செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி ஏரி!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியகூறுகளை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி ஏரி!
Updated on
1 min read


செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியகூறுகளை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் இப்போது செவ்வாயின் தென்துருவத்தில் தரைக்கு அடியில் புதையுண்ட நிலையில் ஓர் ஏரி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ரோமாடிரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் செவ்வாயின் தென் துருவத்தில் பனிப் படிவத்தின் அடியில் ஒரு பெரிய ஏரி இருப்பதற்கான வாய்ப்பு குறித்து தெரிவித்தனர். அதைத்தான் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் "நேச்சர் அஸ்ட்ரானமி' என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆய்வு விண்கலமான மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஏற்கெனவே ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலம் 2012-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரை சேகரித்த நூற்றுக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்து, செவ்வாய் கிரகத்தில் தரைப்பரப்புக்கு அடியில் ஓர் ஏரி புதைந்திருப்பதையும், அதைச் சுற்றிலும் 3 சிறிய குளங்கள் போன்ற நீர்ப்பரப்பு இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் உள்ள ரேடியோ கருவியைப் பயன்படுத்தி ரேடியோ அலைகளை தரைப்பரப்புக்குள் ஊடுருவச் செய்தனர். குறிப்பிட்ட ஓரிடத்தில் பெரும் பிரதிபலிப்பு காணப்பட்டது. அதற்கு அடியில்தான் இந்தத் திரவ நிலையிலான இந்த ஏரி இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த ஏரி 30 கி.மீ. குறுக்களவு கொண்டதாக உள்ளது. குறைந்த வெப்பநிலையில் இந்த ஏரி திரவநிலையில் இருப்பது ஆச்சரியமானது. 2019-ஆம் ஆண்டு இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில், எரிமலை செயல்பாடானது தண்ணீரை உறைந்து போகாமல் இருக்கச் செய்திருக்கலாம் எனத் தெரிவித்தது. ஆனால், நம்ப முடியாத அளவிலான உப்புத்தன்மையே அத்திரவம் உறைந்து போகாமல் இருக்க காரணம் என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் இப்போது வந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பதை அறியும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். அந்த முயற்சியில் அண்மையில் அனுப்பப்பட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் பெர்செவரன்ஸ் தனது ஆய்வுப் பணியைத் தொடரவுள்ளது. இத்தகைய சூழலில் செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஓர் ஊக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைந்த ஏரியின் நீரை அத்தனை எளிதில் அணுக முடியாது. ஏனெனில் இந்த ஏரி பனிப்படிவத்தில் சுமார் ஒன்றரை கி.மீ. ஆழத்தில் காணப்படுகிறது.

""செவ்வாய் கிரகத்தில் ஏராளமான நீர் இருந்திருக்கலாம். தண்ணீர் இருந்திருந்தால் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியமும் இருந்திருக்கும்'' என்கிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் ஒருவரான ரோம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எலெனா பெட்டினெல்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com