டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

அம்மா! - பிரபல நாட்டுப்புற இசைக்கலைஞர் அனிதா குப்புசாமி தன் தாயார் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்

என் அம்மா ஊர்மிளா தேவி. எட்டாவது கூட படிக்காதவர். ஆனால் அவருக்கு இருக்கும் அறிவு கூர்மையைக் கண்டு பலமுறை நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 10:27 am IST

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்:
 என் அம்மா ஊர்மிளா தேவி. எட்டாவது கூட படிக்காதவர். ஆனால் அவருக்கு இருக்கும் அறிவு கூர்மையைக் கண்டு பலமுறை நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். என் தாத்தா - பாட்டிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்துதான் என்அம்மா பிறந்தாராம். அதனால் அம்மாவை தரையில் கால்படாம, பாலும், பழமும் ஊட்டி ரொம்ப செல்லமாக வளர்த்தாராம் என் தாத்தா.
 அதுபோன்று அம்மா சின்ன வயதில் ரொம்ப அழகாக இருப்பாராம். அதனால் அம்மாவின் திருமணத்தின்போது, என் தாத்தா என் அழகான பொண்ணுக்கு ஏற்ற மாதிரி அழகான மாப்பிள்ளைக்குத்தான் கல்யாணம் செய்து கொடுப்பேன்னு சொல்லி ஊரெல்லாம் தேடித்தேடி அழகான மாப்பிள்ளையைக் கொண்டு வந்தாராம். அதனால் என் அப்பாவும் ஹீரோ போன்று மிக அழகாக இருப்பார். அப்பா பெயர் கைலாஷ் சந்த் வர்க். எங்களோட அகர்வால் குடும்பத்தில் பெண் பிள்ளைகளை 14- 15 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அம்மாவுக்கும் 14 வயதில் திருமணம் நடந்ததாம். 16 வயதில் முதல் குழந்தை. அடுதடுத்து ஒன்றரை வருட இடைவெளியில் 8 குழந்தைகள். ஏழு பெண் குழந்தைகள். ஒரு மகன். நான் இரண்டாவது மகள்.
 எங்கள் குடும்பத்தில், ஆண்கள், யாரும் வெளியில் யாரிடமும் வேலைக்கு போக மாட்டார்கள். பெரும்பாலும் சொந்த பிஸினஸ்தான். அதுபோன்று மிக மிக கண்டிப்பான, கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம். பெண்பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியே எங்கும் போகக் கூடாது. வெளியாள் யாரும் வீட்டுக்கு வந்து விட்டால் உடனே எழுந்து உள்ளே சென்று விட வேண்டும். சொந்தமாக இருந்தாலும் ஆண்களிடம் பேசக் கூடாது. கண்ணாடி முன்னாள் கொஞ்சம் நேரம் நின்று பார்த்தால் கூட திட்டு விழும். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து, நான் கல்லூரி வரை சென்று படித்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க அம்மாதான் காரணம்.
 எட்டு குழந்தைகளில் அம்மாவுக்கு நான்தான் ரொம்ப செல்லம். ரொம்ப பாசமா இருப்பாங்க. என்னை மட்டும் வேலையே செய்ய விட மாட்டார். என் உடன் பிறந்தவர்கள் எல்லாம் அம்மாவிடம் சண்டை போடுவார்கள். "நாங்களும் உன் குழந்தைகள்தானே, அதென்ன அவளுக்கு மட்டும் ரொம்ப செல்லம்' என்பார்கள். அதற்கு, " அம்மா சிரித்துக் கொண்டே அவளோட வேலையை நான் செய்றேன். அவளை செய்ய சொல்லாதீங்கன்னு' சொல்வாங்க. இதற்கு காரணம் நான் மற்ற எல்லாரையும்விட மிக ஒல்லியாக இருப்பேன். அதனால் என் மீது அம்மா கூடுதல் அக்கறை கொண்டிருந்தார். இன்னொரு காரணம், அம்மாவுக்கும், எனக்கும் எல்லா விஷயங்களிலும் ஒத்தகருத்து இருக்கும். இதுவும் அம்மாவுக்கு என் மேல் கூடுதல் பாசம் இருக்க ஒரு காரணம். அம்மாவுக்கு நான் நிச்சயம் பெரிய ஆளாக வருவேன்னு நம்பிக்கை அதிகம்.
