை அவர். பகுஜன் சமாஜ் கூட்டணியில் ஜூனியர் பார்ட்னராக இருக்க சம்மதித்திருக்கிறார். காங்கிரஸ் என்ன அந்த அளவுக்குக் கேவலமாகிவிட்டதா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ராஜேஷ்ஜி?' என்றார் தாவன்.
'உத்தர பிரதேசத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால், அது பாஜகவுக்குத்தான் சாதகமாக அமையும். அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்கள். இல்லையென்றால், தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் துணையுடன் ஆட்சி அமைப்பார்கள். அதுதான் நடக்கப் போகிறது' - ராஜேஷ் பைலட்.
'தனித்துப் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாமல், நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலைக்குக் காங்கிரஸ் தள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?' - இது நான்.
'நம் தயவில் ஜனதா தளமும், சமாஜவாதி கட்சியும் அடங்கிய ஐக்கிய முன்னணி ஆட்சி நடக்கிறது. நமது தலைமையில் அவர்களை உள்ளடக்கிய கூட்டணியை அமைத்து உத்தர பிரதேசத்தில் பாஜகவை எதிர்க்கலாமே... நரசிம்ம ராவ்ஜியின் செல்வாக்கை பயன்படுத்தி அந்தக் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியையும் இணைத்தால், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கலாம். பாஜகவால் நூறு இடங்களில்கூட வெற்றி பெற முடியாது.'
ராஜேஷ் பைலட் முன் மொழிந்த இந்த யோசனையை அவர் ஏன் நரசிம்ம ராவிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்பது எனது வருத்தம். அதை அவரிடமே பலமுறை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? -
'ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி எல்லாமே காங்கிரஸை பயன்படுத்தி ஆட்சி அமைக்க விரும்பும். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதையோ, கூட்டணிக்கு தலைமை தாங்குவதையோ அந்தக் கட்சிகள் விரும்பாது. ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தரும் நிலையில் நாம் அப்படி ஒரு கூட்டணியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தவற விட்டுவிட்டோம்.'
தாவன்ஜியும், ராஜேஷ் பைலட்டும் இரவு விருந்துக்குக் கிளம்பியதால், நான் விடைபெற்றுக் கொண்டேன்.
காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுமோ என்கிற அளவுக்கு அதிருப்தி வலுக்கத் தொடங்கி இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தியது முதல் அதன் வீரியம் அதிகரித்தது. அதிருப்தியாளர்களின் வழிகாட்டியாகவே மாறியிருந்தார் கருணாகரன் என்று சொல்ல வேண்டும். அவரது வீட்டில்தான் அனைவரும் அடிக்கடி கூடினார்கள்.
சரத் பவார், ராஜேஷ் பைலட், மீரா குமார், பல்ராம் ஜாக்கர் நால்வரும் அந்தக் கூட்டத்துக்கு நிரந்தரமாக ஆஜராகி விடுவார்கள். ஓரிரு முறை தாவன் வந்ததாக நினைவு. அஜித் சிங்கும் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால், அவர் அப்போது காங்கிரஸிலிருந்து விலகி, மீண்டும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்தார்.
கமல்நாத் இதுபோன்ற எந்தக் கூட்டங்களிலும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பவர். குலாம் நபி ஆசாத் நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவராகவும், அதே நேரத்தில் அதிருப்தியாளர்களில் ஒருவராகவும் இருந்தார். கருணாகரன் வீட்டுக்கு அடிக்கடி வரும் இன்னொரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர் அகமது படேல். ஆனால், அதே சமயம் அவர் பிரணாப் முகர்ஜிக்கும் நெருக்கமானவராக இருந்தார்.
கருணாகரன் வீட்டில் அதிருப்தியாளர்கள் கூடினார்கள் என்றால், நரசிம்ம ராவின் ஆதரவாளர்கள் கூடும் இடமாக மாறியிருந்தது பிரணாப் முகர்ஜியின் வீடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்த அவரது அறையும். நான் அடிக்கடி அவரது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் சென்றேனே தவிர, அவரை சந்திக்கவோ, பேசவோ வாய்ப்பு அமையவில்லை. என் மீது அவரது கவனம் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தது, அவ்வளவே!
