"பிங்கி பிங்கி பாங்கி' முறையில் நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்துவிட்டு, வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருப்பது எவ்வளவு அறியாமை என்பது மதுரை மாநகராட்சி வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சியில் ஈடுபடுவோரைப் பார்த்தால் தெரியும்.
முதல் முறையாக இந்த வளாகத்திற்கு செல்வோருக்கு இவர்களைக் காணும் போது அரசு அலுவலக வளாகங்களில் மனு எழுதித் தரும் தொழில் செய்பவர்களாகத்தான் தோற்றமளிப்பார்கள். அதன் பின்பே இவர்கள் போட்டித் தேர்வுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்பவர்கள் என்பது தெரியவரும்.
மதுரை மாநகராட்சியில் மாநகராட்சிக்கான அன்றாடப் பணிகள் நடப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பயிற்சி மேற்கொள்வதற்கான புகலிடமாக விளங்குகிறது. சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில் சகிதம் மாநகராட்சி வளாக மரத்தின் நிழலில் அமர்ந்து டிஎன்பிஎஸ்சி, பிஎஸ்ஆர்பி, ஆர்ஆர்பி, யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுக்களுக்காகப் படிப்பதும், எழுதுவதுமாக நாள் முழுவதையும் செலவிடுவதைக் காணும்போது தெரிகிறது, முயற்சியும் பயிற்சியும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது.
இவர்களுக்கென தனியாக பயிற்றுநர்கள் எவரும் இல்லாத நிலையில் தமக்குத்தாமே பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர் கூறியது:
""காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை இங்கு வந்து, கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பயிற்சியை மேற்கொள்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் இங்கு பயிற்சி மேற்கொள்பவர்களின் சங்கிலி தொடர்கிறது.
ஏற்கெனவே நடைபெற்ற போட்டி தேர்வு வினாத்தாள்கள், 6 முதல் 10- ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடப் புத்தங்கள், 11 மற்றும் 12- ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட புத்தகங்களிலிருந்து, போட்டித் தேர்வுக்கு தேவையான வினா-விடைகளை தேர்ந்தெடுத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து, பயிற்சி மேற்கொள்வோம். முக்கியமாக, இந்த வளாகத்தில் வந்து பயிற்சி மேற்கொள்பவர்கள், போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்கு செல்வது நிச்சயம் என்பது சென்டிமென்டாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஏராளமானோர் தற்போது அரசுப் பணியில் உள்ளனர்'' என்றார்.
அருகிலேயே உணவகம் இல்லை. உணவுக்காக வெளியே செல்வதால் காலவிரயமாகிறது என்பது இவர்களின் குறையாக உள்ளது.