 என்னோட சின்ன வயசுல அம்மா என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க . "எல்லாரும் இந்த பூமியில் பிறக்கிறாங்க, வாழ்றாங்க. அப்படியில்லாமல் பேரும், புகழோடும் வாழணும். எதையாவது சாதிக்கணும்' னு சொல்லிக் கொண்டே இருப்பாங்க. அது ஒரு மந்திரம் போன்று என் மனசிலே பதிந்துபோச்சு.
 எங்க அப்பா எனக்கும் 14 வயசுலேயே திருமணத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டார். அப்போ நான் 8-ஆவதுதான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனா, அம்மா சொன்னது மனசுல பதிஞ்சு போனதால அப்பாகிட்ட நான் நிறைய படிக்கணும்னு அழுது அடம்பிடித்தேன். அப்போது அம்மாதான் அப்பாவிடம், "அவ படிக்கணும்னு ஆசைப்படுறா படிக்கட்டுமே'ன்னு அனுமதி வாங்கிக் கொடுத்தாங்க.
 அதன்பிறகு எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு என் தங்கச்சிய கட்டிக் கொடுத்துட்டாங்க. பள்ளியில் படிக்கும்போது பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டின்னு எல்லா போட்டியிலும் கலந்துக்க சொல்வாங்க . அப்போதான் அனுபவங்கள் நிறைய கிடைக்கும்னு சொல்வாங்க. வீட்டில் ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொல்லிட்டு என்னை எல்லா போட்டிக்கும் கூட்டிட்டு போவாங்க. அம்மா ரொம்ப போல்டான லேடி. ரொம்ப தெளிவான சிந்தனை இருக்கும்.
 எனக்கு சின்ன வயதில் டான்ஸ் மீதும், பாட்டின் ஆர்வம் அதிகம். அதனால் அம்மாவிடம் நான் டான்ஸ், கற்றுக் கொள்ள வேண்டும், பாட்டு கற்றுக் கொள்ள வேண்டும், என்னைப் பாட்டு கிளாஸில் சேர்த்துவிடும்படி கெஞ்சினேன். எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, வீட்டிலிருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி என் தாத்தாவுக்குத் தெரியாமல் டான்ஸ்க்கும், பாட்டுக்கும் வீட்டில் வந்து சொல்லிக் கொடுக்க டீச்சரை ஏற்பாடு செய்திருந்தார். டீச்சர் வந்து சொல்லிக் கொடுத்துவிட்டு போகும் வரை வாசலில் காவல் இருப்பார். தாத்தா தூரத்தில் வருவது தெரிந்துவிட்டால் உடனே பாட்டோ, டான்úஸô எதுவாக இருந்தாலும் பாதியிலேயே பயிற்சியை நிறுத்திவிட்டு டீச்சர் கிளம்பிவிடுவார். இதுபோன்று ஆர்மோனியம் கூட கற்றுக் கொண்டேன். இதனால் கல்லூரியில் என்னை எல்லாரும் ஆல் ரவுண்டர் அனிதா என்றுதான் அழைப்பார்கள்.
 என் சகோதரிகள் எல்லாரும் சொல்லுவார்கள், "என்ன கற்றுக் கொடுத்தாலும் என்ன ஆகபோகுது. எப்படியும் மேடை ஏற போறதில்ல. அதனால ஒழுங்கா பாட்டு, டான்ஸ் இதையெல்லாம் விட்டுவிட்டு சமையல் செய்ய கத்துக்கோ. அதுதான் பயன்படும்'' என்பார்கள். இதையெல்லாம் தாண்டி நான் இசையைக் கற்றுக் கொண்டேன் என்றால் அது அம்மாவினால்தான். அதனால அம்மா மீது எனக்கு அளவுக்கு அதிகமாக பாசம் இருந்தது. இதனால அப்போதெல்லாம், திருமணம் செஞ்சுக்காம அம்மா கூடவே இருந்திடனும்னு நினைப்பேன்.