நரசிம்ம ராவின்மீது ஊழல் வழக்குகளை முடுக்கி விடுவதன் மூலம் காங்கிரஸை பலவீனப்படுத்த பிரதமர் தேவே கெளடா முயல்கிறார் என்கிற குற்றச்சாட்டுதான் பிரணாப் முகர்ஜி தலைமையிலான ராவ் ஆதரவாளர்களின் பேசு பொருளாக இருந்ததே தவிர, கருணாகரன் தலைமையில் ராவுக்கு எதிராக உயரும் அதிருப்தி குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. அது பற்றி வி.என். காட்கிலிடம் நான் ஒருநான் மெதுவாகக் கேள்வி எழுப்பினேன்.
'கருணாகரன்ஜி நிச்சயமாக காங்கிரஸில் பிளவை ஏற்படுத்திவிட மாட்டார். அவர்களில் யாராவது நரசிம்ம ராவுக்கு மாற்றாகப் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்று கேளுங்கள். அப்படி யாராவது முன் வந்தால், நரசிம்ம ராவே மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பார்' என்பதுதான் காட்கிலின் பதிலாக இருந்தது.

பி.வி. நரசிம்மராவ்
தினசரி பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தில் உள்ள தனது அறையில் இருந்தார் செய்தித் தொடர்பாளராக இருந்த வி.என். காட்கில். சிரித்த முகத்துடனும், திறந்த மனதுடனும் அவருடன் பேச அவகாசம் கிடைத்தது.
'காங்கிரஸ் கட்சி பிளவுபடுவதைக் கருணாகரன் விரும்பமாட்டார் என்று பிரணாப்தா அலுவலகத்தில் என்னிடம் நீங்கள் கூறினீர்கள். அப்படியானால், காங்கிரஸைப் பிளவு படுத்தும் முயற்சி நடக்கிறதா?'
'நிச்சயமாக நடக்கிறது. அதை நடத்துவது காங்கிரஸ்காரர்கள் அல்ல, பிரதமர் தேவே கெளடா. காங்கிரஸில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலம் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார் அவர்.'
'எந்த அடிப்படையில் இப்படிக் கூறுகிறீர்கள்?'
'எத்தனையோ முக்கியமான பிரச்னைகள் அரசை எதிர்கொள்கின்றன. ஆனால், பிரதமர் கெளடாவின் கவனமெல்லாம் போஃபர்ஸ் கோப்புகளை தூசி தட்டுவதிலும், நரசிம்ம ராவ்ஜிக்கு எதிராக என்னென்ன வழக்குகளை முன்னெடுக்க முடியும் என்பதிலும்தான் இருக்கின்றன. சிபிஐயும், அமலாக்கத் துறையும் அதற்காக முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.'
'காங்கிரஸின் ஆதரவில் ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.'
'இந்த ஆட்சி தொடர்ந்தாலும் காங்கிரஸூக்குக் கெட்ட பெயர்; இந்த ஆட்சியைக் கவிழ்த்தாலும் கெட்ட பெயர். இந்த ஆட்சிக்கான ஆதரவை விலக்கி தேர்தலுக்கு வழிவகுத்தால், எங்கள் கட்சி எம்.பி.க்களே அதை ஆதரிக்க மாட்டார்கள். அந்த தைரியம்தான் பிரதமர் தேவே கெளடாவுக்கு...'
'இதற்கு என்னதான் முடிவு...?'
'ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது ஐக்கிய முன்னணி. அரசு ஊழியர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் கூட்டப் போகிறார்கள். அவர்களாகவே விரைவில் கவிழ்ந்து விடுவார்கள்.'
'அந்த நம்பிக்கையில்தான் நீங்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறீர்களோ?'
பலமாகச் சிரித்தார் வி.என். காட்கில்.
அவர் எதிர்பார்த்ததுபோல ஆட்சி உடனடியாகக் கவிழவோ, கருத்து வேறுபாடு ஏற்படவோ இல்லை. மாறாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தேவே கெளடா அரசுக்கு மேலும் வலிமை சேர்த்தது. உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக இருந்த இந்திரஜித் குப்தாவின் அதிரடி முடிவுகளால், காங்கிரஸ் நிலைகுலைந்தது.
பதவி ஏற்றுக் கொண்டதும் கையுமாக, உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா தனது அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...