யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 136

பதவி ஏற்றதும் கையுமாக உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா, போஃபர்ஸ் ஊழல் தொடர்பான விசாரணையின் நிலைமையைத் தெரிவிக்கும்படியாக தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபோது  பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

News image
Updated On :15 ஏப்ரல் 2023, 6:30 pm

பதவி ஏற்றதும் கையுமாக உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா, போஃபர்ஸ் ஊழல் தொடர்பான விசாரணையின் நிலைமையைத் தெரிவிக்கும்படியாக தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபோது, காங்கிரஸ் வட்டாரங்களில் அது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. ஜெயின் ஹவாலா வழக்குக் குறித்த விவரங்களையும் அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்தார்.

சிபிஐ இயக்குநராக இருந்த கே. விஜய ராமா ராவ், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்ல; ராஜிவ் காந்தி குடும்பத்துக்கும் மிகவும் வேண்டியவர். அவரது பதவிக் காலம் நீட்டிப்புக்கான கோப்பு உள்துறை அமைச்சரான இந்திரஜித் குப்தா மேஜையில் இருந்தது.

மத்திய புலனாய்வுத் துறை பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அடுத்த இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான பட்டியல் உள்துறை அமைச்சகத்தால்தான் தயாரிக்கப்படும். அது குறித்த விசாரணையில் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா இறங்கி இருக்கிறார் என்கிற தகவலும் கசிந்தபோது, சோனியா காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர்களும், நரசிம்ம ராவ் ஆதரவாளர்களும் எரிச்சலடைந்தனர்.

மத்திய அமைச்சரவையின் மூன்றாவது விரிவாக்கம் நடைபெற இருந்ததால், காங்கிரஸ் குழப்பங்களும், இந்திரஜித் குப்தாவின் மீதான அதிருப்தியும் வெளியில் பரவலாகத் தெரியவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் முடிந்த கையோடு, நரசிம்ம ராவுக்கு எதிரான,  லக்குபாய் பாதக் கையூட்டு வழக்கு பரபரப்பானது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் முடிவெடுத்தபோது, பிரச்னை மேலும் சிக்கலானது.

நரசிம்ம ராவ் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்கிற கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தில் மனு போடப்பட்டதும், அப்போது பிரபல வழக்குரைஞராக இருந்த கபில் சிபல் அவருக்காக ஆஜரானதும் தலைப்புச் செய்திகளாயின. நரசிம்ம ராவ் மீது மூன்று முக்கியமான வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதற்குப் பின்னால், தேவே கெளடா அரசின் மறைமுக அழுத்தம் இருந்தது என்கிற காங்கிரஸின் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

லண்டன் ஊறுகாய் வியாபாரியான லக்குபாய் பாதக்கிடம், இந்தியாவுக்குக் காகிதம் மற்றும் காகிதக் கூழ் வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாக சந்திராசுவாமியும், அவரது உதவியாளரான கைலாஷ்நாத் அகர்வால் என்கிற மாமாஜியும் ஒரு லட்சம் டாலர் கையூட்டுப் பெற்று மோசடி செய்துவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. 

1983-ஆம் ஆண்டு, இந்திரா காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, நியூயார்க் நகர ஹோட்டல் ஒன்றில் அவரை சந்திராசுவாமியுடன் சந்தித்ததாகவும், ''சந்திராசுவாமி உங்களைப் பற்றி என்னிடம் கூறியிருக்கிறார். உங்கள் வேலை முடிந்துவிடும்'' என்று தன்னிடம் நரசிம்ம ராவ் சொன்னதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் லக்குபாய்  பாதக். அந்தச் சந்திப்பின் காரணமாகத்தான் சந்திரா சுவாமிக்குத் ஒரு லட்சம் டாலர் கொடுத்ததாகவும், அதனால் நரசிம்ம ராவையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.கிடப்பில் கிடந்த அந்த வழக்கு, நரசிம்ம ராவ் பிரதமர் பதவியை இழந்த பிறகு வேகமெடுத்ததில் வியப்பில்லை. இடதுசாரி சார்புடைய சிவில் உரிமைகளுக்கான அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அந்த மோசடி வழக்கில் சந்திராசுவாமியுடன் நரசிம்ம ராவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.

