புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அன்று மை, காகிதம்; இன்று ஏ.ஐ.!

ஒருகாலத்தில் ஒரு நூலை எழுதுவதற்கு சில ஆண்டுகள் தேவை என்ற நிலையில், இன்று அதே பணியின் ஆரம்ப வடிவத்தை சில மணி நேரங்களிலேயே உருவாக்க முடிகிறது.

Published On :

ஒருகாலத்தில் ஒரு நூலை எழுதுவதற்கு சில ஆண்டுகள் தேவை என்ற நிலையில், இன்று அதே பணியின் ஆரம்ப வடிவத்தை சில மணி நேரங்களிலேயே உருவாக்க முடிகிறது. ஏ.ஐ. வந்தவுடன் நூலாசிரியரின் பணி மாறியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வைப் பற்றி எழுதவேண்டும் என்றால், அதற்கான நூல் எங்கே இருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அந்த நூல் எந்த நூலகத்தில் உள்ளது? யாரிடம் அதன் பிரதியுள்ளது? அந்த நூல் கிடைக்குமா? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது? என்றெல்லாம் தேட வேண்டியிருந்தது.

நூலகங்களுக்குச் செல்வது, பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பது, குறிப்பெடுப்பது, முக்கியமான பக்கங்களை அடையாளப்படுத்துவது என ஆராய்ச்சியே ஒரு தனிப் பயணமாக இருந்தது.

பல நூலாசிரியர்களுக்கு நூலகம் என்பது ஆய்வுக்கூடம். ஒரு தகவலை உறுதி செய்வதற்காக எழுத்தாளர் பல நூல்களை ஒப்பிட்டுப் பார்ப்பார். சில நேரங்களில் ஒரு தகவலை உறுதி செய்யப் பல நாள்கள்கூட ஆகும். எழுத்தாளர் ஒரு பக்கத்தை எழுதுவார். தவறு ஏற்பட்டால் அழிக்க வேண்டும். சில நேரங்களில் முழுப் பக்கத்தையும் மீண்டும் எழுத வேண்டியிருக்கும். பின்னர் தட்டச்சுப் பொறிகள் வந்தன. அதன் பிறகு கணினி வந்தது. இன்றைய ஏ.ஐ. புரட்சி இதையும் கடந்து செல்கிறது.

கேள்வி கேட்பதில்தான் அறிவு

இன்றோ ஒரு கேள்வியை ஏ.ஐ.யிடம் கேட்கும்போது, ஒரு ஆரம்ப விளக்கம் சில விநாடிகளில் கிடைத்துவிடுகிறது. 'இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுங்கள்' என்று மட்டும் கேட்பதில்லை. 'இந்த நூலுக்கு 10 அத்தியாயங்கள் வேண்டும்' , 'ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் துணைத் தலைப்புகள் உருவாக்குங்கள்', 'சிறப்பு இதழ் நடையில் எழுதுங்கள்', 'பத்திரிகை நடையில் மாற்றுங்கள்', 'ஆய்வுக் கட்டுரை வடிவில் அமைக்கவும்', 'பள்ளி மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமைப்படுத்துங்கள்' என்றெல்லாம் கேட்கலாம். இவ்வாறு எழுத்தின் பல கட்டங்களிலும் ஏ.ஐ. எழுத்து உதவியாளராகச் செயல்படுகிறது.

ஒரு தலைப்பு போதும். நூல் வடிவம் உருவாகத் தொடங்குகிறது. ஒரு நூலின் நோக்கத்தையும் வாசகர்களையும் விளக்கினால், அது ஒரு ஆரம்ப கட்டமைப்பை உருவாக்க உதவும்.

உதாரணமாக, 'குடியாத்தம் நகர வரலாறு' என்ற தலைப்பைக் கேட்கிறோம். நகரத்தின் தோற்றம், பழைய குடியிருப்புகள், ஆறுகள், கோயில்கள், கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அரசியல் வரலாறு, சமூக அமைப்புகள், முக்கியமான மனிதர்கள், நகர வளர்ச்சியின் எதிர்காலம் என்று பல அத்தியாயங்களாக ஒரு தொடக்கத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

அதன்பிறகு ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனியாக வளர்த்தெடுக்க முடியும். எழுதுவதைக் காட்டிலும் கேட்பது முக்கியமாகிறது.

