மாதச் சம்பளமா- சுயதொழிலா? எதற்கு உங்கள் ஓட்டு

"படிக்கும் போதே பேப்பர் போட்டேன்... கடின உழைப்பால் இன்று இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்'-  இந்த வார்த்தைகளைக் கூறும் இளம் தொழிலதிபர்களை இப்போது விரல் விட்டு எண்ணி விடலாம். இன்று இந்தியாவில் முன்னணி
மாதச் சம்பளமா- சுயதொழிலா? எதற்கு உங்கள் ஓட்டு

"படிக்கும் போதே பேப்பர் போட்டேன்... கடின உழைப்பால் இன்று இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்'-  இந்த வார்த்தைகளைக் கூறும் இளம் தொழிலதிபர்களை இப்போது விரல் விட்டு எண்ணி விடலாம்.

இன்று இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்கள் பலர் ஆரம்ப காலத்தில் அன்றாட ஜீவிதத்துக்கு கஷ்டப்பட்டவர்கள்தான். தங்களது கடின உழைப்பாலும் முனைப்பாலும் இன்று உச்சத்தை அடைந்துள்ளனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு எல்லாம் இன்றைய இளைஞர்கள் பலர் தயாராக இல்லை என்பது அவர்களது கருத்துகளில் இருந்து தெரிய வருகிறது

குறிப்பாக சொல்லப்போனால் இக்கால இளைஞர்களில் பெரும்பாலோருக்கு ரிஸ்க் எடுக்க துணிவு இல்லை என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கணிசமான மாதச் சம்பளத்துடன் மன நிறைவு பெற்றுவிடுகின்றனர்.

சொந்தத் தொழில் தொடங்கி திறமையைக் காட்டுவதில் இளைஞர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் படித்தவர்கள் சொந்தத் தொழில் என்றால் அதற்கு அர்த்தம் கேட்கின்றனர்.

சொந்தத் தொழில் செய்து கையைச் சுட்டுக் கொள்ள வேண்டாமே என்கின்றனர் ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள்.

இதற்கு ஆறுதலாக பிற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படித்த இளைஞர்களிடம், நாமும் கொஞ்சம் அம்பானி போல முயலலாமே என்ற எண்ணம் சற்று மேலோங்கி இருப்பது தெரிகிறது.

பொருளாதார நெருக்கடி, நிதிச் சிக்கல் ஆகியன இருந்தாலும் நம் திறமையால் முன்னேறலாம் என வழிகாட்டுகின்றனர் சொந்தத் தொழில் தொடங்கி வெற்றி நடைபோட்டு வருபவர்கள். இரு தரப்பு கருத்துகளின் தொகுப்பு இதோ:

சொந்த தொழிலை நம்ப முடியாது  

வெளிநாட்டு வங்கிச் சேவைகள் குறித்த பி.பி.ஓ. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை எனக்கு வேலை நேரம். செய்தித்தாள் ஏஜென்சி எடுத்துள்ளேன். இதனால், காலை 4 மணி முதல் 8 மணி வரை அந்தப் பணியைச் செய்கிறேன். வாழ்க்கையை ஓட்டுவதற்கு சொந்தத் தொழிலை முழுமையாக நம்பி இருக்க முடியாது. சொந்தத் தொழில் செய்ய முதலீடும், அதிகளவு திறமையும் தேவை. இன்றைய சூழலில் அதை ஏற்பாடு செய்வது கடினம். பி.பி.ஓ. நிறுவனத்தில் வேலை என்றால் நமக்குள்ள அனுபவத்தை வைத்துக் கொண்டு வேறு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தைப் பெறலாம். சொந்தத் தொழில் என்றால் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இதை தாங்கிக் கொள்ளவது அவ்வளவு எளிதல்ல.

ராஜேஷ்

(பி.பி.ஓ. நிறுவன ஊழியர், வயது 27)

சுயதொழிலில்தான் முன்னேற முடியும்

 சென்னையில் இரும்பு தொடர்பாக சொந்தமாக ஆலையை நடத்தி வருகிறேன். பி.எஸ்ஸி இயற்பியல் முடித்து இப்போது எம்.பி.ஏ. படித்து வருகிறேன்.

சொந்தமாக நமக்கு விருப்பமான தொழிலைச் செய்தால் நமது திறமையைக் காட்டலாம். ஆனால், வேறொருவரிடம் சம்பளத்துக்கு வேலை செய்தால் அதை நிரூபிக்க முடியாது. எந்த முடிவை வேண்டுமானாலும் நாமாக எடுத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம். மேலும், 10 பேருக்கு வேலை கொடுப்பதால் சமுதாயத்தில் நற்பெயரைப் பெறலாம். தொழில் தொடங்க முதலீடு கிடைக்குமா என அச்சம் கொள்ளத் தேவையில்லை. நன்கு படித்திருந்து சிறிது நிலம் இருந்தால் போதும். அதை வைத்துக் கொண்டு வங்கிக் கடன் மூலம் தொழிலைத் தொடங்கலாம். இரவு, பகலாக பணிபுரிந்து கை நிறைய சம்பாதிக்கலாம்.

பாஸ்கர் (சுயதொழில்  வயது 29)

முதலீட்டுக்காக காத்திருக்கிறேன்

தற்போது  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் சொந்தத் தொழில் தொடங்கவே ஆசையாய் உள்ளேன். தனியார் ஐ.டி. நிறுவனத்தில் எனக்குப் பணி. ஆனால் நடனத்தில் அதீத ஆர்வம். இந்த ஆர்வத்தை முதலீடாகக் கொண்டு சொந்தமாக நடனப் பள்ளி தொடங்க தயார்.

ஆனால் போதுமான முதலீடுக்கு வழியில்லை. போதுமான முதலீடு கிடைத்தவுடன் நடனப் பள்ளி தொடங்குவது உறுதி.

கார்த்திக்-

ஐ.டி. நிறுவன ஊழியர்

படிக்கும் போது செலவுக்காக சிறுசிறு தொழில்கள் செய்வது வேறு; ஆனால், பிழைப்புக்காக சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டுமானால் தேவை இந்த மூன்றும் அவை- தன்னம்பிக்கை, உழைப்பு, திறமை.

கம்ப்யூட்டர் முன்அமரும், படித்த இளைய தலைமுறையினருக்கு தன்னம்பிக்கை சற்றுக் குறைவோ என்று எண்ணத் தோன்றுகிறது  அவர்களையும் சொந்தத் தொழில் என்கிற ஆர்வத்தைத் தூண்டினால் வேலைவாய்ப்பு மட்டுமல்ல; நாட்டின் பொருளாதார வளமும் பெருகும்.  

உதவிக்கு...

சுய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கும், ஏற்கெனவே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் குறு, சிறு மற்றும் நடத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம் எம்.எஸ்.எம்.இ. அளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com