அந்த வழக்கு மட்டுமல்லாமல், மேலும் இரண்டு வழக்குகளும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவைத் துரத்தின. ரூ.133 கோடி உர இறக்குமதி விவகாரத்தில் நரசிம்ம ராவின் புதல்வர், உதவியாளர் ஒருவர் அகியோர் மீதான புகார்கள் சிபிஐ விசாரணையில் இருந்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் கட்சிமாறி வாக்களிப்பதற்காக லஞ்சம் வழங்கப்பட்ட புகாரிலும், நரசிம்ம ராவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில்தான், நரசிம்ம ராவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்கிற கோரிக்கை சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களால் எழுப்பப்பட்டது. நரசிம்ம ராவ் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மூத்த காங்கிரஸ் தலைவர் கருணாகரன் கடிதம் எழுதியபோது, எதிர்ப்பு மேலும் வலுக்கத் தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, புதிய தலைவர் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது கருணாகரனின் கோரிக்கை.

தலைமை மாற்றம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை, அடுத்த நாள் கூட இந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் நரசிம்ம ராவ் அதிருப்தியாளர்கள் வலியுறுத்தும் முடிவில் இருந்தனர். அப்போது, நரசிம்ம ராவுக்கு சாதகமாக நிலைமையை மாற்றியது, உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவின் சென்னைப் பேட்டி. பிளவுபட்டுக் கிடந்த காங்கிரஸ் தலைவர்களை அந்தப் பேட்டி அப்போதைக்கு ஒன்றுபடுத்தியது எனலாம். அப்படி என்னதான் சொன்னார் இந்திரஜித் குப்தா?

''லக்குபாய் பாதக் வழக்கில் நரசிம்ம ராவ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அவர் சிறை சென்றாலும், ஐக்கிய முன்னணி அரசுக்குத் தரும் ஆதரவைக் காங்கிரஸால் விலக்கிக் கொள்ள முடியாது. அப்படி விலக்க முற்பட்டால் காங்கிரஸ் பிளவுபடுமே தவிர, எங்கள் கூட்டணி அரசு விழுந்துவிடாது. கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நரசிம்ம ராவ், இனி அந்தக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது'' - இவைதான் உள்துறை அமைச்சரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இந்திரஜித் குப்தா தெரிவித்த கருத்துகள்.

இந்திரஜித் குப்தாவின் கருத்துக்கு முதல் எதிர்ப்பு திருவனந்தபுரத்திலிருந்து வந்தது. ''காங்கிரஸ் கட்சியின் அடுத்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில், ஐக்கிய முன்னணி அரசை ஆதரிப்பது குறித்த அணுகுமுறை, செயல்திட்டம் ஆகியவை வகுக்கப்படும். இந்த அரசின் அன்றாட நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில், இவர்களின் எல்லா முடிவுகளையும் எங்களால் ஆதரிக்க முடியாது'' என்று தெரிவித்தார் ஏ.கே. அந்தோணி.

''காங்கிரஸின் ஆதரவுடன் பதவிசுகம் அனுபவித்துக் கொண்டு, காங்கிரஸை பலவீனப்படுத்த ஐக்கிய முன்னணிக் கட்சிகளும், இடதுசாரிகளும் செய்யும் சதியின் வெளிப்பாடுதான் இந்திரஜித் குப்தாவின் பேச்சு'' என்று முன்னாள் உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண், ஜனார்தன பூஜாரி, ஜெகன்நாத் மிஸ்ரா, தேவேந்திர துவிவேதி, வி.என். காட்கில், எஸ்.எஸ். அலுவாலியா, வி. நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர். 

நரசிம்ம ராவ் எதிர்ப்பாளர்கள் என்று கருதப்பட்ட ராஜேஷ் பைலட், கருணாகரன், சரத் பவார் உள்ளிட்டவர்களும் தங்களது கருத்துவேறுபாடுகளை மறந்து கரம் கோத்தனர். ''முடிவு செய்யப்படாத வழக்கு குறித்து குப்தா கருத்துத் தெரிவித்திருப்பது, உள்துறை அமைச்சர் பதவிக்கு அவர் பொருத்தமானவர்தானா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. குப்தாவின் பேச்சு எல்லா காங்கிரஸ் காரர்களையும் சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது'' என்று முன்னாள் உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண் அறிக்கையே வெளியிட்டுவிட்டார்.

பெயருக்கு தேவே கெளடா வருத்தம் தெரிவித்தார் என்றாலும், இடதுசாரிகளைப் பகைத்துக்கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை. அதே நேரத்தில், தனது பிரதமர் பதவியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்ப்பந்தமும் அவருக்கு இருந்தது. இந்திரஜித் குப்தாவிடம் எப்படி பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்று கூறும் அளவுக்கு அரசியல் அனுபவமும், துணிவும் பிரதமர் கெளடாவுக்கு மட்டுமல்ல, ஐக்கிய முன்னணியில் யாருக்குமே இல்லை என்பதுதான் உண்மை நிலை.

