பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 137
பொழுது புலர்ந்தும்கூடத் தூவானம் விட்டபாடில்லை. மழை சற்று குறைந்ததும், தூறலைப் பொருட்படுத்தாமல் மெதுவாக வெளியே கிளம்பினேன்.


பொழுது புலர்ந்தும்கூடத் தூவானம் விட்டபாடில்லை. மழை சற்று குறைந்ததும், தூறலைப் பொருட்படுத்தாமல் மெதுவாக வெளியே கிளம்பினேன். இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் இருந்த ராய்சீனா ரோட்டுக்குள் நுழைய முடியாதபடி தடுப்புப் போடப்பட்டிருந்தது.
ஊரெல்லாம் குண்டுவெடிப்பு பற்றிய பேச்சுதான். தெருவில் நடமாட்டம்கூட அதிகமாக இருக்கவில்லை. பஸ்கள் பெரும்பாலும் காலியாக இருந்ததால் கன்னாட் பிளேசிலிருந்த எனது அலுவலகம் வந்து சேர்ந்தேன்.
அந்த குண்டுவெடிப்பில் மணிந்தர்ஜீத் சிங் பிட்டா தப்பித்தது உண்மையிலே கடவுள் செயல்தான். பிட்டாவின் பின்னணி குறித்து நான் இத்தனை விளக்கமாகக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது.
ஒன்றுக்கு இரண்டு முறை அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகும் பிட்டா சற்றும் அசரவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான அவரது போராட்டம் தொடர்ந்தது என்பதுதான் பாராட்ட வேண்டிய ஒன்று. நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்த பிட்டா, அவர் பிரதமர் பதவியை இழந்த பிறகும் தனது தொண்டர் படையுடன் அவருக்குப் பாதுகாப்பு வளையம் போல செயல்பட்டு வந்தார்.
நரசிம்ம ராவின் ஆதரவாளர்கள் பிரணாப் முகர்ஜியின் வீட்டில் கூடிப் பேசத் தீர்மானித்திருந்தனர். அதிருப்தியாளர்களையும் அந்தக் கூட்டத்துக்கு வரவழைத்தால், சமரசம் ஏற்படுத்த முடியும் என்று பிரணாப் முகர்ஜி கருதினார். அதை தேவேந்திர துவிவேதி, ஆர்.கே. தாவண், ஜிதேந்திர பிரஸாத், வி.என். காட்கில் உள்ளிட்ட ஏனைய ராவ் ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையில் சரத் பவார் - நரசிம்ம ராவ் சந்திப்பு, சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்தது.
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், பி.வி. நரசிம்ம ராவ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தக் கூடாது என்கிற ராவ் ஆதரவாளர்களின் கோரிக்கையை சரத் பவார், கருணாகரனிடம் தெரிவித்து அவரது ஒப்புதலைப் பெற்று விட்டார். கருணாகரன் மட்டுமல்ல, பல்ராம் ஜாக்கர், ராஜேஷ் பைலட் உள்ளிட்டவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
அந்த மனநிலையுடன்தான் சரத் பவார், ராஜேஷ் பைலட், பல்ராம் ஜாக்கர் உள்ளிட்டவர்கள் பிரணாப் முகர்ஜி வீட்டில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தனர். கருணாகரன் கலந்துகொள்வதாக இல்லை என்று அவரது வீட்டைத் தொடர்பு கொண்டபோது என்னிடம் தெரிவித்தனர். நான் பிரணாப் முகர்ஜி வீட்டுக்கு விரைந்தேன். வராந்தாவில் ஏனைய சிலருடன் நின்றுகொண்டிருந்தேன்.
அப்போதுதான் விபரீத திருப்பம் நடந்தது. சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டியதை பெரிய பிரச்னையாக்கி, சமரசப் பேச்சுவார்த்தைக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது மணீந்தர்ஜீத் சிங் பிட்டாவும் அவரது தொண்டர்களும் நடந்துகொண்ட விதம்.