Story image

அம்மாவும், நானும் மட்டும்தான் வீட்டில் தமிழ் பேசுவோம். மற்றவர்களுக்கு ஒண்ணும் புரியாது. அதனால் அம்மாவுடன் சேர்ந்து பயங்கரமாக அரட்டை அடிப்பேன். அதுபோன்று வார இதழ்களில் வரும் சமையல் குறிப்புகளைப் எல்லாம் படித்துவிட்டு நானும் அதுபோன்று சமைக்கிறேன்னு சொல்லி இல்லாத கலாட்டா எல்லாம் பண்ணுவேன். ஆனால் சமையல் எனக்கு நல்லாவே வராது. எங்க பாட்டி பார்த்தால் திட்டுவாங்களோன்னு பயந்து, நானும் அம்மாவும் சேர்ந்து எல்லாவற்றையும் காக்காவிற்கு போட்டுவிடுவோம். பாட்டி வெளியே போய்விட்டு வருவதற்குள் சமைத்த அடையாளமே தெரியாதபடி எல்லாவற்ரையும் துடைத்து சுத்தம் செய்துவிடுவோம். அந்த நினைவுகள் எல்லாம் மனதில் இன்னும் இனிக்கிறது.
 அம்மாவை பார்த்தால் 8 பிள்ளைகள் பெற்றவங்க மாதிரியே தெரியே மாட்டாங்க. என் அக்காவுக்கு, தங்கைக்கு எல்லாம் திருமணம் செய்யும்போது பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும்போது, எங்கள் உறவினர்கள் எல்லாம் அம்மாவை பார்த்து, "நீங்கள் உள்ளேயே இருங்க. அப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு யாருன்னு தெரியாம முழிக்க போறாங்கன்னு' கிண்டல் செய்வாங்க. அந்தளவிற்கு அம்மா பார்க்க ரொம்ப இளமையா இருப்பாங்க.
 அம்மாவுக்கு சிவ பெருமான் என்றால் ரொம்ப உயிர். எந்நேரமும் சிவ மந்திரத்தையும், சிவன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாங்க. சிவனோட அனுகிரகத்தாலதான் நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்கன்னு அடிக்கடி சொல்லுவாங்க. ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவங்க. அதைப்பயன்படுத்தி அக்கம்பக்கத்தில் உள்ள தெரிந்தவர்கள் அம்மாவிடம் இருந்து ஈசியா பணம் வாங்கிட்டு போய்டுவாங்க. திருப்பி தரவும் மாட்டாங்க.
 நான் கல்லூரி முடித்து என் கணவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றதும் வீட்டில் ரொம்ப எதிர்ப்பு. பெரிய போராட்டம் நடந்தது. அம்மா ரொம்ப அதிர்ச்சியாகிட்டாங்க. நீ தான் இந்த குடும்பத்திலேயே நாலு பேரு மதிக்கிற மாதிரி பேரும் புகழோடும் வருவன்னு கனவு கண்டேன். நீ இப்படி செஞ்சுட்டியேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. பின்னர், அவங்களோட ஆசைபடியே திருமணத்திற்கு பிறகு எங்களுக்கு பேரும் புகழும் கிடைக்க ஆரம்பித்தபோது அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். குடும்பத்திலேயும் எல்லாரும் எங்களை ஏத்துக்கிட்டாங்க.
 எங்களோட வகுப்பில் பெண்களை கட்டிக் கொடுத்துவிட்டால் மருமகன் வீட்டில் பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். அப்படியே சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சாப்பிட்டத் தட்டுக்கு கீழே பணம் வைத்துவிடுவார்கள். அப்படி ஒரு சாம்பிரதாயம் எங்கள் குடும்பத்தில் இருந்தது. அதனால் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்தால் எதுவும் சாப்பிட மாட்டார்கள். பின்னர், என் கணவர் பிடிவாதமாக இருந்து அந்த பழக்கத்தைப் படிப்படியாக மாற்றினார்.
 அம்மா சும்மா ஒரு தோசையும் தேங்காய் சட்னியும் வெச்சாக் கூட பிரமாதமாக இருக்கும். அம்மாவின் தேங்காய்ச்சட்னிக்கு என் கணவர் அடிமையாகி, அதன் செய்முறையை என் அம்மாவிடம் கற்றுக் கொண்டு வந்து எனக்கு செய்து கொடுத்து அசத்திவிட்டார். இப்பவும் என் மகள்கள் இருவரும் சொல்லுவார்கள், "அம்மா நீ என்னதான் சமைத்தாலும் பாட்டி கை பக்குவம் உனக்கு இன்னும் வரலம்மா' ன்னு கிண்டலடிப்பார்கள். அதுவும் உண்மைதான். அம்மா வீட்டிற்கு போய்விட்டு வந்தாலே இரண்டு சுத்து பெருத்துவிட்டதா எனக்கும் தோணும்.
 இப்போ அம்மாவுக்கு 70 வயதாகிறது. கும்பகோணத்தில் தம்பி வீட்டில் இருக்கிறார். இப்போ 8 பிள்ளைகளோட பேரன், பேத்திகள்தான் அவருடைய உலகம்.
 - ஸ்ரீதேவி
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.