இப்படியும் ஒரு காவல்துறை ஆய்வாளர்!
காவல்துறை என்றாலே விரைப்பு, முறைப்பு என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். மக்கள் வாழும் இடம் எப்போதும் தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் சமூக சேவையாற்றி வருகிறார் ஒரு காவல்துறை ஆய்வாளர்.


காவல்துறை என்றாலே விரைப்பு, முறைப்பு என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். மக்கள் வாழும் இடம் எப்போதும் தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் சமூக சேவையாற்றி வருகிறார் ஒரு காவல்துறை ஆய்வாளர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சாம்சன் தான் அவர்.
அவர் இங்கு முதலில் செய்தது மரங்களில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பரப் பலகைகளை அகற்றியதுதான். இங்கு பெரும்பாலான மரங்களில் விளம்பரப் பலகைகள் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. விளம்பரப் பலகைகளையும், ஆணிகளையும் அகற்றினார். இவரின் இந்தச் செயலைப் பார்த்த பொதுநல அமைப்புக்கள், இவருடன் கைகோத்து செயல்பட்டதால் பெரும்பாலான மரங்களில் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு விட்டன.
இரண்டாவதாக, சுவர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஆய்வாளரும், காவல் துறையினரும் ஈடுபட்டனர். இதனால் கடையநல்லூர் பகுதியில் சுவர்கள் தூய்மையாக மாறியுள்ளன.
கடையநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகச் சுவர் முழுவதும் சுவரொட்டியால் நிரம்பி வழிந்தது. இவரின் முயற்சியால் சுவரொட்டிகள் நீக்கப்பட்டன. இயற்கை எழில் கொஞ்சும் ஓவியங்கள் சுவரில் வரையப்பட்டுள்ளன. இதில் சில ஓவியங்களை சாம்சனே வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சுற்றிலும் நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்தன. மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்கு இடைஞ்சலாக இருந்தது. காவல்துறை ஆய்வாளர் அவற்றை அகற்ற ஏற்பாடு செய்ததுடன், அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டதால் இன்று அந்தப் பகுதியே குளுமையாக மாறிவிட்டது.
பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்துகிறார் சாம்சன். யாராவது பிளாஸ்டிக் பையை எடுத்துச் செல்வதைப் பார்த்தால், அவர்களிடம் பிளாஸ்டிக் பையால் ஏற்படும் தீமைகளை விளக்குகிறார். அதுமட்டுமல்ல, தன் கையில் வைத்துள்ள துணிப் பையையும் கொடுக்கிறார்.
பயன்படுத்திய பொருள்களைக் கொண்டு பறவைகளுக்கான கூடுகளைச் செய்து ஆங்காங்கே மரங்களில் மாட்டி விடுகிறார். யாராவது அதுபோல கூடுகளை செய்வது பற்றிக் கேட்டால், விளக்கமளிக்கிறார்.
பயன்படுத்திய சாக்கு, சிலிண்டர் டியூப் போன்றவற்றைக் கொண்டு குப்பைத் தொட்டிகள் செய்து பள்ளிகளுக்குத் தருகிறார். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. மேலும் நகரின் பல பகுதிகளிலும் இது போன்ற குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளார்.
மரம் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் கொண்டு நகரின் முக்கிய இடங்களில் மரங்களை நட்டு வருகிறார். இவரைத் தேடி வருபவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அதை வளர்க்கவும் அறிவுறுத்துகிறார்.
நகரின் பெரும்பாலான சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி அசிங்கப்படுத்துவதை நிறுத்தும் வகையில் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு எனறு காவல்துறை சார்பில் பலகையையும் அவர் அமைத்துள்ளார். இதில் மழை நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பலகையில் தேவையானவர்கள் சுவரொட்டி ஒட்டிக் கொள்ளலாம்.
இதையும் தாண்டி விளம்பரம் செய்ய நினைப்பவர்களுக்கு, ""சிட்டுக் குருவிக்கு கூடு செய்து அதில் விளம்பரம் செய்து மரத்தில் மாட்டுங்கள். அதனால் சிட்டுக் குருவிகளும் பெருகும், வியாபாரமும் பெருகும்'' என அறிவுறுத்துகிறார்.
இப்படி காவல்துறை ஆய்வாளர் சாம்சனின் முயற்சியால் கடையநல்லூர் பகுதி தூய்மையான பகுதியாக மாறி வருகிறது.
இது போன்ற விழிப்புணர்வு எண்ணங்கள் இளைஞர்கள் மனதில் ஏற்பட வேண்டும் என்பதற்காக இளைஞர்களைத் திரட்டி இது போன்ற செயல்களில் ஈடுபட ஊக்கம் அளித்து வருகிறார். மாலை நேரங்களில் இங்குள்ள அட்டைக் குளத்தில் பாராசூட் பயிற்சியையும் அவர் கற்றுத் தருகிறார். இதனால் இப் பகுதி இளைஞர்கள் காவல்துறை ஆய்வாளருடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
""இளைஞர்களுக்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுத்தால் தேவையற்ற பிரச்னைகளில் அவர்கள் சிக்க மாட்டார்கள்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...