புதுமைக் கவிஞர்களில் புகழ்மிக்கவர்! - கவிஞர் முத்துலிங்கம்

அண்மையில் மறைந்த கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர் காளிதாசன். இவர் எனக்கு முன்பே பாடல் எழுதியவர்.
 புதுமைக் கவிஞர்களில் புகழ்மிக்கவர்! - கவிஞர் முத்துலிங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 60
அண்மையில் மறைந்த கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர் காளிதாசன். இவர் எனக்கு முன்பே பாடல் எழுதியவர். 1969-இல் "தாலாட்டு' என்ற படத்தில்,
 "மலையாக இருப்பதெல்லாம் ஆசைவடிவம் - அது
 மண்ணாகும்போது ஞானிவடிவம்'
 என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆனார். அப்போது இவர் பெயர் திருப்பத்தூர் ராசு.
 அந்த "தாலாட்டு' படத்திலேதான்,
 "மல்லிகைப் பூப்போட்டு - கண்ணனுக்கு
 மங்கல நீராட்டு
 செண்பகப் பூப்போட்டு - பாடு ஒரு
 செந்தமிழ்த் தாலாட்டு'
 - என்ற பிரபலமான பாடல் இடம்பெற்றது. இதை எழுதியவர் மாயவநாதன்.
 "தாலாட்டு' படத்திற்குப் பிறகு திருப்பத்தூரான் என்ற பெயரில் திருப்பத்தூர் ராசு நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், "கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா' என்ற பிரபலமான பாடலை எழுதியவர் இவர்தான். எல்.ஆர். ஈஸ்வரி இந்தப் பாடலைப் பாடியிருப்பார். கோயில் விழாக்களில் இந்தப் பாடல்தான் அதிகம் ஒலிக்கிறது.
 காளிதாசன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு பாடல் எழுதத் தொடங்கியதும் அதிர்ஷ்டம் இவரைத் துரத்திக் கொண்டு வந்து உச்சத்தில் வைத்தது. காளிதாசன் என்ற பெயரில் இவர் எழுதிய முதல் படம் "வைகாசி பொறந்தாச்சு'. இது 1990-இல் வெளிவந்தது. படத்திற்கு இசை தேவா. எல்லாப் பாடல்களும் இதில் பிரபலம்.
 தேவா இசையில் தொடர்ந்து 75 படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார். 800 பாடல்கள் இதுவரை பல்வேறு இசையமைப்பாளர்களிடம் எழுதியிருக்கிறார். 1994-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை இவர் பெற்றிருக்கிறார். இவருடைய திரைப்பாடல்கள் புத்தகமாக வெளி வந்திருக்கின்றது.
 அதில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொருவருக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னது போல் இதுவரை திரைப்பாடல் தொகுப்பு வெளியிட்ட எந்தக் கவிஞனும் சொன்னதில்லை. அவருக்கு எனது வணக்கத்தைத் தெரிவிக்கின்றேன்.
 "தாலிவரம் கேட்டுவந்தேன் தாயம்மா
 கண்திறந்து பாரம்மா -
 வேறுதுணை ஏதம்மா'
 - என்று "புருஷ லட்சணம்' என்ற படத்தில் இவர் எழுதிய பாடலில் 108 அம்மன் பெயர் வரும்படி எழுதியிருப்பார். "ராஜ ராஜேஸ்வரி' என்ற படத்தில் 165 அம்மன் பெயர் வரும்படி எழுதியிருப்பார். பாடலாசிரியர்கள் யாரும் ஒரு பாடலில் இத்தனை அம்மன் பெயர் வரும்படி இதுவரை எழுதியதில்லை. இது ஒரு சாதனைதான். இந்தப் படங்களுக்கெல்லாம் இசை தேவா. அப்போது ஆச்சரியமாக எல்லாரும் இந்தப் பாடலைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். இயக்குநர் கே. பாலச்சந்தர் கூடப் பாராட்டியிருக்கிறார். "பாளையத்தம்மா' என்ற படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில், "மாவிளக்கு, பூவிளக்கு, மாரியம்மன் மணி விளக்கு' என்று 64 விளக்குகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் பாட்டு விளக்குக்கு நாம் காட்டும் பதில் விளக்குப் பாராட்டு விளக்குத்தான்.
 இன்றைய திரைக் கவிஞர்களாகப் பரிமளித்து வருகின்ற கபிலன், சிநேகன்,
 பா. விஜய், தாமரை, யுகபாரதி, விவேகா ஆகிய கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடிக் கவிஞராக விளங்குபவர் பழநிபாரதி. மேற்கண்ட கவிஞர்களுக்கெல்லாம் கதவு திறந்துவிட்டவர் இவர்தான். வைரமுத்துக்குப் பிறகு வந்த புதுமைக் கவிஞர்களில் புகழ்மிக்க கவிஞராக இன்றும் திகழ்பவர் பழநிபாரதி.
