வாங்க இங்கிலீஷ் பேசலாம் 124
புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட பாபா பவன் எனும் உணவகத்துக்குச் செல்கிறார்கள்


புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட பாபா பவன் எனும் உணவகத்துக்குச் செல்கிறார்கள். அங்குள்ள சர்வர் அங்கு தூய்மையான ஐட்டங்கள் மட்டுமே சாப்பிடக் கிடைக்கும் எனச் சொல்ல ஜூலி much ado about nothing என்கிறது.
சர்வர்: Much Ado About Nothing ஷேக்ஸ்பியரோட ஒரு நாடகம் அல்லவா?
ஜூலி: ஆமாம். ஷேக்ஸ்பியரிடம் இருந்து தான் அந்த phrase புழக்கத்துக்கு வந்தது. ஷேக்ஸ்பியர் 1700க்கு மேலான சொற்களை புதிதாய் கண்டுபிடித்து பயன்படுத்தினார் தெரியுமா? நாம் இன்று சாதாரணமாய் பயன்படுத்தும் accused (குற்றம் சுமத்தப்பட்டவர்), addiction, advertising, bedroom, bandit (கொள்ளைக்காரன்), compromise, cold-blooded (குரூரமான இரக்கமற்ற), bet (பந்தயம்), discontent (அமைதியின்மை), critic, dawn (அதிகாலை), dishearten (நம்பிக்கை இழப்பது), drugged (மயக்கமருந்து அளிக்கப்பட்ட நிலை), elbow (முழங்கை), excitement (மனக்கிளர்ச்சி), fixture (விளையாட்டு நிரல்), frugal (கஞ்சத்தனமான), generous (தாராள மனம் கொண்ட), gossip (கிசுகிசு), laughable (நகைப்புக்குரிய), lonely (தனியாக), luggage, majestic (கம்பீரமான), madcap (விபரீதமான, கோணங்கியான), negotiate (பேரம் பேசு), obscene (ஆபாசமான), rant (புலம்புதல்), remorseless (இரக்கமற்ற), scuffle (கைகலப்பு), secure (பாதுகாப்பான), skim milk (வெண்ணெய் நீக்கப்பட்ட பால்), submerge (மூழ்குதல்), summit (மலைமுகடு), swagger (செருக்கான நடை), torture, undress (ஆடையைக் கழற்றுவது), unreal (விசித்திரமான), worthless (மதிப்பற்ற), grovel (காக்காய் பிடிப்பது, காலை நக்குவது). இப்படி ஆயிரமாயிரம் சொற்கள்.
கணேஷ்: ஒரு தனிமனிதன் எப்படி இவ்வளவு சொற்களை அறிமுகப்படுத்த முடியும்?
ஜூலி: அவராக காலையில் எழுந்து உட்கார்ந்து யோசிச்சு கண்டுபிடிச்சார்னு நான் சொல்லல. ஷேக்ஸ்பியருக்கு சொற்களில் ஆர்வம் மிகுதி. மக்களின் அன்றாட பேச்சுவழக்கில் இருந்து தான் அவர் ஏராளமான சொற்களைத் திரட்டினார். அவர் உணவகங்கள், சாராயக் கடைகளுக்குச் சென்று அங்கு எளிய மக்களின் பேச்சுவழக்கை கவனிப்பார். ஒரு பொறுக்கி, ஒரு கடலோடி, ஒரு பாதிரி, ஒரு போர் வீரன் என்ன மாதிரி மொழியில் உரையாடுவான் என அவதானித்து அச்சொற்களை தன் நாடகங்களில் அறிமுகப்படுத்தினார். அது போக வினைச்சொற்களை பெயர்ச்சொற்களாக்குவது, அவற்றை அடைச்சொற்களாக்குவது, prefix, suffix சேர்த்து புதுச்சொற்களை உருவாக்குவது என புதுப்புது சொற்களாய் பிரசவித்தார்.
கணேஷ்: அடடா... இந்த much ado...
ஜூலி: Much ado about nothing. அப்படி என்றால் ஒன்றும் இல்லாத விசயத்தைக் கொண்டு ஓவராய் அலட்டுவது. Ado என்றால் வேலை. Fussing over nothing in particular என்று பொருள். Fuss என்றால் அலட்டி ஆர்ப்பாட்டம் பண்ணுவது.
சர்வர்: சார்... ஆமை வடை கொண்டு வரட்டுமா?
புரொபஸர்: சாப்பிடற மூடே போச்சு. காப்பி மட்டும் கொண்டு வா. சர்க்கரை கம்மியா
சர்வர்: சர்க்கரை கம்மியா?
புரொபஸர்: யோவ்... போய்யா கடுப்பேத்தாம.
(சர்வர் வணங்கியபடி போகிறார்)
கணேஷ்: எனக்கு ஒரு விசயம் புரியல. ஷேக்ஸ்பியர் காலத்துக்கு முன்னாடி luggage எனும் சொல் இருந்திருக்காதா? அப்படி என்றால் பயணப் பையை என்ன சொல்லி இருப்பார்கள்?
ஜூலி: 1590க்கு பிறகு தான் இச்சொல் எழுத்தில் பதியப்பட்டிருக்கிறது. அதுவும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில். Lug என்றால் இழுத்துக் கொண்டு போவது எனப் பொருள். அந்த காலத்தில் பையெல்லாம் இருந்திருக்காது. பொருட்களை பெரிய மூட்டையாய் கட்டி இழுத்து சென்றிருப்பார்கள். இப்படி இழுத்துச் செல்லப்படும் பொருள் எனும் பொருளில் ஷேக்ஸ்பியர் lug உடன் age சேர்த்து luggage என புதுச்சொல்லை உருவாக்கினார். இதற்கு இணையான இன்னொரு சொல் baggage. பதினாறாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர் பென் ஜான்ஸன் luggageக்கு கொடுக்கும் விளக்கும் அட்டகாசமானது, வேடிக்கையானது: Anything of more weight than value.
கணேஷ்: அப்படீன்னா?
ஜூலி: எந்த பொருளுக்கு பாரம் அதிகமாகவும் மதிப்பு குறைவாகவும் இருக்குமோ அதுவே..
புரொபஸர்: Wife
ஜூலி: No... no... பென் ஜான்ஸனின் கருத்துப்படி அதுவே luggage. இன்னொரு விசயம்: Negotiate என்ற சொல்லை ஷேக்ஸ்பியர் நரி வேட்டைக்காரர்களிடம் இருந்து எடுத்திருக்கவே வாய்ப்பதிகம்.
கணேஷ்: அதெப்படி?
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...