அன்று உள்ளாட்சியில்... இன்று பேரவையில்...!

அரசியல் கட்சிகள் வாய்ப்பு பெற்றும், சுயேச்சையாகவும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பெண்கள் 320 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 21 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவில் 31 பெண்கள் போட்டியிட்டதில் 16 பேரும்,
அன்று உள்ளாட்சியில்... இன்று பேரவையில்...!

அரசியல் கட்சிகள் வாய்ப்பு பெற்றும், சுயேச்சையாகவும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பெண்கள் 320 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 21 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவில் 31 பெண்கள் போட்டியிட்டதில் 16 பேரும்,

திமுகவில் 19 பெண்கள் போட்டியிட்டதில் 4 பேரும், காங்கிரஸில் ஒருவரும் அடக்கம்.

 நீலோபர் (வாணியம்பாடி), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்) ஆகிய 2 பேரும் நகர்மன்றத் தலைவராக இருந்து, முதல் முறையாக சட்டப் பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைத்து போட்டியிட்டு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

 கீதா ஜீவன், வரலட்சுமி மதுசூதனன், சீதாபதி சொக்கலிங்கம் ஆகிய 3 திமுக எம்எல்ஏக்களும் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களாக இருந்தவர்கள்தான். இதேபோன்று, ஜெயந்தி பத்மநாபன், சந்திரபிரபா, உமா மகேஸ்வரி, சித்ரா, பொன்,சரஸ்வதி உள்ளிட்ட பலரும் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தவர்கள்தான்.

 உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் பெண்களை உறவினர்கள்தான் மறைமுகமாகச் செயல்படவைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து எம்.எல்.ஏக்களாகியிருக்கின்றனர்.

 மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 33 சதவீத இடஒதுக்கீடு என்று பார்த்தால், 78 பெண் எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது முதலமைச்சரையும் சேர்த்து 21 பேர் இருப்பது என்று பார்த்தால் மிக, மிக குறைவே. இருப்பினும், இந்தத் தேர்தலில் முன்னர் அமைச்சர்களாக இருந்த எஸ்.கோகுலஇந்திரா, பா.வளர்மதி, சமூக நல வாரியத் தலைவர் சி.ஆர்.சரஸ்வதி.. என பல பெண் பிரபலங்கள் தேர்தலில் தோற்றுவிட்டதும் பெண் எம்எல்ஏக்கள் பேரவையில் குறைந்ததற்கு காரணமாகவும் இருக்கிறது. இருந்தாலும், அடுத்த தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடுநிறைவேறி பேரவையில் பெண்களின் குரல் ஒலிக்கட்டும்...!

 இங்கே வெற்றி பெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றி அறிவோம்:

நீலோபர் (54) : பி.இ.எம்.எஸ்., எல்.எல்.பி. பட்டங்களைப் பெற்றவர், 2001-06, 2011-16ஆம் ஆண்டுகளில் நகர்மன்றத் தலைவர், 2006-2011-ஆம் ஆண்டுகளில் நகர்மன்ற உறுப்பினர். முதல் முறையாக பேரவைத் தேர்தலில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு, அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். தனியார் பள்ளியை நிர்வகித்துவந்துள்ளார். ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். தமிழகத்தின் முதல் முஸ்லிம் பெண் அமைச்சர்.

டாக்டர் வி.சரோஜா (68): அரசு மருத்துவராகவும், சௌதி அரேபியாவில் அரசு மகப்பேறு சிறப்பு மருத்துவராகவும் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். சங்ககிரி தொகுதியில் 1991-96ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏவாகவும், 1998-2004 வரை இரு முறை ராசிபுரம் தொகுதிகளில் மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 2004-06ஆம் ஆண்டுகளில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலவாரியத் தலைவர், 2012-13ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு தகவல் ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். இப்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவரது கணவர் லோகரஞ்சன்.

வி.எம்.ராஜலட்சுமி (30): பட்டதாரி. அதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் பொறுப்பில் இருந்தவர். திருநெல்வேவி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 2014-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக சட்டப் பேரவைக்கு போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார். அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வயது அமைச்சர்.  இவரது கணவர் முருகன்.ஹரிணி (9), பிரதீப் (7) என்ற இரு குழந்தைகள்.

எஸ்.வளர்மதி (51): வழக்குரைஞர். ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 2015-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவானவர். மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவில் அமைப்புச் செயலராகவும் இருக்கும் இவர், அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். இவரது கணவர் சீதாராமன், திருச்சி பெல் தொழிற்சாலையில் பணியாற்றிவருகிறார். ஸ்ரீராம், அரிராமன் என்ற 2 மகன்கள்.

கீதா ஜீவன் (46): பட்டதாரியான இவர், தனியார் கல்வி நிறுவனத்தை நிர்வகித்துவந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமியின் மகள். 1996-2001-ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்தார். 2001-06ஆம் ஆண்டுகளில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர். 2006-ஆம் ஆண்டில் தூத்துக்குடி எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சராகவும் இருந்தார். இப்போது மீண்டும் எம்எல்ஏவாகியுள்ளார்.

பூங்கோதை (52): மருத்துவரான இவர், லண்டனில் பணியாற்றியவர். திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் எம்எல்ஏவாக 2006-இல் தேர்வு செய்யப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர். இப்போது மீண்டும் எம்.எல்.ஏ வாகியுள்ளார். இவரது கணவர் மருத்துவர் பாலாஜி. சமந்தா, காவ்யா என்ற 2 மகள்கள்.

வரலட்சுமி மதுசூதனன் (42): செவிலியர் படிப்பில் டிப்ளமோ படித்தவர். இவரது கணவர் மதுசூதனன் தொழிலதிபர். ஆப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக 2006, 2011-ஆம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தார். திமுகவை சேர்ந்தவர். இப்போது செங்கல்பட்டு எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெயந்தி பத்மநாபன் (35): வழக்குரைஞர்.அதிமுகவில் தீவிர கட்சிப் பணி. 2011-இல் வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது குடியாத்தம் (தனி) தொகுதி எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் பத்மநாபனும் வழக்குரைஞர். 2 மகன்கள்.

சத்யா பன்னீர்செல்வம் (41): 8ஆம் வகுப்பு படித்தவர், அதிமுகவில் வார்டு பிரதிநிதியாகப் பதவி வகித்தவர். இப்போது பண்ருட்டி எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவராக உள்ளார். 4 மகன்கள் உள்ளனர்.

எம்.சந்திரபிரபா (34):  பட்டதாரி. அதிமுக இளைஞர்-இளம்பெண் பாசறையில் பொறுப்பு வகித்துவரும் இவர், இரு முறை அயன்நாச்சியார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் டி.முத்தையா, விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.

(அடுத்த இதழில்....)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com