சரத் பவாருடன் பல்ராம் ஜாக்கரும், ராஜேஷ் பைலட்டும் ஒரே காரில் பிரணாப் முகர்ஜி வீட்டுக்கு வந்தனர். அவர்கள் காரிலிருந்து இறங்கியதுதான் தாமதம், பிட்டாவும் அவரது ஆதரவாளர்களும் சரத் பவாருக்கும், ராவ் எதிர்ப்பாளர்களுக்கும் எதிராகக் கோஷம் எழுப்பத் தொடங்கினர். அவர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கியதும், வராந்தாவில் நின்று கொண்டிருந்த எனக்கு ஏதோ தவறு நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிட்டது.
வீட்டின் வரவேற்பறையில் ஏனைய தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் பிரணாப்தா. கதவைத் தட்டாமலும், முன் அனுமதி பெறாமலும் ஏதோ வேகத்தில் நான் உள்ளே நுழைந்துவிட்டேன். அனைவரும் என்னை ஆத்திரத்துடன் பார்த்தனர். யாரோ ஒருவர் "யாரைக் கேட்டு இப்படி உள்ளே நுழைந்தாய்?'' என்று ஆத்திரத்தில் ஹிந்தியில் கத்தினார்.
பிரணாப் முகர்ஜியின் முகம் கோபத்தில் சிவந்தது. எதையும் பொருட்படுத்தாமல் நான் அவர் அருகில் விரைந்தேன். அவரது காதில் வெளியே நடப்பதைத் தெரிவித்து, உடனடியாக அதைத் தடுக்காவிட்டால் விபரீதமாகிவிடும் என்று தெரிவித்தபோது, அவருக்கு எனது அவசரம் தெரிந்தது. சட்டென எழுந்து வெளியில் விரைந்தார்.
அதற்குள் எது நடக்கக் கூடாதோ அது நடந்துவிட்டது. வந்த வேகத்தில் சரத் பவாரும், ஏனைய இருவரும் காரில் ஏறிக் கிளம்பிவிட்டனர். பிரணாப் முகர்ஜி அதற்கு முன்னர் அப்படி ஆத்திரத்தில் கத்தி நான் பார்த்ததே இல்லை. அன்று மணீந்தர்ஜீத் சிங் பிட்டாவையும், மற்றவர்களையும் பார்த்து அவர் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும், வங்காளியிலும் கத்தினார் பாருங்கள், நானே மிரண்டுவிட்டேன்.
தலைகுனிந்தபடி நின்று கொண்டிருந்தார் பிட்டா. ஆர்.கே. தாவணும், வி.என். காட்கிலும் பிரணாப் முகர்ஜியை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர். நான் விடை பெற்றுக் கொள்ளாமலே அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டேன். அங்கிருந்து நான் சென்ற இடம் கருணாகரனின் வீடு!
கருணாகரனின் சுனேரிபாக் சாலை வீடு அமைதியாக இருந்தது. சுற்றிலும் புல்வெளியும், தோட்டமும் அமைந்த அந்த வீட்டில், கருணாகரன் இருக்கும்போது பரபரப்பு இல்லாமல் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம். கேரள மாநில ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த முக்கியமான தலைவர்களும், எம்.பி.க்களும் நிறைந்து காணப்படும் அவரது இல்லம், அமைதியாக இருந்தது.
உள்ளே போனபோது அங்கே ரமேஷ் சென்னிதலா, கே.வி. தாமஸ், கேரளாவிலிருந்து வந்திருந்த கார்த்திகேயன், கருணாகரனின் மகன் முரளிதரன் ஆகியோர் வரவேற்பறையில் அமர்ந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர். கருணாகரனின் உதவியாளரும், மெய்க்காப்பாளருமான கண்ணப்பனிடம் நான் வந்திருப்பதைத் தெரிவிக்கச் சொல்லிவிட்டு, நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன்.