இத்தனை அமளிக்கு நடுவிலும் பி.வி. நரசிம்ம ராவ் அமைதி காத்தார் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மிக நெருக்கமான சிலரை மட்டுமே சந்தித்தார். யாரிடமும் அதிகம் பேசவும் இல்லை. அவ்வப்போது தனது ஆதரவாளர்களான பிரணாப் முகர்ஜி, தேவேந்திர துவிவேதி, ஜிதேந்திர பிரசாத், ஆர்.கே. தாவண் போன்றவர்கள் அவரை சந்திக்க 10, மோதிலால் நேரு சாலையில் அமைந்த வீட்டுக்கு வந்து சென்றனர்.

நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது வலது கரமாகவும் அப்போது திகழ்ந்தவர் மணீந்தர்ஜீத் சிங் பிட்டா. 'அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி' என்கிற அமைப்பின் நிறுவனத் தலைவரான மணீந்தர்ஜீத் சிங் பிட்டாவை இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கும்கூட நினைவிருக்காது. ஆனால், தனது உயிரையும் பொருள்படுத்தாமல் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடியவர் அவர். அதனால், நரசிம்ம ராவின் நம்பிக்கையைப் பெற்றார். 

பஞ்சாப் மாநிலத்தில் பியாந்த் சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இளைஞர் மணீந்தர்ஜீத் சிங் பிட்டா என்கிற எம்.எஸ். பிட்டா. முதல்வராக இருந்த பியாந்த் சிங் கொல்லப்பட்டது போல, எம்.எஸ். பிட்டாவின் மீதும் இரண்டு முறை கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் இரண்டு முறையும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.

தனது நண்பர் சரண்ஜித் சிங் பேடியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது காரில் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டது. அமிர்தஸரசில் நடந்த அந்தத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். எம்.எஸ். பிட்டா தனது ஒரு காலை இழந்தார். அதன்பிறகு ஊன்றுகோலுடன்தான் நடந்தார். 1992-இல் நடந்த அந்த தாக்குதல் பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கு இளைஞரான பிட்டாவின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. அவரை, இளைஞர் காங்கிரஸின் அகில இந்திய தலைவராக்கினார் அவர்.

1993 செப்டம்பர் 11-ஆம் தேதி தில்லியில் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. நான் அப்போது சில நண்பர்களுடன் ரஃபி மார்க்கிலுள்ள யு.என்.ஐ. (யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா) கேண்டீனில் மழைக்காக ஒதுங்கியிருந்தேன். சிறிது நேரத்தில் அருகில் இருந்த ராய்சீனா ரோட்டிலிருந்த இளைஞர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் எம்.எஸ். பிட்டாவின் பேட்டிக்காக எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மழை சற்று குறைந்தால் பேட்டிக்கு நடந்தே சென்றுவிடலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன்.

சுற்று வட்டாரத்தையே அதிர வைப்பதுபோல, அருகில் எங்கோ பலமான குண்டு வெடித்த சத்தம் கேட்டது. மழைக்கு யு.என்.ஐ. கேண்டீனில் ஒதுங்கி இருந்த நாங்கள், நாடாளுமன்றக் கட்டடத்துக்குத்தான் குண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி பீதியில் ஆழ்ந்தோம்.

குண்டு வெடிப்பு என்று சொன்னால், பொதுவாகத் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்வது வழக்கம். அதனால் அடுத்த வெடிகுண்டு நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில்கூட நிகழலாம் என்பதால் பதற்றத்தில் இருந்தோம்.

காவல்துறையினரின் வாகனங்கள் விரைவதும், ஆம்புலன்ஸ்கள் அபாய ஒலி எழுப்பிக் கொண்டு செல்வதும் கேட்டது. யு.என்.ஐ. அந்தக் கட்டடத்தின் பின்புறம் கேண்டீன் அமைந்திருந்ததால், சாலையில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. மழையில் நனைந்தபடி முன்புறம் சென்று பார்க்க எங்களுக்குத் துணிவும் இல்லை.

யு.என்.ஐ. அலுவலகத்தின் பின்வாசல் வழியாக வந்த ஊழியர் ஒருவர், இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்திருப்பதாகத் தெரிவித்தார். மணீந்தர்ஜீத் சிங் பிட்டா உள்பட பலர் குண்டு வெடிப்பில் இறந்துவிட்டதாகத் தெரிகிறது என்று சொன்னார்.

அபயக் குரல்களும், ஜீப்புகளும், மோட்டர் பைக்குகளும், அவசரகதியில் விரையும் சப்தமும் அடங்கும் விதமாக மழையின் வேகம் அதிகரித்தது. வெளியே போக முடியாது என்பதால், அன்று இரவு முழுவதும் யு.என்.ஐ. கேண்டீனிலும், அந்தக் கட்டடத்தின் சில பகுதிகளிலுமாக நாங்கள் நேரத்தை நகர்த்தினோம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.