 இயக்குநர் விக்கிரமன் இயக்கிய "பெரும்புள்ளி' என்ற படத்தில் இவர் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் அந்தப் படத்தில் இவர் எழுதிய
 முதற்பாடல்,
 "இளமையில் விழிகளில்
 வளர்பிறைக் கனவுகள்
 பெüர்ணமி ஆகிறதே
 மரங்களின் கிளைகளில்
 குயில்களின் குரல்களில்
 சூரியன் மலர்கிறதே'
 என்று தொடங்கும்.
 இந்தப் படம் 1991-இல் வெளிவந்தது. ஆனால் படத்தில் இவர் பாடல் இடம் பெறவில்லை. பாடலாசிரியர்கள் வரிசையில் இவர் பெயர் டைட்டிலில் இடம்பெற்றது பாடலுக்கான ஒலி நாடாக்கள் வெளியிடப் பெற்றன. அடிக்கடி வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகி பிரபலமான பாடலாக விளங்கியது.
 அடுத்து இவர் எழுதிய இரண்டாவது படம் "அன்னை வயல்'. அதில் சிற்பி இசையில் இவர் எழுதிய,
 "அந்த வானத்திலே ஒரு ஆசைப்புறா - அதன்
 நெஞ்சத்திலே புதுக்காதல் விழா'
 - என்ற பாடலும் இவரைப் பிரபலப்
 படுத்தியது.
 முதன்முதல் ஒரு படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் இவர் எழுதிய படம் "கோகுலம்'. இதற்கு இசை சிற்பி.
 "செவ்வந்திப் பூவெடுத்தேன் - அதில்
 உன்முகம் பார்த்திருந்தேன்'
 - என்ற பாடல் அதில் மிகமிகப் பிரபலம். படமும் வெற்றிப்படம்.
 அதற்குப் பின் சிற்பி இசையில் முழுப்பாடல்களையும் இவர் எழுதிய முதற்படம் "உள்ளத்தை அள்ளித்தா.' அதில்,
 "அழகிய லைலா - அவள்
 இவளது ஸ்டைலா
 சந்தன வெயிலா - இவள்
 மன்மதப் புயலா
 அடடா பூவின் மாநாடா
 அழகுக்கு இவள்தான் தாய்நாடா'
 -என்ற பாடல் இளைஞர்களையெல்லாம் இன்னும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பாடல். இந்தப் படத்திற்குப் பிறகுதான் பழநிபாரதிக்கு மிகப்பெரிய வரவேற்பு திரையுலகில் கிடைத்தது. சாப்பிட நேரமில்லாமல் சக்கரமாக அவர் சுற்றத் தொடங்கிய காலம் அந்தப் படத்தின் மூலம்தான் உருவானது. அந்தப் படத்திலிருந்துதான் அவர் பாடலுக்கு நான் ரசிகனாக ஆனேன்.
 "பூவே உனக்காக' என்ற படத்தில்,
 "சொல்லாமலே யார் பார்த்தது
 நெஞ்சோடுதான் பூப்பூத்தது
 மனதில் நின்ற காதலியே
 மனைவியாக வரும்போது
 சோகம் கூட சுகமாகும்
 வாழ்க்கை இன்ப வரமாகும்'
 என்ற பாடலும்,
 "ஆனந்தம் ஆனந்தம் பாடும் - மனம்
 ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
 ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த
 ஞாபகம் பூமழை தூவும்'
 - என்ற பாடலும் இன்னும் நம் மனதில் இன்ப மழையைத் தூவிக் கொண்டிருக்கிறது. பழநிபாரதி பாடலுக்கு இதில் இசையமைத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார்.
 இளையராஜா இசையில் இவர் எழுதிய முதற்படம் "பெரிய குடும்பம்.' அவர் இசையில் இவர் எல்லாப் பாடல்களையும் எழுதிய படம் "காதலுக்கு மரியாதை.' இந்தப் படத்தின் பாடல்களுக்காகத்தான் 1997-இல் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசின் சார்பில் பழநிபாரதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 "பிதாமகன்' படத்தில் இவர் எழுதிய பாடலுக்காக உலக அளவில் "இன்டர்நேஷனல் தமிழ் பிலிம்' விருது மலேசியாவில் இவருக்கு வழங்கப் பெற்றது. வழங்கிய ஆண்டு 2003.
 இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் "புதிய மன்னர்கள்' என்ற படத்தில் இவர் எழுதிய,
 "நீ கட்டும் சேலை மடிப்பிலே - நான்
 கசங்கிப் போனேன்டி - உன்
 எலுமிச்சம் பழ நிற இடுப்பிலே நான்
 கிறங்கிப் போனேன்டி'
 -என்ற பாடலில் கிறங்காத மயங்காத இளைஞர்கள் இளம் பெண்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம். பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் இவர் எழுதியிருக்கிறார்.