ஏ.ஐ. காலத்தில் எழுத்தாளரின் திறமை என்பது வேகமாகத் தட்டச்சு செய்வதில் மட்டும் இல்லை. சரியான கேள்வியைக் கேட்பதில் இருக்கிறது. ஒரு பொதுவான கேள்வியாக, 'காமராஜர் பற்றி எழுதுங்கள்' என்று இருந்தால், ஒரு பொதுவான கட்டுரை கிடைக்கலாம். ஆனால், காமராஜரின் கல்விக் கொள்கை, மதிய உணவுத் திட்டம், பள்ளிக் கல்வி விரிவாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, '1960-களின் தமிழ்நாட்டின் சமூக மாற்றத்தோடு தொடர்புபடுத்தி, 10 பக்க சிறப்புக் கட்டுரை வடிவில் எழுதுங்கள்' என்று கேட்டால் கிடைக்கும் முடிவு முற்றிலும் வேறுபடும். ஏ.ஐ.யிடம் கேள்வி கேட்பதும் ஒரு எழுத்துத் திறமையாக மாறிவிட்டது.

ஏ.ஐ. உருவாக்கிய உரை ஓர் ஆரம்பப் பிரதியாக இருக்கலாம். இதன் இறுதி உண்மையின் மாற்றாக இருக்கக்கூடாது. ஏனெனில், ஏ.ஐ. சில நேரங்களில் தவறான தகவல்களை வழங்கக்கூடும்.

குறிப்பாக, வரலாற்றுத் தேதிகள், நபர்களின் பதவிகள், புள்ளி விவரங்கள், மேற்கோள்கள், நூல் பெயர்கள், நிகழ்வுகளின் வரிசை, அரசியல் சம்பவங்கள், உள்ளூர் வரலாற்றுத் தகவல்கள் போன்றவற்றில் மனித சரிபார்ப்பு அவசியம். ஏ.ஐ. எழுத்தாளர் அல்ல; அது எழுத்துத் துணை.

சரிபார்ப்புத் தன்மை அவசியம்

ஒரு நல்ல எழுத்தாளர் ஏ.ஐ.யிடம், 'எனக்காக ஒரு நூலை எழுதிவிடு' என்று மட்டும் கூறமாட்டார். அதற்குப் பதிலாக, 'என்னிடம் உள்ள தகவல்களை ஒழுங்குபடுத்து. இந்த அத்தியாயத்தை விரிவுபடுத்து. இந்த மொழியை எளிமைப்படுத்து. இந்தப் பகுதியை பத்திரிகை நடைக்கு மாற்று. இந்த இரண்டு கருத்துகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை விளக்கு' என்று பயன்படுத்துவார். அதாவது, 'மனிதன் சிந்திக்கிறான்; ஏ.ஐ. உதவுகிறது' என்பதுதான் உண்மை.

நூலுக்கான கருத்து உருவாக்கம், அத்தியாயங்கள், துணைத் தலைப்புகள், தகவல் சேகரிப்பு, ஆரம்ப வரைவு, மொழி செம்மைப்

படுத்தல், உண்மைச் சரிபார்ப்பு, எழுத்தாளரின் சொந்த அனுபவம், வடிவமைப்பு, அச்சு அல்லது மின்னூல் வடிவில் வெளியிட அச்சாக்கம் என்று இன்று மிகக் குறைந்த நேரத்தில் ஒழுங்குபடுத்த முடிகிறது.

இவ்வாறு ஒரு காலத்தில் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் எடுத்த சில பணிகளை ஒருசில நாள்களிலேயே இன்று நம்மால் செய்ய முடியும்.

ஒரு காலத்தில் ஒரு நூல் எழுதுவது சிலரால் மட்டுமே சாத்தியமான நீண்ட பயணமாக இருந்தது. இன்று தொழில்நுட்பம் அந்தப் பாதையை எளிதாக்கியுள்ளது.

ஏ.ஐ., நூலாசிரியரை மாற்ற வரவில்லை; நூலாசிரியரின் திறனை விரிவுபடுத்த வந்திருக்கிறது. பதிவு செய்யுங்கள். உங்கள் காலத்தை ஆவணப்படுத்துங்கள். ஏனெனில், இன்று எழுதப்படாத அனுபவம், நாளை வரலாற்றில் காணாமல் போகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.