மெய் சிலிர்க்கும் பாத யாத்திரை...

புரட்டாசி மாதம் பிறந்தாலே போதும்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு தங்கள் இல்லங்களில் இருந்து நடந்தே சென்று ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்கின்றனர்.
பக்தர்கள்
பக்தர்கள்
Published on
Updated on
2 min read

புரட்டாசி மாதம் பிறந்தாலே போதும்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு தங்கள் இல்லங்களில் இருந்து நடந்தே சென்று ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்கின்றனர். 230 கி.மீ. முதல் 350 மீ. வரையில், ஏழு நாள்கள் முதல் பத்து நாள்கள் வரையில் நாள்தோறும் குறைந்தது முப்பது கி.மீ. வரையில் இந்தப் பயணம் இருக்கிறது என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இவர்கள் ஐம்பது பேர் முதல் ஐநூறு பேர் வரையில் குழுக்களாகச் சென்று, மஞ்சள் ஆடைகளை உடுத்திக் கொண்டு வழியெங்கும் பஜனைகளை மேற்கொண்டும் பாடல்களைப் பாடிக் கொண்டும் பக்தி மயமாக ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இளைஞர்கள், பெண்கள், முதியோர் என்று வயது வித்தியாசமும் இல்லாமல் கிராம மக்கள் ஒன்றுதிரண்டு "கோவிந்தா' எனும் திருநாமம் சொல்லி, இவர்கள் மேற்கொள்ளும் பாத யாத்திரை தலைமுறை, தலைமுறையாக நடைபெற்றுவருகிறது.

இதுகுறித்து ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியைச் சேர்ந்த அர்ச்சகர் ராமகிருஷ்ணனிடம் பேசியபோது:

'வேண்டுதலுக்காகவும், பிரார்த்தனை நிறைவேறியதற்காகவும் நன்றிக் கடன் செலுத்தவே இந்தப் பாத யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் உடலும் மனமும் தூய்மை பெறுகிறது. இரு வாரங்கள் அவருக்காகப் பயணிக்கிறோம். இதனால், எப்போதும் ஏழுமலையான் எங்களுடன் உடனிருப்பார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது, தற்போது இளைஞர்கள் பெருமளவு பாத யாத்திரை மேற்கொள்ள வருகை தருகின்றனர்'' என்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட ஓலைப்பட்டியைச் சேர்ந்த 91 பேர் கொண்ட பாத யாத்திரை குழுவுக்குத் தலைமையேற்று நடத்திச் சென்ற சீனிவாசன் என்ற குமாரிடம் பேசியபோது:

'நாங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள். எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் பல ஆண்டுகளாக, பாத யாத்திரையை மேற்கொண்டுவருகின்றனர். ஓலைப்பட்டியில் இருந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், பரதராமி, காணிப்பாக்கம், ஆஞ்சநேயர் கோயில், சீனிவாசபுரம் என்று பல்வேறு இடங்களில் பயணித்து திருப்பதியை அடைவோம். ஏழு நாள்கள் ஆகும். வழியெங்கும் கோயில்களைத் தரிசிப்போம்.

நாங்கள் ஒருவருக்கு ரூ.1,200 வசூல் செய்து, பணத்தைச் சேகரித்து வைத்துள்ளோம். இதைவைத்தே செலவிடுவோம். டெம்போ லாரியில் மளிகைப் பொருள்கள், சமையல்காரர்கள் முன்கூட்டியே பயணிப்பர். அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் எங்களுக்கு முன்னதாகச் சென்று, சமையல் செய்துவைத்துவிடுவர். முழுக்க, முழுக்கச் சைவ உணவுகள்தான் சாப்பிடுவோம். ஏழுமலையான் கோயில் தரிசனத்துக்குப் பின்னர், அங்கிருந்து பேருந்துகளில் திரும்பி விடுவோம்.

வழியெங்கும் கோவிந்தா பாடல்களைப் பாடிக் கொண்டுதான் இருப்போம். பயண முடிவில், கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து, மீதமிருந்தால் பிரித்து தந்துவிடுவோம். அதிகமானால், வசூலித்துவிடுவோம். '' என்றார்.

திருப்பத்தூரைச் சேர்ந்த ராமானுஜதாசன் கூறுகையில், 'ஓமலூரைச் சேர்ந்த முத்து என்ற எண்பத்து இரண்டு வயதான முதியவர் அண்மையில் பாத யாத்திரையில் பங்கேற்றார். அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் என்று பலதரப்பட்டவர்களும் கோவிந்தா எனும் நாமத்தோடு ஒன்றுசேர்ந்து, இரு வாரங்களுக்கு மேற்கொள்ளும் பாத யாத்திரையானது இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது.

வழியெங்கும் கோயில்கள், மடங்கள், வயல்வெளிகள் என்று குறிப்பிட்ட இடங்களில் ஓய்வெடுப்பார்கள். உணவு அருந்துவோம். முன்கூட்டியே தங்கமிடமும், உணவு அருந்தும் இடமும் சொல்லிவிடுவதால், சிலர் பல்வேறு பிரிவாகப் பயணித்தாலும் சரியான நேரத்தில் ஒன்று சேர்ந்துவிடுவோம். இப்போது செல்போன் வசதியும், சமூக வலைதள வசதியும் உள்ளன. தொலைதொடர்பு இல்லாத காலத்திலேயே, பக்தர்கள் வழிவழியாகத் தேர்வு செய்ய இடத்திலேயே இன்றும் தங்குமிடங்களும், உணவு அருந்தும் இடங்களும் இருக்கின்றன'' என்றார்.

படங்கள்: கே.பழனி, ஊத்தங்கரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com