 அடுத்து நான் சொல்லப் போவது தமிழ்த் திரைப்பாடல் சம்பந்தப்பட்டது இல்லையென்றாலும் தமிழ் சம்பந்தப்பட்டது என்பதால் சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.
 தமிழ்நாட்டில் சிற்றிதழ்கள் மூலம் பொன்னடியான், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், உரத்த சிந்தனை உதயம்ராம், முகம் மாமணி, இளமாறன், கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், புதுகைத் தென்றல் புதுகை தர்மராஜ், கண்ணியம் குலோத்துங்கன், பொதிகை மின்னல் வசீகரன் ஆகியோர் தமிழ்த் தொண்டு ஆற்றி வருவதைப் போல சிங்கப்பூரில் சிற்றிதழ் எதுவும் நடத்தாமல் தமிழ்த்தொண்டு ஆற்றி வருபவர் நா. ஆண்டியப்பன்.
 இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவராகப் பல்லாண்டுகள் தொடர்ந்து பொறுப்பில் இருக்கிறார். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தை உலகறியச் செய்தவர் இவர். முதல்முதல் சிங்கப்பூரில் உலகாளவிய தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்திய பெருமை இவரைத்தான் சாரும். பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய தமிழ்த்தொண்டை தனியொருவராக நின்று அவர் அங்கு செய்து வருகிறார். சிங்கப்பூர் தமிழர்களால் "இலக்கியவேந்தர்' என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவர் இவர்.
 கம்பராமாயணத்தை "வெற்றித் திருமகன்' என்ற நாடக வடிவில் புத்தகமாக வெளியிட்டவர். அதை முழுவதும் படித்தவன் நான். அற்புதமான உரைநடை. கிருபானந்த வாரியார் அவரை வாழ்த்தி வெண்பா ஒன்று அதில் எழுதியிருந்தார்.
 தமிழக அரசின் சார்பாக அயலகத் தமிழ் அறிஞர் விருது அண்மையில் இவர் பெற்றிருக்கிறார். அதற்காக இவருக்கொரு பாராட்டு விழாவை உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவைத் தலைவர் புலவர் இளஞ்செழியன் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடத்தினார்.
 அதில் நா. ஆண்டியப்பன் எழுதிய "முள்ளும் மலரும்' என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியிடப் பெற்றது. அதை வெளியிட்டு, பழம்பெரும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் பேசினார்.
 அவர் பேசும்போது, "முதன்முதல் சிறுகதைகளின் தொகுப்பு கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வெளிவந்தது. சிறுகதைத் தொகுப்பு அப்போதே வெளிவந்திருக்கிறதா என்று பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் சொல்ல வந்த சிறுகதைகளின் தொகுப்பு சேக்கிழாருடைய பெரிய புராணம்தான். அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றை உரைநடையாக எழுதாமல் செய்யுள் வடிவில் எழுதினார். அதுபோல் சிங்கப்பூரில் வாழும் தமிழறிஞரும், கவிஞரும், எழுத்தாளருமான நா. ஆண்டியப்பன் உரைநடையில் இந்தச் சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சமுதாயத்திற்குத் தேவையான பல்வேறு கருத்துகளை இவர் இதில் வலியுறுத்தியிருப்பதால் இவரை "சிங்கப்பூர் சேக்கிழார்' என்று அடைமொழி கொடுத்து நான் சிறப்பிக்கிறேன்'' என்று சிலம்பொலி பாராட்டியிருக்கிறார். இதைவிட ஆண்டியப்பனுக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?
 சிலம்பொலி அவர்கள் சாதாரணமாக யாரையும் இப்படிப் பாராட்டமாட்டார். அவரே பராட்டியிருக்கிறார் என்றால் ஆண்டியப்பனை நாமும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
 ஒருமுறை கண்ணதாசன் விழாவுக்காக என்னையும் ஏர்வாடி ராதாகிருஷ்ணனையும் சிங்கப்பூருக்கு அழைத்திருந்தார். அப்போது சென்னையும் சென்னை விமான நிலையமும் மழைவெள்ளத்தில் மிதந்ததால் செல்ல இயலவில்லை.
 அந்த வகையில் தமிழக அரசின் அயல்நாட்டுத் தமிழறிஞர் விருதுபெற்ற நா. ஆண்டியப்பனை தமிழ் நாட்டுக் கவிஞர்களின் சார்பில் நான் வாழ்த்துகிறேன்.
 (இன்னும் தவழும்)
 படங்கள் உதவி: ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com