அவர்களுடன் நான் பேசத் தொடங்குவதற்குள், எனக்கு உள்ளே இருந்து அழைப்பு வந்தது. கருணாகரன் உள்ளே ஏசி அறையில் தனியாக அமர்ந்திருந்தார். யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் என்று நான் ஊகித்துக் கொண்டேன். நான் தான் பேச்சைத் தொடங்கினேன்.
பிரணாப் முகர்ஜியின் வீட்டில் நடந்ததைத் தெரிவித்து, அவர் ஏன் வரவில்லை என்று கேட்டேன்.
"இப்படி நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். பிரணாப் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஏதாவது சமரசம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் நரசிம்ம ராவ் விலக வேண்டும் என்று கடிதம் எழுதியது தவறு என்று உரிமையுடன் கடிந்து கொண்டார். உங்களுக்குத்தான் எனக்கும் பிரணாபுக்கும் இடையேயான நட்பு எத்தகையது என்று நன்றாகத் தெரியுமே...''
"நீங்கள் ஏன் சரத் பவாருடன் பிரணாப்தா வீட்டுக்கு வரவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன்.''
"வீட்டில் வைத்து சமரசம் பேசாதீர்கள் என்று பிரணாப்தாவிடம் நான் வலியுறுத்தினேன். இதற்கு பதிலாக காரியக் கமிட்டியைக் கூட்டிப் பேசலாமே என்பதுதான் எனது கேள்வி. நரசிம்ம ராவா, கட்சியா என்றால் எனக்குக் காங்கிரஸ்தான் முக்கியம். பிட்டா போன்றவர்களை எல்லாம் பிரணாப் ஏன் தனது வீட்டின் முன்பாக வந்து நிற்க அனுமதித்தார்?''
"வேறென்ன செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''
"நான் தான் சொல்கிறேனே, காரியக் கமிட்டியைக் கூட்ட வேண்டும். இல்லையென்றால், இவர்கள் என் வீட்டிலோ, சரத் பவார் வீட்டிலோ சமரசப் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்க வேண்டும். நாங்கள் இதுபோல ரௌடிக் கும்பலை நிறுத்திவைத்து, கோஷம் எழுப்பி அவமானப்படுத்தி அனுப்பி இருக்க மாட்டோம். சமரசப் பேச்சுவார்த்தையை நடத்தக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.''
"அவர்கள் என்றால் பிரணாப் முகர்ஜியும், ஆர்.கே. தாவணும் எல்லாருமா?''
"இல்லை, பிட்டா போன்றவர்கள்... ஆர்.கே. தாவணையும், ஜிதேந்திர பிரஸாதாவையும் நான் சந்திக்க விரும்பியதாக அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், நான் எங்கேயும் வெளியில் போகமாட்டேன் என்று தெரிவியுங்கள்.''
"சரி, பிரணாப் முகர்ஜியை சந்திப்பேனா என்று தெரியாது. அப்படி சந்தித்தால், நீங்கள் இவர்களை சந்திக்க விரும்பியதை அவரிடம் தெரிவிக்கலாமா?''
"தாராளமாகத் தெரிவியுங்கள். அவர் வருவதாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். நான் யாரையும் சென்று சந்திப்பதாக இல்லை. அதுமட்டும் நிச்சயம்.''
கருணாகரன் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகக் கேள்விப்பட்ட தகவலை உறுதி செய்து கொள்ள விரும்பினேன். சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், இதுவரை 10, ஜன்பத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.
சுதந்திர இந்தியாவின் தலைநகர் அரசியலில் மிகமிக பரபரப்பான காலகட்டங்களில் 1996 - 98 குறிப்பிடத்தக்கது. ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி அமைத்தது என்றாலும் ஆளும் கூட்டணிக்குள்ளேயும், அதை வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியிலும் நடந்த ராஜதந்திர நகர்வுகள் ஏராளம். திரைமறைவில் பேரங்களும், ஒவ்வொரு தலைவரும் வகுத்த வியூகமும் வரலாற்றுப் புதினங்களில்கூடக் காணக் கிடைக்காதவை.

காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து நரசிம்ம ராவ் அகன்று அந்தக் கட்சி பலவீனமடைந்தால், தனக்கு சாதகம் என்று பிரதமர் தேவே கெளடா நம்பினார். அதே நேரத்தில் வெளிப்படையாகத் தனது எண்ணத்தைத் வெளிப்படுத்தாமல், நரசிம்ம ராவுடன் இணக்கமாக இருப்பதுபோல அவர் நடந்து கொண்டார். நேரிலும், தொலைபேசியிலும் அவருடன் தொடர்பில் இருந்தார்.
காங்கிரஸில் உள்ள நரசிம்ம ராவ் எதிர்ப்பாளர்களின் அரசியல் கணக்கே வேறு. சரத் பவார், கருணாகரன், ராஜேஷ் பைலட் மூவருமே கட்சித் தலைவர் பதவியைக் குறி வைத்தனர். நரசிம்ம ராவ் விலகினால், கட்சித் தலைமைக்கான போட்டியில் தான் களமிறங்கப் போவதாக ராஜேஷ் பைலட் என்னிடம் வெளிப்படையாகவே இரண்டு முறை குறிப்பிட்டிருக்கிறார். பல்ராம் ஜாக்கருக்கும் அந்த ஆசை நிறையவே இருந்தது.
அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தில், ஆர்.கே. தாவணின் அறையில் அவருக்காகக் காத்திருந்தேன். இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். பிட்டாவும், மகிளா காங்கிரஸ் தலைவி கிரிஜா வியாஸூம், ஆர்.கே. தாவணை சந்திக்க வந்தனர். அவர்களும் என்னுடன் அவருக்காகக் காத்திருந்தனர். எனக்கு மனது கேட்கவில்லை. பிட்டாவிடம் நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.
"பிரணாப்தா வீட்டில் அப்படி கோஷம் எழுப்பி நீங்கள் ஏன் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெறுவதைத் தடுத்தீர்கள்? உங்களுடைய செயலால் எவ்வளவு பின்னடைவு என்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?''
"இவர்களுடன் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. வேண்டுமென்றேதான் நான் அன்று அதைத் தடுத்தேன். பிரணாப்தாவும், நரசிம்ம ராவ்ஜியும் என்னைத் திட்டியதற்காக நான் வருத்தப்படவில்லை.''
நான் பேசவில்லை. கிரிஜா வியாஸைப் பார்த்தேன். அவர் சிரித்தபடியே சொன்னார் - "பிட்டா செய்ததில் தவறொன்றுமில்லை. பெரும்பாலான மாநில காங்கிரஸ் தலைவர்களும், சட்டப் பேரவைக் கட்சித் தலைவர்களும் நரசிம்ம ராவ்ஜியை ஆதரிக்கிறார்கள். காங்கிரஸ் எம்.பி.க்களிலும் அவருக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. வெளியில் விமர்சனம் செய்யும் இந்த அதிருப்தியாளர்கள், காங்கிரஸ் செயற்குழு கூடும்போது நரசிம்ம ராவ்ஜிக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரட்டும், யார் வேண்டாம் என்கிறார்கள்?''
நான் எதுவும் சொல்லவில்லை.
அத்தனை எதிர்ப்புகளுக்கு இடையிலும் எதுவும் பேசாமல் மெளனம் காத்துவந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய பெண் பத்திரிகையாளர் ஒருவர் மூலம் ஒரு தகவலைக் கசியவிட்டார். அவ்வளவுதான், கருணாகரன் உள்ளிட்ட அத்தனை அதிருப்தியாளர்களும் அதிர்ந்து விட்டனர்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...